1990களில்தான் கோவை மாவட்ட காடுகளின் எல்லைகளில் பிரம்மாண்டமான கட்டிடங்கள், அதற்கான பல்வேறு கட்டுமானப்பணிகள் தொடங்க ஆரம்பித்தன. தவிர அதற்கு முந்தைய சிறு, சிறு கட்டமைப்புகள் கூட தம்மை பிம்ம ராட்சஷனாக வடிவமைக்கத் தொடங்கின. அதில் மிகவும் தொந்தரவுக்கு உள்ளாகின கானுயிர்கள். அதில் காட்டின் மிகப் பெரிய விலங்கினமான யானைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. அதை ஒவ்வொன்றாக பார்க்கும்போது அதிர்ச்சியே மேலிடுகிறது.
கோவை மதுக்கரையில் உள்ள சிமெண்ட் ஃபாக்டரியை எடுத்துக் கொள்வோம். இந்த சிமெண்ட் ஃபாக்டரிக்கான சுண்ணாம்புக்கல் சுரங்கம் மதுக்கரை, சின்னாம்பதி, புதுப்பதி ஊர்களுக்கு இடைப்பட்ட காடுகளில் அமைந்துள்ளது. இது பிரிட்டீஷார் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் இதன் குவாரிகளில் காலங்காலமாக சின்ன, சின்ன வெடிகளே வைத்து பாறைகள் உடைக்கப்பட்டு வந்தன.
அதுவே 1990களில் தொடங்கி காலையும் மாலையும் மட்டும் பல மடங்கு அதிர்வுள்ள வெடிகள் வெடிக்கப்பட்டன. அதன் மூலம் ஒரே வெடியில் முந்தைய வெடிகளுக்கு 50 மடங்கு, 100 மடங்கு பாறைகள் உடைக்கப்பட்டன. குறிப்பாக இந்த அதிர்வேட்டால் 5 மைல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் அனைத்து வீடுகளும் நடு, நடுங்குவது வாடிக்கையாகவே உள்ளது என்பதை முன்னரே கண்டோம்.
இதில் கூடுதலான விஷயம். இந்த சிமெண்ட் ஃபாக்டரிக்கான பாறைகள் தோண்டப்படும் குவாரிகளுக்கு இடையே ரயில்வே தண்டவாளங்கள் குறுக்கிடுவதால் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலை தொடங்கி அய்யாசாமி மலை, சின்னாம்பதி புதுப்பதி காடுகள் வரை (கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவு, 4 கிலோமீட்டர் அகலம்) வெடி வைத்து எடுக்கப்படுவதால் இங்கு காலங்காலமாக வசித்து வந்த யானைகள் யாவும் சுமார் 40 சதுர கிலோமீட்டர் ஏரியாவை சுற்றியே வர வேண்டியுள்ளது. அதை மீறி யானைகள் இடறி படுபாதாளமாக இருக்கும் கல்குவாரிகளுக்குள் விழுந்தால் வனத்துறையினருக்கு கூட இங்கு பணிபுரிபவர்கள் சொன்னால்தான் தெரியும்.
இந்த சூழ்நிலையில் கேரளா வாளையாறு எல்லையில் 1980 காலகட்டத்தில் ஒரு சிமெண்ட் ஃபாக்டரி உருவாகி அதுவும் புகை கக்கியபடி அந்த ஏரியாவின் சூழலை கெடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஃபாக்டரிக்கு அங்கிருந்து காடுகளுக்குள் சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் குவாரிகள் உள்ளன. அதன் சுற்று வட்டாரமும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வாசம் செய்யும் அடர் வனப்பகுதிதான். அங்கேயும் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் வாளையாறு காடுகளின் வலசைகளும் பாதிக்கப்பட்டு அங்கேயும் யானைகள் ஊருக்குள் புகுவது, மனிதர்களை அடித்துக் கொல்வது வாடிக்கையாகிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு சிமெண்ட் ஃபாக்டரிகளுக்கு இடைப்பட்ட பகுதியில்தான் வாளையாறு(கேரளா), மதுக்கரை (தமிழ்நாடு) காடுகள் அமைந்துள்ளன. இதன் நடுவேதான் மீட்டர் கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதைகள் போடப்பட்டுள்ளன. அதில் வரும் ரயில்களில்தான் யானைகள் அடிக்கடி அடிபட்டு மரணிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த வாளையாறு, மதுக்கரைக்கு இடையில் வருகிறது எட்டிமடை, மாவூத்தம்பதி ஆகிய பஞ்சாயத்துகளுக்குட்பட்ட கிராமங்கள். இந்த கிராமத்தை ஒட்டியுள்ள பெரிய பரப்பளவை (ஆயிரக்கணக்கான ஏக்கர்) பெரிய கல்வி நிறுவனம் வியாபித்துள்ளது. 1990களில் சிறிய அளவில் இருந்த இதன் கட்டுமானப் பணிகள், தற்போது அடிமுடி தெரியாத அளவு வளர்ந்து நிற்கிறது. கேரள மாநிலம் கொச்சினுக்கு சேர, சோழர் காலத்தில் பிரதான போக்குவரத்துப் பாதையாக திகழ்ந்த புரதான புகழ்மிக்க ராஜகேசரிப்பெருவழி மலைப்பாதை இந்த கல்வி நிறுவனத்தை ஒட்டியே அமைந்துள்ளது.
இந்த சாலை இப்போது காடடர்ந்து, வனவிலங்குகள் நடமாட்டத்துடன் பயன்படுத்தாமல் இருந்தாலும், இங்குள்ள பழங்கால கல்வெட்டுகள், சிதிலமடைந்து கிடக்கும் சத்திரங்கள், குதிரை லாயங்கள் போன்றவற்றின் எச்ச, மிச்சங்களை ஆராய்ந்தறியும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாதையை சீரமைத்து பாதுகாக்க வேண்டும். இதன் வரலாற்று பெருமைகளை உலகறிய செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் சுத்தமாக பொருட்படுத்துவதில்லை இங்குள்ள நில ஆக்கிரமிப்பாளர்களும், அதற்கு துணை நிற்கும் அரசியல்வாதிகளும். குறிப்பிட்ட ஆன்மீக கல்வி நிறுவனம் தன் எல்லைகளை சுற்றுச்சுவர் எழுப்பியும், யானைகள் உள்ளே நுழையா வண்ணம் பெரிய, பெரிய அகழிகளை வெட்டியும், மின்வேலிகள் அமைத்தும் பல மைல் தூரங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் யானைகளை காக்க ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளை நிறுவியுள்ளதாகவும் சொல்கிறது. ஒரு முறை அதைப் போய்ப் பார்க்கச் சென்றிருந்தபோது, அவர்கள் கட்டியிருந்த 10க்கும் மேற்பட்ட தொட்டிகளில் ஒன்று கூட உருப்படியாக இல்லை. எல்லாமே உடைந்து சிதிலமடைந்து வறண்டு கிடந்தது. 'இதுதான் இவர்கள் யானைகள் வழித்தடத்தை மறித்து கட்டிடங்கள் கட்டிவிட்டு வன உயிரினங்களை பாதுகாக்கிற லட்சணம்!' என நம்மை அழைத்துச் சென்ற இடதுசாரி இயக்கப் பிரதிநிதி உணர்ச்சி பொங்கி பேசினார்.
இதே கல்வி நிறுவனத்தின் மீது இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு ஒரு புகார் வந்திருக்கிறது. இக்கல்வி நிறுவனத்தினர் தன் பட்டா நில எல்லைகளை மீறி இவர்கள் ஓடைகளையும், குளம், குட்டைகளையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும், அதை சர்வே செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் இருந்த வருவாய்த்துறை அலுவலர் நேர்மை, கை சுத்தம் மிக்கவர் என பரவலாக பெயர் பெற்றவர்.
அவர் அந்த ஏரியாவை ஆய்வுக்குட்படுத்தி, சர்வேயரை வரச்சொல்லி உத்தரவும் போட்டு விட்டார். ஆக்கிரமிப்பு அகற்றம் என அறிவிக்கப்பட்டு புல்டோசர்கள் எல்லாம் வந்துவிட்டன. அந்த நேரத்தில் அந்தக் கல்வி நிறுவனத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஓடி வந்தார்கள்.
'ஐயா, நாங்க எங்க நிலத்தை தவிர எந்த இடத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. நீங்கள் அளந்தெடுக்கும்போது ஏதாவது அரசு நிலமாகவோ, வேறு நிலமாகவோ தெரிந்தால் உடனே எங்களிடம் சொல்லுங்கள். அதை நாங்களே அகற்றிக் கொடுத்து விடுகிறோம். அதை விட்டு நீங்கள் இதை ஆக்கிரமிப்பு அகற்றம் என நடவடிக்கை எடுத்து மீடியாக்களில் செய்தி வெளியாகி எங்கள் 'அம்மைக்கு' தெரிந்தால் நாங்கள் யாரும் இங்கே இருக்க முடியாது. கொஞ்சம் தயவு பண்ணுங்க!' என கெஞ்சிக் கேட்டனர். அதன் நிமித்தம் அடுத்தநாள் முதல் நிலத்தை அளப்பது என்று மட்டும் முடிவு செய்தார் அந்த அதிகாரி. அதற்காக அடுத்தநாள் அது சம்பந்தப்பட்ட நில அளவையாளர், கிராம அதிகாரி, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரை வரவும் சொல்லி விட்டார்.
ஆனால் அந்த நேர்மையான அதிகாரியால் வரமுடியவில்லை. காரணம். முன்தினம் இரவே அவருக்கு மேலிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுதல் உத்தரவு வந்துவிட்டது.
பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்ட நேர்மையான அதிகாரி தன் அனுபவத்தை இப்படி இப்போது பகிர்ந்து கொண்டார்: 'அவர்கள் சாதாரண செல்வாக்கு மிக்கவர்கள் அல்ல. பிரதம மந்திரி முதல் கேரளத்து முதல்மந்திரி வரை அவர்களிடம் சென்று ஆசிபெற்று வருபவர்கள். இவர்கள் வெறும் ஐம்பது அறுபது ஏக்கரில் ஆரம்பித்த இந்த கல்லூரியும், பள்ளியும் தற்போது கிட்டத்தட்ட ஆயிரம் ஏக்கர் அளவுக்கு விஸ்தீரனப்பட்டுக் கிடக்கிறது. அன்றைக்கு வந்த அந்த புகார் மீது அடுத்து வந்த அதிகாரி நடவடிக்கை எடுத்தாரோ இல்லையோ தெரியாது. ஆனால் அந்த கல்வி நிறுவனம் மட்டும் அருகு பால் வேரோடி, ஆல்போல் தழைத்து நிற்கிறது. சிமெண்ட் ஃபாக்டரிகளின் குவாரிகளுக்கு விடப்பட்ட குத்தகை பூமி பெரியதா? இவர்களின் கல்வி நிறுவனம் பெரியதா என்றே இப்போது சொல்லமுடியாத அளவுக்கு அது உள்ளது. இந்தப் பகுதி முழுக்கவுமே யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகள்தான். இவை இப்போது கான்கிரீட் கட்டிடங்களாக உருவெடுத்துவிட்டதால் யானைகள் எங்கேதான் போகும்? ஊருக்குள் வராமல் என்னதான் செய்யும்?' என்று கேட்டார்.
மீண்டும் பேசலாம்...
கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago