அன்பாசிரியர் 22: ராதாமணி- உள்ளூர் பள்ளியை உயர் தரத்துக்கு மாற்றிய ஆசிரியை!

By க.சே.ரமணி பிரபா தேவி

தனியார் பள்ளிகளின் உள், வெளிக்கட்டமைப்புக்கு ஒரு படி மேல் அமைந்திருக்கிறது திருப்பூர், வேலம்பாளையம் அரசுப் பள்ளி. முழுக்க கான்க்ரீட் தளத்தால் கட்டப்பட்டிருக்கும் பள்ளியில், தனித்தனியாக கணினி வகுப்பறை, உச்சரிப்பு பயிற்சிக்காக ப்ரொஜெக்டர் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. 13 வகுப்புகளுக்கு மார்பிள் போடப்பட்டிருக்கிறது.

140 மீட்டரில் சுற்றுச்சுவர், 30 கழிப்பறைகள், ஐந்து தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாதபோது பயன்படுத்த ஆழ்துளைக் குடிநீர் வசதியும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் மற்ற திறன்களை வளர்க்க கேரம், நீச்சல், யோகா, கையெழுத்து மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

எப்படி ஓர் அரசு நடுநிலைப் பள்ளியால் இவை அனைத்தும் சாத்தியமானது?- அனுபவம் பகிர்கிறார் அன்பாசிரியர் ராதாமணி.

ஆரம்ப காலப் பயணம்

''பெண்களும் வேலை பார்த்து தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் எனும் என் அம்மாவின் ஆசையாலேயே, நான் இன்று ஆசிரியராக நிற்கிறேன். உடுமலைப்பேட்டை நகரத்திலேயே வளர்ந்ததால் கிராமப்புறத்தில் கிடைத்த என்னுடைய முதல் பணி சவாலாக இருந்தது. ஆனால் அங்கிருந்த மாணவர்கள் என்னை மாற்றினார்கள். பள்ளிக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூலி வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகள். பிள்ளைகளைக் கவனிக்க பெற்றோர்களுக்கு நேரமே இருக்காது.

ஆனால், படிப்பின் மீது அவர்கள் காட்டிய ஆர்வமும், ஆசிரியர்கள் மீது காட்டிய மரியாதையும், என் ஈடுபாட்டை அதிகமாக்கியது. 1990-களில் படிப்பின் வாசனையே படாத அந்தக் குழந்தைகள், ஆசிரியர் மீது கொண்டிருந்த பாசத்தை இன்றைக்கும் பெரிதாக நினைக்கிறேன்.

நான்கு வருடங்களுக்குப் பிறகு, திருப்பூர் அனுப்பர்பாளையம் பள்ளிக்கு மாறுதல் கிடைத்தது. ஒருமுறை அருகிலிருந்த பள்ளிக்கு டெபுடேஷனுக்கு சென்றிருந்தேன். அப்போது அனுப்பர்பாளையத்து பள்ளிக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆய்வுக்காக வந்திருக்கிறார். நான் பள்ளியை விட்டுச் சென்றதாக நினைத்த மாணவர்கள் அவரிடம், ''எங்க டீச்சரை எங்களுக்கே கொடுத்துருங்க சார்'' என்று அழுதனர். அவர் என்னிடம் இந்த விஷயத்தைச் சொன்ன போது உறைந்துவிட்டேன்.

எல்லாப் பாடவேளைகளிலும் குழந்தைகளுக்கு கற்பித்துக் கொண்டே இருந்தால் விரைவில் சோர்ந்து விடுவார்கள். அதனால் அவர்களுடன் கொஞ்ச நேரம் விளையாடுவேன். பள்ளியைச் சுற்றி சின்னச் சின்ன தோட்ட வேலைகள் செய்வோம். கதைகளை வாசிக்கச் சொல்வேன். இதனால் படிப்போடு அவர்களின் மற்ற திறன்களும் சேர்ந்து வளர்ந்தன.

வாழ்க்கையை மாற்றும் வாசிப்பு

கற்றுக்கொடுக்கும்போது எப்படியாவது தேர்வுக்கான பாடங்களை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கக்கூடாது. கற்பிக்கும் முறை அவர்களுக்குப் புரிகிறதா என்று கவனிக்க வேண்டும். அவர்களின் பயத்தைப் போக்கி, எல்லோராலும் படிக்கமுடியும் என்று ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் முக்கியத் தேவை வாசிப்புதான். சில மாணவர்கள் ஐந்தாம் வகுப்பு வரைகூட எழுத்துக்களை வாசிக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அதை மாற்றினாலே போதும். வாசிப்புப் பழக்கம் அவர்களிடத்தில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.

வேலம்பாளையம் பள்ளிக்கு மாறுதல் கிடைத்தது. அங்கே மாணவர்களின் மற்ற திறன்களையும் வளர்க்க முடிவு செய்து பயிற்சிகள் அளித்தோம். கேரம் விளையாட்டில், ஸ்ரீஜா என்ற மாணவி மாநில அளவில் நான்காம் பரிசு பெற்றிருக்கிறார். நீச்சல் போட்டியில் ஐந்து மாணவர்கள் மாநிலப் பரிசு வாங்கினர். அருகிலிருக்கும் தனியார் பள்ளி, எங்கள் பள்ளி மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்து தினமும் இலவசமாக 2 மணிநேரம் நீச்சல் பயிற்சி அளிக்கிறது. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசவும், கையெழுத்தை அழகாக்கவும் வருடத்தில் ஒரு மாதம் தினமும் பயிற்சி அளிக்கின்றனர்.

வேலம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி கலை அரங்கம்

ஊர் மக்கள் ஆதரவு

கணிப்பொறி அறிவுடன், ஆர்வமும் கொண்ட பொதுமக்களில் சிலர் தினமும் மாணவர்களுக்கு கணிப்பொறி பயிற்சி அளித்தனர். இப்போது பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உதவியுடன் கணிப்பொறி ஆசிரியரை நியமித்துள்ளோம். அறிவுத்திருக்கோயில் அமைப்பு 8 வருடங்களாக (வாரம் இரு நாட்கள்), எங்கள் பள்ளிக்கு 2 ஆசிரியர்களை அனுப்பி யோகா கற்பித்து வருகிறது. அவர்களே பள்ளி, கழிப்பறைகளை சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஒருவரை நியமித்திருக்கின்றனர்.

கல்வி நாள், சுதந்திர தினம், அப்துல்கலாம் எழுச்சி நாள், அறிவியல் தினம், குடியரசு தினம், கலை இலக்கிய தினம் உள்ளிட்ட எந்த தினங்களையும் நாங்கள் விடுவதில்லை. எல்லாவற்றையும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். கடந்த ஐந்து வருடங்களாக ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'குட் டச்', 'பேட் டச்' பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பரிசோதனைக்கு மருத்துவர்கள் வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமைகளில், மது குறித்த விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்படுகிறது. இதன்மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது. பெண் குழந்தைகளின் அறிவுரையால் எங்கள் ஊரில் சுமார் 8 தந்தையர்கள் மதுப்பழக்கத்தை விட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பள்ளியின் வசதிகள், கற்பித்தல் முறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் அச்சடித்து கிராமங்களில் விநியோகம் செய்கிறோம். இதற்கும் மக்கள்தான் நன்கொடை அளிக்கிறார்கள்.

எங்கள் பள்ளிக்கு அருகிலேயே 800 மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் அமைந்திருக்கிறது ஓர் அரசு உயர்நிலைப்பள்ளி. எங்கள் நடுநிலைப்பள்ளியில் 1022 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த முறை மாணவர் சேர்க்கையின்போது ஒரு பெற்றோர், ''மெட்ரிக் பள்ளிய விட இங்கேதான் குழந்தைங்க நல்லாப் படிக்கறாங்க; ஏன் காசைக் கொடுத்து அங்கே சேர்க்கணும்னு இங்கயே கூட்டிட்டு வந்துட்டோம்'' என்றனர். வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியைத் தந்த ஒற்றை வாக்கியம் அது.

இவை அனைத்துக்கும் காரணம் எங்கள் ஊர் மக்களும், முன்னாள் மாணவர்களும்தான். அவர்கள் இதுவரை பள்ளிக்காக சுமார் ரூ.40 லட்சம் வரை நன்கொடை பெற்றுத் தந்தனர். நன்கொடையாளர்களின் பெயர்களைப் பள்ளியில் கல்வெட்டு வைத்துப் பொறித்திருக்கிறோம். கிராமக் கல்விக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு மூலம் நன்கொடை திரட்டப்படுகிறது. ஊர் மக்கள் நாங்கள் கேட்காமலேயே, பள்ளிக்கு என்ன வேண்டும் என்று கேட்டுகேட்டுச் செய்கின்றனர். பள்ளிக்கு அருகில் கடை வைத்திருக்கும் மிட்டாய் கடைக்காரர் கூட, விழாக்களின்போது பள்ளிக்கு மிட்டாய்களை கொடுத்தனுப்புவார். மக்கள் கொடுப்பது மாணவர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர்வதால்தான் மேலும் மேலும் அவர்கள் உதவி செய்கிறார்கள்.

கனவும், பலமும்

இதே போல் எப்போதும் மாணவர்களுக்கு தரமான கல்வி, ஒழுக்கம், வாழ்க்கைத் தரத்தை கொடுக்க வேண்டும். அவர்களின் தடைகளைத் தாண்டி வரவைத்து தைரியமானவர்களாக மாற்ற வேண்டும்.

சுய விருப்பு, வெறுப்பில்லாமல் வீட்டுப் பிரச்சனைகளைத் தவிர்த்து குழந்தைகளைப் பார்ப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். கட்டுக்கடங்காத காளையைக் கூட அமைதி அடையச்செய்வது 'அன்பு'தான். அந்த அன்போடுதான் இந்த நாட்டின் எதிர்காலங்களை அணுக வேண்டும்!" என சொல்லும் ஆசிரியர் ராதாமணியின் குரலில் நிரம்பி வழிகிறது அமைதியும் பிரியமும்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 21: ரவி - காணொளி வழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்