ஏழைக் குடும்பத்தில் பிறந்த அருணுக்கு 31 வயது ஆகிறது. புத்திசாலி என்பதால் படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிட்டது. அருணுக்கு கலெக்டராக ஆசை. குடும்ப சூழ்நிலையால் வேலைக்குச் சென்றார். சகோதரிகளின் திருமணம், பெற்றோரின் மருத்துவம், அன்றாடத் தேவை எனத் தொடர்ந்து செலவுகள். ஒருவழியாக தலைநிமிர்ந்தவருக்குத் தனது கனவை இப்போது நிறைவேற்றும் எண்ணம் வந்தது 30 வயதில். கடினமாக உழைத்து, அர்ப்பணிப்புடன் ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரானார்.
முதல் தடவை முதன்மைத் தேர்வில் அருணால் வெற்றிபெற முடியவில்லை. 32 வயதுக்குப் பிறகு தேர்வெழுத முடியாது என்பதால், தவம் போல ஒவ்வொரு நொடியையும் தேர்வுக்காகவே செலவிட்டார் அருண். முதல்நிலைத் தேர்விலும், முதன்மைத் தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றார். நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. தயாராக வந்திருந்தாலும் பதற்றத்துடனும் பயத்துடனும் உள்ளே சென்றார். அதிகாரிகள் கேட்டது எளிமையான கேள்விகள்தான். ஆனால் அச்சத்தில் இருந்த அருணுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரவில்லை. எல்லாவற்றையும் மறந்துவிட்ட உணர்வு. தோல்வியுடன் வெளியே திரும்பினார். இனி அவரின் ஐஏஎஸ் கனவு நிறைவேற வாய்ப்பில்லை.
'மறதி ஒரு தேசிய வியாதி'; 'மறதி ரொம்ப நல்லது'- இது அடிக்கடி நாம் சொல்லும் டயலாக்தான். அரசியலுக்கு வேண்டுமானால் பொருந்தும். அன்றாட வாழ்க்கையில்?
உலகம் முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், டிமென்ஷியா என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இனி ஒவ்வோர் ஆண்டும் புதிதாக ஒரு கோடி பேருக்கு மறதி ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இது முதுமையால் ஏற்படும் டிமென்ஷியா வகை மறதிக்கான எண்ணிக்கைதான். நவீன காலகட்டத்தில் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் ஏற்படும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்கிறது 'என்பிசி' என்ற அமைப்பு.
பொதுவாக முதுமையில்தான் ஞாபக மறதி ஏற்படும்; மூளையின் செல்கள் பாதிக்கப்படும். ஆனால் மாறிவரும் வாழ்க்கை சூழலில் இளம்பெண்களும் குழந்தைகளுமே கூட ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். மன அழுத்தங்களால் ஞாபக மறதி ஏற்படுவது ஒரு வகை. மறதியால் குறிப்பிட்ட பணிகளைச் செய்யமுடியாமல் மனச்சோர்வு ஏற்படுவது மற்றொரு வகை.
எதனால் மறதி இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது?
Major Depressive Disorder எனப்படும் மனச்சோர்வு நோய்க்கான முதல் அறிகுறி மறதி. மன அழுத்தம் ஏற்பட்டதற்கான அலாரமும் மறதிதான். இந்தியாவில் சுமார் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட அல்சைமர் நோயாளிகள் உள்ளனர். டிமென்ஷியா என்னும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்களோ, அந்த அளவு அல்லது அதைக் காட்டிலும் அதிகமாக அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். பொருளாதார ரீதியிலும் மன ரீதியாகவும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அழுத்தங்கள் ஏற்படுகின்றன.
நாள்பட்ட மன அழுத்தம் என்ற ஒற்றைக் காரணி, மூளையின் செயல்திறனைப் பாதித்து ஞாபக சக்தியைக் குறைக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலகம் முழுவதும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செலவழிக்கும் தொகை ரூ.56.79 லட்சம் கோடி. இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் (ஜிடிபி) 1.1%. இதன்மூலம் சர்வதேச அளவில் நம்மை வியாபித்திருக்கும் மறதி நோயின் தாக்கத்தை உணரலாம்.
கேட்ஜெட்டுகளுடன் அதிக நேரம் செலவழிப்பது, துரித உணவுகள், போதிய உறக்கம் இல்லாதது, அதீத மதுப்பழக்கம், கவனக்குறைவாக இருப்பது ஆகியவை மறதி ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்கிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
''மனித மூளை என்பது டேப்ரெக்கார்டர் போன்றது. டேப்ரெக்கார்டரில் சத்தம் எப்படிப் பதிவாகிறதோ அதே போல, மூளையிலும் சம்பவங்கள் பதிவாகின்றன. அந்த செயலைத்தான் ஞாபகம் (மெமரி) என்கிறோம்.
இதில் மூன்று வகை உண்டு.
1. ரீசன்ட் மெமரி- இப்போதோ, சில மணி நேரங்கள் முன்போ நடந்த சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்வது
2. ரிமோட் மெமரி- 10, 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, பள்ளி சென்றது ஆகியவை ஞாபகத்தில் இருப்பது
3. இன்டர்மீடியட் மெமரி - இடைப்பட்ட காலத்தில் சுமார் 3 முதல் 6 மாதங்களுக்கு முன்னால் நடந்தது.
ஞாபக மறதி என்பது இன்றைய காலத்தில் பரவலாகிவிட்டது. ஒரு விஷயத்தை ஆர்வத்துடனும், கவனத்துடனும் செய்யும்போது அது நமக்கு மறக்காது. ஆழ்மனதில் அப்படியே பதிந்துவிடும். அதையே பொறுப்பில்லாமலும் விட்டேத்தியாகவும் ஏனோதானோவென்று செய்தால் அது நினைவில் இருப்பதில்லை.
டிவி சீரியல் வசனம் அம்மாவுக்கு நினைவிருக்கிறது. காதலி முதன்முதலில் 'ஐ லவ் யூ!' சொன்னது காதலன் மனசில் இருக்கிறது. நமது பால்ய காலங்களில் படித்த கிரைம் நாவல்களும் விளையாடியவையும் நினைவில் உள்ளது. ஆனால் அலுவலக அசைன்மென்ட்டில் குறிப்பிட்ட டார்கெட்டோ, ஐன்ஸ்டீன் கோட்பாடோ நமக்கு ஞாபகத்தில் இல்லை என்றால் அதை நாம் ஆர்வத்தோடு அணுகவில்லை என்று அர்த்தம்.
மன அழுத்தம்
அடுத்ததாக மன அழுத்தம் முக்கியக் காரணியாக இருக்கிறது. போதிய வருமானம் இல்லாமை, ஓய்வே இல்லாமல் வேலை செய்வது, வேலையில் திருப்தி இல்லாதது, குடும்பப் பிரச்சினைகள், உறவுகளுக்கு இடையேயான முரண்கள், நேரத்தை சரியான வகையில் திட்டமிடாதது ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் மதுவுக்கு அடிமையாவதும் நடக்கிறது. அதிகப்படியான மதுவைத் தொடர்ந்து அருந்துவதால், மூளையின் செயல்திறன் குறைந்து ஞாபக மறதி ஏற்படுகிறது.
கேட்ஜெட்டுகள்
மன அழுத்தத்துக்கு அடுத்தபடியாக மறதியில் முக்கியப் பங்கு வகிப்பவை கேட்ஜெட்டுகள் எனப்படும் போன்கள், லேப்டாப்புகள், Tabகள். அதிலும் ஸ்மார்ட் போனின் வருகைக்குப் பிறகு நமது மனநிலை முழுமையாக மாறிவிட்டது. எதையும் நாம் தெளிவாகவோ, பொறுமையாகவோ கேட்க, யோசிக்க முயற்சிப்பதில்லை. செல்போனைப் பார்த்துக்கொண்டே, ''ஆங்.. என்ன சொன்னீங்க?'' என்று கேட்பவர் அதிகமாகிவிட்டனர். சமூக வலைதளங்களில் நாம் பகிர்ந்த ஸ்டேட்டஸ்களுக்கும், மற்றவர்களின் பதிவுகளுக்கும் எத்தனை லைக்குகள், கமெண்டுகள் என்று நேரத்தைப் போக்குகிறோம். இந்தப் போக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி, நமது ஞாபகத் திறனை மழுங்கடித்துவிடுகிறது.
லைஃப்ஸ்டைல்
இப்போதெல்லாம் நள்ளிரவு 12, 1 மணிக்குத் தூங்குவது பெரும்பாலானோருக்குச் சாதாரணமாகிவிட்டது. அடிக்கடி பார்ட்டிக்குப் போவது இயல்பாகி விட்டது. இரவு முழுக்கக் கண்விழித்து வேலை பார்த்துவிட்டு, பகலில் தூங்குபவர்களை நாம் பார்க்கிறோம். உடம்பின் மெட்டபாலிசத்தை மீறி நாம் செயல்படுவது, நமது மூளையைத்தான் பாதிக்கிறது.
ஜங்க் ஃபுட்
தென்னிந்திய உணவுகளாகவே மாறிவிட்ட பரோட்டா, பீட்ஸா, பர்கர், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் ஆகியவற்றை உட்கொள்வதும் மறதிக்காக காரணம் என்பதைப் பலராலும் நம்ப முடியாது. முழு வயிற்றையும் அடைத்துக்கொள்ளும் இந்த உணவுகள் செரிக்க, இரைப்பைக்கு அதிக ரத்தம் தேவைப்படுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. இதனால் மந்த நிலையை, கவனமின்மையை உணர்ந்திருப்போம். இது தொடர்ந்து நிகழும்போது மறதி ஏற்பட ஆரம்பிக்கிறது.
பதற்றத்தால் ஏற்படும் ஞாபக மறதி
மேற்கூறிய காரணங்கள் தவிர்த்து, நேரத்தைச் சரியாகத் திட்டமிடாததால் ஏற்படும் பதற்றத்தாலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. அவசர கதியில் ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தேடுவது, நம் கண் முன்னாலேயே ஒரு பொருள் இருந்தும் அதைக் கவனிக்காமல் தேடிக்கொண்டே இருப்பது, முக்கியமான பொருளை வீட்டிலேயோ வெளியிலேயோ வைத்துவிட்டு வந்துவிடுவது ஆகியவை இதில் அடங்கும். பரபரப்பை விடுத்து நிதானமாகவும் திட்டமிட்டும் செயல்படுவதன்மூலம் இந்த மறதியைக் குறைக்கமுடியும் என்கிறார்'' மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
பொதுவான மறதிகள் தவிர்த்து, முதுமையின் காரணமாக சுமார் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அல்சைமர் டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி ஏற்படுகிறது. 65 வயதிற்குமேல் உள்ள 100 இந்தியர்களில் 3-5 பேருக்கு அல்சமைர் நோய் உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கனடாவின் கொலம்பியா மெட்ரோ வான் கூவரில் தனியாக ஒரு கிராமமே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட இக்கிராமத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி மட்டுமே இருக்கும். இதன்மூலம், ஞாபக மறதி உள்ளவர்கள் தவறுதலாக வெளியே சென்று, திரும்பி வருவதற்கு வழிதெரியாமல் காணாமல் போகும் சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்தும் விளக்கமாகக் கூறுகிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
''அல்சைமர் டிமென்ஷியாவை இந்த உலகின் சாபக்கேடு என்பேன். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் எப்படி குழந்தைகளாக இருந்து பெரியவர்கள் ஆனோமோ, அதேபோல முதியோர்கள் குழந்தைப் பருவத்துக்குச் செல்வதை டிமென்ஷியா எனலாம். வயது முதிர்வில் வரும் டிமென்ஷியாவைக் குணப்படுத்த முடியாது. அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மட்டுமே முடியும். கருணாநிதி முதல் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வரை நிறையப் பேர் தங்களது கடைசிக் காலங்களில் இதனால் அவதிப்பட்டனர். வாழ்நாள் முழுவதும் மூளையைத் திறமையான வகையில், தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர்களின் மூளை டிமென்ஷியாவுக்குப் போகாது என்று கற்பிதம் இருந்தது. ஆனால் காலத்தின் கோலம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மறப்பதில் தொடங்கி, சாப்பிட்டதை மறந்துவிடுவது, சுகாதாரப் பழக்கவழங்கங்களைப் பேணாதது, உறவினர்களை மறந்துவிடுவது எனத் தொடரும் டிமென்ஷியா, இறுதியில் தன் சொந்தப் பெயர், அடையாளமே தெரியாமல் நிற்பதில் கொண்டுபோய் விடும்'' என்கிறார் மோகன வெங்கடாசலபதி.
புதுப்புது வசதிகளோடு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள், நாம் நமது ஞாபக சக்தியைப் பயன்படுத்துவதைத் தடுத்துவிடுகின்றன. போன்களைத் திறக்க, இப்போது நான்கு இலக்க பாஸ்வேர்டையோ, பேட்டர்ன்களையோ கூட ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. கைரேகை, முக அடையாளம் மூலம் போனை அன்லாக் செய்ய முடிகிறது.
கையடக்க செல்போன்களில் அனைவரின் தொலைபேசி எண்களையும் சேமிக்கப் பழகிவிட்டோம். அம்மா, அப்பா, கணவன், மனைவியின் எண்கள்கூட சட்டென ஞாபகம் வருவதில்லை. காய்கறிக் கடையோ, ஸ்டேஷனரியோ மனக்கணக்கு மறைந்து கால்குலேட்டர் கணக்கு ஆகிவிட்டது. இந்திய மக்கள் தொகையான 125 கோடி பேரில் 65% பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்கள் நாடாக உள்ள இந்தியாவுக்கும் தனி மனித வளர்ச்சிக்கும் மறதி தடையாகிவிடக்கூடாது.
மறதியைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
* முழு மனதுடன் வேலை செய்கிறேனா? ஆர்வத்துடனும் விழிப்புடனும் இருக்கிறேனா? என்று நம்மை நாமே கேட்டு, உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
* சரியான நேரத்தில், போதுமான அளவு தூங்குவது அவசியம்.
* மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சோர்வு ஏற்படும்போது பிடித்த படங்கள், பயணங்கள், உணவுகள், உடைகள் என மனதை இலகுவாக்கிக் கொள்வது நல்லது.
* எதாவது கணக்கு போடவேண்டும் என்றால், எப்போதும் கால்குலேட்டர் உதவியையே நாடாதீர்கள்.
* இயற்கையான, வீட்டில் தயாரிக்கப்பட்ட சரிவிகித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* நல்ல வழியில் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும், ஞாபக சக்திக்கான மாத்திரைகளைத் தவிர்த்துவிடுங்கள்.
* யோகா, பிராணயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகள் ஞாபக மறதியில் இருந்து வெளிவர உதவும்.
* மது, புகை வகைகளை அறவே தவிர்ப்பது நல்லது.
* புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டுகளை ஆடலாம்.
* அவசியமான தருணங்களில் மட்டுமே செல்போன்களைப் பயன்படுத்துங்கள்.
க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago