யானைகளின் வருகை 46: அப்பள மலையை கலக்கும் கஜமுகன்கள்

By கா.சு.வேலாயுதன்

 

இதுவும் அதிகாலை நேரம். முதல் பேருந்துக்காக பஸ் ஸ்டேண்டை நோக்கி சென்று கொண்டிருந்த சிலர், அந்த சாலையில் கரிய நிறத்திலான ஒரு பிரம்மாண்ட உருவம் நடந்து வருவதை ஏதோ ஒரு மலைக்குன்றுதான் வருகிறதோ என்று ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர். உற்றுப்பார்த்த பின்பு அது நீண்ட கொம்புள்ள ஒற்றை யானை என்பதை அறிந்து திக்காலுக்கு ஒரு பக்கமாக ஓட்டம் பிடித்தனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்களோ தம் வாகனத்தை தாறுமாறாக செலுத்தி உயிர் தப்பினர்.

அதையெல்லாம் லட்சியம் செய்யாத அந்த ஒற்றை யானை நேரே அங்கு அப்பளம் போல் செதுக்கப்பட்டு, அதற்கு கீழே பள்ளத்தாக்கு போல் குழிந்து கிடந்த கல்லுக்குழிக்கு சென்றது. அங்குள்ள நீரை உறிஞ்சிக் குடித்தது. தன்  துதிக்கையால் உறிஞ்சி தன் மீது தூவிக் கொண்டது. மறுபடியும் சமதளத்திற்கு வந்து திரும்பவும் ஒய்யாரமாக நடக்க ஆரம்பித்தது. அதை காட்டுக்குள் விரட்ட மக்கள் தயாராக அது அக்கம்பக்கம் கிராமத்திற்குள் புகுந்து போக்கு காட்டியது. அந்த நேரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமத்தில் ஒரு விவசாயி தன் தோட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த சூரிய மின்வேலி இணைப்பை துண்டிக்கச் சென்றிருந்தார். அவரை நேருக்கு நேர் பார்த்துவிட்ட ஒற்றை யானை சும்மாயிருக்குமா?

தும்பிக்கையில் ஒரே தூக்கு. ஒரு புரட்டு. என்ன புண்ணியமோ, அவரை அதோடு விட்டு விட்டு ஓடியது. அடிப்பட்ட விவசாயிக்கு இடுப்பு எலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. இப்பவும் அந்த  கணுவாய் அப்பள மலை பகுதிக்கு இந்த ஒற்றை யானை மட்டுமல்ல, குட்டியோடு இன்னொரு யானை, 6 யானைகள் கொண்ட கூட்டம் வருவது என்பது தவறாத விஷயமாக இருக்கிறது.

இப்படி இந்த கணுவாய் அப்பள மலையை சுற்றியுள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோயில், சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் மட்டும் 2013 ஜூன் மாதத்தில் யானைகள் தாக்கி மூன்று பேர் இறந்தனர். இப்படி ஆட்களை கொன்ற யானை கூட்டத்தை விரட்ட சாடிவயல் முகாமிலிருந்து  நஞ்சன், பாரி ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அந்த சமயம் அனுவாவி சுப்பிரமணியர் கோயிலை ஒட்டியுள்ள வனத்தில் இருந்த 2 குட்டிகள் உள்பட 6  யானைகள் குடியிருப்புக்குள் நுழைய. பொதுமக்கள் அவற்றை துரத்தினர். யானைகள் கணுவாய் மலையில் நின்றன. அந்த மலைக்கு கீழ் தனியார் தோட்டத்தில் பாரி, நஞ்சன் ஆகிய கும்கி யானைகள் இருப்பதை பார்த்து பயந்த காட்டு யானைகள், மலைக்கு பின்புறம் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் புகுந்தன.

தொடர்ந்து அந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க அவர்கள் வந்து யானை விரட்டும் பணயில் ஈடுபட்டனர். அந்த சமயம் வனத்துறை அதிகாரி ஒருவர் ஒரு யானையிடம் சிக்கிக் கொண்டார். அது அவரை தும்பிக்கையால் தூக்கி வீச தயாராக மற்ற வனத்துறை அலுவலர்கள் பரிதவிக்க, வனத்துறை ஜீப் டிரைவர் சாதூர்யமாக ஒரு காரியம் செய்தார். ஜீப்பை ஸ்டார்ட் செய்து, ஹாரனை இடைவிடாமல் ஒலிக்கச் செய்து விளக்குகளையும் எரிய விட்டார். அத்துடன் ஜீப்பை யானையை நோக்கி இயக்கினார். மிரண்ட யானை தும்பிக்கையில் தூக்கியிருந்த வன அலுவலரை கீழே போட்டுவிட்டு காட்டுக்குள் ஓடியது. யானையிடம் அகப்பட்டு மிரட்சியுடன் மீண்ட வன அலுவலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த கணுவாய் மலை கல்லுக்குழி அருகே இப்பவும் காட்டு யானைகள் வருவதும், மக்களை பயமுறுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. கோவையிலிருந்து ஆனைகட்டி செல்லும் பாதையில் முதலாவதாக எதிர்ப்படும் மலைதான் இந்த கணுவாய் மலை. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முக்கியமான மலைகளின் அடுக்கான ஆனைகட்டி மலைகளின் வால்போல் நீளும் மருதமலை, அனுவாவி சுப்பிரமணியர் கோயில் மலைகள், மாங்கரை மலைகளின் ஆரம்பப்புள்ளியாகவும், விடுபட்ட எச்சமாகவும் இந்த கணுவாய் மலை விளங்குகிறது.

புதிதாக இந்த ஊருக்கு வருபவர்கள், இந்த வழியே செல்பவர்கள் இந்த மலையைப் பார்த்தால் ஆச்சர்யம் மட்டுமல்ல; அதிர்ச்சியும் அடைவார்கள். அந்த அளவுக்கு இந்த மலை சுமார் அரை கிலோமீட்டர் தொலைவுக்கு பாதியாக வெட்டப்பட்டு அதன் கீழே நூறு அடி ஆழத்திற்கு பள்ளமும் தோண்டப்பட்டு ராட்சஷக் கல்லுக்குழியாகவும் காட்சியளிப்பதுதான் இதற்கு காரணம்.

கோவை மாவட்டத்தில் மலையிடப்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி மையம் பாரதியார் பல்கலைக்கழகம் என்பதையும், அது காட்டு யானைகளின் வழித்தடப்பகுதியை ஒட்டியிருந்ததையும் ஏற்கெனவே பார்த்தோம். அதுபோலவே கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில்  அந்த காலத்தில் வீடுகள் கட்ட ஒடைக்கற்கள், கருங்கற்கள் தோண்ட கல்குவாரிகள் பிரிட்டீஸ் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டன. அந்த வகையில் அரசு அனுமதித்த கல்குவாரி ஏரியாக்கள் மூன்று. ஒன்று மதுக்கரை பிச்சனூர் கிராமம் இரண்டு சூலூர், பருவாய், கலங்கல் கிராமங்கள். மூன்றாவதாக வருவது இந்த கணுவாய் மலை ஆகும்.

மற்ற இரண்டு இடங்களில் சூலூர் என்பது சமதளப்பகுதியில் உள்ளது. எனவே அதற்கும் கானுயிர்கள் வாழ்நிலைக்கும் சம்பந்தமில்லை. அதுவே பிச்சனூர் கிராமம் மலையிடங்களை ஒட்டியிருந்தது. என்றாலும் அதையடுத்துள்ள மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை கல்குவாரிகள் அளவிற்கு அதீத பாதிப்பை இவை ஏற்படுத்தவில்லை. ஆனால் கணுவாய் மலையை பொறுத்தவரை சரிபாதிக்கு அப்பளாகவே வெடி வைத்து தகர்த்தெடுத்துவிட்டனர். அத்துடன் நில்லாது இந்த மலை எப்படி அப்பளமாக செதுக்கப்பட்டதோ, அதே அளவு அடி ஆழத்திலும் தோண்டி கற்கள் எடுக்கப்பட்டன.

கணுவாய்க்கு அடுத்தபடியாக உள்ளது வடவள்ளி. அதையடுத்து வருவதே மருதமலை. வடவள்ளிக்கும், மருதமலைக்கும் இடையில்தான் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது.  வடவள்ளி என்று தற்போது வழங்கப்படும் ஊரின் அசல் பெயர் வடவழி ஆகும். அதுவே மருவி வடவள்ளி என்று ஆகியிருக்கிறது.

கோவையில் சோழர் காலத்தில் புராதனமிக்க இடமாக விளங்கியது பேரூர். அந்த ஊரில் உள்ள பட்டீஸ்வரர் சிவன்கோயிலே கோவையின் வரலாறு பேசுகிறது. இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. அவரைத் தொடர்ந்து கோசல மன்னர்களாலும் விஜய நகரப் பேரரசினாலும் அக் கோவில் முழுமை பெற்றது என்பது வரலாறு. அந்த காலகட்டத்தில் இந்த பேரூர் நகரம் தவிர்த்து மீதியெல்லாம் அடர் வனமாகவே தரிசனம் தந்துள்ளது. அதன் நடுவே பூமியை அறுத்துக் கொண்டு ஓடியிருக்கிறது நொய்யல் ஆறு. அதன் இருமருங்கும் வானாளவி நின்றுள்ளன மரங்கள்.

தற்போது கோவை நகரின் மையப் புள்ளியாக விளங்கும், கோவைக்கு பெயர் தந்த கோனியம்மன் கோயில் கூட அடர்ந்த வனத்திற்குள்ளேயே இருந்துள்ளது. அதனால் அது கானகத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு வன தேவதையாகவே விளங்கியிருக்கிறது. மன்னர்காலத்திய நகர்வில், போர்க் காலங்களில் இங்கே நரபலியிட்டு போருக்கு செல்லும் வழிமுறைகள் இருந்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்தக்காலகட்ட சூழலை கற்பனை செய்து பார்த்தோமென்றால் கோவை எனும் ஆரண்யத்தில் எப்படிப்பட்ட கானுயிர்கள், எத்தனை எண்ணிக்கையில் திரிந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கேவ முடியாது. குறிப்பாக சிறுத்தைகள், புலிகள், கரடிகள், யானைகள் நிறைந்தே இந்த கானகம் இருந்திருக்கும் என்பதை ஐயுற வேண்டியதில்லை.

அப்போது புதுநகரமாய் மிளிர்ந்த பேரூருக்கும், அங்கே வீற்றிருந்த திருச்சிற்றம்பலம் பட்டீஸ்வரர் கோயிலுக்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான கற்கள் இந்த கோயில் கட்டுவதற்கு தேவையான கற்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது அந்த ஊரிலிருந்து வடக்குப் பகுதியில் கணவாய் (கணுவாய்) எனும் மலைப் பகுதியிலிருந்து தான் கற்களைக் கொண்டு வரமுடியும். அந்த மலையை அடைய வடவழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த மலையிலிருந்து கொண்டுவந்த கற்களை தரம் பிரித்து எடுத்துச் செல்ல சிற்பிகள் அமைத்து தங்கிய ஊர்தான் வடவழி. இந்த தகவல் பேரூர் வரலாற்று குறிப்பிலும் குறிக்கப்பட்டுள்ளது.

அதன் நீட்சியாகவே பிரிட்டீஸார் காலத்திலும் இந்த கணுவாய் மலை வீடுகள் கட்டுவதற்கான அஸ்திவாரக் கற்கள் தேவைக்கு கொத்திக் குதறப்பட்டுள்ளன. கோவை நகரம் விரிவடைந்து இந்த கணுவாய் மலை வரை வரும்போது பிரச்சினையும் கிளம்பியது. இந்த மலையின் மறுபக்கம் ஊர் உருவாகியிருக்க, இங்கே வெடி வைத்துத் தகர்க்கப்படும் பாறைகள் பல வீடுகளை, மனிதர்களை பதம் பார்த்துள்ளன. குவாரிக்கு எதிராக மக்களை போராடவும் வைத்தது. இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புக்கும் குவாரி இலக்காக 1995-96 வாக்கில் இதன் குத்தகை ஏலம் நிறுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இந்த குவாரியால் பழுதடைந்த மலை அப்பளமாய், மனிதன் செய்த இயற்கை அலங்கோலத்தின் எச்சமாய், சூழல் கேட்டின் நினைவுச்சின்னமாய் அப்படியே நின்று கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் இந்த கல்லுக்குழியில் தேங்குவதும், இதில் குளிக்கச் செல்லும் இளைஞர்கள் சிக்கி இறப்பதற்கும், சிலர் தற்கொலை செய்து கொள்வதற்குமான கருவியாய் இன்னமும் இந்த அப்பள மலை எச்சம் துணை புரிந்து வருகிறது.

அது மட்டுமா? அந்த எச்சத்தின் உச்சமாகவே எப்போதோ தன் மூதாதைகள் இந்த வழியே நடந்து போனதையும், மூங்கில் குருத்துக்களை, மரங்களை செடிகொடிகளை முறித்து தின்று இளைப்பாறியதையும், மூச்சு முட்ட நீர் குடித்ததையும், இளம்பிராயத்தில் குட்டிகளாக துள்ளித் திரிந்ததையும் தன் பாரம்பர்ய ஜீன்களில் ஏற்றிக் கொண்ட காட்டு யானைகள் அனிச்சையாய் இவ்விடமும் வந்து செல்கின்றன. அப்பளமாய் நொறுங்கிக்கிடக்கும் மலை, அதலபாதாளமாய் கல்லுக்குழியாய் மாறி காணாமல் போன காடுகள் எல்லாம் அவற்றுக்கு எந்த மாதிரியான இழப்பை ஏற்படுத்தியதோ. நம்மால் ஏற்படுத்தப்பட்டதோ, அது புரியாமல் நேரே இயல்பு மாறாமல் வருகின்றன. இங்குள்ளவர்கள்தான் 'காட்டு யானைகள்  ஊருக்குள் புகுந்தன!' என அலறுகிறார்கள்; விரட்டியடிக்கிறார்கள்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்