ஹெல்மெட்டில் வாரம் ஒரு வாசகம்: மதுரை இளைஞர் நூதன முறையில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம்

By பாரதி ஆனந்த்

சமூக பிரச்சினைகளை எடுத்துக்கூறி ஹெல்மெட்டில் வாரம் ஒரு வாசகம் எழுதி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார் இளைஞர் ஒருவர்.

மதுரையைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் ஆதீஸ்வரன். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்த இளைஞரான ஆதீஸ்வரன் இயக்குநராக வேண்டும் என்ற கணவுப் பாதையில் உழைப்பை செலுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரது நூதன பிரச்சாரம் குறித்து அவரிடமே பேசினோம். தி இந்து தமிழ் திசை இணையதளத்துக்கு மிகுந்த ஆர்வத்துடன் அவர் தனது முன்னெடுப்புகள் குறித்து விளக்கினார்.

நீங்கள் படித்தது வேறு உங்கள் கனவு வேறு.. எப்படி சினிமாத்துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

சிறு வயதிலிருந்தே சினிமா பார்த்து பார்த்து பலரைப் போல எனக்கு சினிமா கனவு இருந்தது. ஆனால், அதற்காக நான் பெரிதாக மெனக்கிடவில்லை. நீளமான கூந்தல் வளர்த்திருந்ததால் என்னை குறும்படங்களில் நடிக்க கூப்பிட்டனர். நடிக்க ஆரம்பித்தபோது எனக்குள் இருந்து இயக்குநரை அறிந்து கொண்டேன். அதன் பின்னர் குறும்படங்களை இயக்கத் தொடங்கினேன். சினிமா ஆர்வம் இருந்தது வாய்ப்பு தேடிவந்தது அதை பற்றிக் கொண்டு பயணிக்கிறேன். நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவேன்.

வெற்றிக்கு வாழ்த்துகள். சினிமா ஆசையுடன் இதென்ன ஹெல்மெட் விழிப்புணர்வு?

ஒரு படைப்பாளி சமூக ஆர்வலராகவும் இருக்க வேண்டும். சமூகத்தை நேசிப்பவன், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவனால் சிறந்த படைப்புகளைத் தர முடியும். எனக்கும் சமூக அக்கறை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். சினிமாவில் சாதிக்கும் வரை அதற்காக காத்திருக்க முடியாது அல்லவா அதனால்தான் இப்போதைக்கு என்னால் முடிந்த அளவில் , வழியில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறேன்.

உங்கள் பிரச்சாரத்துக்கான கரு என்ன? அதை எப்படி தேர்வு செய்கிறீகள்?

நான் எப்போதுமே ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்குவதில்லை. என் ஹெல்மெட்டில் ஒவ்வோர் வாரமும் புதுப்புது விழிப்புணர்வு வாசகங்களை எழுதுவேன். ஒருவாரம் ஹெல்மெட் அணிவது பற்றி, மறு வாரம் மரம் வளர்த்தல் பற்றி, மற்றுமொரு வாரம் சாதி ஒழிப்பு பற்றி என சமூக அக்கறை சார்ந்த வாசகங்களை எழுதுவேன். சில நேரங்களில் சிக்னல்களில் சமூக விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு நிற்பேன். சிக்னலுக்காக காத்திருக்கும் அந்த அரை நிமிடத்தில் எனது பிரச்சாரம் 5,6 பேரையாவது சென்றடையாதா என்ற எண்ணமே காரணம்.

நீங்களே சொல்கிறீர்கள் அரை நிமிடம்தான் என்று.. அதில் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என நினைக்கிறீர்கள்?

எல்லா மனிதருக்குள்ளேயுமே மாற்றத்துக்கான விருப்பம் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர்களின் விருப்பமும் என விழிப்புணர்வு பிரச்சாரம் ஒரே புள்ளியில் சந்தித்தால் அன்றைய தினம் அவர் மாற்றத்துக்கான வித்தாவார் அல்லவா? அந்த ஒரு சிறு நொடிப் பொழுது என்று வேண்டுமானாலும் அமையலாம் இல்லை அமைந்திருக்கலாம். அப்படிப்பட்ட சிறு சிறு மாற்றங்கள் போதும் எனக்கு.

உங்கள் சேவையை பொதுமக்கள் எப்படி அங்கீகரிக்கிறார்கள்?

எல்லோருமே வாய்விட்டு விமர்சனங்களைச் சொல்வதில்லை. சிலர் பார்த்து புன்னகைப்பார்கள். சிலர் பார்த்து கடந்து செல்வார்கள். ஒருமுறை ஒரு முதியவர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கிவந்து கைகுலுக்கிச் சென்றார். அதுபோன்ற அங்கீகாரங்கள் இன்னும் இன்னும் இதுபோன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற தூண்டுதலைத் தருகிறது.

எதிர்காலத்தில் உங்கள் சினிமாவிலும் சமூக விழிப்புணர்வு இருக்குமா?

நிச்சயமாக இருக்கும். இப்போதுகூட ஒரு முயற்சியில் இருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு ஒரு கவர் ஆல்பம் செய்கிறேன். மூளைவளர்ச்சி குன்றியவர்களை வைத்து அந்த ஆல்பத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல் எனது சினிமாக்களிலும் நிச்சயமாக சமூக விழிப்புணர்வு இருக்கும். எனது முதல் படத்துக்கான ஸ்க்ரிப்ட் கூட அப்படித்தான் எழுதியிருக்கிறேன். என் கதை குறித்து பரியேறும் பெருமாள் இயக்குநர் மாரி செல்வராஜிடம் கூறியிருக்கிறேன். அவரும் பாராட்டினார். விரைவில் என் கனவு நிறைவேறும்.

வீட்டில், நட்பு வட்டாரத்தில் உங்கள் நூதன பிரச்சாரத்துக்கு ஆதரவு எப்படி?

எந்த சமூக ஆர்வலரை குடும்பம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. என்னையும் வீட்டில் விமர்சிக்கத்தான் செய்கின்றனர். ஆனால், என் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். நண்பர்கள் என்னை எப்போதும்போல் ஊக்குவிக்கின்ற்னர். சிலர் எனக்கும் எனது ஹெல்மெட்டில் ஏதாவது விழிப்புணர்வு வாசகம் எழுதிக்கொடு எனக் கேட்டு எழுதி வாங்கிச் சென்றிருக்கின்றனர். நான் அடிப்படையில் ஒரு ஓவியர் என்பதால், அவர்களின் கோரிக்கைக்கு இணங்க படத்துடன் பிரச்சார வாசகத்தை எழுதித் தருவேன். இதற்காக நான் அக்ரிலிக் பெயின்ட் தான் பயன்படுத்துகிறேன். ஒரு வாரம் கழித்து அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு வேறு வாசகத்தை எழுதுவேன்.

உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

என்னைப் போன்ற சினிமா கனவு கொண்ட இளைஞர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், காதலும், சண்டையும், மசாலாவும் போதும் சமூக மாற்றத்துக்கான படங்களை அதிகளவில் கொடுக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அந்தப் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டுமென்பதே எனது கோரிக்கை.

இவ்வாறு ஆதீஸ்வரன் இளைஞருக்கே உரிய மிடுக்குடன் பேசி முடித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE