காடு, காடாக கானுயிர்களிடம் இருக்க வேண்டும்; விவசாய நிலங்கள் விளைநிலங்களாக விவசாயிகளிடம் இருக்க வேண்டும் அப்போதுதான் உயிர்ச்சூழல் என்பது சரிவிகிதத்தில் நீக்கமற உருண்டு கொண்டிருக்கும் என்பதை சென்ற அத்தியாயத்தில் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தை முன்வைத்து பார்த்தோம்.
இதில் முதல் வரியாக உள்ள காடு, காடாக கானுயிர்களிடம் இருக்க வேண்டும் என்பதில் கூடுதலாக, 'காடு கானுயிர்களிடம் மட்டுமல்ல, மலைவாசிகளிடம் அது இருத்தல் வேண்டும். அப்போதுதான் காடும் காப்பாற்றப்படும். கானுயிர்களும் காப்பாற்றப்படும்!' என்பதை இன்றைக்கு சூழலியலாளர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இன்னமும் காடுகளிலிருந்து மலைவாசிகளை வெளியேற்றுவதிலும், அதையும் மீறி வாழ்பவர்களுக்கு அவர்கள் வாழ்நிலைக்கு இடையூறு விளைவிப்பதிலும் நம் அதிகாரிகள் குறியாக இருக்கிறார்கள்.
அதில் உச்சபட்சமான நிலையைத்தான் வனச் சரணாலயங்கள் எல்லாம் புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதன் பின்னணியில் காண்கிறோம். அந்த விஷயத்தில் கூடலூர் ஆனைகட்டி, மசினக்குடி, சீகூர், சிங்காரா தொடங்கி, வால்பாறை மலைகளில் உள்ளடங்கிய மாவடப்பு, குழிப்பட்டி, மஞ்சம்பட்டி, மூங்கில்பள்ளம், சம்பக்காடு வரை ஒரே மாதிரியான குரல்கள் ஒலித்துக் கொண்டுமிருக்கிறது, அதைப் பற்றியெல்லாம் ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் குறித்து எழுதும்போது விரிவாக காணலாம்.
அதற்கு முன்னதாக மருதமலையில் பழங்குடிகளுக்கு நடந்த இன்னல்களை இந்த இடத்தில் சொல்லி நகர்வது பொருத்தமாக இருக்கும். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவான கோவை மாவட்ட தமிழக பழங்குடியினர் சங்கத்தின் பொறுப்பில் என்.வி. தாமோதரன் இருந்தார்.
அவர் பல்வேறு செய்திகள் குறித்து பேசும்போது, ''வீரப்பன் காட்டில்தான் வனத்துறையினரால், அதிரடிப்படையினரால் பழங்குடிகள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வருகிறது. அதையும் தாண்டி பழங்குடிகள் வேறு துறைகளின் மூலமும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதோ இந்த மருதமலையையே எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மலைக்கே சொந்தக்காரர்கள் அங்குள்ள இருளர் இன ஆதிவாசி குடிகள்தான். அவர்களில் பாதிப் பேரை ஏற்கெனவே மலையை விட்டு கீழே இறங்க வைத்து அடிவாரத்தில் குடிவைத்து விட்டார்கள் அதிகாரிகள். அது போதாதென்று இப்போது அறநிலையத்துறையும், வனத்துறையும் சேர்ந்தே எஞ்சியுள்ளவர்களையும் அங்கிருந்து விரட்டப்பார்க்கிறது!'' என குறிப்பிட்டார். அதன் பொருட்டு மருதமலை மலைமக்களை நேரில் சென்று பார்த்தபோது ஒரே களேபரம்.
''எங்களுக்கு கோயில்காரங்க குடிக்கவே தண்ணீ தரமாட்டேங்கறாங்க சாமி!''
''காலங்காலமாக மலைங்காட்டுக்குள்ளே போய் கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், வேங்கைப் பால், மலைத்தேன், கொம்புத் தேன்னு கொண்டு வந்து வித்துட்டிருந்தோம். இப்ப அது எல்லாம் திருட்டு விற்கக்கூடாதுன்னு தடை போட்டுட்டாங்க. அதுக்கு பதிலா கோயில் வாசல்லயே கடை வச்சு பொழைக்க பாரஸ்ட் அதிகாரிக லோன் எல்லாம் கொடுத்தாங்க. ஆனா அந்தக் கடையை வைக்க கோயில் அதிகாரிகள் விட மாட்டேங்கறாங்க!''
''கடை வைக்கிறதுன்னா அடிவாரத்துல போய் வையுங்க. இங்கே உங்களை குடியிருக்க விட்டதே தப்புங்கறாங்க!''
இப்படி கிட்டத்தட்ட நூறு குடும்பங்கள். அப்போது மருதமலை மீது அலறியது. மருதமலை ஏறுபவர்கள் மூலஸ்தானத்தை அடையும் முன் கடைசிப் படிக்கட்டுகளை கடக்கும் முன்பு அதன் இடப்புறத்தில் பெரிய சுற்றுச்சுவர் மூலம் மறைக்கப்பட்ட ஒரு பகுதியை இப்போதும் காணலாம்.
இந்த மறைக்கப்பட்ட பகுதியில் இடிபாடுகளுடன் சிறிய அறைகளில் வசித்து வந்தவர்கள்தான் இந்த அவலக்குரலுக்கு சொந்தக்காரர்கள். நெல்லி, மா உள்ளிட்ட மலை பொருட்களை எடுத்து வந்து கோயில் படிக்கட்டுகளில் வைத்து விற்கும் தொழில் செய்து வந்த இந்த மலைமக்களுக்கு விற்பனைக்கு தடை போட்டது அறநிலையத்துறை.
கோயிலில் தொகை கட்டி ஏலம் எடுத்தவர்கள் மட்டுமே கடை வைக்க வேண்டும். மலைவாசிகளை இவர்கள் மிரட்ட, மலை மக்கள் முரண்டு பிடிக்க, பதிலுக்கு தேவஸ்தானம் வக்கீல் நோட்டீஸ் பழங்குடிகளுக்கு விட, எழுதப் படிக்கவே தெரியாத இவர்கள் அரண்டு போய் விட்டனர். கூடவே காவல்துறையை வைத்து மிரட்டல் வேறு.
''பூர்வீகமே எங்களுக்கு இதுதான். கோயிலுக்கு இரவுக் காவலர்களாகவும், நாட்டாண்மைக் காரர்களாகவும் இருந்தவர்கள் ஆதிகாலத்திலிருந்தே நாங்கள்தான். அப்படிப்பட்ட எங்களுக்கான உரிமைகளை படிப்படியாக விலக்கிய கோயில் நிர்வாகம் இப்ப சப்பரம் தூக்கறதுக்கு மட்டும் உரிமையுள்ளவங்களாக ஆக்கியிருக்கு. இதுவும் இனி வரப்போற அறநிலையத்துறை அதிகாரிகளை பொறுத்துத்தான் எங்களின் உரிமை இருக்குமோ, பறிக்கப்படுமோ தெரியாது. இந்த நிலைமையில காட்டுக்குள்ளே போய் விறகு பொறுக்கக்கூடாது; ஆடு, மாடு மேய்க்கக் கூடாதுன்னு வனத்துறை அதிகாரிகள்தான் எங்களுக்கு ஊதுபத்தி குழல் செய்யவும், மெழுகுவர்த்தி உருட்டவும், தையல் பயிற்சி பெறவும் கத்துக் கொடுத்தாங்க.
ஊனமுற்றவங்களுக்கு 'பேங்க்' கடனும் ஏற்பாடு செய்தாங்க. அதை வாங்கி எங்க இடத்துலதானே கடை வைக்க முடியும். அதைத்தான் அடிவாரத்துல போய் வையுங்கறாங்க. அடிவாரத்துல லட்சக்கணக்குல முதலீடு போட்ட நூறறுக்கணக்கணக்கான கடைக்காரர்கள் இருக்கிறார்கள். அவங்களுக்கு நடுவே வெறும் ரூபாய் ஐயாயிரம், பத்தாயிரத்துல எப்படி கடை போடறது? எங்களுக்கு துணையா இதுவரைக்கும் நின்ன வனத்துறை கூட 'நாங்க வந்து சொல்ற வரைக்கும் கடைகள் போடாதே'ன்னு சொல்லியிருக்கு. இப்படியிருந்தா நாங்க எப்படித்தான் பொழைக்கிறது?'' என்பதே மலைவாசிகள் அப்போது கேட்ட கேள்வி.
''நாங்க அப்படி சொல்லவே இல்லை. அவங்களை மற்ற ஏலக்கடைக்காரங்க விற்கும் பொருட்களை விற்க வேண்டாம்னுதான் கேட்டுக்கிட்டோம். அவங்களுக்கு குடிதண்ணீர், கழிப்பிட வசதி மட்டுமில்லாம, குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல மினி பஸ்ல இலவச சலுகைகூட நாங்கதான் ஏற்பாடு செய்திருக்கிறோம்!'' என்று அறநிலையத்துறை அதிகாரிகள் சுத்தமாகவே இதை மறுத்தனர்.
இந்த செய்தி அப்போது அச்சில் வெளியான பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்தன. மலையிலிருந்து பழங்குடிகளை விரட்டும் முயற்சியை அறநிலையத்துறை நிர்வாகம் சுத்தமாகவே கைவிட்டது. ஆனால் அதற்காக அவர்கள் மீதான மறைமுக தாக்குதல்களை நிறுத்தவில்லை.
பழங்குடிகள் கடை வைத்திருந்த இடத்திற்கு முன்பாக பெரியதொரு தடுப்புச்சுவரை கட்டியது. அதனால் வியாபாரம் பெரிதாக இல்லாமல் இங்குள்ள மலை மக்கள் நகரப்பகுதிகளுக்கு செங்கல் சூளை உள்ளிட்ட வேலைகளுக்கு போக ஆரம்பித்தார்கள். இப்போதும் கூட அவ்வப்போது அதிகாரிகளுக்கும், இவர்களுக்கும் பிரச்சனைகள் எழும். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளிடம் எதையுமே பேசவே யோசித்து வந்த மலைமக்கள் இப்போது விழிப்புணர்வு பெற்றுள்ளார்கள். 'இந்த மலை எங்க மலை!' என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
அதன் எதிரொலியாக ஏற்கெனவே இருந்த பழைய வீடுகளை புதுப்பித்தும், மின்சார இணைப்புகள் கொடுத்தும், குடிநீர் இணைப்புகள் கொடுத்தும் உள்ளூர் எம்.எல்.ஏ வசதிகளை ஏற்படுத்தி்க் கொடுத்துள்ளார். என்றாலும் தொழில் என்பது இங்குள்ள மக்களுக்கு கேள்விக்குறியாகவே இன்றளவும் உள்ளது.
''காட்டுப் பொருட்களை சேகரிக்கும் பணியை கைவிட்டதன் பலன். தற்போது இந்த மருதமலைக் காடுகள் புதர் மண்டிக்கிடக்கிறது. காட்டை பராமரித்தவன் காட்டுவாசி. யானைகளின் விருப்ப உணவான மூங்கில் காடுகளை அவர்களே பராமரித்தார்கள். அது இயல்பாகவே அவர்களுக்கு வாய்த்திருந்தது. வீட்டு உபயோகப் பொருட்கள், அவர்களின் கட்டுமானங்கள் எல்லாமே இந்த மரங்களாலேயே ஆக்கப்பட்டன. ஆயுளில் ஓரிரு முறையே பூக்கும் 40 வயது, 45 வயதையுடைய மூங்கில்கள் மறுமுறை எப்போது பூக்கும் என்ற தொழில்நுட்பத்தை பழங்குடிகளே அறிந்திருந்தனர். அவர்களை காட்டுக்குள்ளே காட்டுப் பொருட்கள் சேகரிக்கவே அனுமதிக்காததன் விளைவு யானைகளுக்கான உணவும் அழிந்தே விட்டது. அதனால் இப்போது காட்டு யானைகள் மட்டுமல்ல; காட்டுப்பன்றிகள், கரடிகள் கூட இந்த மருதமலை படிக்கட்டுகளில் உலா வருகின்றன!'' என கருத்து தெரிவிக்கின்றனர் சூழலியாளர்கள்.
மருதமலை மலைமக்கள் சிலரிடம் பேசும்போது, ''எங்க அப்பன், தாத்தன், பாட்டன், முப்பாட்டன் காலத்தில் எல்லாம் யானைகள் காட்டுக்குள்ளே பார்த்தாலும் நில்லுன்னா அப்படியே நிக்கும்பாங்க. யானை அடிச்சு நாங்களோ, யானையை நாங்க அடிச்சு கொன்னதாக சரித்திரம் இல்லை. எங்ககிட்ட இருக்கிற காட்டு வாசமும், யானைக மாதிரி காட்டுமிருகங்ககிட்ட இருக்கிற வாசமும் புரிஞ்சுக்கிற மோப்ப சக்தியும் கூடவே பிறந்ததா இருந்தது.
இப்ப எல்லாம் மலைப்படிக்கட்டுல நிற்கிற காட்டுயானைக மட்டுமல்ல; காட்டுப்பன்றிகள் கூட எங்க பாஷைய கேட்கிறதில்லை. ஏன்னா நாங்க நாட்டு மக்களோட பழகிட்டோம். சூளை வேலை, தோட்டவேலைன்னு போயிட்டோம். அதனால அதுக கிட்ட இருந்து அந்நியப்பட்டுட்டோம். ஒண்ணுமொண்ணா எங்களோட இருந்த வனமிருகங்களும் எங்களை எதிரியாகவே பாவிக்க ஆரம்பிச்சுடுச்சு!'' என்றே குறிப்பிட்டனர். எந்த அளவு அது வாழ்வியல் உண்மை. வனத்துடன், வனமாக வாழ்ந்தவர்களே அதை அறிவர்.
மீண்டும் பேசலாம்..
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago