தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் வரலாற்று வெற்றி இது: தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார்

By பாரதி ஆனந்த்

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்த்தும் வெற்றி இது என தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமார் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தென்காசியில் காங்கிரஸ் 9 முறை வெற்றி பெற்றிருப்பதால் கூட்டணிக் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், திமுக தென்காசி (தனி) தொகுதியை எடுத்துக் கொண்டதோடு ராஜபாளையம் முன்னாள் எம்.எல்.ஏ., தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமாருக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கியது. இதோ, கிருஷ்ணசாமியை வீழ்த்தி வெற்றியும் கண்டுள்ளது திமுக. அதுவும் இது வரலாற்று வெற்றி.

தனுஷ் எம்.குமார் தென்காசியின் முதல் திமுக எம்.பி. என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். 28 ஆண்டுகளுக்கு முன்னர் சதன் திருமலைக் குமார் இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். அதன் பின்னர் அத்தொகுதி திமுகவுக்கு வரவே இல்லை. இந்த முறை திமுகவுக்கு வந்ததோடு வெற்றியும் வந்திருக்கிறது.

இந்த வெற்றி குறித்து எம்.பி., தனுஷ் எம்.குமார் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டதாவது:

இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்..

இது எங்களுக்கு மெகா வெற்றி. இந்த வெற்றிக்குக் காரணம் எங்கள் தலைவர் ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதுவும் அந்த மாற்றம் தலைவர் மூலம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் என்பதை ஆணித்தரமாகப் பதிக்கும் வெற்றி.

நாடு முழுவதும் பாஜக மாநிலக் கட்சிகளைப் பதம் பார்த்த நிலையில் தமிழகமும், கேரளமும் மட்டும் தாமரையை வரவேற்கவில்லை.. ஒரு திராவிடக் கட்சியின் எம்.பி.யாக இதில் உங்கள் கருத்து?

திராவிட பூமி மதத்துக்குள் சிக்காது. மதம் என்ற மதம் திராவிடர்களுக்கு எப்போதும் பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறோம் என்பதில் திராவிடப் பெருமை கொள்கிறேன்.

ராகுலுக்கு தமிழகம், கேரளாவில் கிடைத்த வரவேற்பு ஏன் மற்ற மாநிலங்களில் கிடைக்கவில்லை என நினைக்கிறீர்கள்?

இது அந்தக் கட்சியின் விவகாரம். இருந்தாலும் என் தனிப்பட்ட கருத்தை வேண்டுமானால் சொல்கிறேன். இங்கே தமிழகத்தில் ராகுலை பிரதமர் வேட்பாளராக எங்கள் தலைவர் அறிவித்தார். மக்களுக்கு ஓர் இலக்கு தெரிந்தது. ஆனால், மற்ற மாநிலங்களில்? இலக்கற்ற பயணம் போல் தேர்தலை எதிர்கொண்டதன் விளைவு. தனிப்பட்ட முறையில் நான் நினைப்பது என்னவென்றால், ராகுலை கட்சியே அதிகாரபூர்வமாக பிரதமர் வேட்பாளராக தேர்தல் அறிவித்தவுடன் அங்கீகரித்திருக்க வேண்டும் என்பதே.

தென்காசியின் முதல் திமுக எம்.பி. நீங்கள். தொகுதிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

இதற்கு முன்னால் தொகுதியில் என்ன செய்யலாம் என நான் ஒரு தனிநபராக சில திட்டங்களை என்னளவில் யோசித்து வைத்திருந்தேன். இப்போது நான் ஒரு மிகப்பெரிய கட்சியின் மக்கள் பிரதிநிதி. தொகுதிக்குள் நிலவும் பிரச்சினைகளை ஆலோசித்து அதில் முதன்மையானவற்றைத் தேர்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் தீர்ப்பேன்.

பொதுவாக வாக்கு கேட்க வந்தார்... அப்புறம் கண்ணால்கூட பார்க்கவில்லை என்ற பெயர் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் நிறைய பேர் உள்ளனர். நீங்கள் எப்படி மக்களோடும், ஊடகத்தோடும் தொடர்பில் இருப்பீர்கள்?

நான் அப்படிப்பட்ட கட்சிப் பாரம்பரியத்தில் வரவில்லை. எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருப்பேன். மக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் எளிதில் எனது அலுவலகத்தில் சந்திக்கலாம். இந்தத் தருணத்தில் வாக்களித்த ஒவ்வொரு மக்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே என் முதல் கடமை. ஊடகத்தோடு நான் இதை செய்யப் போகிறேன்.. அதை செய்யப்போகிறேன் என்று விளம்பரத் தொடர்பில் இல்லாமல் என் தொகுதியில் நான் செய்யும் நலத்திட்டங்களை ஊடகங்களே செய்தியாக்கும் அளவுக்கு தொடர்பில் இருப்பேன்.

இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்த வெற்றி முழுக்க முழுக்க எங்கள் தலைவரின் ஆளுமையாலும், கிருஷ்ணசாமி மீதான எதிர்ப்பலையாலும் கிடைத்த வெற்றி. அடுத்த முறை எனக்கு எங்கள் தலைவரே அழைத்து சீட் கொடுக்கும் அளவுக்கு மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

இவ்வாறு தனுஷ் எம்.குமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்