திருப்பூர் மாவட்டத்தில் அதிசயம், ஆச்சரியம்.. புதிய மாணவர்கள் 262 பேர், மொத்தம் 495 பேர்: நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரும் பூலுவபட்டி தொடக்கப்பள்ளி

By வி.தேவதாசன்

ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு சிவப்பு, 2-ம் வகுப்புக்கு நீலம், 3-ம் வகுப்புக்கு பச்சை, 4-ம் வகுப்புக்கு மஞ்சள், 5-ம் வகுப்புக்கு ஆரஞ்சு என வெவ்வேறு வண்ணங்களில் சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகள் வண்ணத்துப்பூச்சிகளாய் சிறகடித்து வலம் வருகின்றனர். திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியைக் கடந்து செல்லும் பொதுமக்கள், கண்களில் ஆச்சரியம் விரிய இதைப் பார்த்துச் செல்கின்றனர்.

வகுப்பறை தரைகளில் பதிக்கப்பட்ட பளபளப்பான கிரானைட் கற்கள், எல்லா வகுப்பறைகளிலும் மின் விசிறிகள், அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர், நூலகம், கணினி ஆய்வகம், விளையாட்டு மைதானம், பாதுகாப்பு பணிக்கு காவலர், மிதிவண்டி நிறுத்தம், நவீன கழிவறைகள் என அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ள எஸ்.டி.எக்ஸ்போர்ட்ஸ் பின்னலாடை நிறுவன நிர்வாக இயக்குநர் லீலாவதி திருக்குமரன், இந்த வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

03ChRGN_Ppatti School-2 அபாகஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பள்ளிக் குழந்தைகள். 100 

5 ஸ்மார்ட் வகுப்பறைகள்

இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஐந்து வகுப்புக்கும் ஐந்து ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட தொடுதிரை, புரொஜக்டர், இணையதள வசதி என நவீன வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் திகழ்கின்றன. ஆசிரியர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வாய்மொழியாக மட்டுமின்றி, காட்சிப்படுத்தப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் எளிதில் பாடங்களைப் புரிந்து கொள்வதையும், அவர்களிடத்தில் கற்றல் திறன் வேகமாக வளர்வதையும் உணர முடிகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.

மாணவர் சேர்க்கையில் சாதனை

இந்த ஆண்டில் மட்டும் 262 புதிய மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களில் 95 பேர் முதல் வகுப்பிலும், மற்றவர்கள் பிற வகுப்புகளிலும் சேர்ந்துள்ளனர். புதிய மாணவர்களில் மிகப் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். இதனால் கடந்த ஆண்டில் 302 பேர் பயின்ற இந்த அரசு தொடக்கப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 495 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களோடு செயல்படும் ஒருசில அரசு தொடக்கப் பள்ளிகள் பட்டியலில் திருப்பூர் வடக்கு பூலுவபட்டி பள்ளியும் இடம்பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் கழகம் ஏற்பாட்டில் 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு கணினி ஆசிரியரும், ஆங்கில பேச்சுப் பயிற்சிக்கு (ஸ்போக்கன் இங்கிலீஷ்) ஓர் ஆசிரியரும் நன்கொடையாளர்கள் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு அதிக அளவில் புதிய மாணவர்கள் சேர்ந்துள்ளதால், 6 புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க அரசு அனுமதித்துள்ளது.

எதிர்கொண்ட சவால்

பள்ளி வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியர் சே.ஆரோக்ய ஜாஸ்மின் மாலா கூறியதாவது:

தனியார் பள்ளிகளைவிடவும் தரமான கல்வி, அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பெற்றோரிடம் உண்டாக்குவதே இன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் முன்பு இருக்கும் மிகப்பெரும் சவால். இதை எங்கள் பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக எங்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை பெருகியுள்ளது. 1 முதல் 5 வரை எல்லா வகுப்புகளிலும் தமிழ், ஆங்கிலவழி பிரிவுகள் உள்ளன. அதிக மாணவர்கள் இருப்பதால் 4, 5-ம் வகுப்புகளில் மட்டும் தலா ஒரு தமிழ்வழி பிரிவும், 2 ஆங்கிலவழி பிரிவுகளும் உள்ளன. 5 வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் 12 பிரிவுகள் செயல்படுகின்றன.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலைநேர கூடுதல் வகுப்பு நடத்துகிறோம். குழந்தைகளுக்கு நூலகம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப கதை, கவிதை, சிறுகதை புத்தகங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாங்கி வைத்துள்ளோம். எழுத்தாளர்களை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வைக்கிறோம். அபாகஸ், பரதநாட்டியம், ஜூடோ பயிற்சி அளிக்கிறோம். சிலம்பாட்டம் கற்க ஏற்பாடு செய்துள்ளோம். சதுரங்க வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏராளமான மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கிறோம். ஆய்வகத்தில் தயக்கமின்றி கம்ப்யூட்டர்களை இயக்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.

பள்ளியின் செயல்பாடுகள் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருவதாகக் கூறும் ஆசிரியர் ப.மணிகண்டபிரபு, அக்டோபரில் உலகத் திரைப்பட விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

headjpgதலைமை ஆசிரியை

திருப்பூர் வடக்கு பூலுவபட்டியில் உள்ள இந்த மாநகராட்சி தொடக்கப் பள்ளி, திருப்பூருக்கு மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கிறது. நம்மால் நிறைய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை அரசு ஆசிரியர்களிடம் வளர்க்கும் நட்சத்திரமாக மிளிர்கிறது.

இயக்குநரின் பாராட்டு

பூலுவபட்டி பள்ளியில் இந்த ஆண்டு 262 புதிய மாணவர்கள் சேர்ந்திருப்பது பற்றி கேட்டபோது, மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் பாராட்டு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “இதுபோல அதிக மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்குத் தேவையான கூடுதல் ஆசிரியர்களை உடனுக்குடன் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கல்வியாண்டில் இப்பள்ளி உட்பட மாநிலம் முழுவதும் இதுவரை 1,251 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 97884 12221.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்