40 நாட்களுக்குப் பிறகு 33 சதவீத ஊழியர்களுடன் வெள்ளிக்கிழமை அதிகாலை உற்பத்தியைத் தொடங்கிய விசாகப்பட்டினத்தின் எல்.ஜி. பாலிமர்ஸ் லிமிடெட் ரசாயனத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய பாலிஸ்டெரெயின் விஷவாயு சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்குப் பரவி பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் ஆர்.ஆர்.வெங்கடாபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் லிமிடெட் ரசாயனத் தொழிற்சாலையிலிருந்து அந்த ஆபத்தான ரசாயன வாயுவை எதிர்பாராத மக்கள் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.
என்ன செய்வதென்று அறியாது குழந்தைகளையும், பெரியவர்களையும் தூக்கிக் கொண்டு சிலர் ஆம்புலன்ஸ்களை நோக்கி அழுதபடி ஓட, மறுபுறம் வெங்கடாபுரத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மக்கள் மயக்கமுற்று சாலைகளில் ஆங்காங்கே கிடந்தனர். இதில் விஷவாயு விபத்து ஏற்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
விசாகப்பட்டினம் விஷவாயு நிகழ்வு, இந்தியாவின் கடந்தகால மோசமான தொழிற்சாலை விபத்தான 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட போபால் விஷவாயுவை நினைவுபடுத்தியதுடன் நமது அரசும், தொழிற்சாலைகளும் எந்தவிதப் படிப்பினையும் போபால் விபத்திலிருந்து கற்றுக் கொள்ளவில்லை என்பதை மீண்டும் அழுத்தமாக உணர்த்துகின்றன.
அதிலும் ஆபத்தானது விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவை நாம் இயல்பாகக் கடந்து கொண்டிருப்பது. உண்மையில் நாம் இந்த விஷவாயுக் கசிவு குறித்து இன்னும் கூடுதலாக அச்சப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதனை வெறும் அன்றாடச் செய்தியாகக் கடந்திருக்கிறோம். போபால் அளவுக்கு விசாகப்பட்டின விஷவாயுக் கசிவில் உயிரிழப்பு ஏற்படவில்லையே என்று கூறி விபத்தின் தீவிரத்தைக் குறைக்க முற்படுகிறோம். இந்த மனநிலை முற்றிலும் ஆபத்தானது. முரணனாதும் கூட...
அடிப்படையில் போபால் விஷவாயுக் கசிவும், விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவும் ஒன்றுதான். இந்த இரண்டு விபத்துகளுமே நம் அரசும், நம் நாட்டில் இயங்கும் தொழிற்சாலைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வளவு பிற்போக்குத்தனத்தையும், அஜாக்கிரதையும் கொண்டுள்ளன என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன.
விசாகப்பட்டின விஷவாயு விபத்து நமக்கும் உணர்த்து எச்சரிக்கைகள் என்ன என்பது குறித்து 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக சில நிபுணர்களிடம் பேசினோம்,
இது இரண்டாவது போபால்: சிவராமகிருஷ்ணன், தீ மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்
''எல்லா தொழிற்சாலைகளிலும், இஹெச்எஸ் (Environment health safety (EHS) தரவுகளை முறையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் எந்த அரசாங்கமும் அதனைப் பின்பற்றுவது இல்லை. இதனைக் கண்காணிக்கும் பொறுப்பு தீயணைப்புத் துறைக்கு உள்ளது. ஆனால், அரசு இதில் கவனம் கொள்வதில்லை.
அதுமட்டுமல்லாது தொழிற்சாலைகள் எம்மாதிரியான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றன, அதற்காக அவர்கள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்களா என்ற விவரத்தை அளிப்பதில்லை. ஒருவேளை இம்மாதிரியான விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு தடுப்பது தொடர்பான வழிமுறைகளையும் தொழிற்சாலைகள் கொண்டிருப்பதில்லை. இவை முறையாக இல்லாததன் காரணமாகத்தான் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன.
முதலில் தொழிற்சாலையில் ரசாயன வாயு ஒன்று வெளியேறுகிறது என்றால் உடனடியாக வெடிப்பு ஏற்பட்டுவிடாது. வாயு கசியும்போது அதைக் கண்டறியும் கண்காணிப்புக் கருவி அவ்விடத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது பழுதடைந்து இருக்கலாம். இதுதான் இந்த விஷவாயு விபத்துக்குக் காரணமாகியுள்ளது. கண்காணிப்புக் கருவிகள் இருந்திருந்தால் இம்மாதிரியான பிரச்சினைக்கு வழிவகுத்து இருக்காது. இம்மாதிரியான குறைகளைத் தெரிவிக்க வேண்டுவது தொழிற்சாலையின் பொறுப்பு. இதனைக் கண்காணிப்பதில் அரசுக்குக் கடமை உண்டு.
தொழிற்சாலைகள் எம்மாதிரியான ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றன என்ற முழு விவரத்தை அரசு கேட்க வேண்டும். இல்லையென்றால் தொழிற்சாலையின் உள்ளே என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. போபாலில் நடந்ததுதான் நடக்கும்.
இம்மாதிரியான விபத்துகள் ஏற்படும்போது 70% தொழிற்சாலையின் மீது தவறு உள்ளது. 30 சதவீதம் அரசின் மீது தவறு உள்ளது. என்னைப் பொறுத்தவரை இது இரண்டாவது போபால்.
எதிர்காலத்தில் இம்மாதிரியான விபத்துகளைத் தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மற்ற நாடுகளில் இருப்பது போல் முதல் முன்னுரிமை தீயணைப்புத் துறைக்கு அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது வருடம் வருடம் புதுப்பிக்கும்போது தொழிற்சாலை முழுவதும் தணிக்கை செய்யப்பட வேண்டும். இம்மாதிரியான விஷயங்களில் அரசின் தலையீடு மட்டும் தீர்வாக முடியாது. தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் உள்ள நிபுணர்கள் குழுவும் அவசியம். இவை எல்லாம் அமைத்தால்தான் இம்மாதிரியான விபத்துகளைத் தடுக்க முடியும். இல்லாவிட்டால் இம்மாதிரியான விபத்துகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும்'' என்கிறார் சிவராமகிருஷ்ணன்.
தொழிற்சாலைகளில் பல அடுக்குப் பாதுகாப்புகள் தேவை: இந்துமதி, சென்னை ஐஐடி - சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பிரிவு பேராசிரியர்
''ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்துகிற அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் கடுமையான கட்டுபாட்டுகளுடன் கூடிய நெறிமுறையே அரசால் அறிவுறுத்தப்படுகின்றது. தொழிற்சாலையில் ஏற்படும் சிறிய தவறுகள்தான் பெரும் விபத்துகள் ஏற்பட வழிவகுக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு போபால் விஷவாயுக் கசிவை எடுத்துக் கொள்ளுங்கள். எல்.ஜி.பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து சுமார் 25,000 லிட்டர் பாலிஸ்டெரெயின் வெளியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது.
விபத்து ஏற்பட்டதற்கு முக்கியக் காரணம் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாகப் பின்பற்றவில்லை என்று முதற்கட்டத் தகவல் வெளிவந்துள்ளது.
இம்மாதிரியான விபத்துகளைப் பொறுத்தவரை நாம் அரசையே முழுமையாக குற்றம் சுமத்த முடியாது. அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றுவோம் என்று தொழிற்சாலைகள் வழங்கும் உறுதியின் அடிப்படையில்தான் அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தொழிற்சாலைகள் அளித்த உறுதியின்படி பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றாத காரணத்தால்தான் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன.
இம்மாதிரியான பெரும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கும் தொழிற்சாலைகளில் பல அடுக்குப் பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை ரசாயனக் கசிவு ஏற்பட்டால் ஆய்வகத்தின் உள்ளாகவே அதனைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புக் கருவிகளை தொழிற்சாலைகள் கொண்டிருக்க வேண்டும். முதல் ஆரம்பக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாண்டி தொழிற்சாலைகளில் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்திருக்க வேண்டும்.
இவை எல்லாம் தாண்டி வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமாகி வந்தாலும் அவர்கள் நீண்ட நாள் மருத்துவப் பரிசோதனைகளில் கண்காணிக்கப்படுவது மிக மிக அவசியம்'' என்றார் இந்துமதி.
இந்தியாவில் உயிர் மலிவு: பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
''விசாகப்பட்டினம் எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு சம்பவம், போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்திலிருந்து நாம் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுக்கிறது.
கடந்த 40 நாட்களாக உற்பத்தியில் இல்லாத தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மூலம் தொடர்ச்சியாக உற்பத்தியில் உள்ள ஒரு தொழிற்சாலையை எவ்வாறு நிறுத்துவது என்றும் அவ்வாறு நிறுத்திய தொழிற்சாலையில் உற்பத்தியை எவ்வாறு மீண்டும் தொடங்குவது என்ற அணுகுமுறையும் நமக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது.
இந்த விபத்து என்பது இயற்கை பேரிடரால் ஏற்பட்டது அல்ல. மனிதனால் ஏற்பட்டது. அதனால் நம்மால் இயற்கை மீது பழி போட்டுவிட்டு நகர இயலாது. இம்மாதிரியான விபத்துகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும். தொழிற்சாலை பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகள் அல்லது நவீன காலத்துக்கு ஏற்றவாறு அதில் புதுமையைப் புகுத்தாமல் இருப்பது அல்லது அவற்றை முறையாகப் பராமரிப்பதில் ஏற்படும் குறைபாடுகளால், அவற்றைப் பராமரிப்பவர்களுக்குப் போதிய பயிற்சிகள் வழங்காமல் இருப்பது போன்றவற்றால் இம்மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன.
நாம் இம்மாதிரியான தொழிற்சாலை விபத்துகள் நடந்தால் அதைத் தடுப்பதற்கான எந்தவித முன்னேற்பாடுகளையும் இதுவரை தொடங்கவே இல்லை.
விபத்து ஏற்பட்டால் அதனை எதன் மூலம் தடுக்க முடியும்? அது மக்களை எந்தவிதத்தில் பாதிக்கும்? அந்த மக்கள் பாதிப்பிலிருந்து எவ்வாறு தப்பிப்பது போன்ற பயிற்சிகளை முன்னரே வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இதில் எதையும் நாம் பின்பற்றவில்லை. விபத்து ஏற்பட்டு இரண்டு மணிநேரம் கழித்து, ஈரத் துணியால் முகத்தை மூடிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இந்த அறிவிப்பையும் எப்போது கூறுகிறார்கள் பலர் சாலையில் சுருண்டு விழுந்த பிறகு.
ஒரு தொழிற்சாலை ஒரு பகுதியில் இயங்குகிறது என்றால் அதன் அருகில் உள்ள மக்களுக்கு விபத்து ஏற்படும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை முன்னரே வழங்கி இருக்க வேண்டும். இத்துடன் அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இம்மாதிரியான விஷவாயு விபத்துகள் ஏற்படும்போது அதனை எதிர்கொள்வதற்கான மருந்துகளை வைத்துள்ளார்களா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாலிஸ்டெரெயின் ரசாயனத்தைப் பொறுத்தவரை சில நிமிடங்களிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. மனிதனின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் தன்மையைக் கொண்டது. ஒருவேளை இறப்பு ஏற்படாவிட்டாலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முதலில் எல்லா ரசாயனத் தொழிற்சாலையையும் ஒரே இடத்தில் குவித்து உற்பத்தி செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இரு தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகள் ஒன்றாக இணைந்தால் பெரும் விபத்து ஏற்படும்.
தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறான வெளிநாட்டுத் தொழிற்சாலைகள் அவர்கள் நாட்டில் செயல்படாமல் இந்தியா மாதிரியான நாடுகளில் தங்கள் தொழிற்சாலையை அமைக்கின்றன?
பாதுகாப்பு விஷயங்களில் பெரும் தொகையை செலுத்தி அவர்கள் நாட்டில் இம்மாதிரியான ஆபத்தான தொழிற்சாலைகளை அமைப்பதற்குப் பதிலாக இந்தியா போன்ற நாடுகளில் எளிதாக அமைத்துவிடலாம். இங்குதான் உயிருக்கும் மதிப்பில்லையே. சுற்றுச் சூழலை எவ்வளவு அளவு வேண்டுமானாலும் மாசுபடுத்திக் கொள்ளலாம்.
அமெரிக்காவில் நாம் இம்மாதிரியான விபத்துகளைக் காண முடியாது. ஏனென்றால் அமெரிக்கா போன்ற நாடுகளின் உற்பத்தி மையமாக இந்தியா போன்ற நாடுகள்தான் உள்ளன. அவை நம்மிடருந்துதான் அப்பொருட்களை பெற்றுக்கொள்கின்றன.
இறுதியாகக் கூறுவது, தொழிற்சாலைகளை மக்கள் வாழும் பகுதிகளில் அமைக்க அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் போதுமான விழிப்புணர்வை மாதத்திற்கு ஒருமுறையாவது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தியாவில் உள்ள பல ரசாயனத் தொழிற்சாலைகள் இந்த நிலையில்தான் உள்ளன என்பதைக் கவனத்தில் கொண்டு உடனடியாக செயலில் இறங்க வேண்டும்'' என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் மோசமான கரும்புள்ளியாக மாறிப்போன போபால் விஷவாயுவில் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த பிறகும் கடந்த 26 ஆண்டுகளில் நாட்டில் 5க்கும் மேற்பட்ட தொழிற்சாலை விஷ வாயு விபத்துகள் நடந்தேறியுள்ளன. உயிர்களும் ஏற்ற, இறக்க எண்ணிக்கையில் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த விஷவாயு விபத்துகளின் தீவிரத் தன்மை, நமது தொழிற்சாலை பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, எந்தவித ஆக்கபூர்வமான விவாதமும் கடந்த காலங்களில் எழவே இல்லை.
இவை அனைத்தும் அச்சம் அளிக்கக் கூடியவையே. விழிப்புடன் இருப்போம்.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago