யானைகளின் வருகை 27: சேதமாகும் வெள்ளியங்கிரி காடுகள்

By கா.சு.வேலாயுதன்

 

நீலகிரி காடுகளும், பசும்புல்வெளிகளும் எப்படி தமிழகத்தின் தண்ணீர் தொட்டியாக இருந்து நீர்சுருக்கிறதோ, அதற்கு இணையாக கொங்கு மண்டலத்தின் இயற்கை வளத்தின் உயிர்ப் பொருளாக விளங்குவது வெள்ளியங்கிரி மலைக்காடுகள். இந்த மலைகள்தான் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஜீவனாக விளங்கும் நொய்யல் ஆற்றின் தோற்றுவாயாக விளங்குகிறது. கோவை மாநகரின் மையத்தில் நின்று பார்த்தால் மேற்கே தெற்கிலிருந்து வடக்காக நீலநிறத்தில் வில் வடிவில் இந்நகருக்கே பாதுகாப்பு அரண்போல் காட்சியளிக்கிறது.

இவை மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு கூறு என்றே கொள்ளலாம். அதன் நடுநாயகமாக இருப்பதே வெள்ளியங்கிரி மலை. இதில் தெற்கே இருப்பது தர்மலிங்கேஸ்வரர் மலை. வடக்கே இருப்பது குருடி மலை.இடைப்பட்ட பகுதிகளில் எட்டிமலை, அய்யாசாமி மலை, மருதமலை, தும்பி முடி மலை, கூத்தாடிக்கல் மலை, பெருமாள்முடி மலை, கரியான் மலை, குஞ்சர மலை,வெள்ளியங்கிரி மலை, வரடி மலை அடங்கியுள்ளன. இவற்றிலேயே உயரம் குறைவான மலை தர்மலிங்கேஸ்வரர் மலை (1900 அடி), அதிக உயரம் கொண்ட மலை கரியான் மலை (6000 அடி) விளங்குகிறது. வெள்ளியங்கிரி மலையின் உயரம் 5403 அடியாகும்.

கோவை நகரிலிருந்து இந்த மேற்குத்தொடர்ச்சி மலைக்கூறுகளில் தென்மேற்கிலிருந்து வடமேற்கு வரை எந்த திக்கில் 20 முதல் 30 கிலோமீட்டர் தூரம் நீங்கள் பயணித்தாலும் இந்த மலைகளில் ஒன்றையோ, அதன் துணை மலைகளையோ, குன்றுகளையோ, அதன் பள்ளத்தாக்குகளையோ அடையலாம்

இந்த வெள்ளியங்கிரி மலை தொடரானது தெற்கு, மேற்கு, வடக்கு என எத்திசையிலும் 40 கிலோமீட்டர் நீளமுள்ள வில் போல அமைந்துள்ளது. இடைப்பட்ட குன்றுகள், மலைகள் எல்லாவற்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உண்டு. இவற்றின் நடுவில் வில்லில் புறப்பட்ட அம்புபோலவே வெள்ளி அருவிகளாய் ஆங்காங்கே கொப்பளிக்கும் நீருற்றுகள் ஒன்று கூடி நொய்யல் ஆற்றை உருவாக்குகின்றன. அதன் நடுநாதமாக விளங்கும் வெள்ளியங்கிரியை ஒட்டியுள்ள பெருமாள் முடிக்கு மேற்கே கீழ் பகுதியில் கொடுங்கரை பள்ளம் என்று ஒன்று உள்ளது. இந்த மலைகளிலேயே அதிகமான மரங்கள் அடர்ந்துள்ள பகுதியான இங்கு மூங்கில் மரங்கள் நிறைய உண்டு. தண்ணீர் வசதியும் அதற்கேற்ப பெருக்கெடுத்தது.

அதனால் கேரளா, தமிழகம், கர்நாடகா என வலசை வரும் யானைகள் இங்கேயே பல நாட்கள் நின்று நிதானித்தே செல்கின்றன. பசுமை வளம் கொழிக்கும் இங்கேயே தங்கி வாசம் செய்யும் யானைக்கூட்டங்களும் நிறைய இருந்துள்ளன. யானைகள் பிரசவத்திற்கு தோதான இடமாகவும், இனச் சேர்க்கைக்கான சூழல் ததும்பும் வெளியாகவும் இந்த இடங்கள் உள்ளன.

இந்த மலைகளின் அடிவாரப்பகுதியில்தான் நாம் ஏற்கெனவே சில அத்தியாயங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் மதுக்கரை, எட்டிமடை, மாவூத்தம்பதி, புதுப்பதி, ஆலாந்துறை, நாதேகவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களும், இனி காணப்போகும் நூற்றுக்கணக்கான கிராமங்களும் (ஹாகாவிற்குள் வருவபவை) ஒளிந்து கொண்டிருக்கின்றன. கோயமுத்தூரின் சீதோஷ்ண நிலையை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்பவை இந்த மலைக்காடுகளே. பருத்தி விளைவிக்கவும், பஞ்சிலிருந்து நூலை மிகத்தரமாக உற்பத்தி செய்யவும் ஏற்ற தட்பவெப்ப நிலையையும் இந்த மலைவளங்கள் தந்த தட்பவெப்ப நிலையே உருவாக்கித்தந்துள்ளன.

இந்த மலைகளின் நடுநாயகமாக விளங்கும் வெள்ளியங்கிரி மலைகளில் தென்கயிலாயம் என்றே வழங்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு பல நூற்றாண்டுகளாக மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் இங்கே உள்ள ஏழு மலைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியில் உள்ள சுயம்புலிங்கத்தை தரிசித்து வருகிறார்கள் மக்கள். இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பூண்டி விநாயகரை தரிசித்து விட்டு, முதல் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாரை தரிசிக்கிறார்கள். இந்த முதல் மலையை கடப்பதே கடினமான செயல். அதை தாண்டி கை தட்டி சுனை மலை, பாம்பாட்டி சுனை மலை, ஒட்டர் சித்தர் மலை, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவமலை, திருநீற்று மலை என நடந்தால் கடைசியாக எட்டுவது கிரிமலை எனப்படும் சுயம்புலிங்கர் திருக்கயிலைநாதர் மலை. மலைகளில் படிக்கட்டுகள் ஏதும் இல்லை. பல பாறைகளில் தவழ்ந்துதான் செல்லவேண்டும். வழியெங்கும் கம்பூன்றித்தான் செல்ல முடியும்.

மாலை வேளைகளில் இந்த மலைகளை ஏற ஆரம்பித்தால் அதிகாலை 4 மணிக்கே இந்த சுயம்புலிங்க தரிசனத்தை காணமுடிகிறது என்பதையெல்லாம் கேட்டாலே இந்த தரிசனம் என்பது எவ்வளவு கடினமானது என்பதை யாரும் உணர்ந்து கொள்ள முடியும். இந்த தென்கயிலாய யாத்திரை மகாபாரத காலத்திலிருந்தே நடந்ததற்கான சாட்சியக்கூறுகள் இங்கே நடக்கின்றன. இந்த யாத்திரையானது சித்திரை பெளர்ணமி அன்றே உச்சநிலை அடைகிறது. அந்த நாளில் பெரிய நிலா. அதிக வெளிச்சம் தரும் என்பதும், அதை மலை உச்சியில் நின்றால் எட்டிப்பிடிக்கும் தொலைவில் தொங்குவது போல் இருக்கும் என்பதும் மக்களிடம் இன்றும் வழக்கில் உள்ளது. அதனால் அந்த நாளில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் மலை ஏற்றம் காண்கிறார்கள்.

இந்த மலைகளை கடக்கும்போது ஏராளமான நீர்ச்சுனைகள் எதிர்கொள்கின்றன. பங்குனி, சித்திரை மாதங்களில் வீசும் கோடையினால் அடர் காடுகளுக்குள் வனமிருகங்கள் உட்புகுந்து கொள்கின்றன. மற்ற நாட்களில் மனிதர்கள் சென்றால் புலி, சிறுத்தை, யானைகளால் கொல்லப்படுவது நிச்சயம் என்பதால் மற்ற நாட்களில் இந்த மலைகளுக்குள் யாரும் செல்வதில்லை. இதன் வழித்தடத்தை இங்குள்ள கோயில் நிர்வாகமும், வனத்துறையினரும் அடைத்தும் விடுகின்றனர். அதையும் மீறி காடுகளுக்குள் பிரவேசித்த பலர் பின்னர் எலும்புக்கூடுகளாய் கிடைத்த சம்பவங்களும் உண்டு.

காலங்காலமாய் இப்படி மக்கள் இங்கே பிரவேசித்த காலங்களில் எல்லாம் காடுகள் அழியவில்லை. யானைகளோ, சிறுத்தைகளோ பக்கத்தில் உள்ள ஊர்களுக்குள் உட்புகவும் இல்லை. ஆனால் இந்த வெள்ளியங்கிரி அடிவாரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வைதேகி நீர்வீழ்ச்சி எனப்படும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி, கோவை குற்றாலம் பகுதிகளுக்கு கீழே பிரம்மாண்ட கட்டிடங்கள் குடியிருப்புகள் எழ ஆரம்பித்த பிறகுதான் அந்த வேதனைக் காட்சிகள் அரங்கேற தொடங்கின.

எப்படி? அதை என் அனுபவத்திலிருந்தே தருகிறேன்.

வெள்ளியங்கிரி அடிவாரம் பூண்டியிலிருந்து எண்ணி சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆன்மீக மையம் 1990களில்தான் சிறிய அளவில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உருவானது. பின்னர் அது நூற்றுக்கணக்கான ஏக்கரில் விஸ்தீரணம் கண்டது. அதில் மனதிற்கு அமைதியை தரும் யோகா வகுப்புகளும், அதன் வழி ஆன்மீகத் தேடல்களும் நடக்க ஆரம்பித்தன. அதைப் பற்றி உணர்வுப்பூர்வமாக மீடியாக்களும் பேச ஆரம்பித்தன. அதனால் அதற்கு பக்தர்கள் பெருக ஆரம்பித்தனர். மையம் பிரபல்யம் ஆக, ஆக அதன் கிளைகளும் உலகெங்கும் வியாபிக்க ஆரம்பித்தது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அந்த மையம் 1997 ஆம் ஆண்டில் முக்கிய சர்ச்சைக்குள் சிக்கியது. அது சம்பந்தமாக அங்கே செய்தி சேகரிக்க நான் சென்றிருக்கிறேன். அப்போது கூட அந்த மையம் சார்ந்த பகுதி காடுதான். சாலை வசதியே கிடையாது.சுமார் மூன்று கிலோமீட்டர் கல்லும், கரடுமான வனத்துறையினரின் குறுகலான சாலைதான்.

அப்படிப்பட்ட மையத்திற்கு 1997ல் சென்று விசாரித்தபோது வருடந்தோறும் மகா சிவராத்திரியன்று மட்டும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்வதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருவதாகவும் சுற்றுவட்டார கிராமத்து மக்கள் தெரிவித்தார்கள். அதுவே சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கில் வெளியூரிலிருந்து வருகிறார்கள். சிலர் இங்கேயே தங்கியிருக்கிறார்கள். அவர்கள் இரவு நேரங்களில், 'ஓநாயாக, நரியாக ஊளையிடுகிறார்கள். சிங்கம் போல், சிறுத்தை, புலி, கரடிகள் போல உறுமுகிறார்கள். யானை போல் பிளிறுகிறார்கள். அதனால் கானகத்தின் அமைதியே கெடுகிறது. இங்கே வருகிறவர்கள் என்னதான் செய்கிறார்கள் புரியவில்லை. இம்மையத்தின் சுற்றுவட்டாரம் முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருவன. அதையும் மீறி இங்கே இயற்கைக்கு கேடு நடக்கிறது.

இங்கே சாதாரணமாகவே 20 , 30 காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும். அவை இந்த மையம் வந்த பிறகு போக வழிதெரியாமல், சாயங்காலம் ஐந்தாறு மணிக்கே, ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதை நடவடிக்கை எடுக்க வேண்டிய வனத்துறை கைகட்டி அந்த மையத்திற்கே சேவை செய்கிறது!' என்ற புகார்கள் அப்போதே எளிய மக்களிடம் பரவியிருந்தது.

இந்த மையத்து பெண்மணியின் சர்ச்சைக்குரிய மரணத்தில் இருந்த விவகாரங்களை கூட உள்ளூர் போலீஸார் மூடி மறைப்பதிலேயே குறியாக நின்றனர். இதையெல்லாம் கள ஆய்வு செய்து, இம்மையத்தின், 'மர்ம முடிச்சுகள்' என்ற தலைப்பிட்டு ஒரு செய்திக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதற்கு பிறகு அம்மையத்தினர் செய்தி வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்தை தொடர்பு கொண்டார்கள். 'நீங்கள்தான் எங்களை இந்த நிலைக்கு உயர்த்தினீர்கள். இப்போது நீங்களே இப்படி எதிர்மறை செய்திகளை வெளியிட்டால் எப்படி?' என்று வேறு கேள்வி கேட்டார்கள். தங்கள் மைத்தின் நிறுவனர் தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி விளக்கி 'உங்களுக்கு பேட்டி கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்!' என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதைக் கேட்டு நான் பணியாற்றின பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் என்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறார்கள். அடுத்து சம்பந்தப்பட்ட மைய பொறுப்பாளர் ஒருவரும் பேசினார். செய்தி குறித்து விரிவாக விவாதித்தார். தொடர்ந்து தம் குருவை பேட்டியெடுக்கவும் தன் பைக்கில் (ஜாவா) அழைத்துப் போனார். அப்போது மாலை ஐந்து மணியிருக்கும். செம்மேடு கிராமம் தாண்டி முட்டத்து வயல். அது தாண்டி பூண்டி. பூண்டிக்கு செல்வதற்கு 3 கிலோமீட்டர் முன்பே வடக்கு நோக்கி செல்லும் மண்ணும், கல்லும் நிறைந்த மண் சாலையில் என்னை அழைத்துச் சென்றவரின் பைக் (ஜாவா) தட தடத்தது. அங்கு உயர்ந்து நின்ற மரங்களுக்கிடையே குன்றுகள் போல் நிற்கும் காட்டு யானைகளும் புலப்பட்டன.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்