மிகக்குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவு, வெள்ளத்திற்குப் பிறகு உடனடியாக ஏற்படும் வறட்சி, வெப்ப அலைகளின் விளைவு, அதிக பனி, அதிக குளிர் உள்ளிட்ட நிகழ்வுகள் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் தொடர்ந்து ஏற்படுகின்றன. இதனை, அதீத காலநிலை நிகழ்வுகள் என வரையறுக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வாளர்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகளாலும் அதிகரிக்கும் உலகின் வெப்பநிலை காரணமாகவும் இந்நிகழ்வுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
உண்மைதான், இத்தகைய அதீத காலநிலை நிகழ்வுகளை இயற்கைப் பேரிடர்கள் என கடந்து செல்லமுடியாது என்பதையே தரவுகள் தெரிவிக்கின்றன.
தொழில்மயமாக்கல், மனித மைய விளைவுகளால் உலக வெப்பமயமாதல் மிகத்தீவிரமான நிலைக்குச் சென்றுள்ளதையே இத்தகைய அதீத காலநிலை நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகமானால், உணவு உற்பத்தி, அரசியல் நெருக்கடி என மானுட சமூகம் பல மோசமான விளைவுகளைச் சந்திக்கக் கூடும் என, காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் ஐபிசிசி குழு கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை நம்மை எச்சரிக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற அதீத காலநிலை நிகழ்வுகள், மனித சமூகம் மற்றும் சுற்றுச்சூழலில் அவை ஏற்படுத்திய தாக்கங்கள், இத்தகைய நிகழ்வுகளை மட்டுப்படுத்துதல் குறித்து ஓர் ஆய்வுப் பார்வை.
வெள்ளம்
இந்த ஆண்டு சென்னை மக்கள் தெருக்களில் தண்ணீருக்காக இரவு, பகலாக அலைந்தனர். இப்போது, பருவமழை தொடங்கியதால் அந்த நிலைமை சற்றே தணிந்துள்ளது. ஆனாலும், இன்னும் நிலைமை பல இடங்களில் மோசமாகத்தான் உள்ளது. சென்னைக்கு ஒரு ஆண்டு வறட்சி ஏற்பட்டால், அதற்கு அடுத்த ஆண்டு வெள்ளம் என மாறி மாறி இத்தகைய அதீத காலநிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
அடுத்ததாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில், ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் 24 மணிநேரத்தில் 820 மி.மீ. மழை பதிவானது. அவலாஞ்சியில் மட்டும் 5 நாட்களில் 1,717 மி.மீ. மழை பதிவானது. கடலூரில் 1943-ல் ஒரே நாளில் 570 மி.மீ மழை பதிவானதையே அவலாஞ்சி மிஞ்சிவிட்டது. நிலச்சரிவு, கட்டிட சேதம் என பெரும் இழப்புகள் அவலாஞ்சியில் ஏற்பட்டன.
அசாம் , மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 1.4 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டது. ஆனால், ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் வெள்ளம் ஏற்பட்டது. மழை பெய்யும் நாட்கள் குறைந்துள்ளன. ஆனால், குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பொழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கர்நாடகாவில் சராசரியைவிட 5 மடங்கு அதிக மழை பெய்துள்ளது. மைசூருவில் ஒரே நாளில் 62.2 மி.மீ. மழை பெய்தது. இது சராசரியைவிட, 32 மடங்கு அதிகமாகும். குடகுவில் 180.3 மி.மீ. மழை அதிகபட்சமாக பதிவானது. இது இயல்பைவிட 700 சதவீதம் அதிகமாகும். இன்னும் 7 மாவட்டங்களில் 30 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட அதிகமாகும். இந்திய வானிலை மையம், 124.5 மிமீ-244.4 மி.மீ. மழையை, மிக அதிக கனமழை எனவும், 244.5 மி.மீ.க்கும் அதிகமான மழையை மிக மிக கனமழை எனவும் வரையறுத்துள்ளது.
மும்பையும், கேரளாவும் ஆண்டுதோறும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில், மும்பையில், 1464.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கேரளாவின் நிலைமை இதனைவிட மோசம். இம்மாதத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில், 88-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். கேரள வெள்ளத்தில் அரசு நிர்வாகத்தால் சமாளிக்க முடியாததாக நிலச்சரிவுகள் உள்ளன. கேரள நிலச்சரிவில் சகோதரிகளான சிறுமிகள் இறந்து, ஒரே குழியில் புதைக்கப்பட்டது நிலச்சரிவின் ஆபத்தை நமக்குப் புரிய வைக்கும். மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து மாதவ் கட்கில் தலைமையிலான நிபுணர் குழு அளித்த அறிக்கையை செயல்படுத்தாததாலேயே கேரளா இத்தகைய விளைவுகளை எதிர்கொள்வதாக, 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ.சுந்தர்ராஜன் தெரிவிக்கிறார்.
"மாதவ் கட்கில் அளித்த அறிக்கையை அரசு ஏற்கவில்லை. அரசு அமைத்த குழுதான் அது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியிருந்தால், கேரள வெள்ளம், நிலச்சரிவு விளைவுகளை மட்டுப்படுத்தியிருக்கும்", என்கிறார், சுந்தர்ராஜன்.
கோ.சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள்
வெப்ப அலைகள் மற்றும் குளிர் அலைகளின் தாக்கம்
மழை, வெள்ளம் மட்டுமல்ல, இந்தியாவில் வெப்ப அலைகளின் தீவிரமும் அதிகரித்துள்ளது. வெப்ப அலைகள், மற்றும் குளிர் அலைகள் காரணமாக இறப்புகள் ஏற்படுகின்றன. 2015-2016 ஆண்டு காலகட்டத்தில் 3,000 பேர் குளிர் அலைகளால் உயிரிழந்துள்ளனர்.
புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்ட இந்திய வானிலை மையத் தரவுகளின் படி, இந்திய சராசரி வெப்பநிலை, 1901-1910 மற்றும் 2009-2018 காலகட்டத்தில், 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. இதே நிலைமை நீடித்தால், சராசரி வெப்பநிலை இந்நூற்றாண்டு முடிவதற்குள் 29.1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என, உலக வங்கி மதிப்பிட்டுள்ள ஆய்வு கடுமையாக எச்சரிக்கிறது.
இந்திய வானிலை மையத்தின் தகவலின்படி, 1950-80 காலகட்டத்தை 2009-2018 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளா, மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 1950-80 காலகட்டத்தில் இருந்த சராசரி வெப்பநிலையை விட கடந்த 10 ஆண்டுகளில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா மாவட்டம், காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது. டெல்லியில் 35 டிகிரி செல்சியஸ் பதிவான நாட்கள், 2009-2018 காலகட்டத்தில் 1,613 ஆக அதிகரித்துள்ளது. இது, 1953-68 காலகட்டத்தில் 1,009 ஆக இருந்தது. பெங்களூரு, மும்பை, ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களிலும் நிலைமை இவ்வாறே உள்ளது.
ஜூலை 2019, இந்திய வானிலை மையத்தின் தரவுகளின் படி, அதிக வெப்பம் பதிவான ஆண்டாகும். கடந்த 2016-ல் இந்தியாவில் வெப்ப அலைகளால் 59.32% பேரும், 2017-ம் ஆண்டில் 61.4% பேரும், 2018-ம் ஆண்டில் 52.94% பேரும் பாதிக்கப்படுவதாக, 'இந்தியா ஸ்பெண்ட்' இணையதளம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மக்களவையில் அளிக்கப்பட்ட தகவலின்படி, 2019 ஆம் ஆண்டு ஜூன் 16 வரை, 94 பேர் வெப்ப அலைகளால் உயிரிழந்துள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தகவலின் படி, 2018-2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் 2,400-க்கும் அதிகமான இந்திய மக்கள் இத்தகைய அதீத காலநிலை நிகழ்வுகளால் உயிரிழந்துள்ளனர். இத்தகைய காலநிலை நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதீத காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள்
இத்தகைய அதீத காலநிலை நிகழ்வுகளால் நோய்கள், உற்பத்திக் குறைவு, மனித வளங்கள் அழிப்பு, மனித இனத்திற்குள் நெருக்கடி போன்றவை ஏற்படும் என சூழலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில், 2050 ஆம் ஆண்டுக்குள் மொத்த உற்பத்தி 10% குறையும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. 2017-18 இல் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, வறட்சி மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, விவசாயிகளின் வருமானம் 4-14% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் கட்டுமானப் பணிகளிலும் தடை ஏற்பட்டு அத்தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், உற்பத்தித் திறன் குறைகிறது. சர்வதேச தொழிலாளர் மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் வெப்ப அழுத்தம் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி குறைந்து 34 மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளை விட உயர்ந்ததாகும்.
அதீத காலநிலை நிகழ்வுகள் குறித்து மேலும் பேசிய, 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன், "அதீத காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகள் அதிகம். திடீரென அதீத மழை பொழியும்போது அதனை நம்மால் சேமிக்க இயலாது. அதனால் அடுத்த குறுகிய காலத்தில் வறட்சியை எதிர்கொள்வோம். அதிகமான குளிர், அதிகமான வெப்பம், அதிகமான வறட்சி, அதிகமான மழைப்பொழிவு இவையெல்லாவும் அதீத காலநிலை நிகழ்வுகள்தான்.
இப்படி இருக்கும்போது அமெரிக்கா காலநிலை மாற்றத்தை நம்ப மறுக்கிறது.
உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் கூடியதற்கே இத்தனை விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதைத்தாண்டி விட்டால், எதனையும் சரிசெய்ய முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப்போது 'டெர்மாஃப்ரோஸ்ட்' விளைவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதாவது, ஆர்க்டிக்கில் உள்ள பணிகள் அதிகப்படியான மீத்தேனை அழுத்தி வைத்திருந்தன. இப்போது, பனி உருக உருக அந்த மீத்தேன் வெளியேறுகிறது. மீத்தேன் இன்னும் காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தும்.
சிரியாவில் நடக்கும் நெருக்கடிக்குக் காரணம் காலநிலை மாற்றம் என்கின்றனர். 6 மாதங்களுக்கு ஒருமுறை வெள்ளம், வறட்சி என மாறி மாறி வந்தால், அதனைச் சமாளிக்க நிதி நெருக்கடி ஏற்படும். உற்பத்தி குறைந்துவிடும். வளங்களுக்கான சண்டைகள் நிறைய நடக்கும். இரு நாடுகளுக்கிடையே மட்டுமல்லாமல் மக்களுக்கிடையே இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகும்.
இந்தியாவுக்கு என தனித்த காலநிலை மாதிரிகளை உருவாக்க வேண்டும். அதன்மூலம் தான், பருவ மாற்றம், வேளாண்மையில் ஏற்படும் விளைவுகள், கடல் மட்டம் உயர்வு என எல்லாவற்றையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
கடந்த 2 பட்ஜெட்டுகளிலும் காலநிலை மாற்றம் என்ற வார்த்தையே இல்லை. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் தீவிரமடைந்திருக்கிறது. ஆனால், "காலநிலை மாற்றம் இல்லை, நாம்தான் மாறியிருக்கிறோம்" என்று பிரதமர் மோடி சொல்கிறார்.
நுகர்வு கலாச்சாரம், சூழலுக்கு ஏற்ற வாழ்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் போன்ற சிலவற்றை மக்கள் செய்ய வேண்டும். இது போதுமானது அல்ல. மக்கள் இதனை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்", என்று சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
அதேபோல், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த இந்திய அரசு மிக துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, அண்ணா பல்கலைக்கழகத்தின், காலநிலை மாற்றத்திற்கான மையத்தின் இயக்குநர் பழனிவேல் தெரிவிக்கிறார்.
பழனிவேல், அண்ணா பல்கலைக்கழகம்
இதுகுறித்து அவர் நம்மிடம் பேசுகையில், "கடந்த ஆண்டுகளின் தரவுகளை எடுத்துப் பார்த்தால், வெள்ளம் போன்ற அதீத காலநிலை நிகழ்வுகள் 5-10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். சமீபத்தில் அப்படியில்லை. வறட்சி இன்னும் மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக நிகழும் வெள்ளம், வறட்சி உள்ளிட்டவை காலநிலை மாற்றத்திற்கான அறிகுறிகள். உலக வெப்பநிலை உயர்வால் தான் இவை ஏற்படுகின்றன. கடலோரப் பகுதிகளில் புயல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
காலநிலை மாற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாநிலங்களில் அதற்கான செயல்திட்டங்களை வரும் அக்டோபரில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான பணிகள் மாநில அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
காலநிலை மாற்றத்தால் தண்ணீர் தான் முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும். அதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வேளாண்மை, உற்பத்தி, உயிர் வாழ்தல் இவை கேள்விக்குள்ளாகும். சென்னைக்கு 'ஜீரோ டே' எட்டிப் பார்த்துள்ளது. இதிலிருந்து காக்க நாம் தகவமைப்புடன் இருக்க வேண்டும். சிறு, குறு நிறூவனங்கள் பாதிப்படையும்.
தமிழகத்தில் குறைந்தபட்ச, அதிகபட்ச, சராசரி வெப்பநிலை 2-4 டிகிரி வரை உயரும் என எங்களின் ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு மழைப்பொழிவு 5% குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. பசுமை இல்ல வாய்க்களின் வெளியீட்டை குறைக்கும் வரை இவையெல்லாம் தொடர்ந்து நடக்கும்.
புதுப்பிக்கத்தக்க வளங்களை நோக்கி இந்தியா மெல்ல மெல்ல நகர்கிறது. விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னும் வேகமாக இருக்க வேண்டும். லண்டனில், காலநிலை நெருக்கடி என்றே கொள்கை அளவில் கொண்டு வந்துவிட்டனர். மட்டுப்படுத்துதல், தகவமைத்துக்கொள்ளுதலுக்கன நடவடிக்கைகள் குறைந்த அளவில் மெதுவாகத்தான் இந்தியாவில் உள்ளன. மக்களும் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்", என்று பழனிவேல் தெரிவித்தார்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago