புலிகள் அதிகரிப்பது மகிழ்ச்சியான செய்தியா?

By நந்தினி வெள்ளைச்சாமி

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இரட்டிப்பாகியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. இச்செய்தியை ஜூலை 29-ம் தேதி, சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக அதிகரித்துள்ளது. புலிகளை அதிகமாகக் கொண்டுள்ள 20 மாநிலங்களில், 3,81,400 கி.மீ. பரப்பளவிலான காடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பிலான எண்ணிக்கை இது. புலிகள் அதிகரித்துள்ளது, இயற்கை காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். புலிகள் எண்ணிக்கையை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை இந்தியா 4 ஆண்டுகளுக்குள் சாத்தியப்படுத்திவிட்டதாக மோடி பெருமையுடன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி ட்வீட்

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை முழு மனதுடன் கொண்டாட முடியவில்லை. ஏனெனில், இந்தியாவில் புலிகளுக்கு உள்ள அச்சுறுத்தல், வாழ்விட பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏராளம். அவற்றை சரிசெய்தால்தான், புலிகள் அதிகரித்திருப்பது நல்ல செய்தி.

இந்தியாவில் புலிகளுக்கு என்ன குறை?

புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை மட்டும் சாதனையாக நினைத்துக் கடந்து விட முடியுமா? புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, அவை வாழும் காடுகளின் பரப்பளவு அப்படியேதான் இருக்கின்றன. மேலும், புலிகள் காப்பகங்கள் தவிர்த்து, காப்பகங்களைச் சுற்றி வாழும் புலிகளும், அருகாமைக் காடுகளில் வாழும் புலிகளும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. அப்புலிகளின் நிலைமையையும் கவனிக்க வேண்டும்.  

"புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன, ஆனால் அதன் வாழ்விடம் அதே அளவில் தான் உள்ளன. ஏனென்றால் புதிய வாழ்விடம் உருவாவதில்லை", என்கிறார், சூழலியல் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன்.

அரசு மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்கள், சுரங்கப் பணிகள் ஆகியவையும் புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடம் சுருங்கிப் போவதற்கான காரணங்களாக உள்ளன.

"சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் உள்ளிட்ட திட்டங்களை காடுகளுக்குள் செயல்படுத்தும்போது, வனவிலங்குகளின் வாழ்விடங்கள் அழிகின்றன. தேவையான அளவுக்கு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகள் அழிந்துவிட்டன. இனி எஞ்சியிருப்பதையாவது விட்டு வைக்க வேண்டும்" என்கிறார், காட்டுயிர் ஆர்வலர் 'ஓசை' காளிதாசன்.

வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-ன்படி, காடுகள் இத்தகைய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், அதற்கு முறையான ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், கடந்த ஜூலை 27-ம் தேதி, 19,400 கோடி ரூபாய் மதிப்பிலான, நிலுவையில் உள்ள 13 ரயில்வே திட்டங்களுக்கு, வன அனுமதி கோருவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம். இந்த திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் , கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள தேசியப் பூங்கா, புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இதற்கு ஆர்டிஐ கேள்வி மூலம் பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்த நிலங்கள் வனப்பாதுகாப்பு சட்டம் வருவதற்கு முன்பிருந்தே ரயில்வே துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், அதனால் அச்சட்டம் இத்திட்டங்களுக்குப் பொருந்தாது எனவும் பதிலளித்தார். 

மேலும், இந்தியாவின் எகோ சென்சிட்டிவ் ஜோன் (Eco sensitive zone) மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் 519 திட்டங்களுக்கு, ஜூன் 2014 முதல் மே 2018 வரை  தேசிய வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்தது. இது முந்தைய காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்த திட்டங்களை விட இரட்டிப்பானது ஆகும்.  2009-2013 காலகட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தில், 260 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜூன் 2014 முதல் மே 2018 வரை, ஆண்டுக்கு 1.1%க்கும் குறைவான திட்டங்களுக்கே அனுமதி நிராகரிக்கப்பட்டது. 2009-2013 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுக்கு 11.9% திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது .

வளர்ச்சித் திட்டங்களுக்கு அடுத்தபடியாக, புலிகள் காப்பகங்கள் தவிர்த்து மற்ற காடுகளில் வாழும் புலிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதையும் அரசு கவனிக்க வேண்டும் என்கிறார் 'ஓசை' காளிதாசன். 

'ஓசை' காளிதாசன்

"கடந்த நூற்றாண்டில் இந்தியா முழுக்க 40,000 புலிகள் இருக்கலாம் என்ற மதிப்பீடு இருக்கின்றது. ஆனால், 1970-களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 1000-க்கும் கீழே அதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அப்போதுதான் 1973-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புலிகள் திட்டத்தை அறிவித்தார். அப்போது புலிகள் பாதுகாப்பு என்பது, அந்தந்த காப்பகங்களில் முதன்மைப்படுத்தப்பட்டது. புலிகள் காப்பகங்களுக்கு மட்டுமே அரசு அதிகமான நிதியை அளிக்கிறது. பக்கத்தில் உள்ள காடுகளில் வாழும் புலிகளின் பாதுகாப்புக்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை" என்கிறார் 'ஓசை' காளிதாசன்.

இந்திய வன உயிர் நிறுவனம், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, 35%-40% வரையிலான புலிகள் காப்பகங்களுக்கு வெளியே வாழ்வதாக தெரிவித்துள்ளது. மேலும், அதன் நிலைமை மோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் மனித காட்டுயிர் எதிர்கொள்ளல் அதிகமாவதாகவும் தெரிவித்துள்ளது. 

அடுத்தபடியாக, தங்கள் வாழ்விடங்களுக்கு வரும் புலிகளை மக்கள் அடித்துக்கொல்வதும், அதன் உயிருக்கு ஆபத்தான முறையில் வனத்துறையினர் பிடிப்பதும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.

ஜூலை 27 அன்று கர்நாடகாவிலும், ஜூலை 24 அன்று உத்தரப் பிரதேசத்திலும் தலா ஒரு புலி, மக்களால் அடித்துக் கொல்லப்பட்டது. கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்கொல்லிப் புலி என அறிவிக்கப்பட்ட ஆவ்னி, வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. அப்புலி ஆட்கொல்லி என முறையாக கண்டறியப்பட்டதா, அதனை சுடுவதற்கான வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டதா என்பதில் இன்றளவும் கேள்விகளும் சந்தேகங்களும் உள்ளன.

சுட்டுக் கொல்லப்பட்ட ஆவ்னி புலி

எல்லா புலிகளும் ஆட்கொல்லிப் புலிகள் இல்லை எனவும், அரிதாக ஒருசில புலிகளே ஆட்கொல்லிகளாக மாறுவதாகவும் தெரிவிக்கிறார், 'ஓசை' காளிதாசன்.

"ஒரு புலியின் இரைப்பட்டியலில் மனிதர்கள் இல்லை. இரைக்கான மோதல், மற்ற புலிகளுடன் எல்லை மோதல் இவற்றால் ஒரு புலி காயமடைந்தால் அப்புலியின் வேட்டைத்திறன் குறைந்துவிடும். அப்போது, நடமாட்டமில்லாமல் தன் இருப்பிடத்திற்கு அருகிலிருப்பதையே உண்ண ஆரம்பித்துவிடும். சில சமயங்களில் உட்கார்ந்த, குனிந்த நிலையில் மனிதர்கள் இருக்கும்போது, தன் இரைவிலங்கு என புலி அடித்திருக்கும். ஒருமுறை அதற்குப் பழகிவிட்டால் மனிதர்களை எளிதில் வேட்டையாடலாம் என உணர்ந்துவிடும். அத்தகைய புலிகள் ஆட்கொல்லிப் புலிகளாகின்றன. 

புலிகள் இரைக்காக மக்களின் கால்நடைகளை அழிக்கும்போது, அவர்கள் கோபமுறுகின்றனர். கால்நடைகள் அவர்களின் வாழ்வாதாரம். ஒரு புலி எந்த இரையை அடித்தாலும், ஒரு வாரம் அதனை வைத்திருந்து உண்ணும். அடித்து விடப்பட்ட மிச்சத்தில் குருணை மருந்து உள்ளிட்ட விஷத்தைத் தடவிவிடுவர். இதுவும் புலிகளுக்கு பெரிய சவால். கால்நடைகள் தாக்கப்படும்போது பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான இழப்பீட்டை அரசு விரைந்து வழங்க வேண்டும். பல இடங்களில் தமிழக அரசு அதனைச் செய்கிறது.

இரை விலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டால், புலிகளால் வாழ முடியாது. கால்நடைகளை தன் இரையாக்கிவிடும். கால்நடைகளைத் தேடி வரும்போது மனிதர்களைத் தாக்கும் அபாயமும் உண்டு. அதனால், இரை விலங்குகள் வேட்டையாடப்படுவதையும் தடுக்க வேண்டும். 

எல்லா புலிகளும் ஆட்கொல்லிகளாக மாறாது. சில புலிகள் அரிதாக அவ்வாறு மாறும். புலி உள்ளிட்ட காட்டுயிர்கள் மீது மனிதர்களுக்கு வெறுப்புணர்வு வந்துவிட்டால் காட்டுயிர்களையும், காட்டையும் காப்பாற்ற முடியாது. அதனால், அத்தகைய புலிகளை முறையாக மயக்க ஊசி செலுத்தி, கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும். இவை எளிமையானவை அல்ல. அதனால், அங்கு மனித பாதுகாப்புதான் முதன்மைப்படுத்தப்படுகிறது. 

தன் இரைக்குக் காட்டில் பற்றாக்குறை வரும்போதுதான், அவை மக்களின் வாழ்விடத்திற்கு வருகின்றன" என்கிறார் 'ஓசை' காளிதாசன்.

புலிகள் பாதுகாப்பில் இன்னொரு மிகப்பெரிய அச்சுறுத்தல் வேட்டை. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின் படி, 2012-2018 வரையிலான காலக்கட்டத்தில், 657 புலிகள் இறந்துள்ளன. அதில், 313 புலிகள் இயற்கை காரணங்களாலும், 138 புலிகள் வேட்டையாடப்பட்டதாலும் இறந்துள்ளன என தெரிவிக்கிறது.
அதில், 22 சதவீதத்துடன் மத்தியப் பிரதேசம் புலிகள் வேட்டையாடப்படுதலில் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் கர்நாடகாவும், மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது., 

"புலிகளைக் காப்பது என்பது வளமான காட்டின் குறியீடு. புலிகள் எண்ணிக்கை முன்பு குறைந்ததற்கு முக்கியக் காரணம் வேட்டை. புலிகள் வேட்டையில் உலகளாவிய சந்தை உள்ளது. சர்வதேச கள்ளச் சந்தையில் ராணுவத் தளவாடங்கள், போதைப் பொருட்களுக்கு அடுத்தபடியாக காட்டுயிர்கள்தான் இருக்கின்றன. புலிகள் பெரும்பாலும் சீனாவுக்குத்தான் கடத்தப்படுகின்றன. ஏனென்றால், தாங்கள் சாப்பிடும் எல்லா உணவுப்பொருட்களிலும் புலியின் பாகங்கள் இருக்க வேண்டும் என்ற மூடநம்பிக்கை அவர்களுக்குண்டு. நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் புலித்தோல் ஆடை அணிவதை கவுரவமாக பார்ப்பதால், அங்கும் கடத்தப்படுகின்றன. அதன் இன்னொரு வடிவமாக புலி நகங்கள், புலி பல் வைத்திருப்பது நம்பிக்கையாகவும் பகட்டாகவும் இந்தியாவில் பார்க்கப்படுகிறது. புலிகள் வேட்டையாடப்படுவது, கடத்தப்படுவது பெரிய வலைப்பின்னல். அதன் கடைநிலையில் தான் இந்தியாவின் சில பழங்குடிகள் இருக்கின்றனர். அவர்கள் இந்த வணிகத்தில் பயன்படுத்தப்படுகின்றனர். 

வேட்டைத்தடுப்புக்கு சாதாரண களப்பணியாளர்கள் தான் உள்ளனர். அவர்களுக்குப் பெரிய வசதிகள் இல்லை. எனினும், அவர்களின் பணியால் தான் இப்போதைக்கு புலிகள் வேட்டைத் தடுப்பிலிருந்து தப்பித்துக்கொள்கின்றன. 

மற்ற காட்டுயிர்கள் போலல்லாமல், புலி வேட்டை எந்த சுவடும் இன்றி அரங்கேறும். எதுவும் மிஞ்சாது.  வனத்துறை, காவல்துறை, சுங்கவரித்துறை, கலால் துறை என எல்லோருமே வேட்டை தடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் மக்களின் நம்பிக்கையை இவர்கள் பெற்றால்தான் சந்தேகத்திற்கிடமாக ஏதாவது நடந்தால் அவர்கள் சொல்வார்கள்", என்கிறார் 'ஓசை' காளிதாஸ்.

அடுத்ததாக, மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை நெருக்கடி. அது, புலிகளுக்கும் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது.

தியோடர் பாஸ்கரன்

“சுந்தரவனக்காடுகள் தண்ணீரால் மூழ்கினால், புலிகளின் வாழ்விடம் குறையும்" என எச்சரிக்கிறார் எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன். Total Environment என்ற ஆராய்ச்சி இதழ் ஆய்வறிக்கை, காலநிலை நெருக்கடி, கடல் மட்ட உயர்வு ஆகியவற்றால் சுந்தரவனக் காடுகளில் உள்ள புலிகள் மறைந்துவிடும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறது.

மேலும், "கணக்கில்லாத சுற்றுலா. இதனால், புலி மனிதர்களின் அருகாமைக்குப் பழகிவிடுகிறது. சுற்றுலாவைக் கட்டுப்படுத்த வேண்டும்" எனக் கோருகிறார் தியோடர் பாஸ்கரன். 

"தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஆயிரக்கான ஏக்கரில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அதன் ஒத்தி (Lease) முடியப்போகிறது. அதன்பிறகு அதனை மீண்டும் தேயிலை தோட்டங்களாக விடக்கூடாது. அதனை காடாக உருவாக்க வேண்டும். 10-20 ஆண்டுகளில் அவை காடாக உருவாகும். 

மேலும், வனத்துறையும் பழங்குடிகளும் இணைந்து செயல்பட்டால் தான் புலிகள் உள்ளிட்ட காட்டுயிர்களைப் பாதுகாக்க முடியும். 

பழங்குடிகள் காட்டில் இருந்த வரைக்கும் விலங்குகளுக்கு ஆபத்தே இல்லை. புலிகளைச் சுடுபவன் பழங்குடி அல்ல. உணவுக்காக மட்டும் அவர்கள் வேட்டையாடுவதில் ஆபத்து இல்லை. வெளியிலிருந்து வருபவர்கள் வேட்டையாடுவதுதான் ஆபத்து. காட்டைக் குறித்த அவர்களின் அறிவு மிக முக்கியமானது. அந்தமானில் இனப்பெருக்கக் காலத்தில் பன்றியை வேட்டையாட மாட்டார்கள். அவர்களுக்கு எது பெண் பன்றி, எது சினையாக இருக்கின்றது என்பது கூட தெரியும். இயற்கைக்கு இயைந்துதான் அவர்கள் காட்டுக்குள் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கை முறையை அழிப்பது பிற்போக்குத்தனமானது. தமிழக அரசு பழங்குடிகளை வேட்டைத் தடுப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துகின்றது. இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்" என்கிறார் தியோடர் பாஸ்கரன்.

புலிகளுக்கான வாழ்விடத்தை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல், வேட்டைத் தடுப்பு, புலிகளின் இரைகள் வேட்டையாடப்படுவதை தடுத்தல், பழங்குடிகளின் அறிவைப் பயன்படுத்துதல் இவற்றால் மட்டுமே புலிகளின் பாதுகாப்பு சாத்தியம். இவை சாத்தியமாகும்போதுதான், புலிகளின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்வதை நினைத்து நாம் முழு மனதுடன் மகிழ்ச்சி கொள்ள முடியும்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்