யானைகளின் வருகை 32: மருதமலை மாமணியே விநாயகா!

By கா.சு.வேலாயுதன்

ரவிக்குமார். 56 வயதான இவர் ரயில்வே நிலையத்தில் டிக்கெட் புக்கிங் பிரிவில் பணிபுரிபவர். மருதமலை அடிவாரத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்திர நகரில்தான் இவர் வீடு. அதிகாலை 5 மணி வாக்கில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி மெயின் ரோட்டிற்கு நடந்து வந்துள்ளார். போகும் வழியில்தான் ஒரு பள்ளம். அப்பள்ளத்தில் கருங்குன்று போல் ஆடாமல் அசையாமல் நின்ற ஒற்றை யானையை இவர் கவனிக்கவில்லை.

அது இவரின் நடை சத்தத்தை கேட்டவுடனே உஷாராகியது. ஒரே பிளிறல். ஒரே ஓட்டம். இவர் ஓட்டம் பிடித்தாரா? தடுக்கி அங்கேய விழுந்தாரா? என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம். ஒரே சுழற்று. ஒரே மிதி. அந்த இடத்திலேயே பலியானார். யானை பிளிறும் சத்தமும், இவர் கத்திய அலறலும் கேட்டு வெளியே ஓடி வந்த மக்கள், தீப்பந்தங்கள், பட்டாசுகள் போட்டு யானையை விரட்ட, உயிரற்ற நிலையில் சடலமாகவே மீட்கப்பட்டார் ரவிக்குமார்.

இந்த சம்பவத்தால் மருதமலை அடிவாரத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புவாசிகளும் பீதியில் உறைந்தனர். தொடர்ந்து, மாலை 7 மணிக்கு மேல் வீடு திரும்புவதையும், அதிகாலையிலேயே எழுந்து நடைப் பயிற்சி போவதைக் கூட தவிர்த்தனர் சுற்றுப்புற குடியிருப்பு வாசிகள். எங்கே எப்போது யானை நிற்குமோ? எங்கே நம்மை தாக்குமோ? என்ற அவர்களின் பீதியை அதிகப்படுத்துவது போலவே தற்போதெல்லாம் மாலை ஆறு மணி ஏழு மணி ஆனாலே மருதமலைப் படிக்கட்டுகளில் காட்டு யானைகள் வந்து நிற்கத் தொடங்கின. சில சமயம் காலை எட்டு மணிக்கும் கூட இங்குள்ள படிக்கட்டுகளில் யானைகளைக் காண முடிந்தது. பக்தர்கள் பார்த்து விட்டு அலறி ஓட்டம் பிடிப்பதும் நடந்தது.

இதன் உச்சகட்டமாக ரவிக்குமார் இறந்து ஓராண்டு கழித்து ஒரு சம்பவம். இந்த மருதமலை அடிவாரப் பகுதியில் மட்டுமல்லாது, பக்கத்தில் உள்ள தொண்டாமுத்தூர், ஓனாப்பாளையம், மாங்கரை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து விளைபொருட்களை சேதம் செய்தன. இதன் தொந்தரவு அதிகரித்ததால் சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி கொண்டு வரப்பட்டது.

யானைகள் வழித்தடத்திலேயே கும்கி நிறுத்தி வைக்கப்பட்டது. கும்கி யானை உள்ளதை அறிந்த 21 காட்டு யானைகள் கூட்டத்தில் 13 யானைகள் ஒரு பிரிவாகவும், 4 யானைகள் மற்றொரு பிரிவாகவும் மற்றவை தனித்தனியாகவும் பிரிந்தன. அதில் மாங்கரை அடிவாரத்தில் 8 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் சோளக் காட்டில் புகுந்து பயிர்களைத் தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. அதையடுத்து மருதமலை யானைகள் தொடர்ந்து வந்து போகும் வழித்தடத்தில் வன அதிகாரிகள் கும்கி யானை பாரியை உலாவ விட்டனர். பெரும்பாலும் காட்டு யானைகள் கும்கி இருப்பதை மோப்பத்தின் மூலமே அறிந்து தப்பி ஓடிவிடும்.

ஆனால் இப்போது வந்த காட்டு யானைக் கூட்டத்தில் பிரிந்த ஒற்றை மருதமலை பகுதியில் நள்ளிரவில் பல வீடுகள் மற்றும் கூரைகளைப் பிரித்தெரிந்தது. தவிர மருதமலை அடிவாரப் பகுதிக்கும் வந்தது. அங்கு அபிஷேகப் பொருட்கள் வைத்திருந்த சில கடைகளை உடைத்தும் பிரித்தும் உள்ளிருந்த அபிஷேகப் பொருட்களை தின்றது. அடுத்ததாக, நுழைவாயில் வழியே மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் படிக்கட்டில் ஏறியது. பதிமூன்றாவது மண்டபத்தில் உள்ள இடும்பன் கோயிலில் தண்ணீர் வசதிக்காக போடப்பட்டிருந்த மோட்டார் அறையின் இரும்புக் குழாய்களை உடைத்தது.

அதில் தண்ணீரை உறிஞ்சி, உறிஞ்சிக் குடித்தது. பின்னர் மோட்டார் அறையின் கதவைத் தந்தத்தால் குத்தியது. இதில் இரும்புக் கதவு உடைந்தது. அதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுக்க, அவர்கள் ஒற்றை காட்டு யானையை விரட்டி விட்டனர்.

''எங்கள் வயசுக்கு கூட்டம் கூட்டமாக யானைகள் கோயில் படிக்கட்டுகளில் உலாவுவதை கொஞ்ச காலமாகத்தான் பார்க்கிறோம். இப்படி யானைகள் காட்டுக்குள் வனப்பொருட்கள் சேகரிக்கப் போகும்போதுதான் பார்ப்போம். அப்போதும் கூட எங்களைக் கண்டால் ஒதுங்கி நின்று கொள்ளும். ஆனால் இப்பவெல்லாம் அவை எங்களையே விரட்டுகின்றன. எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கூட அச்சமாக இருக்கிறது. அதனால் முன்பெல்லாம் படிக்கட்டு வழியே நடந்தே அடிவாரப் பகுதிக்கும், வெளியூர்களுக்கும் சென்று வந்தோம். இப்போது படிக்கட்டு பயணத்தை புறக்கணித்து விட்டு, மலைப்பேருந்திலேயே பயணம் செல்கிறோம்!'' என தெரிவிக்கின்றனர் மருதமலையில் வசித்து வரும் இருளர் இன பழங்குடி பெரியவர்கள்.

சிலர் பேசும்போது, ''இப்பவெல்லாம் மருதமலைக்கு படியேறி வரும் பக்தர்கள், அடிக்கடி யானைகளை கண்டு 'மருதமலை மாமணியே விநாயகா!' என்றே பாடுகிறார்கள்!'' என்றனர் வேடிக்கையாக.

மருதமலையில் காட்டு யானைகளின் வருகையை பற்றி சொல்வதென்றால் அதற்கும் நீண்டகால அனுபவங்களை விரிவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

கோவை மாவட்ட வனக் கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை என ஏழு வனச்சரகங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்துள்ள இந்த வனச்சரகங்களை ஒட்டியுள்ள இக்குறிப்பிட்டுள்ள மலைகள் மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள கிராமங்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக விளங்குகிறது.

இவற்றில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி ஆகிய வனச்சரகங்களில் முக்கிய பகுதிகளில் நடக்கும் அத்துமீறல்கள், புதிய கட்டுமானங்கள், உருவாகும் பெரும் குடியிருப்புகள், கல்வி மற்றும் வியாபார நிறுவனங்களின் ஆதிக்கம், ஆன்மீக மையங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளின் வியாபாரம், அதனால் அதைத் தேடி வரும் மக்கள் வெள்ளத்தால் எந்த அளவு காட்டு யானைகள் எந்த அளவு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன; சலனப்பட்டு எப்படியெல்லாம் சுற்றித் திரிகின்றன. தனக்குள் தன்னெழுச்சியாய் கிளம்பும் அதிர்வுகளால் எதிர்ப்படுவோரையும் அழித்து, தானும் அழிந்து சாகின்றன என்பதையே கண்டு கொண்டுள்ளோம்.

இவற்றில் இதுவரை மதுக்கரை, போளுவாம்பட்டி வனச்சரகங்களில் சில முக்கியமான பகுதிகளின் சில அத்து மீறல்கள் சிலவற்றைத்தான் இதுவரை பார்த்துள்ளோம். இதில் போளுவாம்பட்டி வனச் சரகத்தில் வரும் மருதமலையும் முக்கியமான ஒன்று.

இந்த மலைக் கோயிலுக்கு எனக்கு தெரிந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியதொரு கட்டுமானங்கள் எதுவும் கிடையாது. படிக்கட்டுகள் கூட சரிவர இல்லை. பச்சை பசேல் என்று காணப்படும் மருதமலை படிக்கட்டுகளில் தான்தோன்றி விநாயகரை வணங்கிப் படியேறும் முன்னால், மூன்று விதமான கற்களை தூரத்தில் காணலாம். கோயில் நகைகளை மூன்று திருடர்கள் திருடிச் சென்றதாகவும், அவர்களை குதிரையின் மேல் சென்று துரத்தி முருகன் பிடித்ததாகவும், அந்த கள்வர்களை, காலத்துக்கும் கல்லாய்ப் போகுமாறு முருகன் சபித்ததாகவும் அந்தக் காலத்தில் ஒரு கதை சொல்வார்கள்.

அந்தக் காலத்தில் பள்ளிக் குழந்தைகளை ஒரு நாள் கோவை சுற்றுலா அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் அழைத்து செல்லும் முக்கிய இடங்கள் என்று பார்த்தால் வனக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, அங்குள்ள தாவரவியல் பூங்கா, இவற்றில் முக்கியமான இடமாக மருதமலையும் இருக்கும். அப்போது முருகனின் திருவிளையாடலாக இந்த கள்வர்களின் கதையும் வரும். சுற்றுலா சென்று வரும் மாணவ- மாணவிகளை எது கவர்கிறதோ இல்லையோ, மருதமலையில் கல்லாகி நிற்கும் மூன்று கள்வர்களின் கதை மிகவும் ஈர்த்திருக்கும்.

சுற்றுலா வராத சக நண்பர்களிடம் இந்தக் கதையையும், அந்தக் கல்லான கள்வர்களின் வடிவத்தையும் விலாவாரியாக கதையாக சொல்வதையுமே வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதைத்தாண்டி வேறு எந்த கதையும் அவர்களிடம் இருந்ததில்லை. இங்கிருக்கும் பாம்பாட்டி சித்தர் கதையும், அவரின் குகையின் கதையும் கூட பெரிதாக அவர்களை ஈர்த்ததில்லை. காட்டு யானைகள் வாசமே இங்கு இருந்ததில்லை. கதையாடலுக்குக் கூட காட்டுயானைகள் கிட்டவில்லை என்றால் அவை அடர் வனத்திற்குள் இருந்தன என்றே கருத வேண்டியிருக்கிறது. அதன் பிறகுதான் திரையுலக பிரபலம் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் வருகிறார்.

மருதமலை மாமணியே முருகய்யா பாடல் மூலமும் (தெய்வம் திரைப்படம்) 'கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் வந்தது யாரென்று கண்டுகொண்டேன்', 'மருதமலைக் கோயிலொரு ஏழுபடை' பாடல்கள் மூலமும் (திருவருள் - திரைப்படம்) இக்கோயில் பிரபலம் ஆகும் வரை சில ஆயிரம் பேரே இங்கே சென்று வந்தனர். அதன் பிறகு முருகனடிமையாகி, சின்னப்பா தேவர் மருதமலை படிக்கட்டுகள் முதல் கோயில் கோபுரங்கள் வரை நிறைய அமைத்துக் கொடுத்தார். அவரின் திரைப்படங்கள் மூலம் வெகு பிரபலப்பட்ட கோயிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். திருவிழாக்களும், திருப்பணிகளும் அமளி துமளிப்பட்டன. அது மட்டுமா, மருதமலை அடிவாரத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த காடுகளையும், பட்டா உள்ள விவசாய பூமிகளையெல்லாம் புதிய பல்கலைக் கழகம் ஏற்படுத்துவதற்காக கையகப்படுத்தும் பணியை தொடங்கியது தமிழக அரசு. அப்படி கையகப்படுத்தப்பட்டது ஒன்றல்ல. இரண்டல்ல. ஆயிரம் ஏக்கர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்