தமிழக அரசியலின் வெள்ளந்தியான தலைவராக வலம் வந்த விஜயகாந்த் இன்றும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத அரசியல் மாற்றாக உள்ளார் என்பதை மறுக்க முடியாது. அவரது பிறந்த நாளான இன்று அவரை பற்றிய ஒரு பார்வை.
தமிழக அரசியல் களத்தில் அதிமுக , திமுகவுக்கு அடுத்த இடத்தில் குறுகிய காலத்தில் தாம் உருவாக்கிய தேமுதிக கட்சியை நிலை நிறுத்தியவர் விஜயகாந்த். தொண்டர்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் தனது உடல் நிலைக்காரணமாக சற்றே ஒதுங்கியிருக்கிறார்.
தேர்தல் தோல்வி அவரை பாதிக்காது என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும் , அவரது உடல்நிலை தமிழகம் முழுதும் அவரை சுற்றி செயல்படவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது என்றே கூறலாம்.
தமிழக அரசியல் இன்றுள்ள நிலையில் விஜயகாந்த் முன்பிருந்த நல்ல உடல் நலம் இருந்திருந்தால் அவரது அரசியல் ஸ்டைலே வேறு அதிரடியான அரசியல் கருத்தால் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்கின்றனர் அவரது தொண்டர்கள்.
ஜெயலலிதாவின் மரணம் , கருணாநிதியின் வயோதிகம் , விஜயகாந்தின் உடல்நிலை தமிழக அரசியலின் வேகத்தை குறைத்து ஒருவித மந்தமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. அவர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் இவர் வேகமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று இன்றும் எங்களிடம் பலரும் பேசுகின்றனர் என்று தேமுதிக கட்சியினர் குறிப்பிடுகின்றனர்.
தமிழகத்தில் முக்கிய பிரச்சனைகளில் விஜய்காந்தின் அணுகுமுறை வித்யாசமாக இருக்கும் , தமிழகத்தின் முக்கிய மூத்த தலைவர்களுக்கு இணையாக முதிர்ச்சியுடன் சிந்தித்தவர் விஜயகாந்த் என்று அரசியல் நோக்கர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் காமராஜருக்கு அடுத்து வெள்ளந்தியான தலைவர் என்று விஜயகாந்தை பலரும் கூறுவதுண்டு. மனதில் பட்டதை கூறுபவர் அதனாலேயே கவனிக்கப்பட்டவர். பல நேரம் அவரை கேலி பேசியவர்களும் உண்டு.
விஜயகாந்த் மேடையின் முன்னே நடிக்க தெரியாதவர் அதனால் தானோ என்னவோ ஜனத்திரளை பார்த்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார் , அவர் கூட்டங்களில் பெண்களின் மீது விழும் தொண்டர்களை கவனித்து திட்டி ஒழுங்குப்படுத்துவார் , உரிமையுடன் பேச்சை நிறுத்தி விட்டு கண்டிப்பது கேலியான விஷயமாக பார்க்கப்பட்டது .
ஆனால் கவனியுங்கள் இவ்வளவு பேர் என்னை நம்பி வருகிறார்களே அவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற உள்ளக்குமுறலின் வெளிப்பாடு தான் அந்த அழுகை , பெண்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவரது அக்கறையின் வெளிப்பாடே கோபமாக பேச்சை நிறுத்திவிட்டு அவர் தொண்டர்களை திட்டுவது இதை கேலியாக பார்த்தவர்கள் போலிகளை நம்பி பின்னால் செல்பபவர்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும் என்று கூறினார் தேமுதிக நிர்வாகி ஒருவர்.
நீங்கள் அவரது அனைத்து பொதுக்கூட்டங்களிலும் பார்த்தால் கூட்டத்தை சீக்கிரம் முடிப்பார், முடிக்கும் முன்னர் ஐந்து நிமிடம் எல்லோரும் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும் என்று வலியுறுத்தி சொல்வார் அவர்தான் கேப்டன் என்று சொன்ன அந்த நிர்வாகி , பின்னர் இன்னொரு சம்பவத்தை கூறினார் , ஒருமுறை கேப்டன் ஒரு ஊரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அடுத்த ஊருக்கு செல்கிறார் உடன் அவரது துணைவியார் உள்ளிட்டோரும் வருகின்றனர்.
ஒரு நண்பரின் வீட்டில் உணவு உண்பதாக இருந்தது ஆனால் அவர் அந்த நேரம் அங்கு இல்லை. ஆனால் விஜயகாந்த் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாலையிலேயே வாகனத்தின் பேனட் மீது இலையை போடச்சொல்லி நின்றுக்கொண்டே சாப்பிட்டு விட்டு கிளம்பினார். இது மற்றவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியும் ஆனால் அவர் எப்போதும் வெளிப்படையாக இருப்பார் என்று முடித்தார்.
சினிமா நடிகர் , தயாரிப்பாளர் , கட்சி நிறுவனர் , எதிர்க்கட்சித்தலைவர் என்ற பல பரிமாணங்களை கொண்டவர் விஜயகாந்த். 1978 ம் ஆண்டு திரையுலகில் விஜயராஜ் என்ற பெயருடன் வந்தவரை விஜய்காந்தாக மாற்றினார் இயக்குனர் காஜா.
அதன் பின்னர் முன்னணி நடிகராக 156 படங்கள் நடித்துள்ளார். திரையுலக வாழ்க்கையில் விஜயகாந்தால் வாழ்க்கை பெற்றோர் பலர். இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஆரம்பகாலத்தில் காலூன்ற முயன்றபோது அவருடன் கௌரவ நடிகராக பல படங்களில் நடித்து கொடுத்தார்.
அந்த காலத்தில் திரைப்படகல்லூரியில் பயின்றுவிட்டு வந்த பல கலைஞர்களுக்கு திரையுலக பாதை அமைத்துக்கொடுத்தவர்.விஜயகாந்த். பல புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியவர்.
நடிகர் சரத்குமாரை தனது படத்தில் வில்லனாக நடிக்க வைத்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்க வைத்தவர். அவர் கதாநாயகனாக நடித்த ஏழை ஜாதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து உதவிசெய்தார்.
இன்று பேசவே சிரமப்படும் விஜயகாந்த் ஒருகாலத்தில் ஆவேசமான அடுக்கு மொழி வசனங்களால் ரசிகர்களால் விரும்பப்பட்டவர். புலன் விசாரணை , கேப்டன் பிரபாகரன் படங்களில் அவரது வசனம் மிக பிரபலம். லியாகத் அலிகானின் வசனத்துக்கு உயிர்கொடுத்தவர் விஜயகாந்த். ரமணா படம் அவரது படங்களில் ஒரு மைல் கல்.
அதன் பின்னர் நடிகர்சங்க தலைவரான விஜயகாந்த் அனைவரையும் அரவணைத்து செயல்பட்டார். கடனில் இருந்த நடிகர் சங்க இடத்தை மீட்டுக்கொடுத்தார். சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்த விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல உதவிகளை செய்தார். இதன் மூலம் ரசிகர் மன்றமாக இருக்கும் போதே மன்ற நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் வென்றனர்.
அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் குதித்த விஜய்காந்த் தேமுதிகவை துவக்கினார். வித்யாசமான பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது. ஒராண்டு அனல் பறக்கும் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமான வாக்கை பெற்றதன் மூலம் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தினார்.
ஒரே ஒரு எம்.எல்.ஏவாக சட்டபேரவையில் சிறப்பாக செயல்பட்டார். அடுத்த சட்டபேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றதன் மூலம் எதிர்க்கட்சித்தலைவரானார்.
அதன் பின்னர் குறுகிய காலத்திலேயே அரசை விமர்சனம் செய்ததன் மூலம் கூட்டணியை விட்டு வெளியேறிய விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை பற்றி கவலைப்படாமல் அரசு வாகனத்தையும் திரும்ப ஒப்படைத்தார்.
2016 தேர்தலில் ஐந்துமுனையாக பிரிந்திருந்த தேர்தல் களத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவராக போட்டியிட்ட விஜயகாந்த் தோல்வி அடைந்தார்.
அரசியலுக்கு வர தேவை துணிச்சல் அது விஜயகாந்திற்கு அதிகம். ஒரு சேர மிகப்பெரிய தலைவர்களான ஜெயலலிதா , கருணாநிதி இருவரையும் எதிர்த்தவர்.
விஜயகாந்தின் திருமணத்தை நடத்திவைத்தவர் திமுக தலைவர் கருணாநிதிதான், கருணாநிதி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் விஜயகாந்த் கருணாநிதியை பெயர் சொல்லி அழைக்காமல் கலைஞர் என்றுதான் அழைப்பார். திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழாவும் எடுத்தார்.
ஆனாலும் நேரம் கிடைக்கும் போது அவர் விமர்சிக்க தயங்கியது இல்லை. அதே போன்று 2011 சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்பு விஜயகாந்த் ஆவேசமடைந்தது அவரது கட்சிக்காரர்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறது.
விஜய்காந்த் பாணியில் சொல்வதானால் உடம்புன்னு இருந்தா நோய் வரத்தான் செய்யும் என்ற யதார்த்தம் இன்று உடல்நிலை பிரச்சனை தீவிர அரசியலிலிருந்து சற்றே ஒதுங்கியிருக்கிறார். ஆனால் விரைவில் மீண்டும் தீவிர அரசியலில் குதிப்பார் இப்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை விஜயகாந்த் மட்டுமே நிரப்ப முடியும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கேப்டன் முதலில் உடல்நலத்தை கவனிக்க வேண்டும்: சந்திரகுமார்
தேமுதிகவிலிருந்து பிரிந்து மக்கள் தேமுதிக ஆரம்பித்து பின்னர் திமுகவில் இணைந்த சந்திரகுமாரிடம் விஜயகாந்த் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது. அரசியலில் அவரோடு ஒன்றாக பயணித்தவன் நான் , எங்களை கைப்பிடித்து அரசியலுக்கு அழைத்து வந்தவர். அவரது வேகமான செயலாற்றலை பார்த்துள்ளேன்.
இன்றுள்ள அவரது உடல் நிலை எனக்கு வேதனையை தருகிறது. அவர் பூரண உடல்நிலை பெற வேண்டும். சுவரிருந்தால் தான் சித்திரம். கேப்டன் இருந்தால் தான் தேமுதிக , ஆகவே அவர் முதலில் பூரண ஓய்வு எடுக்க வேண்டும். உடல்நிலை நன்கு தேறியபின்னர் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
‘சாதாரண தொண்டனான என்னை ஆளாக்கியவர் கேப்டன்’ - நல்லதம்பி
சாதாரண ரசிகனான என்னை இன்று சட்டமன்ற உறுப்பினராக்கி என் வாழ்நாள் முழுதும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு இடத்தில் அமர்த்தியவர் கேப்டன். எழும்பூர் சட்டபேரவை தொகுதிக்கு என்னை நிறுத்திய போது என்னிடம் ஜாதி , செல்வாக்கு , பணபலம் எதையும் கேட்டகவில்லை இந்த இடத்திற்கு நான் சரியான ஆள் என்று நிறுத்தினார்.
இன்று பலர் அரசியலுக்கு வருவது பற்றி பேசினாலும் ஜெயலலிதா , கருணாநிதி என்ற இரண்டு பெரிய சக்திகள் ஆதிக்கம் இருந்த போதே அரசியலில் குதித்தவர் அந்த துணிச்சல் தான் எங்களுக்கு பிடிக்கும் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago