கீழடி நாகரிகத்தை தமிழர், திராவிடர் என பிரித்துப் பார்க்கக் கூடாது: அமர்நாத் ராமகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

By பாரதி ஆனந்த்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3-வது சனிக்கிழமை சர்வதேச தொல்லியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது

கீழடி.. சம கால மக்களை சங்ககாலம் பற்றி சிந்திக்கவைத்திருக்கும் பெயர். தொல்லியல் துறை, அகழாய்வுப் பணிகள், பானை ஓடுகள், தமிழி எழுத்துகள், கீறல் குறியீடுகள் போன்ற வார்த்தைகள் எல்லாம் தற்கால சாமான்ய மக்களுக்கு அதிகம் பரிச்சியமானதற்குக் காரணமும் கீழடிதான். அதனாலேயே எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு சர்வதேச தொல்லியல் தினம் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

இன்று சர்வதேச தொல்லியல் தினம் என்பதால், "இந்து தமிழ் திசை" இணையதளத்துக்காக தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் சிறு பேட்டி கண்டோம்..

இன்று சர்வதேச தொல்லியல் தினம் அனுசரிக்கப்படுகிறது.. கீழடி ஆய்வு பாய்ச்சிய வெளிச்சத்தின் பின்னணியில் நாம் இந்நாளில் ஒரு தமிழராக எப்படிப் பெருமை கொள்ளலாம்?

சர்வதேச தொல்லியல் நாள் என்பதே மக்களுக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. இதுவே மகிழ்ச்சிக்குரிய விஷயம். தொல்லியல் இருந்தால்தான் நாம் நம்முடைய நாகரிகத்தை அறிய இயலும். நம் வரலாற்றை அறிவதற்கான மிக முக்கியமான ஆதாரம் தொல்லியல்தான். அந்த ஆதாரங்களுக்காகத்தான் இத்தகைய அகழாய்வுப் பணிகளே நடக்கின்றன. விழிப்புணர்வு இருந்தால்தான் எதிர்காலத்தில் தொல்லியல் எச்சங்களை மக்கள் காப்பாற்றுவார்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்தவே எந்த ஒரு நாளையும் கொண்டாடுகிறோம். இதுநாள் வரை இந்த விழிப்புணர்வு இல்லை. இப்போது இந்த நாளுக்கும் ஒரு வெளிச்சம் வந்துள்ளது. இந்த விழிப்புணர்வு மக்களுக்கும் வந்தால்தான் தம் மூதாதையர்கள் பற்றியும் தமது சமூக வரலாற்றைப் பற்றியும் அறிவதற்கான தினமாக இதனை நினைக்கும்போதுதான் அதற்கான ஆதாரங்களை அவர்கள் காப்பாற்றுவார்கள்.

கீழடி அகழாய்வு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

நாம் ஏன் வரலாற்றை, நம் பழம்பெருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும்?

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எப்படி அவரின் அடையாளத்தைக் காப்பாற்ற பெயருக்கு முன்னால் ஒரு இனிஷியல் தேவைப்படுகிறதோ. அப்படித்தான் நாட்டின் வரலாற்றுக்கு தொல்லியல் ஆதாரங்கள் மிகவும் முக்கியமானது. அந்த வரலாறு இருந்தால்தான் நம்முடைய தொன்மையை நாம் உலக அரங்கில் விளக்க முடியும். அதனால், நம் வரலாற்றுக்கு நிச்சயமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கீழடி அகழாய்விடத்திற்கு சென்றபோதுதான் நிறைய தொல்லியல் மாணவர்கள் அங்கு பணியாற்றியதைப் பார்க்க முடிந்தது. கீழடி அகழாய்வுக்குப் பின் இந்த படிப்பின் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாகும் அல்லவா?

தமிழகத்தில் கீழடி அகழாய்வு மூலமாகத்தான் தொல்லியல் ஆய்வு குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறது. தேசிய அளவில் இதற்கு முன்னரும் இப்படிப்பை மாணவர்கள் படித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், இத்தனைநாள் அது வெளியில் அதிகம் தெரியவில்லை. கீழடி மூலமாக வந்த விழிப்புணர்வு தொடர வேன்டும்.

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் தொல்லியில் துறை இருக்கிறது. அதில் இணைந்து படிக்கலாம்.

ஒரு நாட்டின் வரலாற்றை அறிய கல்வெட்டு, நாணயம், செவிவழிச் செய்தி, இலக்கியங்கள் இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் நிரூபிக்கும் வழி தொல்லியல் ஆய்வு மட்டுமே. தொல்லியல் எச்சங்கள்தான் முதன்நிலை ஆதாரங்கள். மக்கள் தாங்கள் பயன்படுத்தியப் பொருட்களை விட்டுச் சென்றுள்ளார்கள். அதைவைத்துதான் நாம் வரலாற்றைக் கட்டுமானம் செய்வதற்கான பணியைச் செய்கிறோம். அந்த கட்டுமானத்துக்கு அவை மிக முக்கியமான ஆதாரம்.

வரலாற்றைப் பாதுகாக்கும் கடமை எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் அதை முறையாகப் பாதுகாக்க ஆட்கள் இல்லை. தொல்லியல் படிப்புகள் அதிகமானோர் படித்துவந்தால், ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வரலாற்று எச்சங்களைப் பாதுகாக்கும் பணிகளை நாம் மேற்கொள்ளும் வகையில் பணிகள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

நீங்கள் தொடர்ந்து நிலம் கொடுத்த மக்களைப் பற்றி பேசிவருகிறீர்கள்.. அவர்களுக்கான இழப்பீடு பற்றி வலியுறுத்துவீர்களா?

அந்த மக்கள் பாராட்டுக்குரியவர்கள். அதனால்தான் அவர்களைப் பற்றி நான் ஒவ்வொரு மேடையிலும் பேசுகிறேன். அவர்களிடம் நாங்கள் முதலில் பேசிப் புரியவைக்கிறோம். அதை புரிந்து கொண்டு அவர்கள் நிலம் அளிப்பது மிகப்பெரிய விஷயம். அவர்களுக்கான இழப்பீட்டைக் கொடுத்தால்தான் அவர்கள் உற்சாகத்துடன் நிலம் அளிப்பார்கள். இப்போது நடைமுறையில் இழப்பீடு கொடுக்கும் பழக்கம் இருக்கிறதா என்பதை மாநில தொல்லியல் துறையில்தான் கேட்டறிய வேண்டும்.

அகழாய்வுக் குழிகளை மூடுவது என்றால் என்ன? மக்களிடம் இது குறித்த தெளிவு இல்லை..

கீழடியில், நாங்கள் ஆய்வு மேற்கொண்ட இடங்கள் தனியார் நிலங்கள். இதே அரசு இடமாக இருந்தால் திறந்து வைக்கலாம். ஆனால் தனியாரிடம் நாங்கள் ஒப்பந்தம் போட்டே நிலத்தை வாங்குகிறோம். அதனால் அந்த நிலங்களை மூடுவதே சரியாக இருக்கும். அகழாய்வில் தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்கள் ஏதும் பாதிக்கப்படாத வகையில் உறைபோட்டு அதற்கான பிரத்யேக முறையில் குழிகளை மூடுவோம். எப்போது வேண்டுமானாலும் அந்த இடத்தை மீண்டும் தோண்டிக் கொள்ளலாம் என்ற வகையில்தான் மூடப்படும்.

கீழடி நாகரிகம் திராவிட நாகரிமா? தமிழர் நாகரிகமா?

இந்த ஒரு கேள்விதான் இங்கே குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், எங்களைப் பொருத்தவரையில் இது சங்ககால நாகரிகம். சங்கத்தின் மொழி தமிழ். தமிழ் மொழியைப் பற்றிதான் ஆய்வு நடக்கிறது. தமிழ் மொழிதான் திராவிடத்தின் ஆதி மொழி. அப்படித்தான் பார்க்கவேண்டுமே தவிர தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. திராவிட இனத்தின் ஆதி தமிழ். அந்த கண்ணோட்டத்தில் சங்ககால நாகரிகமாகப் பார்க்க வேண்டும்

அடுத்த கட்ட ஆய்வில் மத்திய அரசையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினீர்கள். அதற்கான காரணம்?

இருவரும் சேர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் விரைவில் செய்யலாம் என்பதற்காகவும் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதற்காகவும் அவ்வாறு வலியுறுத்தினேன்.

தமிழகத்தில் முதன்முறையாக இத்தகைய தினத்தின் மீது ஒரு வெளிச்சம் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்