எங்கே செல்லும் இந்தப் பாதை?- மாறுமா மனநோயாளிகளின் பரிதாப நிலை?

By பாரதி ஆனந்த்

சாலைகளின் நடைமேடைகளில், கோயில் வாயில்களில், பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐந்தாறு அங்குலம் அழுக்கு படிந்த தேகம், கிழிந்த ஆடை, திருத்தப்படாத கேசம், கைகளில் எதோ குப்பைக் கூலங்களை சேர்த்துக்கட்டிய மூட்டை, இலக்கற்ற பார்வை, சில சமயம் ஏதோ பேச்சு என்று நம்மிலிருந்து வித்தியாசமான வாழ்வியலுக்குள் சிக்கியிருக்கும் ஜீவன்களைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பேசவிருக்கிறேன்.

அன்றாடம் இவர்களை நாம் கடந்து செல்லத்தான் செய்கிறோம். எப்போதாவது பன், டீ, ஏன் காசுகூட கொடுத்திருப்போம். ஆனால் என்றாவது இவர்களுக்கு ஏன் இத்தகைய நிலைமை என்று யோசித்திருப்போமா? இவர்களைப் போன்றோர் மீட்கப்பட வேண்டும்? இவர்களும் இந்த பூமியில் கவுரவமாக வாழ வேண்டும் என்று கருதியிருக்கிறோமா?

பெரும்பாலும் இல்லை. ஏனென்றால் இவர்கள் தங்கள் சொந்த பந்தகளாலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள்? நமக்கேன் வம்பு, அவர்களுக்கு இல்லாத அக்கறையா? என்ற மனப்பாங்கு அவர்களை நாம் அப்படியே கடந்து செல்லச் செய்கிறது.

வாண்டரிங் லூனாடிக்ஸை அறிவோம்..

இன்று ஒரு பேருந்து நிலையம், நாளை ஒரு கோயில் வாசல் என எந்த இலக்குமின்றி அலைந்து திரியும் மனநோயாளிகளை ஆங்கிலத்தில் Wandering Lunatics எனக் கூறுகின்றனர். பெரும்பாலும் நம்மூரில் திரியும் மனநோயாளிகளைப் பார்த்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதேபோல் வெளிமாநிலங்களில் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.

இத்தகையோர் பற்றி, மனநோயாளிகள், ஆதரவற்றோர், முதியோருக்காக சேவை செய்யும் மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர் மணிகண்டனிடம் பேசினோம்.

அவர் கூறியதாவது:

வாண்டரிங் லூனாடிக்ஸ் அனைவருமே அவர்களது உறவினர்களாலேயே வேண்டுமென்றே வெளியூர்களில் வெளிமாநிலங்களில் விட்டுச் செல்லப்பட்டவர்கள்தான். பொதுவாக வெயில் காலம், கொடும் பனிக்காலங்களில் இவர்களை இவ்வாறு விட்டுச் செல்கின்றனர். இயற்கையாகவே ஒன்று வெயிலி நீர்ச்சத்து இழந்து இறக்கட்டும் அல்லது குளிரில் விரைத்து இறக்கட்டும் என்ற கணிப்பில் விட்டுச் செல்கிறார்கள்

இப்படிப்பட்ட அலைந்து திரியும் மனநோயாளிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்தால் மது போதை அல்லது தீவிர போதை வஸ்துகளால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். பெண்களாக இருந்தால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோ அல்லது வேறு நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோ இப்படி ஆகியிருக்கலாம்.

 

இவர்களை அணுகுவது மிகவும் கடினம். புத்தி ஸ்வாதீனம் இல்லாவிட்டாலும்கூட தந்திரமாக இருப்பார்கள். அவர்களுடன் அவ்வளவு சீக்கிரம் நம்மால் பேசிவிட முடியாது.

காசைக் காட்டியோ, உணவைக் காட்டியோ அவர்களை வசப்படுத்த முடியாது. அவர்களின் கண்களை நோக்கிப் பேச வேண்டும். அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும்படி செய்ய வேண்டும். நம்மீது நம்பிக்கை வராவிட்டால் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார்கள்.

எனவே நாங்கள் இப்படிப்பட்டவர்களை அணுகும்போது முதலில் அவர்களின் நம்பிக்கையைப் பெற அவர்கள் கண்களைப் பார்த்து அன்புடன் கனிவுடன் பேசுவோம். நம்மால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் வராது என்று அவர்கள் நம்பும் வரை ஏதாவது பேசுவோம். அந்தப் பேச்சு அவர்களை சாந்தப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

அதன் பின்னர் அவர்களைக் காப்பகத்தில் சேர்க்க வேண்டுமானால் சட்டப்படி நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அந்த நபர் எந்தப் பகுதியில் சுற்றித் திரிகிறாரோ அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்படி அவரைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் காவல் நிலையம் மூலமாக அவரை அரசுக் காப்பகத்திலோ அல்லது தனியார் காப்பகத்திலோ சேர்க்க வேண்டும். இவ்வாறு உதவ நினைக்கும் நபருக்கு ஆதார் போன்ற உள்ளூர் அடையாள அட்டைகள் நிச்சயமாக இருப்பது அவசியம். இவையெல்லாம் இருந்தால் மட்டுமே ஒரு வாண்டரிங் லூனாட்டிக்கை மீட்க முடியும்.

குடும்பத்தினரே ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

இது மாதிரியான நபர்களை சொந்த பந்தங்கள் அவர்கள் பகுதியில் இருக்கும் மனநலக் காப்பகங்களில் சேர்க்காமல் ஏன் இப்படித் தெருவில் விட்டுச் செல்கிறார்கள் என்ற கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே சொன்னதுபோல் ஆண்களைப் பொறுத்தவரை குடிநோயாளிகளும் போதை நோயாளிகளுமே அதிகமாக இப்படி மனநோயாளிகள் ஆகின்றனர். அத்தகையோரை வீட்டில் வைத்துக் கொண்டு ஒரு பெண் மொத்தக் குடும்ப பாரத்தையும் சுமப்பது என்பது பெரும் கஷ்டமாகிவிடுகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்குத் தேவையான மனநல மாத்திரை மருந்துகளை வாங்கித் தருவது என்பது மிகுந்த செலவு வைப்பதாக உள்ளது. அரசுக் காப்பகங்களில் சேர்க்கலாம். ஆனால், நீண்ட காலமாக ஒரே நபர் ஒரு படுக்கையை ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவுக்கு நம் நாட்டில் அரசு மனநலக் காப்பகங்கள் இல்லை என்பது வேதனையான உண்மை. இதுஒருபுறம் இருக்க தனியார் காப்பகங்களில் சேர்க்க வேண்டுமானால் மாதம் குறைந்தது ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டும். இது சாதாரண மக்களுக்கு எட்டாக் கனி. இப்படியான சூழலில்தான் வேறு வழியே இல்லாமல் சொந்த பந்தங்களே இவர்களை வேறு இடங்களில் விட்டுச் செல்கிறார்கள். ஆனால், இதை நியாயப்படுத்த முடியாது.

தீர்வுதான் என்ன?

இதற்குத் தீர்வு அரசாங்கத்திடமிருந்துதான் வரவேண்டும். குழந்தைகளுக்கு என்று ஹெல்ப்லைன் இருக்கிறது. அதேபோல் மனநோயாளிகளுக்கு என்று தனியாக அரசாங்கமே ஹெல்ப்லைன் எண்களை ஏற்படுத்தினால்  தொண்டுள்ளம் கொண்ட யார் வேண்டுமானாலும் அவர்களைப் பற்றி ஹெல்ப்லைன் எண்ணில் தகவல் தெரிவித்து அவர்களைக் காப்பகங்களில் சேர்க்க இயலும்.

இந்திய மக்கள் தொகை 125 கோடி என்றளவில் இருக்கிறது. இதில் குறைந்தது 5 கோடி மக்களாவது மனநலப் பாதிப்பில் வாடுகின்றனர். போதை, குடிபோதை, சைக்காஸிஸ், பைபோலார் டிஸ்ஆர்டர் என பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டு வாடுகின்றனர். ஆனால், இந்தியாவில் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. இந்திய அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி நாட்டில் வெறும் 4000 மனநல மருத்துவர்கள் மட்டுமே இருக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 13,000 பேருக்கு ஒரு மனநல மருத்துவர் வீதமே மருத்துவ வசதி இருக்கிறது.

 

 

உலக சுகாதார அமைப்பு கூற்றின்படி, நமது நாட்டில் மனப்பிறழ்வு போன்ற மிகக் கொடிய மனநோயால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள் 10 சதவீதம் பேர மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கிறது எனத் தெரிகிறது.

அரசாங்கம் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹெல்ப்லைன் எண்கள், மனநல மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அரசு காப்பகங்களை அதிகரிப்பது போன்றவையே வாண்டரிங் லூனாடிக்ஸுக்கு ஒரு மீட்சிப் பாதையாக இருக்க இயலும். ஹெல்ப்லைன் எண்களை உருவாக்கினால், காசநோயைக் கட்டுப்படுத்தியதுபோல் மனநோயைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், அரசாங்கம் இதை தேவையற்ற சுமையாகக் கருதுகிறது.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், என்னைப் போன்ற தனி நபர்களும் மனநோயாளிகள் மறுவாழ்வுக்கு எங்களால் இயன்றதை செய்து வருகிறோம். ஆனால், தனியாரால், தனி நபரால் எத்தனை பேரை மீட்க முடியும், எத்தனை பேரை குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்க இயலும். இல்லை மறுவாழ்வுதான் அளித்துவிட முடியும்.

மதுரையில் மனநல மருத்துவர் சி.அர்.சுப்பிரமணியத்தின் செல்லமுத்து ட்ரஸ்ட்  இத்தகைய மனநோயாளிகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் சேவையைச் செய்து வருகிறது. அதேபோல் அரசு பங்களிப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குடும்பத்துடன் மீண்டும் இணைத்து வைக்கிறது. புதுவாழ்வு பெறுபவர்கள் தொழில் வளத்துக்காக கட்டிட வேலை, தச்சு வேலை, பெயிண்டிங் வேலை, தோட்டக் கலை போன்றவற்றை பயிற்றுவிக்கிறது.

தனியார் கைகளுக்குள் செல்லும் காப்பகங்கள்; எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள்

இதனால்தான் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டநாட்களாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் உள்ள 43 அரசு மனநல மருத்துவமனைகளில் 21,000 படுக்கைகள் உள்நோயாளிகளுக்காக உள்ளன. இது கோடிக்கணக்கில் இருக்கும் மனநோயாளிகளுக்கு எப்படி ஈடு செய்யும் வகையில் அமையும்? இதனால் மனநலக் காப்பகங்களில் இருக்கும் நீண்டகால நோயாளிகளை தனியார் காப்பகங்களுக்கு அனுப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. கல்வி, மருத்துவம் எல்லாம் அரசுடைமையாகவே இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து அழுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தப் புரிந்துணர்வு சமூக அர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பலையைக் கிளப்பியிருக்கிறது.

வரவேற்பைப் பெற்றுள்ள ரயில்வே நிர்வாகத்தின் முன்மாதிரி திட்டம்..

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர், மனநோயுற்றோரை மீட்டு அரசு காப்பகங்களில் சேர்க்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் ரயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் வெள்ளையா முன்னெடுப்பில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே டிஜஜி பாலகிருஷ்ணன் வெள்ளையாவிடம் பேசினோம். அவர் கூறும்போது, ''ரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் மனநோயாளிகள், ஆதரவற்றோரை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பதென்ற முடிவை எடுத்து அதற்கான செயல் திட்டத்தை வடித்தோம். அதற்கேற்ப தனியார் பங்களிப்புடன் ரயில் நிலையங்களில் இருந்த முதியவர்களை முதியோர் இல்லங்களிலும், மனநலம் பாதிக்கப்பட்டோரை அதற்கான காப்பகங்களிலும் சேர்த்தோம். முதலில் அவர்களின் முடியைத் திருத்தி, சுத்தம் செய்து நல் ஆடைகள் அணிவித்து பின்னர் அவர்களைக் காப்பகங்களில் சேர்த்துள்ளோம். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 176 பேரை மீட்டுள்ளோம்.

 

இவர்களில் சற்றே விவரமாகப் பேசுபவர்களை அவர்களின் குடும்பத்தோடு சேர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். காப்பகங்களில் சேர்க்கப்பட்டவர்களை சிறப்புக் குழு மூலம் கண்காணித்து வருகிறோம். இது ஒரே நாளில் மேற்கொள்ளக் கூடிய சீர்திருத்தம் இல்லை. அன்றாடம் ரயில்களில் யாராவது இப்படியான முதியவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டோரும் உறவுகளாலேயே ஏற்றிவிடப்படுகின்றனர். அதனால் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் இத்தகைய மீட்பு நடவடிக்கையைச் செய்யவுள்ளோம்.

சில சமூக விரோதிகள் முதியவர்களையும், மனநோயாளிகளையும் பிச்சை எடுக்கவைத்து அதில் ஆதாயம் பெற்றுவந்தனர். சிலர் அவர்களாகவே பயணிகளின் உடைமைகளைத் திருடி உணவு, குடி என வாழ்ந்தும் வந்துள்ளனர். இத்தகைய குற்றங்களைத் தடுக்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது'' என்றார்.

ரயில்வே நிர்வாகத்தின் இந்த திட்டத்தை சமூக ஆர்வலர்கள், தனியார் மனநலக் காப்பகங்கள், மனநல மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.

அரசாங்கமே இப்படிப்பட்டோருக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வந்தால் ஒழிய இவர்களுக்கான பாதை எங்கு செல்கிறது என்று தெரியாமாலே இருளில்தான் இருக்கும் என்பதே நிதர்சனம்.

தொடர்புக்கு: bharathi.p@thhindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்