யானைகளின் வருகை 58: போபால் நகரமாக மாற இருந்த சிறுமுகை

By கா.சு.வேலாயுதன்

2005 ஆம் ஆண்டு. ஆகஸ்டு 15-ம் தேதி. நாடு 59வது சுதந்திர தினத்தை கொண்டாடி ஓய்ந்திருந்த இரவு வேளை. மேட்டுப்பாளையம், சிறுமுகை மக்களுக்கு மட்டும் சுதந்திர தினப் பரிசாக அங்கு பூட்டிக் கிடந்த விஸ்கோஸ் ஆலை புகையை அள்ளித் தந்தது.

அது சாதாரண புகையல்ல. இங்கு வரிசையாய் நின்றிருந்த கார்பன் டை சல்பைடு அமிலத்தொட்டிகளுக்கு அருகில் திறந்த வெளியில் கொட்டிக் கிடந்த கந்தகக் கழிவுகள் தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து வந்த நச்சுக்காற்று ஆலைக்கு அப்பால் உள்ள மூலையூர் கூத்தாமண்டி பிரிவு, அம்மன்புதூர், ரேயான் நகர் மற்றும் சிறுமுகை கிராமத்துக்கும் பரவத் தொடங்கியது. நச்சுப்புகை சிலருக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. பலர் மயக்கமடைந்தனர். மேலும் பலருக்கு நெஞ்சில், கண்ணில், தொண்டையில் என கண்டமேனிக்கு எரிச்சலை உண்டாக்க ஆரம்பித்தது. ஆலையிலிருந்து வரும் நச்சுப்புகைதான் என்பதை உணர்ந்த மாயத்தில் பலர் ஊரை விட்டே வெளியேற ஆரம்பித்தனர்.

உடனடியாக தகவல் தீயணைப்புத்துறைக்கும் பறந்தது. அவர்கள் வாகனங்கள் மற்றும் கருவிகளுடன் ஓடோடி வந்து விஸ்கோஸிலிருந்து புறப்பட்ட தீயை அணைத்தனர். இது மட்டும் நடந்திராமல் இருந்திருந்தால் அன்று இரவு சிறுமுகை நகரம் இன்னொரு போபால் நகரம் ஆகியிருக்கும். உலக வரைபடத்தில் அழிக்க முடியாத மனித உயிர்களை பறித்த கருப்புப்புள்ளியை இந்த மையம் பெற்றிருக்கும். 2001ல் மூடப்பட்ட இந்த ஆலையில் மட்டும் கவனிப்பாரின்றி 201 டன் கார்பன்டை சல்பைடு அமிலம், 700 டன் கந்தக அமிலம், 700 டன் கந்தகம் ஆகியவை எவ்வித பாதுகாப்புமின்றி கொள்கலன் தொட்டிகளில் கொட்டிக்கிடந்தன.

பூட்டிக் கிடக்கும் ஆலையினுள் சமூக விரோதிகள் புகுந்து திருடுவது தொடர்ந்து நடந்தது. காரமடை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் என வலசை செல்லும் காட்டு யானைகளும் இந்த ஆலைக்குள் புகுந்து புதர்களில் பதுங்கி இளைப்பாறி ஜாலி உலா சென்றன. அபாயகரமான சூழலில் இங்குள்ள நச்சு ரசாயனப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதிவாழ் மக்கள் ஆலை முன்பும் மேட்டுப்பாளையம் நகரிலும் சாலை மறியல் போராட்டங்களை எல்லாம் நடத்தினார்கள். அதன்பின் நச்சு ரசாயனப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, ஒரு பகுதி மட்டுமே அப்புறப்படுத்தப்பட்டது. பிறகும் 185 டன் கார்பன்டை சல்பைடு அமிலமும், 140 டன் கந்தகமும், 50 டன் கந்தக அமிலமும் ஆலையினுள் இருந்தன.

அதில்தான் அதற்குப் பிறகு தீப்பற்றிக் கொண்டது. தீப்பிடித்த சம்பவத்தின் போது பலகோடி மதிப்புள்ள பொருட்களைத் திருடிய சமூக விரோதிகள், மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே கந்தகக் கழிவில் தீ வைத்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. தப்பித்தவறி கார்பன்டை சைல்பைடு டேங்கில் தீப்பிடித்திருந்தால் சிறுமுகையும் அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவு பகுதியும் பேரழிவுக்கு உள்ளாகியிருக்கும்.

இந்த அபாயம் தொடராமலிருக்கவும், தீ வைத்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டியும், அபாயகரமான ரசாயனப் பொருட்களை உடனே அப்புறப்படுத்தவும் கோரி, விஸ்கோஸ் ஆலை முன்பு 16.8.05 அன்று காலையிலிருந்தே குவிந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினர். காவல்துறையினர், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களை விரட்டியடிக்கவே முயற்சித்தனர்.

தீர்வு ஏற்படாதவரை சாலை மறியலைக் கைவிட மறுத்தததால் , 21 ஆண்கள், 23 பெண்களைக் கைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர் போலீஸார். . "இதில் கொதித்தெழுந்த சிறுமுகை நகரம் 17.8.05 அன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தியது. அதன் எதிரொலி. அன்று மாலையே சிறையிலடைக்கப்பட்ட 44 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், மரண பயத்தில் இருந்த மக்கள் பலரும் இப்பகுதியை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

அதே சமயம் இந்த நிறுவனத்தை வாங்க பலரும் அச்சப்பட்டு மறுத்து வந்த நிலையில் ஒரு வடநாட்டு நிறுவனம் இதனை விலைக்கு வாங்கியது. 1959ல் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த ஆலை மூடப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான கொள்ளையர்கள் புகுந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். கூடவே சூழலையும் கெடுத்தனர். போலீஸார் அவ்வப்போது ஃபேக்டரிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடும் நடத்தியிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான வழக்குகளும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் கொள்ளை போன பொருட்களில் (சுமார் ஆயிரம் கோடிக்கு மேல்) மீட்கப்பட்டதாக காட்டப்பட்ட பொருட்களின் மதிப்பு வெறும் ரூ.2.5 கோடி. இப்படிப்பட்ட இந்த ஆலையை வடநாட்டு நிறுவனம் வெறும் ரூ.150 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இன்னொரு பகுதி நிலத்தை கோவையை சேர்ந்த தொழிலதிபர் விலைக்கு வாங்கினார். இப்போது வடநாட்டுக் கம்பெனி ஆலைக்குள் இருந்த ஆபத்தான சல்பர், சல்ப்யூரிக் ஆசிட், போன்றவற்றை அகற்றி ஏறத்தாழ 90 கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கியது. அவை இன்னமும் இடிபாடுகளுடன் புதர் மண்டியே கிடக்கிறது.

கோவை தொழிலதிபர் வாங்கிய இடத்தில் பெரிய அளவில் பள்ளிக்கூடங்கள் கட்டிடங்கள் எழுந்து இயங்கி வருகிறது. தெருவில் நின்ற தொழிலாளர்கள் 80 சதவீதம் வரை தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வாங்கிக் கொண்டு வெவ்வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். ஆனால் இந்த விஸ்கோஸ் நடத்திய சுமார் 50 ஆண்டு கால சூழல் கேட்டினால் பவானி நீர் மாசுபட்டது பட்டதுதான். நிலத்தடி நீர் பாழ்பட்டதும் பட்டதுதான். அதை தூக்கிச் சாப்பிடும் சூழல் கேட்டை உருவாக்கும் சாய, சலவை, டெரின், டெரிக்காட்டன், டர்க்கி காட்டன் கம்பெனிகள், கல்குவாரிகள், கல் உடைக்கும் கம்பெனிகள் ஏற்கெனவே ஏகமாய் வந்து விட்டன.

அவை விடும் கழிவுகளை காற்றில் சுவாசித்தும், தண்ணீரில் குடித்தும், அந்த தண்ணீரில் வளர்ந்த பயிர் பச்சைகளை உண்டும் வாழ்கின்றன வனவிலங்குகள். அதில் பெரிய விலங்கான காட்டு யானைகளுக்கான துன்பம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும், இப்போதும் அதன் எச்சமிச்சமாக அதன் ஜீன்களின், ரத்தநாளங்களில் ஓடும் என்பதை சூழலியாளர்கள், இயற்கை நேசிப்பாளர்கள், வனவிலங்கு மருத்துவர்கள் ஒவ்வொரு மிருகங்கள் சாகும்போதும், அதை அறுத்து உடல்கூறு ஆய்வு செய்யும்போதும் கண்டு கொண்டுதானிருக்கிறார்கள்.

ஆனால் அவை முழுமையாக மக்களுக்கு சுட்டிக்காட்டப்படுகின்றனவா? தெளிவுபடுத்தப்படுகின்றனவா?. அதுதான் இல்லை. யானைகள் ஏன் வருகிறது? காடுகளில் அதற்கு தீவனம் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. அது ஏன் நோய்வாய்ப்பட்டு இறக்கிறது. குடலில் புண், வயிற்று உபாதை என்றெல்லாம் சப்பைக் கட்டுகள்.

இதே விஸ்கோஸ் நகருக்குள் இப்போதும் செல்கிறோம். திரும்பின பக்கமெல்லாம் வியாபாரக் கடைகள். மக்கள் விஸ்கோஸ், ரேயான், செயற்கை பஞ்சு, மரக்கூழ் என்பதையெல்லாம் சுத்தமாக மறந்து வேறு வேறு தொழில்களுக்கு சென்று விட்டார்கள். குறிப்பாக இங்குள்ள மக்கள் தங்களை தாங்களே தகவமைத்துக் கொண்டு மென்பட்டு நெசவுத் தறிகளை பூட்டி இயக்கி கொண்டிருக்கிறார்கள். இப்படி மட்டும் இங்கே ஆயிரக்கணக்கில் தறிகள் இயங்குகின்றன. தீபாவளிக்கு, தீபாவளி; பொங்கலுக்கு பொங்கல் ரூ. 100 கோடிக்கு மேல் பட்டுசேலை உற்பத்தியை செய்து தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனுப்பகிறார்கள்.

இது தவிர எஞ்சியிருப்பவர்களில் பெரும்பகுதி விவசாயத்தில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. அவர்கள் அனைவருமே பவானி ஆற்றின் நீராதாரத்தையே நம்பியிருக்கிறார்கள். நிலத்தடி நீர் மாசு என்பது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இல்லை. ஆற்றின் நீரோட்டம் வெகுவாக இருப்பதால் நிலத்தடி நீர் மாசு வெகுவாகவே நீர்த்துப்போய் சமநிலைக்கு எட்டிவிட்டது. ஆனால் வேளாண்மை தொழிலுக்கு சவாலாக விளங்குவது காட்டுப்பன்றி, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளாகவே இருக்கிறது.

அது யானையானாலும், காட்டுப்பன்றியானாலும் சுட்டுத்தள்ள வேண்டும். அல்லது அதைக் கொல்ல எங்களுக்கே அனுமதி தர வேண்டும் என்ற குரல்கள் வெகுவாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில்தான் அதிகமாக ஒலிக்கிறது. அந்த அளவுக்கு தினம் தினம் யானைகள் சிறுமுகை, கோபி, சத்தியமங்கலம் சாலையை கடந்து இருபக்கமும் விளையாட்டாய் விளையாடுகின்றன. அதற்கு என்ன காரணம் என்பதற்கு இங்குள்ள அப்பாவி மக்கள் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

இதோ! சிறுமுகையிலிருந்து சத்தி சாலையில் பயணிக்கிறேன். அகண்ட தார்ச்சாலைக்கு இடது புறம் தார்ச்சாலைக்கு இணையாக யானைகள் அகழி ஒன்றும் பயணம் செய்கிறது. அதை ஒட்டி மின்வேலியும் தொடர்ச்சியாக நீள்கிறது. அந்தப் பக்கம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அதை ஒட்டியே இவ்வளவு பெரிய தார்ச்சாலையும் அதை தாண்டி புதிய, புதிய குடியிருப்புகளுக்கும் அனுமதி எப்படி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த அகண்ட சாலையை மான்களும், காட்டுப்பன்றிகளும், யானைகளும் கடக்கின்றன. ஊருக்குள் நுழைகின்றன. வாழை, தென்னம்பிள்ளை எது கிடைத்தாலும் கபளீகரம் செய்கின்றன. சாலையை கடக்கும் போது மான்கள் அடிபட்டு இறப்பது வாடிக்கையாக இருப்பதை மக்கள் கவலையுடன் சொல்கிறார்கள். கூத்தாமண்டி உலையூர் பிரிவு அருகில் ஒரு பெட்டிக்கடை. டீ சாப்பிட ஒரு பெரியவர் அமர்ந்திருக்கிறார். அவரிடம் இங்குள்ள யானைகள் நடமாட்டத்தை பற்றி கேட்கிறேன்.

''அதை ஏன் கேட்கிறீங்க. நாள் தவறினாலும் தவறும். யானைகள் வர்றது மட்டும் தவர்றதில்லை. அதுவும் ஒண்ணா ரெண்டா பதினைஞ்சு, இருபதுன்னு ஒரே கூட்டம் கூட்டமாத்தான் வருது. அதுல ஒண்டி வந்துட்டா யாருமே விரட்டக்கூட முடியாது. இந்தப்பக்கம் இருபது வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் யானைகள் வந்ததே இல்லை. அப்ப வீரப்பன் காட்டுக்குள் இருந்தான். அதுகளை மிரட்டி வச்சிருந்தான். அதுனால அவனுக்கு கட்டுப்பட்டு காட்டை விட்டு வெளியேவே வந்ததில்லை. அவனை போலீஸ் கொன்னுச்சு. காட்டு யானைகளுக்கு குளிர்விட்டுப் போச்சு. அதுதான் ஜனங்களை வந்து பதிலுக்கு இப்படி மிரட்டு மிரட்டுன்னு மிரட்டுது!'' என்கிறார் வெள்ளந்தியாக.

இதே பகுதியில் சாலைக்கு கிழக்கில் ஒரு கிரஸ்ஸர் (ஜல்லி உடைக்கும் கம்பெனி) யூனிட்டும், அதை தாண்டி ஒரு குன்றில் கல்குவாரியும் பத்து வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. காடுகளும் மலைகளும் கல்குவாரிகளும் வீடுகளும், தோட்டங்களும் ஆனால் அந்த வாழிடங்களையே நம்பியிருக்கும் வனவிலங்குகள் எங்கேதான் செல்லும்? இதை புரியும்படி இந்த எளிய மக்களுக்கு யார்தான் சொல்லுவது?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

-

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்