கு
டியின் பிடியிலிருந்து மீண்ட 15 பேர், தங்களைப் போல் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மெனக்கெடுகிறார்கள். குடிநோயாளிகளைத் தேடிப்போய் பார்த்து, குடியால் தாங்கள் பாதிக்கப்பட்ட விதத்தை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, நல்வழிப்படுத்த முயற்சிக் கிறார்கள். அதுமட்டுமல்ல.. குடிநோயாளிகளுக்காகவே ஆண்டுதோறும் விழாவும் எடுக்கிறார்கள் இவர்கள்!
15 பேர் குழு
மது குடிப்பவர்களை ஒரு நோயாளியாகக் கருதி, அவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்ளக்கூட தயாரில்லாமல்தான் நம்மில் பலர் இருக்கிறோம். அதனால், குடிநோயாளிகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறோம். ஆனால், இந்த மனப்போக்கு முற்றிலும் தவறானது என்கிறார்கள் மதுரை அருகே மேலூரில் குடிநோயிலிருந்து மீண்ட 15 பேர். தற்போது ஒரு குழுவாகச் செயல்படும் இவர்கள் அனைவருமே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மொடாக் குடிகாரர்கள் தான். மதுவே கதி எனக் மயங்கிக்கிடந்த இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். ஆனால் இப்போது, குடிநோயிலிருந்து முழுமையாக மீண்டதுடன் தங்களைப் போல மற்ற குடிநோயாளி களையும் குடியின் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
வாரத்தில் நான்கு நாள்கள்
இந்த நல்ல காரியத்துக்காகவே மேலூரில் ஒரு பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இவர்கள் ஒன்று கூடுகிறார்கள். அங்கே, குடிநோயாளிகளோடு வட்டமாக அமர்ந்து பேசுகிறார்கள். அன்றைய நாள் எப்படிப் போனது என்பதில் தொடங்கி, குடும்பத்துப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் அவர்களிடம் பேசுகிறார்கள். அப்படியே, தங்களது எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாக குடிநோயாளிகளுக்குள் பதிக்கிறார்கள். அங்கு வரும் ஒவ்வொருவரின் பிறந்த நாளையும் ‘கேக்’ வெட்டி கொண்டாடுகிறது இந்தக் குழு.
இந்தத் தொடர் சந்திப்புகளும் உரையாடல்களும் குடிநோயாளிகளை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க உதவுவதாக நம்புகிறது இந்தக் குழு. கண் தெரியாதவர்களும், வாய் பேசமுடியாதவர்களும் எப்படி தங்களுக்கான மொழியில் தகவல் பரிமாறிக் கொள்கிறார்களோ அதுபோல, இவர்களும் குடிநோயாளிகளின் போக்கிலேயே பேசி பிரச்சினைகளைத் தீர்க்கப் பார்க்கிறார்கள். அதற்கு பலனும் கிடைத்து வருகிறது.
ஆண்டுதோறும் விழா
குடிநோயாளிகள் தொடர்ந்து 90 நாள்கள் தங்களது வாராந்திர சந்திப்பு வளையத்துக்குள் வந்துவிட்டாலே அவர்களை குடியிடமிருந்து மீட்டுவிட முடியும் என்கிறார்கள் இவர்கள். எடுத்த எடுப்பிலேயே குடியை விடும்படி சொன்னால், அடுத்த சந்திப்புக்கே வரமாட்டார்கள் என்பதால் எடுத்ததும் இதைச் சொல்வ தில்லை இவர்கள். மெதுமெதுவாகப் பேசி, தங்களது சொல்லுக்கு குடிநோயாளிகள் காதுகொடுக்க ஆரம்பித்த பிறகு, ‘இன்று ஒரு நாள் மட்டும் குடிக்காமல் இருந்து பாருங்களேன்..’ என்று தொடங்குகிறது இவர்களது மீட்பு சிகிச்சை. இதையே தினமும் ஒவ்வொரு விதமாகச் சொல்லி, குடிகாரர்களை மெதுவாக நல்வழிப்படுத்துகிறார்கள்.
இவர்களின் இந்த எளிய அணுகுமுறையால் பலர், குடியை மறந்து நல்வழிக்குத் திரும்பியிருக்கிறார்கள். வெறும் சந்திப்புப் பேச்சுக்களோடு நின்றுவிடாமல். குடிநோயாளிகளையும் குடியிலிருந்து மீண்டவர்களையும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து, ஆண்டுதோறும் எளிய விழாவையும் நடத்துகிறது இந்தக் குழு.
இந்த விழாவில் உளவியல் ஆலோசகர்களையும், மனநல மருத்துவர்களையும் அழைத்து வந்து பேசவைக்கின்றனர். அதேபோல், குடிநோயிலிருந்து மீண்டவர்களின் மனைவிமார்களையும் இந்த விழாவுக்கு அழைத்து, தங்களது கணவன்மார்கள் குடிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது குடும்பம் எப்படியிருந்தது, இப்போது எப்படி இருக்கிறது? என்பதை மனம் திறந்து பேசவைக்கிறார்கள். இதன்மூலம் குடிநோயாளிகளின் மனதில் நம்பிக்கை விதையை விதைக்க முயற்சிக்கிறார்கள்.
ரெண்டு.. அஞ்சாச்சு, அஞ்சு.. பத்தாச்சு
தங்களின் முயற்சி குறித்து நம்மிடம் பேசினார் இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வி.செல்வராஜ். ”மருந்து மாத்திரைகள், மறுவாழ்வு மையங்கள் எல்லாம் உடலை மட்டும்தான் சரிப்படுத்தும். ஆனால், மனதுக்கு மருந்திட்டால் தான் குடிநோயாளிகளை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியும். அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். தொடக்கத்தில் ரெண்டு பேர்தான் என்னைப் பார்க்க வந்தார்கள். ரெண்டு.. அஞ்சாச்சு, அஞ்சு.. பத்தாச்சு. இப்படித்தான் எங்களைச் சந்திக்க வந்த குடிநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தெளிவான, சந்தோசமான வாழ்க்கைக்கு 12 வழிமுறைகளையும் 12 கோட்பாடுகளையும் இப்போது நாங்கள் பின்பற்றுகிறோம்.
கண்டபடி குடிச்சுட்டு வீட்டை அடிச்சி நொறுக்கின இவனா குடிக்காம இருக்கான்? என எங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, மற்ற குடிநோயாளிகள் எங்களுடன் மனம்விட்டு பேச வருகிறார்கள்; எங்களைப் போல மாற முயற்சிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நானெல்லாம் முழுநேரக் குடிகாரனாக இருந்தபோது கையெழுத்துக்கூட போடமுடியாது; கை நடுங்கும். மதுரையில் நடக்கும் ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ கூட்டத்துக்கு என் மனைவி என்னை கைதாங்கலாகத்தான் அழைத்துச் செல்வார். என்னை அந்த அறைக்குள் அனுப்பிவிட்டு ஒன்றரை மணிநேரம் வெளியே காத்திருப்பார். அங்குதான் எனக்கு ஒரு நம்பிக்கை கிடைத்தது. அந்த நம்பிக்கையைத்தான் இப்போது நானும், என் நண்பர்களும் மற்றவர்களுக்குக் கொடுக்கிறோம். குடியைத் தொலைத்ததால் என் மனைவி, குழந்தைகள் ஆசைப்பட்ட வாழ்க்கையை என்னால் மீட்டுக்கொடுக்க முடிந்திருக்கிறது” என்று தலையை நிமிர்த்திச் சொன்னார் செல்வராஜ்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago