”நான் உங்களுக்கு ஒன்றை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். கரோனாவினால் நாம் இதனை அதிகம் இவ்வாண்டு விவாதிக்கவில்லை. தனி நபர் பிளாஸ்டிக் பயன்பாட்டிலிருந்து நாம் விடுபட வேண்டும். 2021ஆம் ஆண்டின் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும்”-
- பிரதமர் மோடி சமீபத்திய மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறிய இக்கருத்து மிக முக்கியமானது.
பிளாஸ்டிக் மாசில் உலக அளவில் இந்தியா 12-வது இடத்தில் உள்ள சூழலில், பிரதமர் மோடியின் இவ்வுரை பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் பூமியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 350 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மலைகள், கடல்கள் மாசுக்கு உள்ளாக்கப்படுகின்றன. உலகையே சுற்றிவரும் இந்த பிளாஸ்டிக் மாசு காரணமாக காலநிலை மாற்றத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
» ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது: மதுரையில் ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேச்சு
» விவசாயிகள் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு: கட்சிப் பொருளாளர் சுதீஷ் பேட்டி
பாலித்தீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் புவியின் காற்று மண்டலம் மாசுபடுகிறது. மேலும் மண்ணில் புதையும் பிளாஸ்டிக் நீண்ட காலத்துக்கு மண்ணில் மக்கிப் போகாமல் இருக்கும். இது மழை நீரை மண்ணுக்குள் செல்லாமல் தடுத்து விடுவதால் நிலத்தடி நீர் மட்டத்தையும் குறைக்கிறது.
உலகம் முழுவதும் அதிகரித்துவரும் பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக 2050-ம் ஆண்டிற்குள் கடலில் மீன்கள் எந்த அளவு எடையுடன் இருக்குமோ அதே அளவு எடை பிளாஸ்டிக் கழிவுகளும் இருக்கும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே சூழியல் ஆர்வலர்கள் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணி அடித்துவருகின்றனர். விஞ்ஞானிகளின் இந்த கூற்றுப்படி நிகழ்ந்தால் ஒட்டுமொத்த சூழல் மண்டலமும் கேள்விக்குள்ளாகும்.
கொட்டப்படும் கழிவுகள்:
வருடத்துக்கு 80 லட்சம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் கடலில் கலக்கின்றன. சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள்தான் பிளாஸ்டிக்கை அதிக அளவு கடலில் கலக்கின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறைகள் தற்போது அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து சாலைகள் அமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் இந்தியா பின்தங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் 60 முக்கியமான நகரங்களில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு 3,501 டன் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தியாகிறது. இவ்வாறு கொட்டப்படும் கழிவுகள் இயற்கையாக மக்க வேண்டுமெனில் 450 ஆண்டுகள் தேவைப்படும்.
பிற உலக நாடுகளை ஒப்பிட்டால் பிளாஸ்டிக் பயன்பாடு இந்தியாவில் குறைவுதான். ஆனால் நமது மோசமான கழிவு மேலாண்மை காரணமாக இந்தியா பிளாஸ்டிக் மாசில் 12-வது இடத்தில் உள்ளது என்கிறார் சுற்றுச் சூழல் மாசுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜியோ டாமின்.
மேலும் அவர் கூறும்போது, “நாமும் பல ஆண்டுகளாக சூழல் மாசுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் ’பிஸாஸ்டிக்கை ஒழிப்போம்’ என்று பொதுவாகக் குரல் கொடுக்க வேண்டாம். பிளாஸ்டிக் எல்லாமே ஆபத்தானதுதான். ஆனால், இன்றும் மருத்துவத் துறையிலிருந்து காது குடையும் பட்ஸ் வரை பிளாஸ்டிக்கில்தான் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்கையில் நாம் இவற்றில் முதலில் எந்தப் பயன்பாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பில் நமது குறிக்கோள் என்ன என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும். அத்தியாவசிய அடிப்படையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொண்டால் முதலில் இந்த பாலித்தீன் பைகள், ஸ்ட்ராக்கள் முதலில் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு மறுசுழற்சி முறையைப் பயன்படுத்துவது தவறு. என்னைப் பொறுத்தவரை மறுசுழற்சி என்ற வார்த்தையே தவறு. பிளாஸ்டிக்கை எடுத்துக்கொண்டால் அதனைக் குறைசுழற்சிதான் செய்ய முடியும்.
மறுசுழற்சி என்பது ஒரு பொருளை நீங்கள் மறுசுழற்சி செய்தால் அதே தரத்தில் அப்பொருள் மீண்டும் கிடைக்கும். ஆனால், பிளாஸ்டிக்கை நீங்கள் மறுசுழற்சி செய்தால் அதே தரத்தில் மற்றொரு பிளாஸ்டிக் கிடைக்காது. உதாரணத்துக்கு ஒரு மைக்ரோ ஓவனை நீங்கள் மறுசுழற்சி செய்தால் உங்களுக்கு ஹீல்ஸ் போன்ற காலணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்தான் திரும்பக் கிடைக்கும்.
மறுசுழற்சி என்பதே ஒரு பொருளை மீண்டும் அதே பயன்பாட்டு நிலைக்குக் கொண்டுவருவது. ஆனால், பிளாஸ்டிக்கில் அது முடியாது. பிளாஸ்டிக்கை நீங்கள் மறுசுழற்சி செய்தால் அது மீண்டும் நச்சுக் குப்பையை உற்பத்தி செய்வதற்குச் சமம்தான்.
மறுசுழற்சி என்பது முழுமையான தீர்வல்ல. பிளாஸ்டிக்கை நீங்கள் உருக்கும்போது பென்சின், டையாசின் போன்ற நச்சு வாயுக்கள் வெளியே வரும். பிளாஸ்டிக் பிரைமரி உருவாக்கத்தை விட மறுசுழற்சியில் கிடைக்கும் பிளாஸ்டிக் மிக ஆபத்தானது.
அடுத்தது சாலையில் யாராவது பிளாஸ்டிக் போட்டுவிட்டால் அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். பொதுமக்கள் யாரும் கடைகளில் போய் எங்களுக்கு பாலித்தீன் பைகள்தான் வேண்டும், நாங்கள் துணிப்பைகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று கேட்கவில்லை. இந்த முதலாளித்துவ சமூகம் ஒரு பொருளை மலிவு விலை என்று உற்பத்தி செய்கிறது. அதனை மக்கள் மீது திணிக்கிறது.
கடையில் பாலித்தீன் பை வாங்கும் சாமானியனின் வீட்டில் மறுசுழற்சி இயந்திரம் இல்லைதானே. அவ்வாறு இருக்கையில் அதனைச் சாலையில்தானே போடுவார்கள். எனவே, இவ்விஷயத்தில் சாமானிய மக்களைக் குறை சொல்வது சரியல்ல. உற்பத்தியாளர்களின் பொறுப்புணர்வு எவ்வாறு இருக்கிறது என்பதே முக்கியமானது.
எல்லாப் பொருட்களும் விரைவாகக் காலாவதியாகும் நிலையில்தான் உற்பத்தியே செய்யப்படுகிறது. மேலை நாடுகளில் எல்லாம் பெரும் நிறுவனங்கள் அவர்கள் உற்பத்தியில் வரும் லாபத் தொகையில் பாதியைத் தங்களால் ஏற்பட்ட மாசைக் குறைக்க, மறுசுழற்சிக்காக குறிப்பிட்ட தொகையை அரசுக்கு வழங்குவார்கள். இந்த நடைமுறை இங்கு இல்லை. இங்கு தனி நபரைத்தான் குற்றம் சுமத்துகிறார்கள், குற்றவாளி ஆக்குகிறார்கள். எனவே, நாம் மேலிருந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், இங்கு கீழிறிந்து மாற்றத்தைக் கொண்டுவர முயல்கிறார்கள். இவ்வாறு செய்வது சாத்தியமற்றது. எனவே பெரும் நிறுவனங்கள்தான் மாற வேண்டும்.
பிளாஸ்டிக்கை முற்றிலுமாக அழிப்பது தொடர்பாக உலக நாடுகள் எதிலும் ஒரு முழுமையான தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலக நாடுகளைப் பொறுத்தவரை ஒன்று மறுசுழற்சி செய்கிறார்கள், இல்லை குறைசுழற்சி செய்கிறார்கள். அதாவது மொத்தமாகக் குவியும் குப்பைகளை அவற்றின் தன்மைக்கேற்றவாறு பிரிக்கிறார்கள். இதில் முழுமையான நீக்கம் செய்ய முடியாத பொருட்களைப் புதைக்கிறார்கள் அல்லது எரிக்கிறார்கள்.
புதைக்கிறார்கள் என்றால் அப்படியே கொட்டுவதில்லை. மிகப்பெரிய குழி தோண்டி அதில் குப்பையைக் கொட்டி அதனைப் பல்வேறு அடுக்குகளாக மூடித் தொடர்ந்து கண்காணிக்கிறர்கள். மற்றொரு முறையான எரிப்பதில் இதற்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக்கை எரிக்கிறார்கள். எரிக்கும்போது அந்த பிளாஸ்டிக் முழுமையாக அழிந்துவிடாது. அதன் அளவுதான் குறையும். இம்முறையைத்தான் மேலை நாடுகள் பின்பற்றுகின்றன. இதுதான் தற்போதைய தீர்வாக உள்ளது. ஆனால் உண்மையில் இது தீர்வல்ல. தீர்வு என்பது நாம் பிளாஸ்டிக்கிலிருந்து முழுமையாக வெளியே வருவதுதான்.
பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிப்பது என்பதும் சாத்தியமில்லை. ஆனால், கட்டுப்படுத்தலாம். பாலித்தீன் பைகள், ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.
இறுதியாக நீங்கள் சாலையில் குப்பைகளை வகைப்படுத்தி அள்ளுபவர்களைப் பார்த்திருக்கலாம். மறுசுழற்சிக்காக பொருட்களைச் சேகரிக்கும் அவர்களை அரசு அமைப்பு ரீதியான வட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாசைக் குறைக்க அவர்கள் இந்தச் சமூகத்துக்குப் பெரும் பங்கை ஆற்றி வருகிறார்கள். அவர்களை அரசு அடையாளப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மறுசுழற்சிக்கு வலிமையைக் கூட்டலாம்.
என்னைப் பொறுத்தவரை தனி நபர்கள் பிளாஸ்டிக்கைத் தூக்கிப்போட்டுவிட்டால் பிளாஸ்டிக் அழிந்துவிடாது. இதனை அரசு உணர வேண்டும்” என்றார்.
பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கூறுவது மட்மல்லாமல் அரசு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்கிறார் பாலித்தீன் பைகளுக்கு எதிரகாகப் பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வரும் மஞ்சள் பை நிறுவனர் கிருஷ்ணன்,
“பிளாஸ்டிக் தடையை ஒரு காலகட்டத்தில் கொண்டுவந்தபோது அது மக்களால் நன்றாகவே கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் அரசு இதற்கு அழுத்த கொடுக்க வேண்டிய சூழல்தான் தற்போதும் உள்ளது. அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும்போது அதைப் புறந்தள்ளியும் சில காலம் கழித்து மீண்டும் மலிவை நோக்கிச் செல்லும் நிலைதான் உள்ளது.
முதலில் நுகர்வோராக நாம் எத்தனை முறை கடைகளுக்குச் செல்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். மக்களின் வாழ்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தால்தான் நாம் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியும். கோவிட் காலத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மாதிரியான மாற்றம் நிகழ வேண்டும். வாழ்க்கை முறையில் மாறுதல் ஏற்பட வேண்டும் என்றால் அரசாங்கம் இதற்காக மேற்கொள்ளும் விதிகள், வரைமுறைகள் முக்கியமானவை. பிளாஸ்டிக்கை ஒழித்து விடலாம் என்று கூறுவது மட்டும் தீர்வாகாது. அடுத்தகட்டத்தை நோக்கி அரசு நகர வேண்டும்.
அரசு சந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் பரவலை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மக்கள் உள்ளூரிலேயே பொருட்களை வாங்குவார்கள். இதன் மூலம் பாலித்தீன் பயன்பாட்டைக் குறைக்கலாம். மேலும் பிளாஸ்டிக் தடையில் அரசு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும். பிளாஸ்டிக், பாலித்தீன்கள் உற்பத்தி எங்கு தொடங்குகிறதோ, அங்கிருந்தே அதனை நிறுத்த வேண்டும். அதுதான் முக்கியத் தீர்வாக இருக்கும்.
தடைக் காலங்களில் பிளாஸ்டிக் இல்லாமல் மக்கள் ஒன்றும் திண்டாடவில்லை. எனவே, பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மாசு குறித்த முழுமையான விழிப்புணர்வு வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை மக்களைத் தொடர்புபடுத்தும்படி கொண்டுசெல்ல வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் மாசின் முழுமையான தாக்கம் தெரியும்” என்றார்.
பல வருடங்களாக மாநகராட்சி தூய்மைப் பணியில் ஈடுபடும் சின்னசாமி கூறும்போது,
”அரசாங்கம் ஏதாவது அறிவிப்பு விட்டால் அந்தச் சமயத்தில் மட்டும் அதனை மக்கள் பின்பற்றுகிறார்கள். எனக்குத் தெரிந்து பத்து வருடங்களுக்கு முன்பு சில மாதங்கள் தீவிரமாக இதனைப் பின்பற்றினோம். ஆனால், தற்போது அவ்வாறு இல்லை. மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் எல்லாம் பிரிப்பது கிடையாது.
மக்கள் கொட்டும் குப்பைகளை நாங்களும் அந்தந்தப் பகுதி குப்பைக்கூடங்களில் கொட்டுவோம். அங்கு வரும் மாநகராட்சி ஊழியர்கள் அதனை வேறு ஒரு குப்பைத் தளத்துக்கு எடுத்துச் செல்கிறார்கள். அரசு கடுமையாக இருந்தால் மக்களும் கவனமாக இருப்பார்கள்”என்றார்.
பிளாஸ்டிக் ஒழிப்பைப் பொறுத்தவரை அது தனி நபர் முடிவல்ல. சூழலைக் காக்க வேண்டும் என்று அரசு உண்மையில் கவலை கொண்டால் மாசை ஏற்படுத்தும் கழிவுகளை அடியிலிருந்தே அகற்ற வேண்டும். இதற்கு இன்னும் பெரும் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, சாமானிய மக்களைக் கேள்விக்கு உள்ளாக்குவதைவிட மாசு கழிவுகளால் லாபத்தை ஈட்டும் பெரும் நிறுவனங்களை நோக்கி அரசின் பிடி தீர்க்கமாகத் திரும்ப வேண்டும். காலம் தாழ்த்தாமல் விரைவில் திரும்பும் என்றும் நம்புவோம்...!
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago