* புதுச்சேரியில் வயது முதிர்ந்த மனைவி சரியாக வேலை செய்ய மறுக்கிறார் என்றுகூறி அவரைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் ஒரு முதியவர்.
* தங்களை யார் பார்த்துக்கொள்வது என்று மகன்களுக்கு இடையில் சண்டை வரவேண்டாம் என்று நினைத்த மகனின் பெற்றோர், கடிதம் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். ஈமச்சடங்களுக்குப் பணத்தை எடுத்து வைத்துவிட்டு, விருதுநகரில் உயிரை விட்டுவிட்டனர்.
இந்தச் செய்திகளை நீங்களும் பார்த்தோ, கேட்டோ இருப்பீர்கள். முதியவர்களின் தற்கொலைகளுக்கும் கொலைகளுக்கும் யார் காரணம்? பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்களில் ஏராளமான முதியவர்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் அனைவரும் எங்கிருந்து வந்தவர்கள்? வீடில்லாதவர்களா? அவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா? பதில் கூறமுடியாத கேள்விகள் இன்னும் நிறைய இருக்கின்றன.
முதுமை - குழந்தைமை, இளமை போல அதுவும் ஓர் இயல்பு நிலை. மரணத்துக்காகக் காத்திருக்கும் துயரநிலை அல்ல.
மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் அறிக்கைப்படி 2019-ல் இந்திய மக்கள் தொகையின் எண்ணிக்கை 136 கோடி. இதில் 11.5 கோடி பேர் முதியோர்கள். இது 2021-ல் இன்னும் அதிகரிக்கும் என்கிறது அந்த அறிக்கை.
வயதான நாடு
இளைஞர்கள் அதிகம் வசிக்கும் நாடு இந்தியா என்பதைப் பெருமையாகச் சொல்லும் நாம், உலகில் அதிகமான வயதானோர் வாழும் நாடாகவும் இந்தியா உள்ளதை மறந்துவிடக் கூடாது. மருத்துவ வசதிகள், உயரிய தொழில்நுட்பங்கள் ஆகிய காரணிகள் முதியோருக்கான வாழ்நாளை அதிகரித்துள்ளன. ஆனால் உண்மையிலேயே அவை, முதியோர்களின் உடல், உள்ள நலனை வளர்த்துள்ளதா?
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஷங்கர் கூறும்போது, ''நகரமயமாதலால் ஏராளமான இளைஞர்கள் பெரு நகரங்களை நோக்கிப் படையெடுத்துவிட்டனர். இதனால் கிராமங்களிலும் நகரங்களின் அறைகளுக்குள்ளும் பெரியவர்கள் தனித்து விடப்படுகின்றனர்.
பொருளாதார நிலையில் இளையோர்களைச் சார்ந்திருப்பது, உடல் ரீதியான சோர்வு ஆகியவை அவர்களின் மனநலனைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கிறது. இதன்மூலம் அவர்கள் தனிமையையும், உளவியல் அழுத்தத்தையும் எதிர்கொள்கின்றனர்.
அப்போதெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்தன. அதில் வயது வித்தியாசங்களோடு நிறையப் பெண்கள் இருந்தனர். வயது முதிர்ந்தவர்களோடு அவர்கள் மனம் விட்டுப் பேசினர், அவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொண்டனர்.
ஆனால் இப்போதைய தனிக்குடித்தன முறையில் அவை சாத்தியமாவதில்லை. பெண்களும் வேலைக்குச் செல்லும் காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் முதியோர்கள் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். சிலருக்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களிடம் அக்கறையாகப் பேச யாருமில்லை. பேரக்குழந்தைகளிடம் குழந்தைகளாக மாறி பெரியவர்கள் விளையாடிய காலமும் மலையேறிவிட்டது. தாத்தா பாட்டிகளின் இடத்தை இன்று செல்போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.
கிராமத்து அவலங்கள்
நகரத்தில் வாழ்பவர்களாவது டிவி, இணையம் எனத் தங்களின் நேரத்தை வலிந்து போக்கிக் கொள்கின்றனர். கிராமத்தில் இருக்கும் முதியவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருக்கும் முதியோர்களுக்கு அவர்களின் ரத்த சொந்தங்கள் பால் ஊற்றுவது கிராமங்களில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது. இது அன்பின் பால் நிகழ்த்தும் செயல் என்று வெளியில் கூறப்பட்டாலும், புரை ஏறி, மூச்சு விட முடியாமல் அவர்களின் உயிர் பிரிந்துவிடுகிறது. விளக்கெண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளிப்பாட்டுவதும் அத்தகைய முயற்சிதான். தெரிந்தோ, தெரியாமலோ நம்மில் பெரும்பாலானோரே இதை நமது பாட்டிகளுக்கும் பாட்டன்களுக்கும் செய்திருப்போம்.
இன்றைக்கு நாம் சந்திக்கும் பெரும்பாலான பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகள் இதுதான்- ''சாவு எப்ப வரும்னு காத்திருக்கேன்''. இதுதான் இன்றைய இளைய தலைமுறை பெரியவர்களைப் பார்த்துக்கொள்ளும் முறையா?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
2020-ல் உலகம் முழுவதும் 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளை விட 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
முதியோர்கள் எதிர்கொள்ளும் முதல் பிரச்சினை, தங்களின் தன்னம்பிக்கையை இழப்பது. வயதாக ஆக, உடல் உறுப்புகள் பலம் இழப்பதால் தங்களை வலிமை குறைந்தவர்களாக எண்ண ஆரம்பிக்கின்றனர். பொறுப்புகளைத் தோளில் சுமந்து ஓடியே பழகியவர்களுக்கு, ஓய்வையும் பொறுப்புகள் இல்லாத நிலையையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
புறக்கணிப்புகளும் நிராகரிப்புகளும்
அடுத்த பிரச்சினை, குடும்ப உறவுகளே அவர்களைப் புறக்கணிப்பது. அதைப் பெரும்பாலும் அவர்கள் வெளியே சொல்வதில்லை. தங்களின் ரத்த உறவுகளே தங்களைக் கொடுமைப்படுத்துவதை வெளியில் சொல்வது அசிங்கம் என்று எண்ணும் அவர்கள், உறவுகளின் நிராகரிப்புகளை வலிகளுடன் எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து ஏஜ்வெல் என்னும் அறக்கட்டளை நடத்தியுள்ள ஆய்வில், இந்தியாவில் 71% முதியவர்கள், தங்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே கொடுமைப் படுத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
வயது ஏற ஏற, குழந்தைகளாகவே மாறிவிடும் முதியோர்களின் மனநிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும், அதை எப்படிக் கையாளவேண்டும் என்பது குறித்துப் பேசுகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா.
''5 வயதுக் குழந்தையாக இருந்தாலும் 50 வயது பெரியவராக இருந்தாலும் நம் எல்லோருக்குமே உள்ளுக்குள்ளே ஒரு மோதல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. நம்முடைய கல்வி முறையோ, வாழ்க்கை முறையோ சண்டைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லிக் கொடுக்கிறது. சண்டை வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று யாரும் கற்றுக்கொடுப்பதே இல்லை.
மோதல்களும், முரண்களும் இயல்பானவை. அதுவும் உறவுகளிடையே ஓர் அங்கம்தான். அதைக் கையாளக் கற்றுக் கொள்ளவேண்டும். சிலர் வெளிப்பார்வைக்கு அவற்றில் இருந்து வெளியே வந்துவிட்டதாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களின் உள்ளுக்குள்ளே மோதல்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இதனால் அவர்களின் நரம்பியல் அமைப்பு பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் 50 வயதில் இருப்போர் 60 வயதினர் போல இருப்பார்கள். முகம் தளர்ந்திருக்கும். உடம்பில் சுருக்கங்கள் விழுந்திருக்கும். இவர்கள் உள்ளுக்குள் உருவாகும் மோதலை முறையாகக் கையாண்டால் உடல் நலமும் மன நலமும் சரியாகும்.
மன அழுத்தத்தில் உள்ள முதியவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?
நமக்கு இந்த உலகத்தில் எந்த மதிப்பும் கிடையாது, நம்மால் எவ்விதப் பயனும் இல்லை என்று பச்சாதாபப்படுவார்கள். சுய கழிவிரக்கம் அதிகமாக இருக்கும். பெரும்பாலான முதியவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தன்னையே குறைவாக மதிப்பிட்டுக் கொள்வார்கள், தன் மீதும் சுற்றியிருப்போர் மீதும் ஏன் இந்த உலகத்தின் மீதும் வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். கசப்பு உணர்வுடனே தங்களின் நாட்களைக் கடத்துவர். இந்த உளவியல் சிக்கலால் அவர்களின் உடல் நலமும் பாதிக்கப்படும்.
என்ன காரணம்?
குழந்தைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கிறார்கள். நம்முடைய தாய், தந்தையரை நாம் எப்படிப் பார்த்துக் கொண்டோமோ அதையே நமக்கும் செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதனால்தான் நிறைய வீடுகளில் பெரியவர்களை வீட்டின் சக உறுப்பினராகக் கூட பாவிக்காத நிலை ஏற்படுகிறது. தாய், தந்தையை பார்த்து குழந்தைகளும் தாத்தா பாட்டிகளைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்க முயற்சி செய்கின்றனர்.
வயதுக்கும் உறவுக்கும் உரிய மரியாதை அளிக்காமல் இருப்பது, முக்கியமான விஷயங்களில் அவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தவிர்ப்பது ஆகியவை அனைத்தும் இதன் அடிப்படையில்தான் நிகழ்கின்றன. இதில் சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.
முதியோர்கள் என்ன செய்ய வேண்டும்?
இளமைப் பருத்தில் இருந்தே சுய விழிப்புணர்வுடனும் பரந்த மனப்பான்மையுடனும் இருக்கப் பழக வேண்டும். அதன்மூலமே மெச்சூரிட்டி, பகுத்தறியும் தன்மை, புரிந்துகொள்ளுதல் ஆகியவை வளரும். ஈகோ மறையும். ஆரோக்கியமான மனநிலை உருவாகும்.
நம்மிடமே நாம் பிரியமாக இருக்கவேண்டும். சுய வெறுப்புடனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மரணத்தைக் குறித்து அச்சப்படக் கூடாது. உயிரோடு கிடைக்கும் கடைசி நிமிடம் வரை நாம் இறக்கப் போவதில்லை என்னும் ஜோக் நினைவுக்கு வருகிறது. ஏன் மரணம் என்னும் வருங்காலத்தைப் பற்றி யோசிக்க வேண்டும்?
நம்மிடையே இருக்கும் பிரச்சினை என்னவென்றால் கடந்த காலங்களிலும் எதிர்காலத்திலுமே வாழ்ந்து கொண்டிருப்பதுதான். பெரும்பாலான முதியோர் நிகழ்காலத்தில் வாழ்வதே இல்லை. அசைந்தாடும் கிளைகள், உரசிச் செல்லும் மேகங்கள், மழை ரோஜா என காணும் அனைத்தையும் ரசிக்கப் பழகுங்கள். நமது மகன்/ மகள்தானே, அவர்களிடம் எதற்கு ஈகோ பார்க்கவேண்டும் என்று யோசியுங்கள். என்ன நினைக்கிறீர்கள் என்று மனம் விட்டுப் பேசுங்கள்'' என்கிறார் அனந்தகிருஷ்ணன்.
இந்தியா முழுவதும் 60 முதல் 64 வயதில் இருப்பவர்களில் 76% பேர் திருமணம் ஆனவர்களாகவும் 22% பேர் துணையை இழந்தவர்களாகவும் இருக்கிறார்கள். சுக துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் சக ஜீவனை இழந்தவர்களின் நிலை இன்னும் கொடியதாக உள்ளது. வாழ்வின் இறுதிக்கட்டத்தில் யாருடைய கவனிப்பும் இல்லாமல் இருப்பவர்களுக்காக சிறப்பு வலி நிவாரண மையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பாலகுரு.
அவர் பேசும்போது, ஆதரவில்லாத முதியோர்களுக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்களின் பெற்றோர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வரும் ஆரம்பத்தில் நான் உயிரோடு இருக்க விருப்பமில்லை, குளிக்க மாட்டேன், சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிப்பர். உடன் இருக்கும் பெரியவர்களின் வார்த்தைகள், காலம் ஆகியவை அவர்களின் காயங்களை ஆற்றும். சாப்பாடு, மூச்சுப் பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சை, தொலைக்காட்சி என இங்குள்ள முதியவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கிறோம். அப்படி இருந்தும் உறவுகளால் நிராகரிக்கப்பட்ட அழுத்தத்தால் அவர்கள் திடீரென உணர்ச்சிவசப்படுவர். அவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கிறோம்.
மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு வலி நிவாரண சிகிச்சைகள் அளிக்கிறோம். படுத்த படுக்கையாக இங்கே வந்து இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளையும் நாங்களே செய்துவிடுகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் பாட்டியை இளம்பெண் ஒருவர் கொண்டுவந்து எங்களின் மையத்தில் சேர்த்தார். ''இவங்களுக்கு யாருமே இல்லை, எங்களின் பக்கத்து வீட்டுக்காரங்க!'' என்று சொல்லிவிட்டுப் போனார். ஆரம்பத்தில் இறுக்கமாக இருந்த சரோஜா பாட்டி நாளடைவில் சகஜமானார். ஆனால் அவரால் அந்த உண்மையை மறைக்க முடியவில்லை. அவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் என்றும், தன்னை இங்கு கொண்டுவந்து சேர்த்ததே தன்னுடைய மகள்தான் என்றும் கூறினார்.
பணமோ, புகழோ எது இருந்தாலும், நம்மால் உபயோகம் இருந்தால்தான் குடும்பத்தில் மரியாதை இருக்கும். அது இல்லை என்னும்போது கறிவேப்பிலை போலத்தான் என்றும் அவர் வருந்தினார். இதைக் கேட்டு நாங்கள் அதிர்ந்தாலும், ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவரைத் தேற்றினோம்'' என்கிறார் பாலகுரு.
முதியோர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு இளம் தலைமுறைக்கு இருக்கிறது. அவர்கள் என்ன செய்யவேண்டும்?
* முதலில் பெரியவர்களைப் பேச அனுமதியுங்கள், அவர்களின் வார்த்தைகளுக்குக் காது கொடுங்கள்.
* பெரியவர்களை அடிக்கடி, வாரந்தோறும் வெளியில் அழைத்துச் செல்லவேண்டும் என்பதில்லை. மாதம் ஒருமுறையாவது, கோயில், பூங்கா, சினிமா என எங்கு செல்ல விரும்புகிறார்களோ அவர்களை அங்கு அழைத்துப் போகலாம்.
* நாமும் ஒருநாள் முதியவர்கள் ஆவோம் என்பதை அறிந்து செயல்படுங்கள்.
* குடும்பத்தில் முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை பெரியவர்களுக்கு அளிக்க முடியாத சூழலில், அதுகுறித்துத் தெரிவிக்கவாவது செய்யலாம்.
* தினந்தோறும் ஓர் அரை மணி நேரத்தையாவது முதியவர்கள், பெற்றோர்களுடன் செலவிடுங்கள்.
* பெரியவர்களின் வயது ஏறும்போது, உடல் ரீதியிலும் மன ரீதியிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பதை உணரவேண்டும்.
* குழந்தையாக இருக்கும்போது நம்மை எப்படிப் பேணிப் பாதுகாத்திருப்பார்கள் என்று யோசித்து செயல்படுங்கள்.
* மருந்து, மாத்திரைகள், புத்தகங்கள், உறவினர் சந்திப்பு என அவர்களின் தேவை குறைவாகவே இருக்கும். அதை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள்.
* வெகுசிலர் தவிர்த்து, பெரும்பாலானோருக்கு உலகப் பொருளாதாரமோ, உயிரியல் நிகழ்வோ, டிக் டாக் வீடியோ குறித்தோ பேசுவதற்கான தேவை இருக்காது. அவர்களுக்குத் தெரிந்த / பிடித்த விஷங்கள் குறித்துப் பேசுங்கள்.
ஜூன் 15- முதியோர் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நாள்
க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago