கடந்த 20, 30 ஆண்டுகளில் தமிழ்நாடு எவ்வளவோ மாறிவிட்டது. மாறவே மாறாத ஒரே விஷயம், ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் எடை குறைவாக இருப்பது. மின்னனு தராசுகள் நடைமுறைக்கு வந்த பிறகும் கூட, பெரும்பாலான ரேஷன் கடைகளில் சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.
தமிழ்நாட்டில் 2 கோடியே 13 லட்சத்து 91 ஆயிரத்து 39 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 34,773 பொதுவிநியோகக் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
வசதியற்றவர்கள் மட்டுமே ரேஷன் அரிசியை வாங்கிச் சமைத்துச் சாப்படுகிறார்கள் என்றும், மற்றவர்கள் அரிசியை வாங்கி ஆடு, மாடு, கோழி போன்றவற்றுக்குத் தீவனமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் பொதுவாக குற்றம் சாட்டப்பட்டுவந்தது.
ஆனால், கரோனா பாதிப்பு கீழ் நடுத்தர வர்க்க மக்களையும் ஏழைகளாக்கி ரேஷன் அரிசியைச் சமைத்துச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அரசு வழங்கிய கரோனா நிவாரணத் தொகை, 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு, மத்திய அரசு வழங்கும் கரோனா கால கூடுதல் அரிசி போன்றவையும் புதிதாக ஒரு மக்கள் கூட்டத்தை மீண்டும் ரேஷன் கடைகள் பக்கம் ஈர்த்திருக்கிறது.
இதுநாள் வரையில் ரேஷன் கார்டு வாங்குவதில் ஆர்வம் காட்டாதவர்களையும் புதிய அட்டை கேட்டு விண்ணப்பிக்க வைத்திருக்கிறது. ஆனால், ரேஷன் கடைகளின் செயல்பாட்டிலும், எடைக்குறைவிலும் எந்த மாற்றமும் இல்லை. ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் பிடிபடும் செய்திகள் அதிகமாக கண்ணில் படுகின்றன.
"10 வருடத்துக்கு முன்பு, 'ஏன்யா, இப்படி எடையைக் குறைச்சிப் போடுறீங்க, ஏழைங்க சாப்பிடுற அரிசியைப் போய் பதுக்குறீங்களே, உங்களுக்கே நியாயமா இருக்குதா?'ன்னு கேட்டா, 'சார் கடைக்குள்ள வாங்க சார்'ன்னு கூட்டிக்கிட்டுப் போவாங்க. உள்ளே போனதும், 'பாருங்க சார். இந்தக் கடையில மொத்தம் 450 கார்டு இருக்கு. ஆனா, 300 கார்டுக்குத்தான், அரிசியும், சீனியும் அனுப்பியிருக்காங்க.
அவங்க பற்றாக்குறையா அனுப்புறத, நாங்க இப்படித்தான் ஈடு கட்ட வேண்டியதிருக்குது' என்று விளக்கம் சொல்லுவார்கள். ஆனால், ஒவ்வொரு கடையிலும் 450 கார்டில் நாற்பது, ஐம்பது போலி கார்டுகளை கடைக்காரர்களே வைத்திருப்பார்கள் என்பதும், அந்த கார்டுக்கு பொருட்கள் வழங்கியதாகப் பதிவு செய்து கடத்திவிடுவார்கள் என்பதும் ஊரறிந்த விஷயம்.
இப்போது ஸ்மார்ட் கார்டு வந்துவிட்டது. ஏடிஎம் அட்டையைப் போல, அதை பிஓசி (பாயிண்ட் ஆப் சேல்ஸ்) மெஷினில் செலுத்தினால்தான், பொருட்களே வழங்க முடியும். கூடவே, கைரேகைப் பதிவு முறையும் இருக்கிறது. கடையில் எந்தெந்த பொருட்களை எத்தனை கிலோ வாங்கினோம் என்று நம்முடைய அலைபேசிக்கு குறுந்தகவலும் வந்துவிடுகிறது.
அப்படி இருந்தும், சரியான அளவில் பொருட்களை வழங்குவதில்லை. கடந்த வாரம் எங்கள் பகுதியில் உள்ள ஒரு கடைக்குப் போய் காரணம் கேட்டேன், அதேபோல கடைக்குள் அழைத்துப் போனார். பிரிக்கப்படாத அரிசி, சீனி மூட்டைகளைக் காட்டி, 'பாருங்க சார். ஒவ்வொரு சாக்கிலும் முக்கால் மூடைதான் அரிசி இருக்குது. அதை எப்படி எல்லாத்துக்கும் கொடுக்க முடியும்? அதனாலதான் இப்படி எல்லாம் செய்ய வேண்டியதிருக்குது' என்கிறார்கள். ஆனால், இது முழு உண்மையல்ல. கடை ஊழியர்கள் களவாடுகிறார்கள்" என்கிறார் ஒத்தக்கடையைச் சேர்ந்த மலைச்சாமி.
ஆர்.டி.ஐ. சட்டம் மூலம் ரேஷன் கடை முறைகேடுகள் குறித்த பல தகவல்களை வெளிக்கொண்டு வந்த சமூக ஆர்வலரான ஹக்கீமிடம் இதுபற்றிக் கேட்டபோது, "உணவுப் பொருள் வழங்கல்துறையானது கூட்டுறவுத்துறையுடன் இணைந்துதான் பொருட்களை வழங்குகிறது. அந்த கூட்டுறவுத்துறை முறையாக ஆட்களை நியமிப்பதே கிடையாது. ஒரு கடையில் ஒரு விற்பனையாளர், ஒரு எடையாளர்(கட்டுநர்) இருக்க வேண்டும்.
ஆனால், 2 கடைக்கு ஒரு விற்பனையாளர்தான் நியமித்திருக்கிறார்கள். எனவே, பணிச்சுமையை சமாளிப்பதற்காக அந்த ஊழியர்களே அன் அபிஷியலாக 3 பேரை நியமித்துக் கொள்கிறார்கள். அவர்கள் நல்ல தாட்டியமான ஆட்களாக இருப்பார்கள். இவர்களின் சம்பளத்தை எடுப்பதற்காகவும், மேல் அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுப்பதற்காவும் எடை குறைப்பு, பதுக்கல், கடத்தல் போன்றவை தொடங்குகின்றன. பிறகு ருசி கண்ட பூனையாக அந்த வேலையிலேயே முழு ஆர்வத்தையும் காட்டத் தொடங்கி விடுகிறார்கள். சில கடைகளில் விற்பனையாளரும் சரி, எடையாளரும் சரி 22 வருடமாக ஒரே இடத்தில் பணிபுரிகிறார்கள். இவர்கள் கிட்டத்தட்ட ஒரு தாதா போல செயல்படுகிறார்கள். இவர்களைப் பார்த்தாலே மக்கள் பயப்படுகிறார்கள். ஏதாவது புகார் சொன்னாலும், நாளை இவர்கள் முகத்தில்தான் விழிக்க வேண்டும் என்று பயந்தே அவர்கள் புகார் ஏதும் கொடுப்பதில்லை. ஊழியரல்லாத சிலர் தொடர்ந்து பல ஆண்டுகளாக கடையிலேயே இருப்பதால் இவர்தான் உண்மையிலேயே ரேஷன் கடை ஊழியர் என்று மக்களும் நம்பிவிடுகிறார்கள். இப்போது நான் சொல்கிறேன். டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் திடீரென்று ஏதாவது ஒரு ரேஷன் கடைக்குள் நுழைந்து, அங்கிருக்கும் ஊழியர்களிடம் 'ஐடி கார்டை காட்டுய்யா...' என்று சொன்னால் போதும், கண்டிப்பாக அதில் ஒருவன் கடையைவிட்டே தலைதெரிக்க ஓடிவிடுவான். அல்லது அவரை அதிகாரி என்று நினைத்து மன்னிப்பு கேட்டு லஞ்சம் தர முயல்வான். ஆக பிரச்சினையின் ஆணிவேர் அரசிடம் தான் இருக்கிறது. ஒவ்வொரு கடைக்கும் உரிய பணியாளர்களை நியமித்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்தல் போன்றவற்றை முறைப்படுத்தினாலே பல கடைகளில் முறைகேடுகளைத் தவிர்த்துவிடலாம்" என்கிறார்.
இதுபற்றி தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்க மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் இரா.லெனினிடம் கேட்டபோது, "நீங்கள் சொல்கிற குற்றச்சாட்டுக்களை நான் மறுக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு, ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு ஒதுக்கீடோ அந்தப் பொருட்களை 100 சதவிகிதம் அனுப்பி வைக்க வேண்டும். அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் உணவு பொருள் கிட்டங்கியில் இருந்தே பொட்டலமிட்டு கடைகளுக்கு வழங்க வேண்டும். ஊழியர்களிடம் பொருட்களைக் கொடுத்து பொட்டலமிடச் சொன்னால் பயனிருக்காது. உணவு வழங்கல் துறையே நேரடியாக நடத்துகிற ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குகிற சம்பளத்துக்கும், கூட்டுறவு சங்கம் அல்லது மகளிர் குழுவினர் நடத்துகிற கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்குகிற சம்பளத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. சமவேலைக்குச் சம ஊதியம் வழங்குவதுடன், கடை ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான பிற சலுகைகளையும் வழங்க வேண்டும். சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துகிற வேலையும் வருகிறபோது, அதற்கான ஊக்கத் தொகையும் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் முழுமையாக பணியாற்றியது ரேஷன் கடை ஊழியர்கள்தான். ஆனால், அவர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்கவே இல்லை. பல ஊழியர்கள் கரோனாவால் இறந்தார்கள். அவர்களுக்கும் அரசு நிவாரணம் வழங்கவில்லை. இந்தக் குறைகளையும் போக்க வேண்டும்" என்றார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஒவ்வொரு கடையிலும் உள்ள அத்தனை ரேஷன் கார்டுகளுக்கும் முழு அளவில் பொருட்களை அனுப்பினால், அவை பதுக்கப்பட்டு கடத்தப்படுகிறது என்பதுதான் கடந்த கால வரலாறு. எனவே, ஒவ்வொரு மாதமும் கடையில் எவ்வளவு பொருட்கள் விற்பனையாகியிருக்கிறதோ அதைக் கணக்கெடுத்து, 3 மாத விற்பனையின் சராசரியைப் பார்த்து அந்த அளவிற்குத்தான் அடுத்த மாதத்திற்கான ஆர்டரே போடப்படுகிறது.
உள்ளூர் அரசியல்வாதிகளைப் பற்றிக் கவலைப்படாமல், உணவு வழங்கல் துறைக்கு முழுக்க முழுக்க நேர்மையான அதிகாரிகளை மட்டுமே மணியமர்த்துவதும், அனைத்து கடைகளுக்கும் லஞ்சம் வாங்காமல் ஊழியர்களை நியமிப்பதும் மிகமிக அவசியம். அடையாள அட்டை அணிந்த ஊழியர்களைத் தவிர மற்றவர்களை கடைக்குள் அனுமதிக்காமல் இருப்பது, கடை விவகாரங்களில் கட்சிக்காரர்கள் தலையிடாமல் இருப்பது போன்றவையும் சாத்தியமானால், நிச்சயமாக ரேஷன் கடைகள் நியாய விலைக்கடைகளாகத் திகழும்" என்றார்.
ரேஷன் பொருட்களைப் பொட்டலமிட்டு வழங்கும்போது, பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். வலுவான காகிதம், துணி அல்லது சணல் பைகளில் அந்தப் பொருட்களை வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்
கடந்த காலத்தில் இரு அரசுகளுமே தவறு செய்திருக்கலாம். புதிய அரசாவது இந்தத் தொடர் கொள்ளைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago