சாடிவயலில் குட்டி ஈன்ற பெண் யானையை பார்வையிட்டுக் கொண்டிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சலீம், ‘நேற்று வரை இந்த யானைக்கு 35 வயதுதான் இருக்கும் என்று வனத்துறையினர் சொல்லிக் கொண்டிருந்தனர். அது குட்டி ஈன்றவுடன் இன்று அதற்கு 45 வயது முதல் 50 வயது என்று ஆகி விட்டது. இப்படி இதில் நிறைய சர்ச்சைகளை சொல்லலாம். இவர்கள் உண்மையிலேயே யானையை பற்றி அறிந்து, புரிந்துதான் வைத்தியம் பார்க்காமல் குத்து மதிப்பாகவே மருந்துகளை கொடுக்கிறார்கள். பரிசோதனையும் அப்படித்தான் இருக்கிறது. நல்லவேளை பள்ளத்தில் விழுந்து கிடந்து, கிரேன் வைத்துத் துாக்கப்பட்டு, லாரியில் கொண்டு வரப்பட்டு, மருந்துகள் செலுத்தப்பட்டு பல இன்னல்களை சந்தித்த இந்த பெண் யானை இப்போது குட்டி ஈன்று சேயுடன் நலமுடன் இருக்கிறதே. அதுவரைக்கும் சந்தோஷம்!’ என்றார்.
ஒரு யானை நிறைமாத கர்ப்பம், அடுத்தநாள் குட்டி ஈனும் நிலையில் உள்ளது என்பதைக் கூட 6 நாட்கள் ஆராய்ந்தும் சந்தேகத்திற்கு இடமின்றி அறிய முடியாத அளவிற்குதான் வனவிலங்குகள் பற்றிய தேர்ச்சி உள்ள மருத்துவர்கள் நம்மிடம் உள்ளார்கள் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் சொல்லவும் வேண்டுமோ? இவர்கள் சொல்வதை வைத்தும், இவர்கள் பரிசோதனைக்கு அனுப்பி வாங்கிச் சொல்லும் ஆய்வறிக்கையை வைத்துத்தான் நாம் யானை பிறப்பு, வாழ்நிலை, இறப்பு குறித்து முடிவுக்கு வருகிறோம் என்றால் நமக்கு நாமே என்னவோ மாதிரிதானே இருக்கிறது. இந்த மாதிரியான சம்பவங்களை வைத்தே யானை டாக்டர்கள் குறித்து நைஜில் சொல்லும் முடிவுக்கு நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்கிறேன். ஏற்றுக் கொள்ளவும் செய்கிறேன்.
அதே சமயம் இதே நைஜிலிடம் நான் ஆமோதிக்காத சம்பவம் உண்டா? நிறைய உண்டு. அவற்றிலும் ஒன்றிரண்டை இங்கே உதாரணத்திற்கு சொல்லிவிடுவது நல்லது. அப்போதுதான் அடுத்தடுத்து இதற்கு கட்டியம் கூறப்படும் சம்பவங்களுக்கான காரணிகளை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். தவிர, யார் எதைக்கூறினாலும் அதை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. தீர விசாரித்து, ஆய்ந்து பார்த்து அதற்கு அடுத்த நிலைக்கு நாம் செல்ல அதுவே வாய்ப்பாக அமையும். இதற்கும் ராமன் சுகுமார் எழுதிய ‘என்றென்றும் யானைகள்’ நூலிலிருந்தே ஒரு பகுதியை எடுத்துக் கொள்வோம்.
‘யானைக்கூட்டத்தின் தலைமை முதிய பெண் யானையே. வேட்டைக்காரர்களின் கூற்றுப்படி ஆண் யானை தலை எனப்படுகிறது. ஆண் யானை சர்வாதிகார தலைமை பெற்றது எனும் கூற்று ஆணாதிக்க கற்பனையே என்பேன். ஒரு ஆண் வேட்டைக்காரன் வேறு எப்படி கற்பனை செய்ய முடியும்? 1878-ல் ஜி.வி. சாண்டர்சன் யானைக்குடும்பத்தின் தலைமை பெண்தான்; எப்போதுமே ஆணில்லை என்றார். பெண் யானையே இடப்பெயர்ச்சிக்கான உத்தரவை இடுவது. ஆண் யானை எத்தனை வலிமையானதாக இருந்தபோதும் பெண் யானையின் கட்டளையை மீறுவதில்லை. ஒரு கூட்டத்தில் ஒரு முதிய பெண் யானையும், நான்கைந்து குட்டிகளும் இருக்கும். இதை விட பெரிய குடும்பமும் உண்டு. சிலவற்றில் மூன்று தலைவிகள் கூட இருக்கக்கூடும். தாய் யானையும், அதன் குட்டிகளான இரண்டு மூன்று பெண் யானைகளும், அவற்றின் குட்டிகளும் இருக்கக்கூடும். சில முதிர்ந்த சகோதரப் பெண் யானைகள், அதன் குட்டிகள் கூடக் கூடி இருப்பதுண்டு. ஒன்றுக்கு மேலாகப் பெண் யானை கொண்ட கூட்டத்தை நீட்சி பெற்ற குடும்பம்!’ என்று விரிவாக கற்பிதம் செய்கிறார். அதற்கு டக்ளஸ் ஹேமில்டன் என்ற யானைகள் ஆராய்ச்சியாளர் கூற்றை மேற்கோள் காட்டுகிறார் ராமன் சுகுமாரன்.
இது போலத்தான் யானைக்கூட்டத்திற்கு பெண் யானைதான் தலைமை வகிக்கும் என்பதைப் பற்றி இருவேறு கருத்துகளுக்கு இடமில்லாத வகையில் யானை ஆர்வலர்கள் ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் எல்லோரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதை அனைவருமே அறிவோம். அதையேதான் நான் மேற்சொன்ன நைஜில் ஓட்டரும் தொடர்ந்து என்னிடம் சொல்லி வந்துள்ளார். ஆனால் அதை நேர் எதிரான கோணத்தில் அணுகுகிறார் ‘யானைகள் காடுகளின் அரசன்’ நூலாசிரியர் ரமேஷ் பேடி.
அவர் தன் நூலில் விவரிக்கிறார்:
‘இயற்கையிலேயே யானை நேர்த்தியான, சாதுவான விலங்கு. 10 முதல் 100 வரை எண்ணிக்கை கொண்ட யானைகள் கூட்டமாகச் செல்லும். ஒரு கூட்டத்தில் பல பெண் யானைகளும், ஒரு சில ஆண் யானைகளும் இருக்கும். தலைமை யானை பிளிறுகை செய்து கூட்டத்தை ஒன்று சேர்க்கும். கூட்டம் சிதறிப்போனால், தனிப்பட்ட யானைகள், குறிப்பாக பெண் யானைகள் மிரட்சி கொண்டு விடும். இதற்கு பல சான்றுகள் ராமாயணத்தில் உள்ளன. பொதுவாக கூட்டத்தோடு சேர்ந்தே இருப்பதற்கு பெண் யானைகள் தனி கவனத்துடன் செயல்படும். ஆனால் ஆண் யானைகள் சில சமயங்களில் விலகிச் சென்றாலும் வெகுதூரம் சென்று விடாது. யானைகளில் வலுவுள்ள ஆண் யானையே தலைமை ஏற்கும். வேறு யானை ஏதாவது இதன் தலைமையை எதிர்க்கத் துணிந்தால் இவ்விரு யானைகளும் ஒன்றுடன் ஒன்று போராடி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும். தோற்றுப் போன யானை வெற்றி பெற்ற யானையின் தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டத்தில் இருக்கலாம். இல்லாவிட்டால் அது வெளியேறி தன்னந்தனியாக ஊர் சுற்ற வேண்டியதுதான். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட யானை, எப்போதும் கவனமாக இருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!’
ரமேஷ் பேடி இதை மட்டுமல்ல, தலைமைச் சண்டையில் பிரிந்த கொம்பன் யானை குறித்து பல்வேறு சுவாரஸ்யான தகவல்களை மேலும் சொல்லிச் செல்கிறார். ‘தனியாக திரியும் யானைகள் எல்லாம் கூட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டவை அல்ல. ஒரு காலத்தில் யானைக்கூட்டத்தின் தலைவனாக இருந்து, பின்னர் ஒற்றையாகத் திரியும் யானை. மாறுபட்ட உளப்போக்கின் காரணமாக வெளியேறியதாகவும் இருக்கக்கூடும். ஒற்றையாக திரியும் ஆண் யானைகள் பெரும்பாலும் காடுகளின் வெளிப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும். ஏனெனில் இங்கிருந்து அருகில் உள்ள விளைநிலங்களை பதம் பார்க்க இந்த இடம் ஏதுவாக இருக்கும். மேலும் மக்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகே கிடைக்கும் மாவு, அரிசி, வெல்லம் போன்றவற்றை உண்ணவும், காய்கறிகள் மற்றும் தீவனப் பொருட்கள் ஒன்று கூட காலையில் கண்ணில் தென்படாது.
‘மர்கிசான்’ பூங்காவில் ஒரு முறை ஒரு யானை 20 கிலோ உருளைக் கிழங்கை ஐந்து நிமிடத்தில் தின்று விட்டது. பின்னர் தனது தும்பிக்கையை வன அலுவலர் ஒருவரது வீட்டின் ஜன்னல் வழியே செலுத்தி 23 லிட்டர் நாட்டு சாராயத்தை உறிஞ்சிக் குடித்து விட்டது. மறுநாள் முழுவதும் அது மரத்தடியில் போதை தெளியும் வரை தூங்கிக் கொண்டிருந்தது. வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கரும்பு போன்றவற்றை ஒரு முறை ருசி பார்த்து விட்டால், பின்னர் இவற்றை எங்கு கண்டாலும் ஒரு பிடி பிடித்து விடும்.
இத்தகைய யானைகளால் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து உண்டாகும். எந்த வகை தந்திரத்தை கையாண்டாலும், இவற்றை விரட்டுவது மிக அரிது. மனிதனுடன் எப்போதுமே மோதிக் கொண்டிருப்பதால் இவை தைரியம் மிக்கவையாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன. ஒற்றையாக திரியும் ஆண் யானையின் பாதையில் யாராவது தீவினை வயத்தால் குறுக்கிட நேர்ந்தால் அவருக்கு அதோ கதிதான். இப்படிப்பட்ட ஆண் யானைகளை துன்புறுத்தினாலோ, காயப்படுத்தினாலோ, அவை தறிகெட்டு ஓடும். சிலர் பயிர்களை காப்பதற்காக துப்பாக்கியால் யானைகளை சுடுவர்.
அவற்றால் உண்டாகும் காயங்கள் ஆறாமல் அவற்றின் வாழ்நாள் முழுவதும் வதைபட்டுக் கொண்டிருக்கும். பழிவாங்கும் பொருட்டு, அப்படிப்பட்ட யானைகள் எதிர்கொண்ட எவரையும் தாக்கி விடும். பெரும்பாலும் புல் வெட்டுவோர், மரம் வெட்டுவோர், வழிப் போக்கர் இவற்றின் சினத்திற்கு பலியாகி விடுவர். ஆப்பிரிக்காவில் ஒரு போக்கிரி யானை தன் அருகே ஏறத்தாழ 90 மீட்டர் தூரம் வரும் எந்த வாகனத்தையும் விட்டு வைப்பதில்லை. ஒரு காட்டிலாகா அதிகாரியின் ஜீப்பை ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்றது. வேறு வழியின்றி அது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது.
- மீண்டும் பேசலாம்!
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago