தினகரன் கட்சிப் பெயரில் ஏதோ கள்ளத்தனம் இருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற நாள் முதலே நான் அவரால் ஓரங்கட்டப்பட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
முன்னதாக, தினகரன் அணியில் இருந்து விலகுவது குறித்து பேசிய நாஞ்சில் சம்பத், "காலம் காலமாக எந்தக் கொள்கையைப் பேசி வந்தேனோ, காலங்காலமாக எந்த கொள்கையை எங்கெல்லாம் கொண்டுசென்றேனோ அந்தக் கொள்கையை ஒரு பகலில் படுகொலை செய்துவிட்டார் தினகரன். இன உணர்வு கொள்கையை கொட்டிக்கவிழ்த்து விட்டார் தினகரன். அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இந்தப் பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை, டிடிவி அறிவித்த கட்சிப் பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை.
இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டுக்கிடக்க மாட்டேன். இனி எந்தக் கட்சிக் கொடியையும் தூக்கி சுமக்க மாட்டேன். எந்தத் தலைவனையும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். இனி தனிப்பறவையாக பறப்பேன். என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. என்னை யாரும் நெருங்க முடியாது. கரையான்கள் நெருப்பை அரிக்க முடியாது. என் மூளையைச் சலவை செய்ய எந்த முட்டாளும் முயல வேண்டாம். அடுத்தகட்டமாக இலக்கியப் பணியைச் செய்வேன், இனி இளைஞர்களுக்கு பேச்சுப் பயிற்சி அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீர் விலகல் குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற நாள் முதலே நான் அவரால் ஓரங்கட்டப்பட்டேன் எனக் கூறினார்.
இந்த திடீர் விலகலுக்கு கட்சியின் பெயர் மட்டும்தான் நிச்சயமான காரணமா?
நிச்சயமாக. பெயர்க்காரணத்தால் மட்டுமே கட்சியில் இருந்து விலகினேன். பெயரில்தான் எல்லாம் இருக்கிறது. எனக்கு சம்பத் என்று பெயர் வைத்தார்கள். அரசியலில் மிகப் பெரிய பேச்சாளர் அவர். இன்று அந்தப் பெயர்தான் நீங்கள் எல்லாம் (பத்திரிகையாளர்கள்) என்னிடம் கேள்விகேட்கும் நிலையில் என்னை வைத்திருக்கிறது.
நாங்கள் பரிந்துரைத்திருந்த கட்சிப் பெயர்களில் திராவிடம் இருந்தது. ஆனால், எங்களுக்கு அது கிடைக்கவில்லை என டிடிவி கூறியிருக்கிறாரே?
அது பச்சைப் பொய். ஒரு கட்சிக்குப் பெயர் சூட்டுவது என்பது ஒரு குழந்தைக்குப் பெயர் சூட்டுவதுபோல் கவனமாக செய்யப்பட வேண்டிய ஒன்று. நான் பரிந்துரைத்த பெயர்களில் அண்ணாவும், திராவிடமும் இருந்தது. ஆனால், அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு இவர்கள் ஒரு பெயரைச் சூட்டியிருப்பதன் பின்னணியில் சங் பரிவாரங்கள் சொல்லும் திராவிடம் இல்லாத் தமிழகக் கோட்பாடல்லவா ஒளிந்திருக்கிறது. இதில் ஏதோ கள்ளத்தனம் இருக்கிறது.
கட்சிப் பெயரில் 'அம்மா' இருக்கிறதே? அண்ணாவை திராவிடத்துடன் தொடர்பு படுத்தும் உங்களால் 'அம்மா'வை அப்படித் தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லையா? அம்மா திராவிட வழியில் ஆட்சி செலுத்தவில்லை என்று நினைக்கிறீர்களா?
நான் ஒரு பேச்சாளர். எனக்கு எதையும் பூடகமாகச் சொல்லத் தேவையில்லை. திராவிடம் என்பது ஒரு கொள்கை. எனது உள்ளத்தின் ஒளி திராவிடம். அந்த ஒளியை ஒளித்துவைத்துவிட்டு எப்படி என்னால் இயங்க முடியும். இனியும் தொடர முடியாது என்றே வெளியேறினேன். எனது வருத்தம் எல்லாம் அண்ணாவையும், திராவிடத்தையும் கட்சிப் பெயரில் இருந்து புறக்கணித்தது மட்டுமே.
அன்று சசிகலாவை வான்கோழி கலாப மயிலாக முடியாது என விமர்சித்தீர்கள். அப்புறம் அவரைவிட்டால் அதிமுகவை யாரும் வழிநடத்த முடியாது என்றீர்கள். டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்தீர்கள். தமிழகத்தில் அவர் மட்டுமே பாஜகவை துணிச்சலாக எதிர்ப்பதாகக் கூறினீர்கள். ஆனால் இன்று கட்சிக்குப் பெயர் சூட்டியதில் அவரிடம் ஏதோ கள்ளத்தனம் இருக்கிறது என்கிறீர்கள்? ஏன் இத்தகைய திடீர் திடீர் மாற்றங்கள்.
ஆமாம், நீங்கள் சொல்வதையெல்லாம் நான் சொன்னேன். குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக டிடிவி தினகரன் தானாகவே முன்வந்து அறிவித்தார். அப்போதுகூட வருத்தம் இருந்தது. ஆனால், சில வேளைகளில் அரசியல் தலைவர்கள் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக அதைக் கண்டும் காணாமல் விட்டேன். ஆனால், இன்று ஒட்டுமொத்தமாக திராவிடத்தை ஒழித்துக்கட்டும் விதத்தில் பெயர் சூட்டிய பின்னர் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தபோதே நீங்கள் டிடிவியிடம் அன்பாக எடுத்துரைத்திருக்கலாமே...
அதான் சொன்னேனே.. "சில வேளைகளில் அரசியல் தலைவர்கள் சில சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக அதைக் கண்டும் காணாமல்விட்டேன்" என்று. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு நான் டிடிவியால் புறக்கணிப்பட்டேன். அவரிடம் என்னால் நெருங்க முடியவில்லை. ஒரு ராஜாளிப் பறவையின் கால்களில் இருக்கும் புழுவைப் போலவே என்னை அவரது உதவியாளர் பார்த்தார். எனது எண்ணை தொலைபேசியில் பார்த்தால்கூட அவர் அதை டிடிவியிடம் கொடுக்காமல் துண்டித்துவிடுவார். தொடர் புறக்கணிப்புகளுக்குப் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளேன்.
நீங்கள் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு செல்லப்போவதாக சலசலக்கப்படுகிறதே?
நான் ஒரு பேச்சாளர். அரசியல்வாதி. என்னை எந்தக் கட்சி வேண்டுமானாலும் அழைக்கலாம். அதற்கான தகுதி எனக்கு இருக்கிறது. ஆனால், எதில் இணைய வேண்டும் என்பது எனது முடிவாக மட்டுமே இருக்கும். இனி எனது மேடை இலக்கிய மேடையாக மட்டுமே இருக்கும்.
இனி இலக்கிய மேடை மட்டுமே என்ற இந்த முடிவு இறுதியானதாக உறுதியானதாக இருக்குமா?
நிச்சயமாக இருக்கும். எந்த மாற்றமும் இருக்காது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago