‘வசிப்பது இங்கே..வரம் கேட்பது அங்கேயா..?’

By கா.சு.வேலாயுதன்

“நா

ங்க வசிக்கிறது தமிழ்நாட்டுக்குள்ள. ஆனா, எங்களுக்கு மின்சாரம் வழங்குறது கேரள சர்க்காரா?” கோவை மாவட்டம் அத்திக்கடவு அருகிலுள்ள கூடப்பட்டியில் வசிக்கும் இருளர் பழங்குடிகள்தான் இப்படிக் கேள்வி கேட்கிறார்கள்.

கோவை மாவட்டம் அத்திக்கடவிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வனத்துறையின் குறுகிய சாலையில் 10 கிலோ மீட்டர் சென்றால் எட்டுவது கூடப்பட்டி. இந்த கிராமத்தில் இருளர் இன பழங்குடிகள் 22 குடும்பங்கள் வசிக்கிறார்கள். கேரள எல்லையில் இருக்கும் இந்த கிராமத்துக்கு கூப்பிடு தொலைவில் தான் சிறுவாணியும் பவானியும் ஒன்றாகச் சங்கமிக்கின்றன.

மின்சாரம் தந்த கேரளம்

கூடப்பட்டியில் நுழைந்ததுமே சூரிய ஒளி மின் கம்பங்கள் அணிவகுக்கின்றன. அதேசமயம், இந்த ஊருக்குள் வரும் தமிழ்நாடு மின்வாரியத்தின் மின் கம்பங்கள் துருப்பிடித்துப் போய் கம்பிகள் அறுபட்டுக் கிடக்கின்றன. ஒரு சில கம்பங்கள் தரையில் கிடத்தப்பட்டு மக்கள் அமரும் இருக்கைகளாகக் கிடக்கின்றன. இவற்றுக்கு நடுவில், கேரள மின்சார வாரியம் ஊன்றியிருக்கும் மின்கம்பங்களையும் பார்க்க முடிகிறது. அவற்றின் மூலம் 22 வீடுகளுக்கும் விளக்கெரிக்க மின் இணைப்பு வழங்கியிருக்கிறது கேரள மின் வாரியம்.

‘தமிழகத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு கேரளா ஏன் மின்சாரம் கொடுக்க வேண்டும்?’ என்ற ஆச்சரியக் கேள்வியுடன் கூடப்பட்டியில் இறங்கினோம். அங்கே எதிரில் தென்பட்ட வள்ளியம்மாள் என்ற பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்தோம். ”நாங்க 22 குடும்பங்களும் காலங்காலமா இங்க இருக்கோம். எங்கள்ல பதினெட்டு குடும்பத்துக்கு மட்டும் ரேஷன் கார்டு இருக்கு; அதுவும் பேருக்குத்தான். நாங்க ரேஷன் வாங்கோணும்ன்னா இருபத்தெட்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிற வெள்ளியங்காடு போகோணும். எங்க புள்ளைக ஸ்கூலுக்குப் போகோணும்னாலும் அதே நிலைமை தான். காட்டுப்பாதையில அடிக்கடி யானைக மொசு, மொசுன்னு நிக்கும். அதனால, எங்க புள்ளைங்கள தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை. நாலு கிலோமீட்டர் தூரத்துல இருக்கற கோட்டத்துறைக்குத்தான் போறாங்க.

அந்த ஸ்கூலு இருக்கிறது கேரளான்னாலும் தமிழ் பாடமும் இருக்கிறதால புள்ளைங்க படிப்புக்கு தப்பிக்கிறாங்க. எங்க ஊருக்கு எம்.எல்.ஏ., எம்.பி.,ன்னு யார் யாரோ வர்றாங்க; அரசாங்கப் பணத்துல பழைய வீட்டுக்கு புது வீடெல்லாம் கட்டித் தர்றாங்க. வீதிக்கு சோலார் லைட்டெல்லாம் போட்டுத் தர்றாங்க. ஆனா, இருபது வருசத்துக்கு முன்னாடி பிடுங்கிவிட்ட கரன்ட்டை மட்டும் தரமாட்டேங்குறாங்க” என்றார் வள்ளியம்மாள்.

வருஷம் இருபதாச்சு..

தொடர்ந்து பேசிய கருணாகரன் என்பவர், “மாநிலப் பிரிவினைக்குப் பிறகு, தமிழகத்தின் கூடப்பட்டிக்கும், கேரளத்தின் அட்டப்பாடி பகுதிக்கும் தமிழகத்திலிருந்து தான் மின்சாரம் வந்துட்டு இருந்துச்சு. நாப்பது வருஷம் மின்னால அட்டப்பாடி ஒட்டுமொத்தத்துக்கும் கேரளாவே மின்சாரம் தந்துடுச்சு. அதனால, அட்டப்பாடிக்கு தமிழக மின்சாரம் அவசியமில்லாம போச்சு. எங்களுக்கு மட்டும் மின்சாரம் வந்துட்டு இருந்துச்சு.

இந்தப் பகுதியில அடிக்கடி மழைபெய்யுறதால காத்தடிச்சு மரங்கள் எல்லாம் முறிஞ்சு விழும். அந்த நேரத்துல, எங்களுக்கு மின்சாரம் கட்டாகும். அப்படி கட்டாகிக்கிடந்த ஒரு சமயத்துல வனத்துக்குள்ள இருந்த மின் கம்பத்துல ஃபியூஸை பிடுங்கிட்டுப் போனாங்க. அப்படியே, இங்க இருந்த டிரான்ஸ்ஃபார்மரையும் தூக்கிட்டாங்க. மக்கள் கேட்டதுக்கு, ‘இதோ.. அதோ.. சரி செஞ்சுடுறோம்’னாங்க. ஆனா, வருசம் இருபதாச்சு. இதுவரைக்கும் வேலை ஆகல.

என்.ஓ.சி. வந்தால்..

ஏதோ, நாங்க கெஞ்சிக் கேட்டுக்கிட்டதால கேரள அரசு எங்க வீடுகளுக்கு லைட் எரிக்க மட்டும் மின்சாரம் குடுத்துட்டு இருக்காங்க. செட்டில்மென்ட் பூமியில நாங்க விவசாயம் செஞ்சு பொழைக்கிறதுக்கும் மின்சாரம் குடுத்து உதவுங்கன்னு கேரள சர்க்காருக்கிட்ட கேட்டோம். ஆனா அதுக்கு, ‘தமிழகத்தின் வனத்துறை, வருவாய்த்துறை, மின்சாரவாரியம் உள்ளிட்ட துறைகளிடம் என்.ஓ.சி. வாங்கிட்டு வந்தா பரிசீலிக்கலாம்’னு கேரள சர்க்கார்ல சொல்லீட்டாங்க.

தமிழக அதிகாரிகளைக் கேட்டால், ‘இது வனவிலங்குகள் நடமாடும் பகுதி அப்படி எல்லாம் சர்டிஃபிகேட் கொடுக்க வழியில்லை’ன்னு கைவிரிக்கிறாங்க. அப்ப சரி, தமிழக மின்சார வாரியம் மூலமாச்சும் மின்சாரத்தைக் குடுங்கன்னு கேட்டா, ‘அதுவும் ரொம்பக் கஷ்டம். பில்லூர்ல இருந்து 20 கிலோமீட்டருக்கு மின் கம்பங்களை சரிபண்ணி, புதுசா மின்கம்பிகளை கட்டணும்’னு சாக்குப் போக்குச் சொல்றாங்க. எங்களுக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல” என்றார் வேதனையுடன்.

ஆயில் இன்ஜின் இருக்கு

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் பழனிவேல்ராஜாவிடம் கேட்டபோது, “கேரள எல்லையை ஒட்டியிருப்பதால் கூடப்பட்டிக்கு அஞ்சு வருசத்துக்கு முந்தி, கேரளா மின்சாரம் வழங்கியது. அதேசமயம், அந்த மக்களின் விவசாய பயன்பாட்டுக்காக 5 ஆயில் இன்ஜின்களை தமிழக வனத்துறை வழங்கியிருக்கு. ஆனால், அது போதாது; எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என அந்த மக்கள் கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்” என்றார் அவர். ‘மின்மிகை மாநிலம்.. கேட்டவுடன் மின் இணைப்பு..’ என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், இந்த இருளர் மக்களின் இன்னலைப் போக்கவும் துரித நடவடிக்கை எடுத்தால் நல்லது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்