அன்பாசிரியர் 32: கண்மணி- தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் உள்கட்டமைப்பை உருவாக்கியவர்!

By க.சே.ரமணி பிரபா தேவி

பாடத்தை புரிய வைப்பவர் ஆசிரியர், கேள்விகளை கேட்கத் தூண்டுபவர் சிறந்த ஆசிரியர்

''இன்றைய காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதற்குக் காரணம், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும், பாடம் தவிர்த்துக் கற்பிக்கப்படும் கூடுதல் திறன் பயிற்சிகளும்தான். இதை அரசுப்பள்ளிகளிலேயே இலவசமாக அளித்தால் மக்கள் ஏன் தனியாரை நாடப்போகிறார்கள் என்று யோசித்து அவற்றைச் செயல்படுத்தினேன்'' என்கிறார் அன்பாசிரியர் கண்மணி.

அவரின் ஆசிரியப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''படிக்கும் காலத்திலேயே சொல்லிக்கொடுப்பது பிடிக்கும் என்பதால், ஆசிரியப் பணியில் சேர்ந்தேன். தனியார் பள்ளியில் படித்த நான், அரசு வேலை கிடைக்கும்வரை தனியார் பள்ளியில் பணிபுரிந்தேன். பணி கிடைத்து அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, பெரு மகிழ்ச்சியைவிட என்னை அதிகம் ஆட்கொண்டது பேரதிர்ச்சி. காரணம்.. நான் பார்த்த அரசுப் பள்ளியின் உட்கட்டமைப்பு நிலை, சுகாதாரம்.

22 வருடங்களுக்கு முன்.. 1995-ல் கரூர் அருகே சாலப்பட்டி என்ற கிராமத்தின் ஆரம்பப்பள்ளியில் என் பயணத்தைத் தொடங்கினேன். தனியார் பள்ளியில் 300 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கும்போது கொடுத்த உழைப்பை விட, இங்கு அதிகம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மூடப்படாமல் இருந்த பள்ளி குடிநீர்த்தொட்டியை தன்னார்வலர்களின் நிதி கொண்டு மூடினோம். பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இதற்கிடையே பதவி உயர்வோடு வேறு ஊருக்கு மாற்றலானது. ஒரு வருடம் கழித்து ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கடிதம் எழுதி என்னைத் திரும்பவும் சாலப்பட்டிக்கே அழைத்து வந்தனர். தலைமை ஆசிரியராகத் திரும்பியதால் பள்ளியில் செய்ய நினைத்த செயல்பாடுகளை சுதந்திரமாகச் செய்ய முடிந்தது.

பள்ளியின் வெள்ளி விழாவைக் கொண்டாடினோம். தொடர்ந்து எல்லா வருடங்களும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஒட்டுமொத்த கிராம மக்களும் கூடும் நிகழ்வு என்பதால் கவனத்துடன் நடத்தினோம். படிப்பு பாதிக்காதவாறு மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நிகழ்வுக்கும் பழக்கன்றுகளைப் பரிசாக அளிப்பதை (பழக்கன்று என்பதால் மக்கள் ஆர்வத்துடன் வளர்ப்பார்கள் என்று நினைத்து) பழக்கப்படுத்தினோம்.

ஆண்டு விழா, மரக்கன்றுகள் வழங்குவதோடு மாற்றத்துக்கான முயற்சிகள் முடிந்துவிடவில்லை. இன்ஃபோசிஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு 3 கணினிகளைப் பெற்றோம். ரோட்டரி மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் பள்ளியில் கரடுமுரடாக இருந்த தரை சமப்படுத்தப்பட்டது. சிமெண்ட் தரை அமைத்தோம். அடிப்படைத் தேவைக்கு கழிப்பறை கட்டப்பட்டது. அறிவுத் தேவைக்கு கணினி அறை உருவாக்கப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பெஞ்சுகள் வாங்கப்பட்டன. மாணவர்களுக்கு புதிய சீருடை, பெல்ட், ஷூக்களை அறிமுகப்படுத்தினோம். மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.

சொந்த ஊர் அருகிலேயே வேலை பார்ப்பதால் பெற்றோர்களுக்கும் எனக்குமான பிணைப்பு அதிகமாக இருந்தது. இதனாலேயே பிள்ளைகளின் கல்வி ரீதியாக உரிமையாக அவர்களிடம் பேசமுடிந்தது. ரேஷன் அட்டை வாங்க, உதவித்தொகை பெற, அரசு அலுவலகங்கள் செல்ல என அதிகக் கல்வியறிவு இல்லாத பெற்றோர்களுக்கு உதவுவதை ஆசிரியரின் கடமை. பள்ளியில் சேரும்போது 35 பேராக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை நான் வெளியே வரும்போது 60-ஆக உயர்ந்திருந்தது.

2009-ல் ஆண்டாங்கோவில்புதூர் என்னும் ஊருக்கு மாற்றலானது. அங்கிருந்த பள்ளிக் கட்டிடம் ஒழுகியவாறு இருந்தது. அருகிலிருந்த கரூர் வைஸ்யா வங்கியை அணுகி நிலையைச் சொன்னேன். அவர்கள் அளித்த நன்கொடையைக் கொண்டு அதைச் சரிசெய்தோம்.

சத்துணவு அறை சரியாக இல்லை என்பதால் அதையும் மறுசீரமைக்க வேண்டியிருந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. சொந்த வீடு கட்டிய அனுபவம் இருந்ததால், நானே கட்டிட ஒப்பந்தத்தை எடுத்தேன். பள்ளிக்கென குறைவான இடமே இருந்ததால், மாடிக்கட்டிடத்துக்கு அனுமதி பெற்றோம். சொந்தமாகக் கட்டியதால் மிச்சமான பணத்தில் மாடியில் கூடுதலாக ஒரு கழிப்பறையும், மாடிப்படிகளுக்கு அடியில் ஒரு கிடங்கு அறையையும் கட்டினோம். பள்ளித்தரை முழுக்க டைல்ஸ் ஒட்டப்பட்டது.

முன்னதாக பள்ளியில் மாணவர்கள் திறந்தவெளியில் கழிவறைக்குச் சென்று கொண்டிருந்தனர். மாணவிகளின் நிலையை யோசித்துப் பழைய சத்துணவு அறையைப் பெண்கள் கழிப்பறையாக மாற்றினோம். அதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவானது. 32 ஆயிரத்தை அரசு அளிக்க, 8 ஆயிரத்தைத் தன்னார்வலர்கள் தந்துதவினர். மீதி 10 ஆயிரத்தை நான் கொடுத்து விட்டேன். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மீண்டும் ரூ.50 ஆயிரம் வாங்கினோம். சிமெண்ட், ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளை ஸ்பான்சர் பெற்று, அப்துல் கலாம் நினைவரங்கம் அமைக்கப்பட்டது. அதில் காலை வழிபாடு, முக்கிய சந்திப்புகள், உணவருந்துவதைச் செய்துவருகிறோம்.

மதிய உணவுக்குப் பிறகு கைகழுவ அண்டாவில் நீரை மொண்டு பயன்படுத்தியது சிரமமாக இருந்ததால், வாஷ்பேசின் வசதி செய்யப்பட்டது. கழிப்பறையில் தண்ணீர்ப் பிரச்சனை ஏற்பட்டதால், ஊர்த்தலைவரிடம் பேசி பள்ளிக்கென தனி நீர் இணைப்பைப் பெற்றோம். கணினிகள் வாங்கி, கணினி அறை அமைத்தோம். புரொஜெக்டர், ஸ்பீக்கர் பெறப்பட்டு சுவரில் பொருத்தப்பட்டன. அடுத்ததாக என்ன தேவை என்று யோசித்தேன். பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினோம். தற்போது 4-ம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி உள்ளது. பள்ளியில் பெஞ்சுகள் இல்லை என்று மாணவர்கள் சொல்ல, ஸ்பான்சர்கள் மூலம் சாய்வு இருக்கைகளைப் பெற்றோம்.

உள்கட்டமைப்பு வசதிகளோடு, மாணவர்களின் திறன்களை வளர்க்கும் பயிற்சிகளை அளிக்க முடிவு செய்தோம். செஸ், கராத்தே, சிலம்பம், அபாகஸ், கணினி, தியானம் மற்றும் இந்தி வகுப்புகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நூலகங்களைத் தனித்தனியாக நிறுவினோம். மாணவர்களுக்கு ஐடி, பெல்ட், ஷூக்கள் வழங்கப்படுகின்றன. டைரி முறையும் பின்பற்றப்படுகிறது. மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். தேவையிருப்பின் மருத்துவர் குழுவே பள்ளிக்கு வந்துசெல்கிறது.

நாம் கேட்டால் செய்வதற்கு நிறையப் பேர் இருக்கின்றனர். ஆனால் நாம்தான் உரிய முறையில் கேட்கப்பழக வேண்டும். பள்ளியின் முன்பு குப்பைத்தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்களின் குப்பை மொத்தமும் கொட்டப்படும். முறையாக எடுத்துச் சொன்னவுடன் மக்கள் அதை நிறுத்திக்கொண்டனர். அவர்கள் செலவில் பள்ளியின் முன் வேகத்தடையும் போடப்பட்டது.

பள்ளியில் சீரிய முறையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டன. ஆண்டுவிழா அறிக்கைகளை புரொஜெக்டர் மூலம் காண்பிக்க ஆரம்பித்தேன். தனியார் பள்ளிகளுக்குச் செல்ல நேரும்போது, அவர்களின் செயல்பாடுகளைக் கவனிப்பேன். பள்ளியில் மைதானம் இல்லாததால் மாணவர்கள் விளையாடுவதில் சுணக்கம் ஏற்பட்டது. அருகில் இருந்த தனியார் கல்யாண மண்டப உரிமையாளரை அணுகி விவரத்தைச் சொன்னேன். அவரும் நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் கார் பார்க்கிங்கைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று அங்கு சென்று விளையாடுவோம்.

அரசுப் பள்ளியின் புதுமையான விளம்பரம்

ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்களையும் பங்குகொள்ள வைப்போம். ஆரம்பக் கல்வியை இங்கு முடித்துச் சென்ற மாணவர்கள் 12-ம் வகுப்பை முடிக்கும் வரை அவர்களுடன் தொடர்பில் இருந்து தேவையான கல்வி ஆலோசனைகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் வாங்க என பல்வேறு தேவைகளுக்காக பெற்றோர்களுடன் அரசு அலுவலகங்களுக்குச் செல்வேன்.

ஆட்சியர், வட்டாட்சியர், அஞ்சல் அலுவலகங்கள், நீதிமன்றத்துக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம். இடம் இல்லாததால் பள்ளியில் மாடித்தோட்டம் போட்டிருக்கிறோம். அதில் காய்கறித்தோட்டம் மற்றும் மூலிகைத் தோட்டத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் கவனித்துக் கொள்கின்றனர். விளையும் காய்களைச் சத்துணவுக்காகப் பயன்படுத்துகிறோம். ஆசிரியர்களும் இங்கேதான் சாப்பிடுகிறோம். கராத்தே மற்றும் கணினி வகுப்புக்காக எனது ஊதியத்திலிருந்து மாதாமாதம் ரூ. 2,500 ஐ பள்ளிக்கு அளித்துவிடுகிறேன்.

அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் தனியார் பள்ளி மோகம் மட்டும் குறைவதே இல்லை. அதைப்போக்கவே தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறேன். பணமில்லாமல் அரசுப்பள்ளியில் படிக்கிறோம் என்ற உணர்வு எந்நாளும் மாணவர்களுக்கு வந்துவிடக்கூடாது. தாயாக இருந்துமாமியாரே குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில் பள்ளியின் மீது அதிக அக்கறையோடு செயல்பட முடிகிறது. கடமையே எனப் பணிபுரியாமல் கனிவோடு பணியாற்றினாலே அரசுப்பள்ளிகளின் தரம் தானாய் உயரும்'' என்கிற அன்பாசிரியர் கண்மணியில் வார்த்தைகளில் வழிந்தோடுகிறது புன்னகையும் நம்பிக்கையும்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 31: பழனிக்குமார்- ஃபேஸ்புக் வழியே கற்றலுக்கான களம் கண்ட ஆசிரியர்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்