யானைகளின் வருகை 6: சிசுவுடன் நான்கு யானைகளை காவு கொடுத்த குரும்பபாளையம்

By கா.சு.வேலாயுதன்

 

குட்டி யானையும், அதை காப்பாற்றப் போன தாய் யானையும் ரயிலில் அடிபட்டு இறந்த சோக சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் ஆகிறது. அதன்பிறகு ஆறே மாதங்களில் இதே வாளையாறு கேரள பகுதி ரயில்பாதையில் அடிபட்டு மற்றொரு யானை இறந்தது. பிறகும் அது தொடர்கதையானது. அதில் சில சம்பவங்கள் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. அதில் ஒன்றுதான் இப்பகுதியில் ஒன்றான குரும்பபாளையத்தில் 8 வருடங்களுக்கு முன்பு நடந்த சோகம்.

வாளையாறு ரயில்பாதையையே பிடித்துக் கொண்டு கிழக்கு நோக்கி வந்தால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த குரும்பபாளையம். தமிழகப் பகுதியான இக்கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் பெரிய ஒரு பள்ளத்தாக்கில் சில கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. அதற்கு இருபுறமும் பல கிராமங்கள் உள்ளன.

அதில் வாழை, தென்னை, சோளம் மற்றும் காய்கறி விவசாயம் நடந்து வருகிறது. இந்த கிராமங்களுக்கு இடையேதான் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உருவாகியுள்ள பெரிய கல்வி நிறுவனம் உள்ளது. அதைத் தாண்டி 'நியூ கோயமுத்தூர்' என சொல்லப்படும் சர்வதேச தரத்திலான, கோல்ப் மைதானத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான நவீன குடியிருப்புகள் உருவாகியுள்ளன. இவை அத்தனையும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை ஒட்டியுள்ள மலை கிராமங்கள் ஆகும். இந்த நவீன குடியிருப்புகள் உருவானதன் பின்னணியில் பெரிய அரசியலும் இருக்கிறது.

100

2006-2007 ஆம் ஆண்டு வாக்கில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று கோவை மண்டலத்தில் ஒரு நவீன துணை நகரம் உருவாக்கும் திட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்களை அணுகியிருக்கிறது. அவர்கள் தங்களுக்கு சில ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானமும் அதில் அமைக்க வேண்டும்; அந்த இடம் ஸ்விட்சர்லாந்து தோற்றப் பொலிவுடன் பனிமூடிய பிரதேசமாக, மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டிய பிரதேசமாக இருக்க வேண்டும்; இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளூர் பிரமுகர்கள் கொண்ட அமைப்பை நிறுவிட வேண்டும்; அவர்கள் மூலமாகவே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றெல்லாம் சில அடிப்படை விஷயங்களை வெளியிட்டதாகவும் தெரிகிறது.

அதை லகுவாக பிடித்துக் கொண்டார் கொங்கு மண்டல ஆளுங்கட்சி பிரமுகர் . சம்பந்தப்பட்ட இடம் பார்க்க வந்த வெளிநாட்டு பிரமுகர்களை அப்படியே விமானதளத்திலேயே கொத்திக் கொண்டு நேரே இந்த வாளையாறு, மதுக்கரை காடுகள் உள்ள பகுதிக்கு அழைத்து வந்தார். அந்த இடங்களை பார்த்ததும் வந்தவர்களுக்கு பூரண திருப்தி. அங்குள்ள நிலங்கள் விலைக்கு வாங்கி தரவேண்டிய பொறுப்பையும் அந்த விஐபியிடமே ஒப்படைத்ததாக கேள்வி.

மக்கள் அஞ்சி நடுங்கினர்
  • முதன் முறையாக இப்படி நகரத்திற்குள் வரும் யானைகளை கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர்.

தொடர்ந்து இங்குள்ள நிலங்கள் புரோக்கர்கள் மூலம் விலை பேசப்பட்டன. முழுக்க யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதி. எந்த விவசாயமும் செய்ய முடியாமல் வந்த விலை கிடைத்தால் தேவலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலை. ஏக்கர் ஓரிரு லட்சங்கள் என்ற அளவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வாங்கப்பட்டன.

இதற்குள் இங்கே ஒரு நவீன நகரம் உருவாகப் போகிறது என்ற தகவல் கசிய, நிலத்தை கொடுக்க முன்வந்தவர்கள் சிலர் ஜகா வாங்கினர். சிலர் விலையே ஐந்து மடங்கு, பத்து மடங்கு என்று ஏற்றிவிட்டனர். மறுபடி பேரம் தொடர்ந்தது. நிலம் தரமுடியாது என்றவர்கள் அரசியல் ரீதியாக மிரட்டப்பட்டனர். அதில் பல நிலங்கள் நவீன நகரத்துக்கு வந்தன.

அரசியல் பின்புலம் உள்ளவர்கள் சிலர் மிரட்டலுக்கு பயப்படவில்லை. அவர்கள் விவசாய சங்கம், மீடியாக்கள் என்று செல்ல, அந்த நிலங்கள் விற்பனையாகாது துண்டுபட்டது. வாங்கப்பட்ட இடங்களில் இடையில் நீரோடைகள், வழித்தடங்கள், வண்டிப்பாதைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மறிக்கப்பட்டன. அரசு நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களே சுமார் 30 பேருக்கு மேல் இந்த திட்டத்திற்குள் பினாமியாக சேர்ந்ததால் வேலை சுலபமானது.

யானைகள், காட்டு மிருகங்கள் வராது இருக்க அகழிகள், மற்ற விவசாயிகள், பொதுமக்கள் நுழையாமல் இருக்க தனியார் சோதனைச் சாவடிகள், அத்துமீறுபவர்களை பிடித்து தண்டிப்பதற்கு பாதுகாவலர்கள் என இங்கே போடப்பட்டனர்.

இதில் விவசாயிகள் போராட்டங்களும் எழுந்தன. அதையும் அடக்க அதிகார துஷ்பிரயோகங்கள் பயன்பட்டன. இதில் இங்கே எஞ்சியிருந்த விவசாயிகள் துவண்டனரோ இல்லையோ காட்டு மிருகங்கள், குறிப்பாக காட்டு யானைகள் மிகவும் துவண்டன. தம் வழித்தடம் தெரியாமல் தவித்தன.

ஏற்கெனவே தெற்கில் பெரிய ஒரு கல்வி நிறுவனம், அவை போட்டிருக்கும் தடுப்புச் சுவர்கள், மின்வேலிகள். கிழக்கிலும், தென் மேற்கிலும் பிரம்மாண்ட சிமெண்ட் பாக்டரிகள், அவற்றுக்கான குவாரிகள், வேட்டு வெடிச் சப்தங்கள். வடகிழக்கில் இப்படியொரு புதிய நவீன நகரம். அதற்குள் நுழைய முடியாது தடுக்க ஆகப்பெரும் அகழிகள் கண்டு துவண்ட யானைகள் திக்குத் தெரியாமல் அல்லாடின.

அதில் ஏழு யானைகள் கொண்ட ஒரு யானைக் கூட்டம் இங்கே உள்ள எட்டிமடை, கோவைபுதூர், பச்சாபள்ளி, பரிபூர்ணா எஸ்டேட், எட்டிமடை, மதுக்கரை, மைல்கல் என நுழைய ஆரம்பித்தன. போகிற இடங்களில் எல்லாம் வாழை, சோளம், தென்னை என சகலத்தையும் கபளீகரம் செய்ய ஆரம்பித்தன.

அவற்றை அந்த கிராம மக்கள் வெடி வைத்து விரட்ட, அங்கும் இங்கும் அலைபாய்ந்து கிழக்கே என்.எச் 47 எனப்படும் கொச்சின்- பெங்களூர் சாலையையும் கடந்தது. கடந்ததோடு நில்லாது இங்கிருந்து குறிச்சி, வெள்ளலூர், போத்தனூர், இடையர்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி, சூலூர், கலங்கல், செட்டிபாளையம், சின்னக்குயிலி, பெரியகுயிலி, என சுமார் 40 கிலோமீட்டர் தூரம் நகர்ந்தது. இந்த ஊர்கள் எல்லாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை உள்ளடக்கியவை.

முதன் முறையாக இப்படி நகரத்திற்குள் வரும் யானைகளை கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர்.

வனத்துறையினர் இந்த யானைகளை மேற்கு நோக்கி விரட்டி வருவதும், அவை பகலில் அங்கங்கே பதுங்கி, இரவு நேரங்களில் திரும்ப ஊருக்குள் புகுவதும், அவற்றை பட்டாசு வெடித்து விரட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்கள் பலர் படுகாயமுற்ற சம்பவமும், யானை மிதித்து ஒருவர் இறந்த சம்பவமும் அப்போது நடந்தது. வேறு வழியில்லாது டாப் ஸ்லிப்பிலிருந்து கும்கி யானைகளும் கொண்டு வரப்பட்டன. கும்கியையும் தாக்கும் அளவு காட்டு யானைகளின் மூர்க்கம் இருந்ததால் அவையும் பின்வாங்கி விட்டது. என்றாலும் இந்த கூட்டத்து யானைகளின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில்தான் 2008 பிப்ரவரி மாதத்தின் 2 ஆம் ஞாயிற்றுக்கிழமை நாளில் அந்த துயர சம்பவம் நடந்தது. இந்த கூட்டத்து யானைகள் மதுக்கரை காட்டை விட்டு வெளியேறி மதுக்கரை குரும்பபாளையம் ரயில்வே டிராக்கில் வந்துள்ளன. நள்ளிரவு 1.10 மணி. கூட்டத்து யானைகளை ஒற்றை யானை வழிநடத்த மற்ற யானைகள் பின் தொடர்ந்துள்ளன.

இப்பகுதியில் தண்டவாளம் வளைவான பாதையில் செல்கிறது. தவிர இந்த பாதை பத்தடி முதல் பதினைந்தடி ஆழமுள்ள பள்ளத்தாக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்கிறது. இந்தப் பள்ளத்தில் வழிகாட்டி யானை இறங்கி செல்ல கூடவே மற்ற இரண்டு யானைகளும் இறங்கியிருக்கின்றன. அந்த சமயம் பார்த்து ஈரோட்டில் இருந்து பாலக்காடு நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயில் வந்திருக்கிறது.

அதில் கடைசியாக இறங்கிய யானை மாட்டிக் கொண்டு நூறு மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு சின்னாபின்னமாகி விட்டது. அப்படி அடிபட்ட யானை நிறைமாத கர்ப்பிணி. அதன் வயிறும் கிழிக்கப்பட்டு அதில் உயிர்ப்புடன் இருந்து யானையின் சிசுவும் தூக்கியெறியப்பட்டு தண்டவாளத்திலேயே விழுந்து மூச்சை அடக்கியிருக்கிறது.

இப்படி அடிபட்ட தாய் யானையின் மரணப்பிளிறல் கேட்ட முன்னே சென்ற மற்ற இரண்டு யானைகள் ரயிலின் பக்கவாட்டில் மோதி அவையும் மரணத்தைத் தழுவின. கடைசியாக வந்த ஒன்றிரண்டு யானைகள் இந்த படுபயங்கர சம்பவங்களைப் பார்த்து, பிளிறி ரயில்வே டிராக்கில் இறங்காமல் வந்த வழியே திரும்ப ஓடி காட்டுக்குள் மறைந்தன. இதனால் அந்த நள்ளிரவு குரும்பபாளையம் மட்டுமல்ல, சுற்றுப் பத்து பதினெட்டு பட்டிகளும் தூக்கத்தை தொலைத்து சோகத்தில் மூழ்கியது. எப்படி?

- மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்