தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பளிச்சென தெரிகின்றன. இந்த திடீர் மாற்றங்களுக்குக் காரணமானவர் சென்னை லயோலா கல்லூரியின் உதவிப் பேராசிரியர் தீபக் நாதன்!
முன்பு, மாற்றுத்திறனாளிகளுக்காக, முக்கிய ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் சிறிய ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களில் இந்த வசதியை ஓராண்டுக்கு முன்பு திடீரென நீக்கிவிட்டார்கள். இதனால், இந்த ரயில்களில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்துடன் பேசிப் புண்ணியம் இல்லாமல் போனதால் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தீபக் நாதன்.
தானே ஆஜராகி வாதாடினார்
இந்த வழக்கில், தானே நீதிமன்றத்தில் ஆஜராகி மாற்றுத் திறனாளிகளுக்காக வாதாடினார் தீபக். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்கும் விதமாக பல்வேறு உத்தரவுகளை அண்மையில் பிறப்பித்தது. அதன் தாக்கமே முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக செய்யப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள்!
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ‘முக்கிய ரயில்களில், மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் 2018-ல் இணைக்கப்படும்’ என தெரிவித்தது ரயில்வே நிர்வாகம். அதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய ரயில்களில் இலகுவாக பயணம்செய்ய வசதியாக தற்காலிக ஏற்பாடுகள் செய்துதர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அடுக்கடுக்கான உத்தரவுகள்
இதுதவிர, ‘முக்கிய ரயில் நிலையங்களில் தனியாக பார்க்கிங் வசதி, காத்திருப்புப் பகுதியில் தனி இருக்கைகள், ரயில் பெட்டிகளில் சிரமமின்றி ஏறி இறங்க வசதியாக நகரும் சாய்தள மேடை வசதி, ரயில் பெட்டிகளின் உள்ளே செல்ல வசதியாக சிறிய ரக சக்கர நாற்காலி, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் தனியாக இட ஒதுக்கீடு.. இத்தனை வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்துதர வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே நிர்வாகம் ஒரு மாதத்துக்குள், மாற்றுத்திறனாளிகள் குறைகளைக் தீர்க்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு அடிக்கடி குறைதீர் கூட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகளின் குறைகளை போக்க வேண்டும். ரயில்வே ஆலோசனைக் குழு உள்ளிட்ட இதர குழுக்களிலும் மாற்றுத்திறனாளிகளை இடம்பெறச் செய்யவேண்டும். ரயில்வே போலீஸ், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு மாற்றுத்திறனாளிகள் நலன், உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வரம்
“சென்னை மெரினா கடற்கரை சாலையில் லேடி வெலிங்டன் சீமாட்டி கல்லூரி அருகே அமைந்துள்ளது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம். இங்குள்ள நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரம். இங்கு, புகார்தாரரே நேரில் ஆஜராகி வாதாடலாம்; வழக்கறிஞர் அவசியமில்லை. முத்திரைக் கட்டணமும் தேவையில்லை. செலவில்லாமலும் விரைவாகவும் நிவாரணம் பெறலாம்.
அதிகாரிகளும், அரசாங்கமும் அத்தனை எளிதில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து விடுவதில்லை. தொடர் போராட்டம், வழக்கு, பொதுவெளியில் அம்பலப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கினால்தான் ஏதாவது செய்கிறார்கள்.” என்று ஆதங்கப்படுகிறார் தீபக் நாதன்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago