அவளிடம் பீமனைப்பற்றியும் தன் தாய் வானம்பாடியைப் பற்றியும் சொல்லும், தினகரன், 'பீமன் யானைதான் தன்னை வளர்த்துச்சுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும். அதுதான் எனக்கு தாய், தந்தை எல்லாம். உனக்கு அதுதான் தாத்தா. காட்டு மிருகங்களுக்கு கருணை அதிகம். பழகிட்டா நமக்காக உயிரையும் கொடுக்கும். ஏற்றத்தாழ்வு அதுகளுக்கு எதுவுமே கிடையாதுன்னு அம்மா சொல்லியிருக்கா. அதை இப்ப நினைச்சா கூட பீமன் யானைகிட்ட நாமளும் போயிக்கலாம்னு இருக்கும். என் அம்மா பேரு வானம்பாடி. அவளை யானை வளர்த்ததால அவ பேரு யானை வளர்த்த வானம்பாடி!' என ஏக்கத்துடன் சொல்லுவான்.
அதை கேட்கும் சிறுமி, 'உன் அம்மா பேர் பீமன் வளர்த்ததால யானை வளர்த்த வானம்பாடி. அப்ப உம்பேரு?' என்று கேட்பாள். 'நானா?' என்பான். அப்போதுதான், யானை வளர்த்த வானம்பாடி மகன்! என்ற டைட்டில் கார்டு விழும். டைட்டில் கார்டுகள் முடிந்ததும் பீமன் யானையை தேடி காட்டிற்குள் செல்லும் சிறுவன் தினகரனின் கதைதான். அங்கே எத்தகைய ஆபத்துகளை சந்திக்கிறான். பீமன் யானையை எப்படி கண்டுபிடிக்கிறான். பிறகு அதே பீமன் யானை வளர்ப்பில் வானம்பாடி மகனும் எப்படி பெரியவன் ஆகிறான். காட்டில் வேட்டைக்காரர்களை எப்படி வேட்டையாடுகிறான். காட்டு விலங்குகளுக்கும் எந்த அளவு கருணையுண்டு. அதிலும் யானைகளுக்கு எந்த அளவுக்கு பாசமும் நேசமும் இருக்கிறது என்று அந்தக் கால சினிமாத் தனத்துடனே, இயல்பாகவே கதை செல்கிறது.
காட்டுக்குள் பீமனை தேடி, 'பீமா, பீமா!' என்று கத்திக் கொண்டே செல்லும் தினகரன் பொங்கும் அருவி, ஓடி வரும் நீரோடை, அடர்ந்து நிற்கும் மரங்கள், அதற்குள் ஊடுருவும் மலைப்பாம்பு, சிறுத்தைகள், கூட்டத்து யானைகள் மத்தியில் தனியாக ஒரு மரத்தின் கிளையை உடைத்துக் கொண்டிருக்கும் ஒற்றை யானையைப் பார்த்து விடுவான். அதுதான் தான் தேடி வந்த பீமன் யானை என்று அதன் வாலைப் பிடித்து இழுத்து விடுவான். அவ்வளவுதான் அது மூர்க்கமாக திரும்பி, அவனை துரத்தும் பாருங்கள். அப்படியொரு துரத்தல், அப்படியொரு ஓட்டம்.
அந்த யானையும் துரத்த, புலியும் துரத்த அவை இரண்டுக்கும் மோதல் நடக்கிறது. அதை அச்சத்துடன் பார்க்கிறான் தினகரன். 'பீமன் யானைன்னு நினைச்சு வேற யானை வாலைப் புடிச்சுட்டனே. காட்டுக்குள்ளே பீமனை தேடி வந்ததே தப்பு. இனி எப்படி ஊருக்கு திரும்பப் போறேன்!' என்று நெஞ்சு படபடக்க கேட்டுக் கொள்கிறான்.
அங்கே நடந்த மோதலில் யானை தப்பிப்போக இவன் இருக்கும் மரத்தினைச் சுற்றி வருகிறது புலி. அதிலிருந்து அசல் பீமனும், அவன் கூட்டமும் வந்து காப்பாற்றுகிறது. 'நீ சமயத்தில் வராமல் இருந்திருந்தால் நான் இந்த புலிகிட்ட சிக்கி செத்திருப்பேன்!' என சொல்லும் தினகரன், 'உனக்கு தெரியுமா பீமா என் அப்பா, அம்மா செத்துப் போயிட்டாங்க!' என்றும் தெரிவிக்கிறான். அதில் அந்த யானை கண்ணீர் உகுக்கிறது.
அதற்கு சிறுவன் தினகரன், 'அழறியா பீமா. என் அம்மா நியாபகம் வந்துடுச்சா. உனக்குத்தான் என்ன பாசம். என்ன கருணை!' என வியக்கிறவன், 'இனி நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன். என் அம்மாவை வளத்திய மாதிரியே என்னையும் வளர்ப்பேல்ல பீமா?' என கேட்கிறான். பீமனும் தலையை ஆட்டி அவனை தன் மீது ஏற்றிக் கொண்டு ராஜா நடை போடுகிறது. அங்கேதான், 'ஜாம், ஜாம் ஜாமென்ற சந்தோஷமாம். நீ தளிர் நடைபோடடா ராஜ பீமா!' என்ற பாடல் ஒலிக்கிறது.
இந்தக் கதையை கேட்கும்போதும் படிக்கும்போதும் ஏதோ சிறுவர்களுக்கான கதை, காமிக்ஸ் புத்தகக் காட்சி போலத்தான் பலருக்கும் தோன்றும். ஆனால் இப்பவும் அந்தப் படத்தைப் பாருங்கள். அப்படியே யாராக இருந்தாலும் ஒன்றிப்போய் விடுவார்கள்.
இந்த இடத்தில் அதிகாரிகள் பிடிவாதத்தில் மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாமிற்கு சென்று மதம் பிடித்து திரும்ப முடியாத நிலையில் இறந்ததே. நஞ்சன் கும்கியையும் அதன் பாகனையும் நினைத்துக் கொள்கிறேன். அந்த பாகன் கும்கி இறந்து பல வருடங்கள் சோகத்தில் தாடி வளர்த்து, அழுது கொண்டே பைத்தியம் போல் அலைந்தது, தன் துக்கத்தை போக்க மது அருந்திக்கிடந்து பிதற்றியதை எண்ணிக் கொள்கிறேன்.
'எனக்கு அம்மா, அப்பா, மகன், மகள் எல்லாமே அதுதான்ங்க. பாசம்னா அதுகிட்ட கிடச்ச மாதிரி வேற எங்கியும் கிடைச்சது கிடையாது!' அந்தப் பாகனின் அழுகையும், இந்த சிறுவன் தினகரன் பீமனிடம் காட்டும் வாஞ்சையும், அது இவனுக்கு தரும் ஸ்பரிசமும், அதை அறிந்து புரிந்து உணர்ந்தால்தான் சிந்தனைக்குள்ளேயே கொண்டு போக முடியும்.
1971-ல் எந்த அளவுக்கு யானைகள் குறித்த பாதிப்பை யானை வளர்த்த வானம்பாடி மகன் உருவாக்கியதோ, அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டது 1972-ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த 'நல்ல நேரம்' திரைப்படம். யானை வளர்த்த வானம்பாடி மகன் நாட்டில் வாழும் சிறுவன் தன் தாயை ஒரு யானை வளர்த்தது என்பதை அறிந்து, அதைத் தேடி காட்டிற்குள் சென்று கண்டுபிடித்து அதனுடனேயே காட்டு வாழ்க்கை நடத்திய கானுயிர் நேயக்கதை என்றால், நல்ல நேரம் அதே தன்மையில் நேரெதிரீடானது.
இதில் சிறுவனாக இருக்கும் தன் மகன் ராஜூவை அழைத்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் காரில் போவார் கோடீஸ்வரரும், எஸ்டேட் முதலாளியுமான அவனின் தந்தை. போகிற வழியில் காரை குறுக்கிடும் ஒரு காட்டு யானை. அதை நோக்கி துப்பாக்கி எடுத்து சுடுவார் ராஜுவின் தந்தை. உடனே அதை தட்டிவிடுவான் காரில் உள்ள ராஜு. அதில் உயிர்தப்பி ஓடி விடும் யானை. அதற்கு 'ஏன்டா இப்படி செஞ்சே?' என வினவுவார் ராஜுவின் தந்தை.
அதற்கு சிறுவன் சொல்லுவான்: 'அந்த யானைதான் நம்மள ஒண்ணும் செய்யலையே. அப்புறம் எதுக்கு சுடணும். அது தப்புப்பா!' என்பான். இளகின மனதுடைய மகனை தட்டிக் கொடுக்கும் தந்தை, 'என்னடா நீ பத்து வயசுலயே புத்தனாயிட்டே?' என்றபடி காரை கிளப்புவார். போகிற வழியில் குறுக்கே ஒரு மாடு வந்து விடும். அதில் நிலை தடுமாறி கார் மரத்தின் மீது விபத்துக்குள்ளாகி விடும்.
ராஜு ரத்த வெள்ளத்துடன் தூக்கி எறியப்படுவான். ராஜுவின் தந்தையோ காருக்குள்ளேயே மயங்கிக் கிடப்பார். மயக்கம் தெளிந்து மகனை தேடி அலைவார். அழுவார். அரற்றுவார். பையன் எங்கே என்றே தெரியாது. எஸ்டேட்டில் ஒரே மகனை பறிகொடுத்த துயரம் தாளாது நோய்வாய்ப்பட்டு கிடப்பார். ஆட்களை விட்டு மூலைக்கு மூலை தேடியும் மகன் கிடைக்கவே மாட்டான்.
விபத்து நடந்த வேளையில் வேறொரு பக்கம் காட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் கிடக்கும் ராஜுவை நோக்கி சிறுத்தை ஒன்று வரும். அது சிறுவனை கவ்விச் செல்வதை தூரத்தில் இருந்து ஏற்கெனவே இந்த சிறுவன் ராஜுவால் துப்பாக்கி குண்டிலிருந்து காப்பாற்றப்பட்ட காட்டு யானை கவனித்து விடும். அந்த சிறுத்தையை துரத்திச் சென்று தாக்கும். சிறுத்தையின் வாலைச்சுற்றி வீசும். அங்கே சிறுத்தைக்கும், யானைக்கும் பெரிய சண்டையே நடக்கும். இறுதியில் சிறுத்தை தோற்று ஓடும். யானை இந்த சிறுவனை துதிக்கையால் தூக்கிக் கொண்டு ஆற்றோரம் படுக்க வைத்து தண்ணீரை உறிஞ்சி சிறுவன் மீது பீய்ச்சி அடிக்கும். சிறுவன் மயக்கம் தெளிந்து எழுவான்.
இந்த யானை தன் கூட்டத்தை பிளிறி அழைத்து சிறுவனை அழைத்துச் செல்லும். வீட்டில் உயிர் போகக்கிடக்கும் அப்பாவிடம் தன்னை காப்பாற்றிய யானைகளையும் அழைத்துச் செல்வான் சிறுவன் ராஜு. மரணத்தருவாயில் தன் மகனைப் பார்த்த தந்தை தன் மகனைக் காப்பாற்றிய யானைகளுக்கு நன்றி சொல்வார்.
'எந்த இடத்திலும் உன்னைக் காப்பாற்றிய இந்த யானைகளை கைவிட்டுவிடாதே. இவை வெறும் யானைகள் இல்லையப்பா. நான் எப்பவும் கும்பிடற விநாயகப் பெருமான். எப்பவும் உன் கூடவே வச்சுக்க. அவை உன்னைக் காப்பாற்றும்!' என்று சொல்லி உயிரை விடுவார். அது முதலே இந்த நான்கு யானைகளும் ராஜுவுடனே இருக்கும். அவனுக்கு அத்தனையும் வீட்டுத் தோழனாகி விடும். அவை நீர் இறைப்பதென்ன? சிறுவனை தூக்கிக் கொண்டு செல்வதென்ன?
பிறகுதான் டைட்டில் கார்டு தொடங்கும். சிறுவன் எம்ஜிஆராக பெரியவனாகி விடுவார். அப்புறம் என்ன? காதல், வில்லன், கடன், பணமிழப்பு, ஊடல், பிரச்சினை. 'ஆகட்டும்டா தம்பி ராஜா. நடராஜா. மெதுவா தள்ளய்யா. பதமா தள்ளய்யா!', 'டிக், டிக் மனதுக்கு தாளம்!', 'ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!' என கொஞ்சும் பாடல்கள். 'என்னை வேண்ணா விலை பேசுங்க. என் தோழனை விலை பேசாதீங்க!', 'உன் தும்பிக்கையும், என் நம்பிக்கையும் நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும்!' என எம்ஜிஆர் வீசும் பஞ்ச் வசனங்கள்.
கடைசியில் ராமு என்கிற யானை தன் அன்பையும், பாசத்தையும் நிரூபிக்க தன் உயிரையே விடும். வில்லன் மேஜர் சுந்தரராஜன் கதாநாயகன் எம்ஜிஆரையும், அவர் குழந்தையையும் சுட முயற்சிக்கும்போது குறுக்கே வந்து நின்று குண்டுகளை தான் வாங்கிக் கொள்ளும். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் ராமுவைப் பார்த்து மனம் திருந்தி கதறுவார் கே.ஆர்.விஜயா; 'அது தெய்வமாகி, என்னை மிருகமாக்கிடுச்சு!'.
- மீண்டும் பேசலாம்!
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago