தமிழகத்தின் அறியப்படாத இடங்களின் விஷுவல் ட்ரீட்: பயணப் பட இயக்குநரின் வித்தியாச முயற்சி

By க.சே.ரமணி பிரபா தேவி

தமிழ்நாட்டில் சுற்றுலாப் பகுதிகள் என்றால் நம்மிடம் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், கன்னியாகுமரி, மதுரை, சென்னை என்று பட்டியல் நீளும். ஆனால் அதில் என்றாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நால்வகை நிலப்பரப்பும் கொண்ட மாவட்டமான விழுப்புரத்தைப் பற்றி யோசித்திருக்கிறோமா?

பகண்டை, மரக்காணம், மொழியனூர், கோமுகி டேம், கல்வராயன் மலை, திருக்கோவிலூர், பெருமுக்கல் என விழுப்புரத்தில் மட்டுமே முக்கியமான  50 இடங்களுக்கு சுற்றுலாப் பயணத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் கருணாகரன். ட்ரோன் கேமரா மூலம் விழுப்புரம் முழுக்க அவர் ஆவணப்படுத்தியிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ஓராயிரம் கதை சொல்கின்றன.

சுற்றுலா குறித்த ஆவணப்படத்தில் ஒவ்வோர் இடத்தையும் சுமார் 30 நொடிகள் மட்டுமே காண்பிக்கிறார் கருணாகரன். ஆனால் அதிலேயே அதன் அழகியல் வெளிப்பட்டு விடுகிறது. இன்றைக்குக் காணாமலேயே போய்விட்ட தூக்கணாங்குருவிக் கூடுகள், பொம்பூரின் உயரப் பனையொன்றில் காற்றில் ஆடியவாறே சிரிக்கின்றன. இளங்காட்டின் பசுமையான வயல்கள் நம் கண்களை நிறைக்கின்றன. புதுச்சேரியாக அடையாளப்படுத்தப்படும் ஆரோவில் கூட விழுப்புரத்தில்தான் இருக்கிறது என்பதை ஆவணப்படுத்துகிறார்.

தண்ணீர் குறைவான கோமுகி அணை, வாழ்ந்து மடிந்த மன்னர்களின் மிச்சங்களாய் நிற்கும் செஞ்சி கோயில்கள், சிதிலமடைந்த பனமலை கோயில் படிக்கட்டுகள், மரக்காணம் உப்பளங்கள், அனந்தபுரத்தில் வானளாவ உயர்ந்து நிற்கும் கற்கள், மோழியனூர் காளி, நீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கலிவெளி ஏரி, கூட்டேரிப்பட்டி சந்தை, பசுமையில் திளைக்கும் பகண்டை, ஆழியூர் திருவிழா என நீளும் வீடியோ காட்சி, இறுதியில் நெரிசல் மிகுந்த நகரமாய் மாறிவரும் விழுப்புரத்தில் முடிந்திருக்கிறது.

இடத்துக்குத் தகுந்தவாறு பின்னணி இசை சிறப்பாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அழகியலை காட்சிகளாக மட்டுமே ரசிப்பது சுகம் என்பதால், குரல் எதுவும் கொடுக்கவில்லை என்கிறார்.

இதுகுறித்து உற்சாகத்துடன் நம்மிடம் பேசினார் கருணாகரன். ''தமிழகத்தோட அதிகம் அறியப்படாத இடங்களை யாரும் பார்க்காத கோணத்துல, புது அனுபவத்தைக் கொடுக்கணும்னு நினைச்சுதான் இதை ஆரம்பிச்சேன். சின்ன வயசுல இருந்து எடிட்டிங்ல ஆர்வம்ங்கறதால ஃபிலிம் எடிட்டிங் படிச்சுட்டு, கே.எல்.பிரவீன் சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரரான அவர்கிட்ட கத்துக்கிட்டது ஏராளம்.

ஆனா, ஒரே இடத்துல மணிக்கணக்கா உட்கார்ந்து மட்டுமே வேலை பார்க்கிற எடிட்டிங் பணி, உடல் ரீதியாவும் மன ரீதியாவும் சோம்பலைக் கொடுத்துச்சு. அப்போதான் வெளியுலகுக்கு அறிமுகமாகாத அல்லது அறிமுகப்படுத்தப் படாத இடங்களை ஷூட் பண்ணி பார்வையாளர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுக்க முடிவு பண்ணேன். நாம பிறந்த மாவட்டத்துல இருந்த ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு. இடங்களைத் தேர்வு செஞ்சேன்.

நண்பர்கள் உதவியோட அதிகாரிகள்கிட்ட முறையா அனுமதி வாங்கி, படம்பிடிக்க ஆரம்பிச்சேன். ஒரு மாவட்டத்தை எடுத்து முடிக்க முழுசா ஒரு வருஷம் ஆச்சு'' என்கிறார்.

வேலையை விட்டுவிட்டு, செலவுகளை எப்படிச் சமாளித்தீர்கள் என்றதற்கு, ''உபகரணங்களோடு 2 ட்ரோன்களையும் வாங்க 3 லட்சம் தேவைப்பட்டது. இதுதவிர போக்குவரத்து செலவு வேறு. வெளியில் ப்ராஜெக்டுகளை வாங்கி, அவற்றுக்கு இரவில் உட்கார்ந்து எடிட்டிங் செய்து கொடுப்பேன். அதில் கிடைக்கும் தொகையை வைத்து சமாளித்துக் கொண்டேன்'' என்றார்.

இந்தப் பயணங்களில் ஏதாவது சிரமங்களை நிச்சயம் எதிர்கொண்டிருப்பீர்களே என்று கேட்டதற்கு, ''பிடாகம் என்ற பகுதிக்கு அதிகாலையிலேயே சென்று அங்கு ரயில் கடப்பதை எடுக்கக் காத்திருந்தேன். ஆனால் ரயில்களின் தாமதத்தால் மாலை சூரியன் மறையும்போதுதான் அந்தக் காட்சியைப் படம்பிடிக்க முடிந்தது. சிங்கவரத்தில் இருந்து பனமலையில் உள்ள கோயிலுக்கு வந்து தேசிங்கு ராஜா பூஜை செய்வார் என்று வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. இரண்டு மலைகளுக்கு இடையே அவர் வந்துசென்ற பாதையையும் படம் பிடித்திருக்கிறேன்.

40 மலை கிராமங்களை உள்ளடக்கிய கல்வராயன் மலையில் மின்சார வசதி இல்லை. இருக்கும் 3 பேட்டரிகளும் 30 நிமிடங்களுக்கு மேல் தாங்காது. இதனால் தினமும் மலையில் இருந்து கீழே இறங்கிவந்து சார்ஜ் செய்துகொண்டு மேலே செல்வேன். மரக்காணத்தில் படம்பிடிக்கும்போது, கடல் காற்று அதிகமாக வீசியதில் ட்ரோன் இறக்கைகள் உடைந்துவிட்டன. மீண்டும் எடிட்டிங் செய்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு ட்ரோனின் இறக்கைகளைச் சரிசெய்தேன்.

யாரும் செல்லாத இடங்களுக்குத் தேடிச் சென்று படமெடுப்பதால் அங்கு எந்த வசதியும் இருக்காது. சில நாட்களில் தண்ணீரையும் கொண்டுசெல்ல மறந்து, தாகத்தால் அலைந்திருக்கிறேன். ஆனால் கிடைக்கும் காட்சிகள் அந்தத் துன்பத்தை மறக்கடித்துவிடும்'' என்று புன்னகைக்கிறார் ட்ரோனைக் கொண்டு பயணப் படம் எடுக்கும் கருணாகரன்.

கருணாகரனைத் தொடர்பு கொள்ள: 8667836120

- க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE