வைராக்கிய விவசாயி: பார்வைதான் இல்லை; நம்பிக்கை நிறைய்ய..!

By க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள நாடார்புரத்தைச் சேர்ந்த கோபாலுக்கு வயது 63. பாதியில் பார்வையை பறிகொடுத்தவர். பார்வைதான் இல்லை. ஆனால் முழு திறன்பெற்ற விவசாயி. ஆமாம். அவரே பாத்தி கட்டுகிறார், விதை விதைக்கிறார், விளைச்சல் பார்க்கிறார், அறுவடை செய்கிறார்.

கோபாலுக்கு மனைவி, 2 மகன்கள் இருந்தாலும் யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதில்லை. பார்வை இல்லை என்பதற்காக யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்ற வைராக்கியம்தான் அவரை தன்னந்தனியாக சாதிக்க வைத்திருக்கிறது. பிறக்கும் போது நல்ல பார்வைத் திறனுடன் இருந்தவர்தான். பார்க்காத வைத்தியம் இல்லை. சிகிச்சை பலன் கொடுக்காமல் போனதால், கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை இழந்தவர், 1998-ம் ஆண்டு முழுமையாகப் பறிகொடுத்தார்.

இருளாக மாறியது இவரது உலகம். தான் பார்த்த இடங்கள், பழகிய மனிதர் கள் என அனைத்தையும் தனது செவிகளால் உணர்ந்து தனக்கென தனி உலகை உருவாக்கிக் கொண்டார். எதையும் இழந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை விதைத்து, எப்போதும்போல உழைக்கத் தொடங்கினார். யாருடைய துணையும் இல்லாமல் தனி ஒருவராக விவசாயத்தை தொடர்ந்தார்.

இடையில் எஸ்டிடி பூத் நடத்திய அனுபவத்தால், அனைத்து எண்களையும் மனப்பாடமாகச் சொல்கிறார். செல்போனில் எண்களை அழுத்தி அவரே தேவைப்படுபவர்களுக்கு பேசுகிறார். இப்போது குத்தகைக்கு எடுத்துள்ள வயலுக்குச் செல்ல உதவிக்கு வருவது வெறும் குச்சி மட்டும்தான். இரவும் பகலும் இவருக்கு ஒன்றாகிப்போனதால், உறக்கம் வராத நேரம் வயலில்தான் இவரை பார்க்க முடியும்.

வயலில் தற்போது நெல் சாகுபடியுடன் சோளமும் பயிரிட்டுள்ளார். விவசாயம் மட்டுமல்ல, தேங்காய் உரிப்பது, மீன் பிடிப்பதும் கோபாலுக்கு கைவந்த கலை. உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை.. ஏன் ஸ்ரீதேவி இறப்பு வரைக்கும் அப்டேட்டாக இருக்கிறார்.

பழைய எஸ்எஸ்எல்சி படித்த கோபால், குடும்பச் சூழலால் மேற்படிப் பைத் தொடர முடியவில்லை. ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு கரூர் அரசு கலைக் கல்லூரியில் பியுசி. பின்னர் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகுபி.காம். பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். ஆமாம், இவர் பார்வையற்ற பட்டதாரி விவசாயி. சிறந்த கபடி வீரர், ஆங்கில மொழி அறிவு பெற்றவர். இதெல்லாம் பார்வை உள்ளபோது கோபால் சாதித்தவை.

ரயில்வே பணிக்கு தேர்வானபோது நடத்தப்பட்ட கண் பரிசோதனையில்தான் கிளைக்கோமா பார்வைக் குறைபாடு தெரியவந்தது. அதனால் பணியும் கிடைக்கவில்லை. அதன்பிறகு ரயில்வே, பிஎஸ்என்எல் நிறுவனங்களில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி, விவசாயக் கூலிக்குச் சென்று, பின்னர்தான், குத்தகைக்கு நிலம் பிடித்து முழு விவசாயி ஆனார். ஆனால் அப்போது அவருக்கு பார்வை இல்லை.

கோபாலை சந்தித்தோம், “நான் செய்யாத வேலையே கிடையாது. விவசாயம் எனக்கு அத்துபடி. கையால் தொட்டுப் பார்த்தே பயிரின் நிலையை அறிந்துகொள்வேன். பயிர்களைப் பாதிக்கும் நோய் குறித்து பல விவசாயி கள் என்னிடம் கேட்டு ஆலோசனை பெறுவார்கள். இப்போதும் கூலிக்கு தேங்காய் உரிக்கும் வேலைக்குச் செல்கிறேன். ஒரு நாளுக்கு ஆயிரம் தேங்காய் வரை உரிப்பேன். காவிரி ஆற்றில் மீன் பிடிக்க பாஸ் வைத்திருக்கிறேன்.

விவசாயத்தில் குறைவான லாபம் கிடைப்பதால் பலரும் அதைவிட்டு வெளியேறி வருகின்றனர். எனக்கு இதை விட்டுப் போக மனசு இல்லை. நிலம் இல்லாததால் குத்தகைக்கு எடுத்து கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன்.

விவசாயிகளுக்கு மானியம், கடன் என எதையும் அரசு வழங்கத் தேவையில்லை. போதுமான தண்ணீரை கொடுத்தாலே போதும். விவசாயிகள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய தேவை இருக்காது” என்கிறார் முத்தாய்ப்பாக.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE