காட்டில் வாழ்ந்த மலைமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு சிறு இடையூறு ஏற்பட்டாலும் கூட எந்த அளவுக்கு காடுகளின் இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது என்பதற்கு சின்ன உதாரணம்தான் மருதமலை மலைவாசிகளின் கதை. அதை விடப் பெரிய உதாரணங்கள் இங்கே நிறைய உண்டு. அதில் ஒன்று தூவைப்பதி பழங்குடிகளின் கதை. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த இரண்டு குட்டிகளை காப்பாற்ற யானைக் கூட்டமே போராடிய மண்ணுக்காரன் தோட்டம் (அத்தியாயம் 2), யானை மிதித்துக் கொன்ற ஆரநாட்டுக்காடு பிச்சை மணி (அத்தியாயம் 11) குறித்த சம்பவங்கள் நடந்த ஊர் இது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளலாம்.
மருதமலையிலிருந்து நடைபயணமாக மலையிலேயே நடந்தால் சில மைல்தூரத்திலேயே இந்த தூவைப்பதி மலைகிராமத்தை எட்டலாம். அதையடுத்து ஐந்து கிலோமீட்டர் சென்றால் வருவது ஆனைகட்டி. கோவை மாநகரிலிருந்து மாங்கரை வழியே 28 கிலோமீட்டர் ஆனைகட்டி. அங்கிருந்து தொடங்குகிறது கேரளத்தின் அட்டப்பாடி.
அதற்கு மேற்கே 50 கிலோமீட்டர் மன்னார்காடு. அங்கிருந்து சென்றால் அப்படியே பெருந்தலமன்னா, கோழிக்கோடு என அடையலாம். மாங்கரை தொடங்கி மன்னார்காடு வரை அத்தனையும் மலைக்காடுகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதி. மன்னார்காடு முதல் பெருந்தலமன்னா வரை கூட மலைக்காடுகளே நிறைந்துள்ளன. அந்த அளவுக்கு சீதோஷ்ண நிலையும் படு குளிர்ச்சியாகவே இருக்கும்.
இதையெல்லாம் உத்தேசித்து தமிழகத்தின் எல்லையான ஆனைகட்டியில் 'ஜூவலாஜிக்கல் பார்க்' என்ற உயிரினப் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டனர் கோவையைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்கள் சிலர். இதன் மூலம் ஏழு வகை செயற்கைக் காடுகளை உருவாக்கி, அதற்குள் முழுமையான கானகத் தன்மையை உட்புகுத்துவது.
இந்த பூங்காவிலேயே இப்பகுதி வாழ் கானுயிர்களை (யானை, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகள்) அதன் இயல்புநிலையில் வளர்ப்பது, பழங்குடியின மக்களின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக இதற்குள்ளேயே குறிப்பிட்ட சில பழங்குடிகளின் கலாச்சார பண்பாடு ததும்பும் விதமாக குடில்கள் அமைத்து, அவர்களையும் அங்கேயே குடி வைப்பது என்றெல்லாம் பல விஷயங்களை இதற்குள் உள்ளடக்கப் போவதாக சொன்னார்கள் இந்த திட்டத்தை தீட்டியவர்கள்.
அதற்காக இந்த சுற்றுவட்டாரத்தில் சுமார் 50, 60 ஏக்கர் நிலங்கள் பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளிடம் விலைக்கு வாங்கினர் தொழிலதிபர்கள். அத்துடன் அப்போதைய அமைச்சர் ஒருவரை சரிகட்டி சுமார் 200 ஏக்கர் நிலங்களை 99 வருட லீசுக்கு (குத்தகைக்கு) ஏற்பாடு செய்தனர். இப்படி குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் எல்லாம் தூவைப்பதியை சேர்ந்த பழங்குடிகள் (செட்டில்மெண்ட்) பயிர் செய்து வந்தவை. ஆரம்பத்தில் தங்களுக்கு நல்லது நடக்கப்போகிறது என்றே உணர்ந்து இந்த உயிரியியல் பூங்காவிற்கு ஆதரவு தெரிவித்த பழங்குடிகள், தாம் காலம், காலமாக வாழ்ந்து வந்த வீடுகளை கூட காலி செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொந்தளித்தார்கள்.
'உயிரையே தந்தாலும் தருவோமே ஒழிய, எங்க நிலத்தை மட்டும் தர மாட்டோம்!' என்று பொங்கிய, இவர்களின் போராட்டத்தை முன்னெடுத்தது மக்கள் சிவில் உரிமைக்கழகம். (பியுசிஎல்).
இந்த அமைப்பின் தலைவர் அப்போது பேசும்போது, ''ஆதிவாசி நிலங்களை அது புறம்போக்கு நிலமானாலும் கூட அரசு லீசுக்கு கொடுக்க முடியாது. குடியானவர்கள் ஆதிவாசி நிலங்களை வாங்கினாலும் செல்லாது. இந்த உயிரியியல் பூங்காவிற்கு திட்ட வடிவமைப்பாளராக உள்ள அம்மையார் ஒருவர் மீது வனவிலங்குகளின் 'செமன்' வெளிநாடுகளுக்கு கடத்தியதாக குற்றச்சாட்டுகள் உலகம் பூராவும் உள்ளது. இந்த திட்டத்தை நிர்மாணிக்கும் கோவையில் உள்ள பெரும் தொழிலதிபர்களுக்கும் இதில் பொதுநல நோக்கு இல்லை. முழுக்க வியாபார உத்தியுடனேயே அமைக்கிறார்கள்
கேரளா- தமிழகத்தின் எல்லைப்பகுதியில் இது இருப்பதாலும், நேரே கேரளத்தின் கடற்கரையோர நகரங்களுக்கு வழித்தடங்கள் பக்காவாக இருப்பதாலும் இங்கேயிருந்து சமூக விரோத செயல்கள் நடைபெற ஏராள வாய்ப்புண்டு. இதையே சுற்றுலா தளமாகவும் தனியார் பயன்படுத்தி ரிசார்ட்ஸ்களும், கேளிக்கை மையங்களும் அமைத்து, வனவிலங்குகள் காட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்பி விடவும் கூடும். இதுவரை தொழிலதிபர்கள் நீண்ட கால லீசுக்கு எடுத்த நிலங்கள் திரும்ப எப்போது அரசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அதுபோலத்தான் இதுவும் ஆகும். கோவை, நீலகிரி மாவட்ட உயிர்ச்சூழல் மண்டலத்திலேயே புதிய கட்டுமானப் பணிகள், ரிசார்ட்டுகள் எதுவும் இல்லாத சிறிய பகுதியாக இந்த ஆனைகட்டி இருந்து வருகிறது. அந்த தன்மையின் இதன் மூலம் நிச்சயம் கெடும்!'' என்றே குறிப்பிட்டார்.
இதேபோல் இங்கு நிலம் லீசு சமாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு சமூக ஆர்வலர்களில் ஒருவரான வக்கீல் சிவசாமி தமிழன் பேசும்போது, ''கோவை குற்றாலத்திற்கு அருகே உள்ள நல்லூர் வயலை ஒரு கிறித்துவ கல்வி நிறுவனம் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டது. அதற்கு அடுத்து பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை 'யோகா' மனிதர்கள் வியாபித்துக் கொண்டார்கள். அதையடுத்து இங்குள்ள பன்னிமடையில் ஒரு இந்தி நடிகரின் நட்சத்திர ஓட்டல் தன் வயப்படுத்தியுள்ளது. இன்னொரு பக்கம் இங்கேதான் ரஜினி வந்து போகும் குருகுலம், பறவைகள் ஆராய்ச்சி மையம் என அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஜீவாலாஜிக்கல் பார்க். இப்படி இந்த பணக்காரர்கள் எல்லாம் ஏன்தான் இந்த மலைப்பகுதிகளையே குறிவைக்கிறார்களோ?'' என குமுறினார்.
தூவைப்பதியில் பழங்குடி மக்களை இது விஷயமாக சந்திக்க சென்றபோதோ இருளர் சமூக மக்களிடம் அதை விட கொதிப்பு. ''எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே இதுலதான் விவசாயம் செஞ்சு நாங்க ஜீவனம் செஞ்சிட்டிருக்ககோம். யாருக்காவது, எதுக்காவது நிலம் தேவைன்னா அரசாங்கம் எங்க நிலத்துலயே கை வைக்கிறதே வேலையா போச்சு. ஒரு தடவை எங்க சங்க பாடியை (மீட்டிங் ஹால்) பிரிச்சு எறிஞ்சாங்க. லாரியில வந்த ரவுடிகள் எங்க ஆடு, மாடுகளையெல்லாம் ஏத்திட்டுப் போனாங்க. வீடுகளையும் பிரிச்சு எறிஞ்சாங்க. தீ வச்சும் கொளுத்தினாங்க. இவ்வளவு மிரட்டலும் எதுக்காக? நாங்களா ஓடிப்போகணும்னுதானே? அது மட்டும் நடக்காது. இங்கே இவ்வளவு நடந்த பிறகு மிருகக்காட்சி சாலைக்கு ஒரு கல்லுக்காலைக்கூட நட விட மாட்டோம்!'' என்று பொங்கித் தள்ளினர்.
குப்பன் என்கிற ஆதிவாசி பேசும்போது, ''எனக்கு அஞ்சே முக்கா ஏக்கர் பூமி இருந்தது சாமி. பதிமூணு வருஷம் முன்னால ஒரு நாயக்கர் வந்தாரு. குப்பா பேசாம பூமியக் கொடுத்திடு. கொடுக்கிற விலையை வாங்கிக்க. இல்லேன்னா நான் கவர்மெண்டுல பணம் கட்டிடுவேன். நீ அங்கே போய்த்தான் பணத்தை வாங்கணும். அப்படி நீ வாங்கறதுக்குள்ளே ஆயிரம் தடவை கோர்ட்டுக்கு நடக்கணும். உள்ளதும் போயிடும்!''னு மிரட்டாத குறையா கேட்டாரு. என் நிலத்துக்கு பக்கத்து தோட்டத்துல இருந்த கவுண்டர்கள் எல்லாம் நிலத்தை வித்துட்டாங்க. நம்ம நிலம் மட்டும் துண்டா நின்னா என்ன ஆகுமோன்னு பயம். எட்டே நாள்ல வித்தும் போட்டேன். அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சுது. கவுண்டர் நிலத்தை அவங்க ஏக்கர் ஒரு லட்சம் ரூபா கொடுத்து வாங்கியிருக்காங்க. எனக்கு வெறும் 25 ஆயிரத்துக்கு முடிச்சுட்டாங்கன்னு!'' என்றார்.
பொத்தன் என்கிற ஆதிவாசி சொன்ன கதை வேறு விதமாக இருந்தது. ''என்னோடது 3 ஏக்கர் 90 சென்ட் நிலம். அதை நான் குடுத்திட்டா, பால்கம்பெனி (2 கிலோமீட்டர் தள்ளி மெயின் ரோடு பக்கம்) பக்கத்துல அதே அளவுல இடம் தர்றதா வாக்குறுதி தந்தாங்க. நானும் நம்பினேன். இடத்தையும் காட்டினாங்க. பொறகு அவங்க நீட்டின இடத்துல கைரேகையும் வச்சேன். அதற்கு பிறகு மாற்று இடப்பத்திரம் தரவேயில்லை. சரி பணமாவது கொடுங்களேன்னு நடையாய் நடந்தேன். ரொம்பவும் இழுத்தடிச்சு ரொம்ப குறைச்சலா ஒரு தொகையை கொடுத்தாங்க. அதுவெல்லாம் அவங்க கிரையம் பண்ணின பூமி. அவங்களே வச்சுக்கட்டும். அவங்க ஏமாத்தினதா சொல்ற பூமியில நீங்க விவசாயம் பண்ணுங்க. எந்த பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கறேன்னு அப்ப இருந்த கலெக்டர் ராமன் சொன்னார். அந்த நம்பிக்கையில்தான் என் பூமியில் இப்பவும் எறங்கி வேலை செஞ்சுட்டு வர்றேன். இப்ப வந்து ஆளாளுக்கு விரட்டறாங்க. என்ன ஆனாலும் சரி. உசிரை விட்டாலும் விடுவோம். நிலத்தை மட்டும் விட மாட்டோம்!'' என்று உறுதியுடன் பேசினார்.
உயிரியியல் பூங்காவை நிர்மாணிக்க இருந்த முக்கிய தொழிலதிபரை சந்தித்துப் பேச முயற்சித்தபோது, அவர் இது சம்பந்தமாய் என்னை சந்திக்கவே விரும்பவில்லை. மாறாக தனது உதவியாளர் மூலமே என்னிடம் கேள்வி கேட்டு விளக்கங்களை தெரிவித்து அனுப்பினார். அதற்கு முன்னதாக என்னை இந்த விஷயத்தில் சமாதானப்படுத்தவே முயற்சி செய்தார்கள்.
''கோவை மண்டலத்தில் மட்டுமல்ல; ஆசியாவிலேயே இப்படியொரு உயிரினப் பூங்கா இல்லை. அந்த அளவுக்கு கனவுத்திட்டம் வைத்துள்ளோம். அதில் ஆதிவாசிகளுக்கே முதலிடம். அவர்களுக்கான கல்வி வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து எல்லாமே பெற்றுத்தர பல திட்டங்கள் வைத்துள்ளோம். இதை பல பத்திரிகையாளர்களும் பாராட்டி வரவேற்கிறார்கள். நீங்களும் அதே வரிசையில் வரவேண்டும்!'' என்றெல்லாம் அந்த உதவியாளரின் வியாக்கியானம் விரிந்தது. அதற்கு நான் சொன்ன பதில் வேடிக்கையானது.
கோவை மாநகரமே ஒரு காலத்தில் அடர்ந்த காடுதான். பல தொழிலதிபர்கள் லீசு என்ற பெயரில் எடுத்துக் கொண்டு தொழிற்சாலைகள் நிறுவின நிலங்கள் எல்லாம் எப்படி அவர்கள் கைக்கே சொந்தமாக மாறின என்பதை ஏதாவது ஸ்பெஷல் பூத கண்ணாடி வைத்துத்தான் ஆராய வேண்டும். இன்றைக்கு கோவையில் பீளமேடு தொடங்கி கணியூர் வரை நெடித்து நிற்கும் பகுதி முழுக்க எண்ணி ஒரு சில தொழிலதிபர்களுக்கே சொந்தமாக இருப்பது எப்படி? சரி, தொழிலுக்காக அந்த காலத்தில் ஏதோதோ செய்து ஏழை, எளிய மக்களிடம் வளைத்து விட்டீர்கள். அது போதாதா? இப்போது இங்கிருந்து மேற்கே விடப்பட்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை மட்டுமாவது விட்டு வைக்கக்கூடாதா?
நீங்கள் எல்லாம் அங்கே சென்று எதைச் செய்தாலும் அது நிச்சயம் எதிர்காலத்தில் உங்கள் கைகளுக்குள் தொழிற்சாலைகளாகவே மினுங்கும். ஆதிவாசிகளையும், காடுகளையும் அப்படியே உள்ளது உள்ளபடி விடுங்கள். அதிலும் ஏன் உட்புகுந்து சேதம் விளைவிக்கிறீர்கள். இந்த விஷயத்திற்கு தெளிவான பதில் சொன்னால் அதை நான் எழுதவுள்ள செய்தியில் உங்கள் தரப்பு நியாயமாக எழுத தயாராக உள்ளேன் என்று கேட்க, அவர்களிடம் எதிர்மறையான பதில்.
அதில் அந்த உதவியாளப் பெண்மணி, ''இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஏமாற்றி எந்த நிலத்தையும் பிடுங்கவில்லை. அவர்கள் எல்லாம் உயிரியியல் பூங்கா திட்டத்திற்கு சந்தோஷமா ஒப்புகிட்டே நிலத்தை கொடுத்தாங்க. பின்புதான் சில அரசியல் சக்திகளின் தூண்டுதல் பேரில் இப்படியெல்லாம் நடந்துட்டிருக்கு!'' என சொல்லி முடித்துக் கொண்டார்.
அவர் பதிலால் நான் சமாதானம் ஆகவில்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர்கள், நான் எடுத்த செய்தி அச்சுக்கு போகும் முன் வேறு காரியமும் செய்தார்கள். அது ஆதிவாசிகளை புரட்சியாளர்கள், நக்ஸலைட்டுகள், தீவிரவாதிகள், தீ கம்யூனிஸ்ட்டுகள் என்றெல்லாம் வதந்தி கிளப்பும் அளவுக்கு அது விஸ்வரூபமெடுத்தது.
மீண்டும் பேசலாம்..
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago