போ
லீஸ் என்றாலே பொல்லாத மனிதர்கள் என்றுதான் இந்த சமூகம் புரிந்து வைத்திருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல.. காவல் பணியிலும் கருணை உள்ளங்கள் ஏராளம் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற காவலர் ஜி.ஆர்.சீனுவாசன்.
அப்படி என்ன கருணையைக் காட்டிவிட்டார் இந்த சீனுவாசன் என்கிறீர்களா? கடந்த 25 ஆண்டுகளாக, ஆதரவற்ற நிலையில் இறந்து போகிறவர்களின் உடல்களை எடுத்து அவர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துவருகிறார் சீனுவாசன். அப்படி இதுவரை 684 ஆதரவற்றோருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வது மட்டுமல்ல.. அதைத் தொடர்ந்து நடைபெறும் நீத்தார் வழிபாடு (கரும கிரியை) உள்ளிட்ட சடங்குகளையும் செய்து வருகிறார்.
அம்மா இறந்தபோது..
காஞ்சிபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சீனுவாசன், 1975-ல் காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பணியில் சேர்வதற்கு முந்தைய காலத்தில் சீனுவாசன் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. அந்த சமயத்தில், தனது தாய் ஜெயம்மாள் இறந்துவிட, அவருக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமில்லாமல் தவித்தது சீனுவாசன் குடும்பம். பின்னர், நண்பர்கள் சிலரது உதவியால் மறுநாள் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தன்னை வெகுவாக பாதித்த இந்த நிகழ்வுதான் ஊருக்குள் ஆதரவற்றோர் யார் இறந்தாலும் அவர்களுக்கு மகனாக இருந்து செய்ய வேண்டிய கடைசிக் காரியங்களை செய்யத் தூண்டியது என்கிறார் சீனுவாசன். கடந்த 1992-லிருந்து இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள இவர், அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறமுள்ள இடுகாட்டில் ஒரே நேரத்தில் இரண்டு உடல்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்துகொண்டிருந்தார். சடங்குகளை முடிக்கும்வரை காத்திருந்து அவரிடம் பேசினோம்.
யாருக்கும் நேரமிருக்காது
“காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த பகுதி. இங்கு கோயில் வாசல்களிலும், வெளியிடங்களிலும் ஆதரவற்ற நிலையில் பலர் வசிக்கிறார்கள். என்னால் முடிந்தவரை அவர்களுக்கு நான் உணவு வாங்கிக் கொடுக்கிறேன். என்னைப்போல இன்னும் பலரும் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால், ஆதரவற்றவர்கள் இறந்தால் அவர்களின் உடலும் ஆதரவற்றதாகி விடுகிறது. அந்த உடலை பொறுப்புடன் எடுத்து அடக்கம் செய்ய யாருக்கும் நேரமிருக்காது. நான் அதுபோன்ற நேரங்களில், இறந்தவர்களுக்கு ஒரு மகன் இருந்து செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறேன்.
அவர்களை புதைப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டிய, பால் விடுதல், காரியம் செய்தல் போன்றவற்றையும் செய்து வருகிறேன். ஆதரவற்றோர் உடல்களை காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, யாரும் அந்த உடலுக்கு உரிமை கொண்டாட வரவில்லை என்றால் மட்டுமே அடக்கம் செய்கிறேன். என்றாலும், வேறு ஏதாவது சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக எந்த உடலையும் எரிப்பது கிடையாது. சில நாள்கள் கழித்து, இறந்தவரின் உறவினர்கள் யாராவது தேடி வந்தாலும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காட்டிவிடுவோம். அப்படியும் சிலசமயம் நடந்துள்ளது” என்றார் சீனுவாசன்.
விருதுகளை விட..
இந்த உயரிய சேவையைப் பாராட்டி அங்கீகரிக்கும் விதமாக காஞ்சிபுரம் சங்கர மடமும் காஞ்சியில் உள்ள இன்னும் பல அமைப்புகளும் சீனுவாசனுக்கு விருதுகளை அளித்து கவுரவித்துள்ளன. “இந்த விருதுகள் எல்லாமே ஒரு அடையாளம் தான். ஆனால், ஆதரவற்றோருக்கு இறுதிக் காரியங்கள் செய்வதையே அனைத்துக்கும் மேலானதாக நான் நினைக்கிறேன். காஞ்சிபுரம் பகுதியில் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் வீட்டில் யாராவது இறந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லை என்றால் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
எனது செலவில் அடக்கம் செய்ய உதவுவதுடன் அவர்களின் வாரிசுகளே நீத்தார் வழிபாடு உள்ளிட்ட சடங்குகளைச் செய்துமுடிப்பதற்கும் உதவத் தயாராய் இருக்கிறேன்” என்கிறார் சீனுவாசன்.
இப்போது சொல்லுங்கள்.. காவலர்களிலும் கருணை உள்ளங்கள் இருக்கிறார்கள் தானே!
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago