காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று தொலைபேசியில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். 50 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் அரசியல் நாகரிகம் மலர்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16-ம் தேதி இறுதித் தீர்ப்பு வழங்கியது. ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சி, இத்தீர்ப்பில் 177.25 டிஎம்சி-யாக குறைக்கப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவை 6 வாரத்துக்குள் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கடந்த 22-ம் தேதி அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். முதல்வர் பழனிசாமி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சென்று பிரதமரை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்துவதாக இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அனைத்துக் கட்சி குழுவை சந்திக்க பிரதமர் மோடி இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இந்த சூழலில் காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க கர்நாடக அரசு சார்பில் வரும் 7-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காவிரி பிரச்சினையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, முதல்வரை ஸ்டாலின் இன்று நேரில் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் இந்த அரசியல் நாகரிகம் இன்றைய தலைமுறையினரால் புதுமையாக, ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
அரை நூற்றாண்டில்...
1947-ல் நாடு விடுதலை அடைந்த பிறகு 20 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் ஆகியோர் முதல்வராக இருந்தனர். அப்போது அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர்கள் உரையாடுவது, முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அவரது மறைவுக்குப் பிறகு 1969-ல் கருணாநிதி முதல்வரானார். திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 1977-ல் ஆட்சி அமைத்தார். 1967-க்குப் பிறகு கடந்த 51 ஆண்டுகளில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜானகி அம்மாள், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர். கடந்த ஓராண்டாக கே.பழனிசாமி முதல்வராக இருக் கிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததுபோல 1967-க்குப் பிறகு தமிழகத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறவு சீராக இருக்கவில்லை. அதிமுக உருவானதும் நிலைமை மேலும் மோசமானது. 1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் எதிர்க்கட்சியினரை பொது இடங்களில் பார்த்து பேசுவதற்கே ஆளும்கட்சியினர் அச்சப்படும் நிலை உருவானது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் பரஸ்பரம் முதல்வராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதே இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது சட்டப்பேரவைக்கு வருவதையே தவிர்த்தனர்.
2005-ல் திமுக சார்பில் சுனாமி நிதி கொடுக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஸ்டாலின் சந்தித்தது, பெரும் அதிசய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
2016 டிசம்பர் 5-ல் ஜெயலலிதா மறைந்ததும் நிலைமை மாறத் தொடங்கியது. 2017 ஜனவரி 4-ம் தேதி திமுக செயல் தலைவராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அன்றைய தினமே அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார். ஜல்லிக்கட்டு, விவசாயப் பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். பழனிசாமி முதல்வரானதும் அவரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
கடந்த பொங்கல் பண்டிகையின்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, முதல்வர் பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வலிறுத்தினார். கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து, போக்குவரத்துக் கழகங்களை சீரமைப்பது குறித்து மனு அளித்தார். காவிரி விவகாரத்தில் அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் அறிவிக்கப்பட்டதும், திமுக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அதில் பங்கேற்றார்.
இந்நிலையில் முதல்வர் தொலைபேசியில் ஸ்டாலினிடம் பேசியதும், முதல்வரை ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் அரசியல் நாகரிகம் மலரத் தொடங்கியிருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago