யானைகளின் வருகை 39: அழகோ அழகு, அற்புதக் காட்சி!

By கா.சு.வேலாயுதன்

 

காட்டு யானை என்ற வார்த்தையைக் கேட்டாலே 'எங்கே, எங்கே?' என்று துள்ளிக் குதிக்காத குறையாக கேட்பவர் கோவை சீனியர் வழக்கறிஞரும், என் நண்பரும், எழுத்தாளருமான சி.ஞானபாரதி. உடனே குடும்பத்துடனோ, தன் ஜூனியர்களை அழைத்துக் கொண்டோ காரில் கிளம்பி விடுவார். அதில் பெரும்பாலும் நானும் இருப்பேன்.

அப்படித்தான் இந்த தொடரின் 2-ம் அத்தியாயத்தில் தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய குட்டிகளை காப்பாற்ற புறப்பட்ட காட்டு யானைகள் குறித்த செய்தி சேகரிப்பு சம்பவமும், அதில் யானையின் காலடியில் கிடந்த தப்பித்த அனுபவமும் எனக்கு வாய்த்தது. அப்படி அவருடன் யானையைத் தேடி பயணித்த அனுபவங்களை நிறைய சொல்லலாம். அவற்றை தேவைப்படும்போது பின்னர் விரிவாகவே சொல்கிறேன்.

அதனை அடியொற்றிய வகையில்தான் 2011 ஆம் ஆண்டில் அந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.

அது வெயில் வாட்டியெடுத்த கடும் கோடை காலம். மாலை மங்கும் நேரம். மாங்கரையிலிருந்து ஆனைகட்டி வழியாக சீனியருடன் பயணிக்கிறேன். சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் தாண்டியதும் ஒரு செங்கல் சூளை. அங்கே ஒரு திருப்பம். அதைக் கடந்தால் குருகுலம். இந்த இடைப்பட்ட செங்கல் சூளைக்கு மேற்கே உள்ள பகுதியில் அந்த கண்கொள்ளாக் காட்சி.

அந்த அத்துவானக் காட்டில், சாலையிலிருந்து சுமார் 300 அடி தொலைவில் ஒரு தண்ணீர் தொட்டி. அதை நோக்கி ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் வருகிறது. அதன் நடுவே தலையையும், தும்பிக்கையையும் ஆட்டியபடி பிறந்து சில மாதங்களே ஆன குட்டி ஒன்று. தண்ணீர் தொட்டியை அடையும் முன்னே ஒரு கொம்பன் யானை முன்னோக்கி வருகிறது.

அதன் ஆஜானுபாகுவான உயரம் பிரம்மிக்க வைக்கிறது. தண்ணீர்த் தொட்டியை தாண்டி சுமார் 100 அடி தொலைவில் சென்று பெரிய பாதுகாவலன் போல் ஒரு வேலி மறைவில் நின்று கொள்கிறது. ஒரு சின்ன பிளிறல் தருகிறது. யானைகள் வரிசையாக தண்ணீர் அருந்துகின்றன.

அதில் உருவத்திலும், வயதிலும் பெரிய, கடைவாய் முழுக்க ஒடுக்கு விழுந்த யானை துதிக்கையில் நீர் உறிஞ்சி காலுக்கிடையில் இருந்த குட்டிக்கு கொடுக்கிறது. அந்த குட்டி தன் முன்னங்கால்களை தொட்டியில் வைத்து தண்ணீரை எட்டி, எட்டி குடிக்க முனைகிறது.

அதன் வயிற்றில் வாகாக தும்பிக்கை அரண் கொடுத்து தூக்கிக் கொடுக்கிறது பெரிய யானை. அந்த குட்டியும் தும்பிக்கையை விட்டு தண்ணீர் உறிஞ்சி தன் மீதே பீச்சியடிக்கிறது. பெரிய யானைகள், அதனையடுத்துள்ள இளந்தாரிகள் எல்லாமே ஓரிரு நிமிடம்தான் நீரை அருந்துகின்றன. அடுத்து தன் மீதும் கொஞ்சமாய் நீரை இரைத்துக் கொள்கின்றன. கோடைக்கு காய்ந்து கிடக்கும் முதுகில் சாரை, சாரையாய் நீரும், புழுதி நிறமும் காட்சியளிக்கிறது.

அந்த யானைகள் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை முழுக்க எடுத்து தன் உடம்பு முழுக்க குளிப்பாட்டியிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. பெயரளவுக்கு தன் உடலில் நீரை தெளித்துக் கொண்டு அங்கிருந்த புதருக்கு வரிசையைாய் சென்று மறைகின்றன. மறைந்து நின்ற ஆண் யானை இப்போது வருகிறது. தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிறது. நான் இருக்கும் இடத்தில் இருபது முப்பது பேர்.

சிலர் கேமராக்களில் படம் பிடிக்கிறார்கள். சிலரோ கூச்சலிடுகிறார்கள். கூடியிருந்த சில பெண்கள், 'ஐயோ, என்ன அழகு!' என தங்களுக்கு தாங்களே உள்ளூர உச்சி மோந்து கொள்கிறார்கள். ஆண் யானையும் தன்னளவுக்கு தேவையான நீரை உறிஞ்சிக் குடித்து விட்டு நகர்கிறது.

அப்போதும் தொட்டியில் தண்ணீர் மீதம் இருக்கிறது. அந்த யானைக் கூட்டம் சென்ற சில நிமிடங்களில் பெரிய பிளிறல் சத்தம். அங்கே சாலையைக் கடக்கும்போது சில வாகனங்கள் எதிர்ப்பட்டுவிட்டது. அதை சிக்னல் கொடுத்து தெரிவிக்கிறது ஆண் யானை என்பதை அங்கு குழுமியிருந்த செங்கல் சூளை கூலியாட்கள் தெரிவித்தார்கள்.

அது மட்டுமல்ல, அடுத்ததாக ஒரு யானைக் கூட்டம் வரும். அது 13 யானைகள் கொண்ட கூட்டம். அதற்காகவே தொட்டியில் தண்ணீரை அவை வைத்து விட்டுச் செல்கின்றன என்றும் ஆச்சர்ய தகவல் ஒன்றை தெரிவித்தார்கள் அவர்கள். அதேபோலவே அடுத்த அரை மணிநேரத்தில் அந்த யானைக் கூட்டமும் வந்து சேர்ந்தது. இரண்டிரண்டு யானைகளாக அவை நீர் அருந்திய காட்சி அழகோ, அழகு.

இந்தக் கூட்டத்தின் முன்பு வந்த பெரிய கொம்புள்ள ஆண் யானை, அந்த தண்ணீர் தொட்டியிலிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்தில் நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு தென்கிழக்கே மலைப்பாதையில் தார்ச்சாலையின் வளைவின் முனையிலேயே நின்றுவிட்டது. அந்த இடத்தில் கீழிருந்து மேல் வரும் வாகனங்களும், மேலிருந்து கீழ் வரும் வாகனங்களும் கூட செல்ல முடியவில்லை.

எந்த நேரமும் மலையை விட்டு சாலைக்கு வந்து எப்படிப்பட்ட வாகனத்தையும் அது உருட்டி விட்டு விடக்கூடும். காதை விரித்து, தும்பிக்கையை அசையாமல் அப்படியே நிறுத்தி சிறுத்த தன் கண்களால் அது உறுத்துப் பார்த்த பார்வையை காணக் கண்கோடி வேண்டும்.

ஐந்து நிமிட நேரம். அந்த யானைகள் மாறி, மாறி தண்ணீர் அருந்தியது. முந்தைய கூட்டத்து யானைகள் போலவே தங்கள் மீது தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி பீச்சியடித்துக் கொண்டது. குட்டிகள் இரண்டின் மீது தண்ணீரை இரைத்து விட்டு, பக்கத்தில் இருந்த மண்ணை வாரி ஒரு பூசு பூசி விட்டு நகர்ந்தது.

இது இங்கே தினசரி நிகழ்வு. இப்போது அவை நீர் அருந்திய தொட்டிக்கு சற்று தொலைவில் காட்டுக்குள் இன்னொரு தண்ணீர் தொட்டி இருக்கிறது. அது இதை விட பெரிசு. 'அதிலும், இதிலும் காலையிலும் மாலையிலும் நீர் நிரப்பி விடுவார்கள் வனத்துறையினர். அதை பொறுப்புடன் சிந்தாமல் சிதறாமல் பருகுவதையே இவை வழக்கமாக வைத்துள்ளது!' என்று சொல்லி நெகிழ்ந்தனர் மக்கள்.

அடுத்த சில வாரங்கள் கழித்து அதே வழியில் சென்றபோது அந்த தொட்டியையே காணோம். அதை இடித்து வனத்துறையினரே தரை மட்டமாகிவிட்டதாக தெரிவித்தனர் இங்கு செங்கல் சூளையில் பணியாற்றிய ஊழியர்கள் சிலர்.

அதற்கு காரணம். தினசரி காட்டு யானைகள் குழுக்களாக நீர் அருந்த இங்கே வருவதால் நிறையபேர் அதைப் பார்க்க வந்துவிடுவதாகவும், புகைப்படங்கள் எடுப்பதாகவும், அதனால் நிறைய வாகனங்கள் இங்கே நிறுத்தப்பட்டு களேபரம் ஆவதாகவும், அதில் காட்டு யானைகள் மிரண்டு மக்களையும் விரட்டுவதாகவும், அதனால் தொட்டியை இடித்துவிட்டதாகவும் என்றும் குறிப்பிட்டனர்.

தினசரி அங்கே தண்ணீருக்காக வரும் யானைகள் தொட்டியில்லாததைக் கண்டு ஆவேசமுற்று திக்குக்கு ஒரு பக்கம் அலைவதாகவும் வேறு சொன்னார்கள்.

ஆனால் வனத்துறையினரோ, 'அங்கே உள்ள தண்ணீர் தொட்டி பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் சாலையோரமே இருப்பதால்தான் பிரச்சினை. அது தனியார் பட்டா நிலத்திலும் இருக்கிறது. ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் பிறகு மேலிடத்திற்கு யார் பதில் சொல்வது? எனவேதான் அதை இடித்து விட்டோம். அதற்கு பதிலாக இந்த சுற்றுவட்டாரத்தில் ஏழெட்டு இடங்களில் அடர்ந்த காடுகளுக்குள் தண்ணீர் தொட்டிகளை ஏற்படுத்தி உள்ளோம். இங்கே தண்ணீர் காணாத யானைகள் அடுத்துள்ள அந்த தொட்டியில் நீர் அருந்தி செல்கின்றன!' என விளக்கம் தந்தனர்.

அப்படி காட்டுக்குள் புதிய தொட்டிகள் எந்த அளவுக்கு கட்டப்பட்டன. அதை நோக்கி இங்கு வந்து பழகின யானைகள் எப்படிச் சென்றன என்பதெல்லாம் வனத்துறைக்கே வெளிச்சம். ஆனால் அதற்கு அடுத்த முறை அதே ஆனைகட்டி சாலையில் வேறொரு செய்தி சேகரிப்புக்கு சென்றபோது அங்கே கதையே மாறியிருந்தது.

இடிக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்கு நேர் எதிரே இருந்த செங்கல் சூளையில் மாலை வேளைகளிலேயே காட்டு யானைகள் புகுந்துவிடுவதாகவும், கொட்டகைகளை, வேலியை பிடுங்கி எறிவதாகவும், அதனால் சாயங்காலம் நாலு மணிக்கே நாங்கள் எல்லாம் துண்டைக் காணோம்; துணியைக்காணோம் என்று வேலையை கைவிட்டு வீட்டுக்கு ஓட வேண்டியிருக்கிறது என்றெல்லாம் பதற்றமாக பேசினர் சூளை ஊழியர்கள். அது மட்டுமல்ல பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு தென்மேற்கே சேம்புக்கரை, தூமனூர் அருகே ஒரு குட்டி யானை செத்துக் கிடப்பதாகவும் ஒரு மக்கள் கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்