யானைகளின் வருகை 146: கலீலியோவின் புன்னகை

By கா.சு.வேலாயுதன்

வனத்துறையைப் பொறுத்தவரை இன்றுவரை கால்நடை மருத்துவம் படித்து, கால்நடைத் துறையில் ஆடு, மாடு, நாய்களுக்கு மருத்துவம் பார்த்துவரும் மாட்டு டாக்டர்களையே டெபுடேஷன் மூலம் தம் துறைக்குக் கொண்டு வருகிறார்கள். அவர்களும் மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் எப்படியான மருத்துவ முறைகள் உண்டோ, அதை பின்பற்றியே காடுகளில் அடிபடும், காயம்பட்டு தவிக்கும் வன விலங்குகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார்கள். அப்படித்தான் கிருஷ்ணமூர்த்தியும் மாட்டு டாக்டராக இருந்து காட்டு இலாகாவிற்குள் வந்து அனுபவம் மூலமாக வனவிலங்குகள் மருத்துவர் ஆனவர்.

அப்படிப்பட்டவரைப் பற்றி சமீபத்தில் ஒரு முன்னாள் வனத்துறை அலுவலர் ஒரு வாட்ஸ் அப் தகவலை இட்டிருந்தார். அந்த வனத்துறை அலுவலர் எழுத்தாளரும் கூட. அவர் வனவிலங்குகள் குறித்தும், காட்டில் வாழும் பழங்குடிகள் குறித்தும் சிறுகதைகள், தொடர் கட்டுரைகள், நாவல்கள் எழுதியுள்ளார். அவை சிற்றிதழ்கள், சூழலியல் இதழ்களில் நிறைய தொடராக வந்திருப்பதோடு, மூத்த முன்னோடி இடதுசாரிப் பதிப்பகம் ஒன்று அவற்றை நூல்களாகவும் வெளியிட்டுள்ளது. அப்படிப்பட்ட இந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை பற்றி வாட்ஸ் அப் குறிப்பில், 'தன் வாழ்நாளில் காட்டில் வழிதெரியாமல் திசைமாறி வந்த 99 குட்டியானைகளை காப்பாற்றியவர்!' என பெருமை பொங்கக் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு அதைப் பார்த்தவுடன், 'அவர் 99 மட்டுமல்ல, அதற்கும் மேலான எண்ணிக்கையில் கூட வழிதவறி வந்த குட்டியானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கக்கூடும். ஆனால் அந்த குட்டி யானைகளில் எத்தனை பிழைத்தது?' என்றே கேட்கத் தோன்றியது. ஆப்ரேஷன் சக்ஸஸ்; பேஷன்ட் டெத் என்று சொல்வார்களே. அதுபோல நடந்ததில் ஆப்ரேஷன் பக்கத்தை மட்டும் சொல்லி மக்களை எத்தனை காலத்திற்குத்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பது என்பதுதான் என் கேள்வி.

இந்த இடத்தில் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நாம் ஏற்கனவே 'காந்தியை காப்பாற்றுங்க!' என்ற தலைப்பில் அத்தியாயம் 15-ல் கண்டோமே. இரண்டு மாதமேயான காந்தி குட்டி யானை. அது வனத்துறையினரின் ஈகோ பாலிடிக்ஸில் அநியாயமாக முதுமலை காட்டிற்குள் கொண்டு போய் விடப்பட்டு பரிதாபமாக இறந்ததே. அந்த காலகட்டத்தில் முதுமலை உயிரினக் காப்பக கால்நடை மருத்துவர் பொறுப்பில் இருந்தவர்தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரை தலைமையாகக் கொண்ட மருத்துவர்கள் குழுவின் சிகிச்சை பலனின்றித்தான் முதுமலையில் பிடிக்கப்பட்ட மூர்த்தி என்னும் மக்னா சாகும் தருவாயில் இருக்க, அதைப் பார்த்து வன உயிரின ஆர்வலர்கள் கொந்தளித்தனர். சென்னை உயர் நீதிமன்றம் வரை இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் மேனகா காந்தி வரை கொண்டு செல்லப்பட்டு, மக்னா மூர்த்தியை காப்பாற்ற அயர்லாந்து கால்நடை டாக்டர் மகோன்னி வரவழைக்கப்பட்டார். மூர்த்தியும் காப்பாற்றப்பட்டது.

இதைச் சொல்லும்போது பலருக்கும் உறுத்தல் வரலாம். வனத்துறை என்பது எப்படிப்பட்ட சக்தி. அதே போல் தமிழ்நாடு, இந்திய கால்நடைத்துறை என்பதும் எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கது. அதில் படித்து, அனுபவம் பெற்று, ஆகச்சிறந்தவர்களை வனத்துறைக்கு டெபுடேஷன் போடும் அவ்வளவு அதிகார பலம் பெற்ற பெரிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் எல்லாம் ஒரு பத்திரிகை நிருபர் விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்குத்தான் வல்லமை பெற்றவர்களா? என்றெல்லாம் பல கேள்விகள் இதை வாசிக்கும் வாசகர்களுக்கு எழலாம்.

இந்த இடத்தில் எனக்கு சமீபத்தில் மருதன் எழுதிய 'அரிஸ்டாட்டில் கலீலியோ' கால கதைதான் நினைவுக்கு வருகிறது. கலீலியோ காலத்தில் அரிஸ்டாட்டிலை படித்தவன் எல்லாம் மேதை என்றே கருதப்பட்டனர். கலீலியோ அப்படியல்லர். அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, ஆகச் சிறந்த மேதைகள் யார் எதைச் சொல்லியிருந்தாலும் தன் கல்வி, தன் அனுவம், அதில் உரசிப் பார்த்த சிந்தனையை முன்வைத்துத்தான் கண்டுபிடிப்பை ஒப்புக்கொள்வார். அதனால்தான் அவர் நிறைய புதிய கண்டுபிடிப்புகளை நோக்கிப் பயணம் செய்தார்.

இப்படி அவர் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் போதெல்லாம் எழும் சந்தேகங்களை சக நண்பர்கள், விஞ்ஞானிகளிடம் எழுப்புவார். அவர்களோ எதற்கெடுத்தாலும், 'நீ அரிஸ்டாட்டிலை படிக்கவில்லையா? இதைப் பற்றி அவர் எப்பவே சொல்லிவிட்டார். அரிஸ்டாட்டிலை படிக்காமல் நீ எப்படி விஞ்ஞானி என்று சொல்லிக் கொள்கிறாய். அதை எடுத்துப் படி!' என்றே சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை பூமி, நிலா, கோள்கள், வானம், நட்சத்திரம், காற்று, தத்துவம், மதம், இடம், பொருள், மனிதர், விலங்கு மற்றும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்று எல்லாவற்றையும் பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரைத்துக் குடித்து ஆவணப்படுத்தியிருந்த ஒரே நபர் அரிஸ்டாட்டில்தான்.

அப்படி ஒருவராலும் எதையும் கரைக்கவும் முடியாது, குடிக்கவும் முடியாது என்பது கலீலியோவின் நம்பிக்கை. இப்படியே ஆராய்ச்சியாளர்கள் எதையும் செய்யாமல் அரிஸ்டாட்டில், அரிஸ்டாட்டில் என்று மந்திரம்போல் சொல்லிக்கொண்டிருந்தால் யார்தான் நிஜமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது?கடுப்பான கலீலியோ ஒரு முறை ஒரு முடிவுக்கு வந்தார்.

ஊரில் உள்ள எல்லா பெரிய மனிதர்களையும் ஒன்று கூட்டினார். மதிப்புக்குரிய ஆராய்ச்சியாளர்களே, எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம். எல்லா விலங்குகளிலும் ஆண்களைவிடப் பெண்களுக்குப் பற்கள் குறைவாக இருக்கும் என்று அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறார், அது உண்மையா? மனிதர்களுக்கும்

இது பொருந்தும் என்று அவர் சொல்லியிருக்கிறாரே? உடனே எல்லோரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள். 'அரிஸ்டாட்டில் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கவேண்டும்!'. கலீலியோ சிரித்தார். இங்கே ஆண்களும் இருக்கிறார்கள், பெண்களும் இருக்கிறார்கள். இருவருடைய பற்களையும் நம்மால் எண்ணிப் பார்த்து உண்மையைக் கண்டுபிடித்துவிடமுடியும். இதற்குக்கூடவா அரிஸ்டாட்டிலைப் பிடித்து இழுக்கவேண்டும்? யார் சொன்னாலும் நம்ப மாட்டேன், நானே பரிசோதித்து உண்மையைக் கண்டுபிடிப்பேன் என்று சொல்வதுதானே ஐயா அறிவியல்? 'அப்படியானால் அரிஸ்டாட்டிலைவிட நீ பெரிய ஆளா?' என்று அவர்கள் பதிலுக்குச் சீறினார்கள்.

கலீலியோ அழுத்தமான குரலில் பேசினார். 'இல்லை, உங்களையும் என்னையும் அரிஸ்டாட்டிலையும்விட அறிவியல் பெரியது. அரிஸ்டாட்டிலை நான் உங்கள் எல்லோரையும்விட அதிகம் மதிக்கிறேன். ஆனால் அதற்கான காரணம் வேறு. அரிஸ்டாட்டில் தனக்கு ஏற்பட்ட எல்லாச் சந்தேகங்களுக்கும் தானே பதில்களைத் தேடிக் கொண்டார். சரியோ தப்போ, தானே ஆராய்ச்சிகள் செய்தார். நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். அரிஸ்டாட்டில் சொன்னது எல்லாமே சரி என்று நீங்கள் சொன்னால் நீங்கள் அரிஸ்டாட்டிலைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். தன்னைப்போல் சுயமாகச் சிந்திப்பவர்களைத்தான் அவர் விரும்புவார்!' என்று சொல்லிவிட்டு, 'அப்பாடா, இவர்களுக்கு ஓரளவுக்கு புரிய வைத்து விட்டோம்!' என்று நிம்மதியாகப் புறப்பட்டார் கலீலியோ.

அப்போது, 'ஒரு நிமிடம் இருங்கள்!' என்றபடி அவரைப் பின் தொடர்ந்துவந்த ஒருவர். 'பெண்களுக்குக் குறைவான பற்கள் இருப்பது உண்மையா?' கலீலியோ புன்னகை செய்தார். 'அதை இன்று நீங்கள்தான் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்! உங்கள் பற்களின் எண்ணிக்கையையும், உங்கள் மனைவியின் பற்களின் எண்ணிக்கையையும் எண்ணிப்பாருங்கள். அப்புறமாக அரிஸ்டாட்டிலையும் புரட்டுங்கள்!'

இந்த இடத்தில் நாம் எல்லாம் ஏன் கலீலியோவாக இருக்கக்கூடாது என்பதுதான் என் கேள்வி.

அப்படி இருந்தால்தான் பூமி, கோள்கள் பற்றி மட்டுமல்ல, யானையை பற்றி மட்டுமல்ல, பூனையை பற்றியும் சக மனிதனைக்கூட புதிது, புதிதான கோணங்களில் உணர்ந்து கொள்ள முடியும். அதற்கு அறிதலும், புரிதலும் மட்டும் போதாது. உணர்தலும் வேண்டும்.

அந்த உணர்தல் கடனே என்று கொடுத்த வேலையை சம்பளத்திற்காக செய்வதாக இருத்தலாகாது. அர்ப்பணிப்புடன் கூடிய அலசல், ஆய்வு. எந்த ஒரு துறையிலும்

இதுவரை நடந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் என்பது கைமண்ணளவு. இன்னமும் கண்டுபிடிக்க வேண்டியது பிரபஞ்ச அளவு என்ற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அதுதான் இங்கேயும் பயனளிக்கும். சரி, இங்கே அப்படி என்ன அறிந்து, புரிந்து, உணர்ந்து கொண்டதாக சொல்ல வருகிறேன்?

- மீண்டும் பேசலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்