தலித் அரசியலை நோக்கி நகர்கிறதா அதிமுக?

By மு.அப்துல் முத்தலீஃப்

தமிழக அரசியலில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அதிகார மையத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக கருதப்பட்ட அதிமுகவில் தற்போது தேவையை ஒட்டி தலித் சமூகத்தை நோக்கி நகர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியலை சற்றே பின்னோக்கி பார்த்தால் திராவிட அரசியலின் துவக்கம் சமூக நீதியை முன்வைத்து துவங்கியது எனலாம்.காங்கிரஸ் அரசியலிலிருந்து ஜீவாவும், பெரியாரும் பிரிந்து ஒருவர் பொதுவுடமை அரசியலும் , ஒருவர் நீதிக்கட்சியை நோக்கியும் பயணமானார்கள். ஆனால் கால ஓட்டம் பெரியார் திராவிடர் கழகம் மூலம் தன் அரசியலை நகர்த்த சமூக நீதிக்கான போரட்டத்தை முன்னெடுத்து செல்லும் களமாக தமிழகம் மாறியது.

திக, திமுகவுக்குப் பிறகும் இந்தப் பயணம் நிற்கவில்லை. தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இவ்விரு கட்சிகளும் கைவிடவில்லை. திமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுகவை துவக்கியபோது அவருக்கு அதிக அளவில் ஆதரவாக இருந்தது தலித் மக்களின் வாக்கு வங்கியே. ஆனால் அதன் பின்னர் தனது அடிப்படை நிலையிலிருந்து அதிமுக சற்றே நகரத் துவங்க தமிழகத்தின் இரு முக்கிய சமூகங்களை சார்ந்தவர்கள் அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக மாறிப்போனது.

தமிழகத்தில் தலித் இயக்கங்கள் , தலித் தலைவர்கள் பலர் செல்வாக்குடன் வளம் வந்தாலும் முக்கிய பொறுப்பில் அமர முடியாத நிலைதான் ஏற்பட்டது. ஆட்சியில் தலித் சமூக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருந்தது. அதற்கு இன்னொரு காரணம் வடமாவட்டங்களை விட மேற்கு மாவட்டங்கள் , தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு இருந்த செல்வாக்கு காரணமாக அந்த பகுதியை சார்ந்த சமூகத்தினரே தலைமை பொறுப்புக்கு வர முடிந்தது.

தற்போது நிலவும் அரசியல் சூழலில் எடப்பாடி அரசுக்கு எதிராக களம் இறங்கியுள்ள தினகரன் தரப்பினர் சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். இதன் மூலம் , தினகரன் தரப்பு இழந்துபோன தங்கள் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற கையிலெடுத்துள்ள ஆயுதம் தான் தலித் அரசியல் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

வழக்கமான பாணியில் பயணம் செய்யாமல் அதிமுகவுக்கு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சபாநாயகர் தனபால் முதல்வராக வரவேண்டும் என திவாகரன் குரல் எழுப்பியுள்ளார். தற்போது அதிமுகவில் சுமார் 30 எம்.எல்.ஏக்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முதல்வராக இருந்ததில்லை என்ற காரணத்தாலும் இந்த கோரிக்கை வைக்கப்படுகிறது.

இதன் மூலம் தலித் சமுதாய எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெற முடியும் என்றும் , பிற தலித் அரசியல் இயக்கங்களின் ஆதரவைப் பெற முடியும் என்றும் , தலித் மக்களின் பெருவாரியான ஆதரவை பெறுவதன் மூலம் தங்கள் தரப்புக்கு ஆதரவை பெருக்க முடியும் என தினகரன் தரப்பு நம்புவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தங்களுக்கு ஆட்சியை விட கட்சியே முக்கியம் என்பதால் ஆட்சிக்கட்டிலில் தலித் ஒருவரை அமைச்சராக அமர்த்துவதன் மூலம் பொதுமக்கள் , மற்ற தலித் இயக்கங்கள், கட்சியிலுள்ள தலித் எம்.எல்.ஏக்கள் ஆதரவையும் பெற முடியும், ஆட்சியில் பிரச்சனை ஏற்பட்டால் கட்சி எளிதாக தங்கள் கைக்கு வரும் என தினகரன் தரப்பு நம்புவதால் திவாகரன் போன்றோர் தற்போது சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதன் மூலம் அதிமுக தலித் அரசியலை நோக்கி நகரும் நிலை ஏற்பட்டுள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE