திமுகவின் வெற்றி; முதல்வருக்கு டாக்டர் பட்டம்; கோலப் போராட்டம்: 2019-ல் நினைவில் நின்றவை

By நந்தினி வெள்ளைச்சாமி

கீழடி நாகரிகப் பெருமை, முதல் திருநங்கை செவிலியர், அரசியல் மாற்றங்கள், போராட்டங்கள், கைதுகள், குழந்தை சுஜித்தின் மரணம் என, மகிழ்ச்சியும் மனநிறைவும் குழப்பங்களும் கவலைகளும் பிணைந்து கலவையாக நம்மிடமிருந்து விடைபெறுகிறது 2019.

மனக்கவலைகளுக்கு இடம் தந்த நிகழ்வுகளுக்கும் இந்த ஆண்டில் குறைவில்லை. எனினும், வரும் புதிய ஆண்டு புத்துணர்ச்சியுடன் நல்மாற்றங்களை விதைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர் தமிழக மக்கள். இந்த ஆண்டு நம் மனதில் நீங்கா இடம்பிடித்த, நாம் அதிகம் அசைபோட்ட நிகழ்வுகள், அரசியல் மாற்றங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம்.

பிளாஸ்டிக் தடை

2018-ம் ஆண்டில் அறிவித்ததன் படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை அமலானது. பிளாஸ்டிக் தட்டு, குவளைகளுக்கு மாற்றாக, பனை ஓலை, வாழை இலையால் செய்யப்பட்ட மாற்றுப்பொருட்கள் புழக்கத்திற்கு வந்தன. ஆரம்பத்தில், பிளாஸ்டிக் தடையால் குழப்பங்கள் வந்தாலும், கடைக்குச் சென்றால் வீட்டிலிருந்து பாத்திரங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற அளவில் மக்கள் மனதில் மாற்றம் வந்ததை மறுக்கவியலாது. எனினும், பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்ட ஆரம்பத்தில் தான் அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு அபராதங்கள் விதித்தனர். அந்தக் கட்டுப்பாடு சற்று தளர்ந்ததாகவே தெரிகிறது. பிளாஸ்டிக் தடையில் தமிழகம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவி வகித்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரி தலைமையில், மக்களவைத் தேர்தலையும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் தமிழக காங்கிரஸ் இந்த ஆண்டு சந்தித்தது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 10 இடங்களில் 9 இடங்களை காங்கிரஸ் வென்று, இந்திய அளவில், மக்களவையில் காங்கிரஸின் பலத்தை சற்று உயர்த்திக் காண்பிக்க தமிழக காங்கிரஸ் உறுதுணையாக இருந்தது.

எனினும், யார் தலைமை இருந்தாலும் தமிழக காங்கிரஸுக்கே உரித்தான பூசல்களும், சச்சரவுகளும் இந்த ஆண்டும் தொடர்ந்தன. மேலும், எழுவர் விடுதலை, உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டு இருந்தது.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம் இதே கோரிக்கையை நேரிலும் வலியுறுத்தியிருந்தார். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அந்த ரயில் நிலையத்திற்கு 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என பெயர் சூட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. ரயில் நிலைய வளாகம் முன்பும் அப்பெயர் பொறிக்கப்பட்ட போர்டு அமைக்கப்பட்டது. 'மத்திய ரயில் நிலையம்' என மாற்றியிருப்பதன் மூலம், அந்த ரயில் நிலையத்துடன் இருந்த மாநில உறவு கேள்விக்குள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன. பெயர் மாற்றப்பட்டாலும் இன்று வரை மக்கள் அதனை 'சென்ட்ரல் ரயில் நிலையம்' என்றே அழைத்து வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்

பொள்ளாச்சியில் பெண்களை நட்பு, காதல் என்ற பெயரில் ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து அப்பெண்களை மிரட்டி பணம் பறித்தது ஒரு கும்பல். பிப்ரவரி மாதத்தில் இதுகுறித்து ஒரு பெண் போலீஸில் புகார் அளித்த பிறகே இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியுலக வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது. அதில் ஒரு வீடியோவில், குற்றவாளியிடம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கெஞ்சும் குரல் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது. இச்சம்பவத்தில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோரைக் கைது செய்த போலீஸார் குண்டர் சட்டத்தில் அவர்களை சிறையில் அடைத்தனர். எனினும், அவர்களின் தாயார் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்தது.

கதிர் ஆனந்த் வீட்டில் சோதனை

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருந்தார். தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கையில், வேலூரில் உள்ள துரைமுருகன் , கதிர் ஆனந்த் வீடுகள், வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்குச் சொந்தமான கல்லூரி, அவரின் உறவினர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கணக்கில் வராத பணம் இச்சோதனையில் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தப் பணம், வாக்காளர்களுக்கு கொடுக்கவே வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மே மாதத்தில் நடக்கவிருந்த மக்களவை தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. எனினும், ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இத்தொகுதி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை விட 8,141 வாக்குகள் அதிகம் பெற்று கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

திமுகவுக்கு வெற்றி வாகை

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

தமிழகத்தில் நடைபெற்ற வேலூர் தொகுதி தவிர்த்த 38 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 37 தொகுதிகளைக் கைப்பற்றியது திமுக. ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வேலூர் மக்களவை இடைத்தேர்தலிலும் திமுகவே வென்றது. அறுதிப் பெரும்பான்மையில் மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்த நேரத்தில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்றியது.

தமிழகம் என்றும் தனிவழியில் தான் நடைபோடும் என, திமுகவின் இந்த வெற்றி தேசிய அளவில் பேசப்பட்டது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக அடைந்த வெற்றிக்குக் காரணம் அதன் தலைவர் ஸ்டாலின் என்ற அளவில் அவர் தேசிய அளவில் கவனம் பெற்றார்.

எம்.பி.க்களான எழுத்தாளர்கள்

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுள், திமுக கூட்டணியில் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விசிகவின் ரவிக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன், காங்கிரஸின் ஜோதிமணி என ஐந்து பேர் எழுத்தாளர்களாகவும் தங்கள் முத்திரைகளைப் பதித்தவர்கள். எழுத்தாளர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றதும் இம்முறை கவனம் பெற்றது.

மூன்றே பெண் எம்.பி.க்கள்

தமிழகத்தில் இருந்து கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி என 3 பெண் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர். 39 தமிழக எம்.பி.க்களுள் 3 பேர் தான் பெண்கள் என்பது பாலினச் சமத்துவத்தில் நாம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் என்பதைக் காண்பிக்கிறது. எனினும், நாடாளுமன்றம் சென்றுள்ள 3 பெண் எம்.பி.க்களும் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சினைகளுக்காக டெல்லியில் குரல் கொடுத்து வருகின்றனர்.

'ஒற்றைக்குரல்' - ஓ.பி.ரவீந்திரநாத் குமார்

ஒ.பி.ரவீந்திரநாத் குமார்: கோப்புப்படம்

மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றது. தேனி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தோற்கடித்தார். அவரின் வெற்றிக்குப் பணபலமே காரணம் என, திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டின. மக்களவையில் ஒரேயொரு அதிமுக உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமார், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பேசி வருகிறார்.

ஆட்சியை காப்பாற்றிக் கொண்ட முதல்வர் பழனிசாமி

மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுகவும், 9 தொகுதிகளை அதிமுகவும் கைப்பற்றியது. இதையடுத்து, அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுக வென்றது. இதனால், முதல்வர் பழனிசாமி தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டார். மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவால் பெற முடியவில்லை.

தண்ணீர் நெருக்கடி

தமிழகத்தில் ஏப்ரல்- மே மாதத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. தண்ணீர் மேலாண்மையில் தமிழக அரசு கொள்கை வகுத்துச் செயல்பட வேண்டியதன் தேவையை இது உணர்த்தியது.

அத்திவரதர் தரிசனம்

சயன கோலத்தில் அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதர் வைபவம் ஜூன் மாதத்தில் 47 நாட்களுக்கு நடைபெற்றது. குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர், நின்ற கோலம் மற்றும் சயன கோலத்தில் காட்சியளித்தார். தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என ஒரு கோடிக்கும் மேலானோர் அத்திவரதரைத் தரிசித்தனர். அவர்களின் வருகையால் அத்திவரதர் பேசுபொருளானார். 47 நாட்களுக்குப் பிறகு மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டார்.

திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி

உதயநிதி: கோப்புப்படம்


மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தவர் உதயநிதி. மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இரு மாதங்கள் முடிவதற்குள்ளாகவே ஜூலை மாதத்தில் மாநில இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார. இது, அடுத்த திமுக தலைவராக உதயநிதியை ஆக்குவதற்கான முன்னோட்டம் என பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே, இளைஞரணியில் ஆட்கள் சேர்ப்பு, என பணிகளை மேற்கொண்டு வருகிறார் உதயநிதி.

கோவை இரட்டைக்கொலை - குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி

கோவையில் 11 வயது சிறுமி, 8 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கொலை செய்த குற்றவாளி மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளி மோகன்ராஜ், தப்பியோடும் போது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.

தெலங்கானா ஆளுநரான தமிழிசை

தமிழிசை: கோப்புப்படம்

மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்களில் போட்டியிட்டது. இதில், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டார் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை. ஆனால், ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. எனினும், இந்தத் தோல்வியால் துவண்டுவிடாமல் மேற்கொண்டு வேலை செய்ய வேண்டும் என, பிரதமர், உள்துறை அமைச்ச அமித்ஷா ஆகியோர் தனக்கு ஆறுதல் தெரிவித்ததாக தமிழிசை கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், திடீரென தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் அசராமல் கருத்துத் தெரிவிக்கும் தமிழிசை, மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்பட்டார். மூன்று மாதங்கள் கழிந்தும், தமிழிசையால் வெற்றிடமான தமிழக பாஜக தலைமை பதவி இன்னும் நிரப்பப்படவில்லை. அப்பதவிக்கான போட்டியில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

தமிழ்க்குடியை பறைசாற்றிய கீழடி நாகரிகம்

மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்க காலம் 2600 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்தது. சுவர், உறைகிணறு, மட்பாண்டங்கள், சுடுமண்ணாலான குழாய், ஆபரணங்கள், பகடைக்காய்கள் என கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பல தமிழ்ச்சமூகம் எழுத்தறிவுடனும், நவீனத்துடனும் இருந்ததை தெளிவாக்கியது.

பேனர் கலாச்சாரத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 22 வயது இளம்பெண் சுபஸ்ரீ தன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, பேனர் விழுந்து அவர் தடுமாறியதில், பின்னால் வந்த லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த பேனரை வைத்தவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால். பேனர் வைப்பதற்கான வரம்புகள், விதிமுறைகளை எத்தனையோ முறை உயர் நீதிமன்றம் தெரிவித்தும், அதனை சரிவர அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்காததால் உயிர் பலிகள் தொடர்கின்றன. இந்த சம்பவத்திற்குப் பிறகு திமுக உள்ளிட்ட பல கட்சிகள், கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் விதிமுறைகளை மீறி பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டன.

5-8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு அட்டவணைகளும் வெளியிடப்பட்டன. 5-ம் வகுப்பு மாணவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களையும் 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது, ஏற்கெனவே கல்விச்சுமை அதிகமுள்ள குழந்தைகளுக்கு இந்த அறிவிப்பு மேலும், மனச்சோர்வை அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர் கல்வியாளர்கள்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்ததாக, 3 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட 10 பேர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டது, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீட் தேர்வை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த ஆள்மாறாட்டச் சம்பவங்கள் எடுத்துக்காட்டின.

ஜி ஜின்பிங் - மோடி சந்திப்பு

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரின் சந்திப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பால், தமிழகம் சர்வதேச கவனம் பெற்றது. மாமல்லபுரம் சிற்பங்கள், தமிழக - சீன வர்த்தக ரீதியிலான உறவுகள் அதிகம் பேசப்பட்டன.

முதல்வருக்கு டாக்டர் பட்டம்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

குழந்தை சுஜித் மரணம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒன்றரை வயதுக் குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலகட்ட முயற்சிகள் செய்தும், குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது, தமிழகத்திற்கு சோக தீபாவளியாக மாறியது. நம் அறிவியலும் தொழில்நுட்பமும் சுஜித்துகளுக்குக் கைகொடுக்கவில்லையோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.


சென்னை காற்று மாசு

நவம்பர் மாதத்தில் டெல்லிக்கு அடுத்தபடியாக, சென்னையில் காற்று மாசு ஏற்பட்டது. இதற்குக் காரணமாக அப்போது நிலவிய வானிலைதான் என்று தமிழக அரசு கூறியது. எனினும், கடந்த ஆண்டு, மணலி, கொடுங்கையூர் போன்ற வடசென்னை பகுதி மக்கள் அதிக நாட்கள் காற்று மாசுடனேயே வாழ்ந்ததாக கவலை தெரிவிக்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் நவம்பர் மாதம் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது செல்போனில் பேராசிரியர்கள் சிலரின் பெயர்களை தன் மரணத்திற்குக் காரணமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து இந்த தற்கொலை சம்பவம் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுச்சுவரால் உயிரிழந்த 17 பேர்

கோவை மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் உயிரிழந்தனர். இது தீண்டாமைச் சுவர் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. இந்தச் சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

செவிலியரான முதல் திருநங்கை

தூத்துக்குடியைச் சேர்ந்த ரூபி என்கிற திருநங்கை தமிழகத்தில் முதல் முறையாக, செவிலியராக நியமிக்கப்பட்ட திருநங்கை என்ற பெயரைப் பெற்றுள்ளார். அதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்நிகழ்வு, மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமையைக் காப்பதற்கான முக்கியமான நகர்வு எனலாம்.

உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. மேலும், புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை. 2020-ல் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராடி வருகின்றன. இச்சட்டம் முஸ்லிம்களையும் ஈழத்தமிழர்களையும் வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு அமைபினரும் பொதுமக்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இச்சட்டத்துக்கு எதிராக பெண்கள் சிலர் கோலப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்பின், தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கோலப் போராட்டம் நடைபெற்றது.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்