கருத்துக் கணிப்பு முடிவுகளால் திமுகவில் வேட்பாளராக போட்டாபோட்டி: புதுமுகங்களுக்கு வாய்ப்பு பிரகாசம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக கட்சியினர் மத்தியில் வழக்கத்திற்கு மாறாக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், வசதிபடைத்த புதிய முகங்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

திமுகவில் நேர்காணல் முடிந்த நிலையில் ஒரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில், இந்த முறை செல்வாக்கு பெற்ற முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தவிர, வசதிபடைத்த புது முகங்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகg கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கடந்த காலங்களை ஒப்பிடும்போது இந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும் 40 முதல் 50 சதவீதம் பேர் அதிகமாக விருப்பமனு கொடுத்துள்ளனர்.

கருத்துகணிப்புகள் பெரும்பாலானவை திமுக ஆட்சிக்கு வருவதாக கூறுவதால் ‘சீட்’ பெற்றால் எப்படியும் எம்எல்ஏ ஆகிவிடலாம் என்ற கணவில் நிர்வாகிகள் மத்தியில் மட்டுமில்லாது பெயரளவுக்கு கட்சியில் ஓட்டிக் கொண்டு இருக்கும் வசதிபடைத்தவர்களும் ‘சீட்’ பெற ஆர்வமடைந்துள்ளனர்.

அதற்காக அவர்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் ஆதரவோடு ‘சீட்’ பெற காய்நகர்த்தி வருகின்றனர். கடந்த முறை ஒவ்வொரு தொகுதிக்கும் இவர்தான் வேட்பாளர் என்று திமுகவில் குறிப்பிட்டுச் சொல்லிட முடிந்தது. அவரைத் தவிர வேறு யார் ‘சீட்’ கேட்க முடியும் என்ற நிலையே அனைத்துத் தொகுதிகளிலும் நீடித்தது.

ஒன்றியச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம்காட்டாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.நேர்காணலில் கருணாநிதியையும், ஸ்டாலினையும் பார்க்கவே விருப்பமனு கொடுத்ததாகக் கூறுவார்கள்.

ஆனால், இந்த முறை வேட்பாளராகும் ஆசையில் ஒன்றியச் செயலாளர்கள் முதல், வசதிபடைத்தவர்கள் வரை விருப்பமனு கொடுத்துள்ளனர். இதில், அதிமுகவுக்கு இணையாக செலவு செய்ய பல தொகுதிகளில் வசதிபடைத்த புதிய முகங்களுக்கு வேட்பாளராகும் அதிர்ஷ்டம் உள்ளது ’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE