எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து: மக்கள் வெற்றியா? கட்சிகள் வெற்றியா?

By நந்தினி வெள்ளைச்சாமி

மக்களின் கடும் எதிர்ப்பு, சட்டப் போராட்டத்தின் விளைவாக, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து கடந்த ஏப்.8 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு வந்த உடனேயே தங்கள் நிலத்தில் அதிகாரிகள் நட்ட எல்லைக் கற்களை அகற்றியும், நிலத்தில் விழுந்து வணங்கியும் உணர்வுப்பூர்வமாக தங்கள் மகிழ்ச்சியை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.

இந்த மகிழ்ச்சிக்கு இடையே, சட்டப் போராட்டத்தின் வெற்றிக்கு யார் காரணம் என அரசியல் கட்சிகளிடையே உரசல் ஏற்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "இந்தத் திட்டத்திற்கு எதிராக பாமக சட்டப் போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் எனக்கு கிடைத்துள்ள வெற்றியை உலகுக்கே உணவு படைக்கும் கடவுள்களாக நான் மதிக்கும் விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். பாமக விவசாயிகளுக்கான கட்சி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

மேலும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னை - சேலம் இடையிலான பசுமைச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இத்தீர்ப்பு பாமகவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என தெரிவித்தார்.

விவசாயிகளை முன்னிறுத்தாமல், தங்களையும் தங்கள் கட்சியையும் முன்னிறுத்தி பாமகவின் அணுகுமுறை இருந்ததாக விமர்சனம் எழுந்தது.

அதேசமயம், இத்திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த நாம் தமிழர் கட்சியும் இந்த வெற்றிக்கு உரிமை கோரியது. சொல்லப்போனால், இரு கட்சிகளும் சமூக வலைதளங்களில், யார் முதலில் இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்தது, இந்தத் தீர்ப்பு கிடைத்தது யாருடைய வெற்றி என வாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், முதலில் யார் வழக்கு தொடுத்தது என்பதை விட, திட்டத்திற்கு எதிராகப் போராடிய ஒட்டுமொத்த விவசாயிகளின் வெற்றி இது என்பதே முக்கியம்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளைப் பாதிக்கும் இந்தத் திட்டம் கடந்து வந்த சட்டப் போராட்டத்தைப் பார்க்கலாம்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் தான் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிடுவதற்கு முன்னர் பொதுநல வழக்கு தொடுத்தார்.

அந்தப் பொதுநல மனுவில், "தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956-ன் படி நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று இருக்கிறது.

மேலும், பொதுமக்களின் நிலத்தைக் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதன்படி, அறிவிப்பாணை அரசிதழில் வெளியான 60 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சாலை, ராணுவப் பயன்பாடு, அணு உலை உள்ளிட்ட 13 முக்கியத் தேவைகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என இச்சட்டத்தில் உள்ளது. இது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையைத் தடுப்பதாக உள்ளதால், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார் சுந்தர்ராஜன்.

ஆனால், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், "நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவால் மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் 105-வது பிரிவுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் இல்லை என்று கூற முடியாது. அந்தப் பிரிவை ரத்து செய்யக் கோருவதை ஏற்க முடியாது" என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

அதன்பிறகு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.வி. கிருஷ்ணமூர்த்தி, இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து முதலில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தனிநபர் வழக்கு தொடுத்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தியின் 2 ஏக்கர் நிலமும் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகள் பொது நல வழக்குகள் தொடுத்தன. மொத்தமாக, கிட்டத்தட்ட 30 வழக்குகள் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டன. இதில், 3-4 மட்டுமே பொதுநல வழக்குகள், மற்றவை அனைத்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகள்.

இதுதொடர்பாக, பி.வி.கிருஷ்ண மூர்த்தியிடம் பேசினோம்.

"பாமக இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் பார்க்க நினைக்கிறது. இதற்காக யார் முதலில் வழக்கு தொடுத்தது என எட்டு வழிச்சாலையை எதிர்த்த விவசாயிகளுக்குத் தெரியும். பல வலுவான வாதங்களை எங்கள் வழக்கறிஞர் ராவணன் முன்வைத்தார். இத்திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி வாங்காதது, அதிகார துஷ்பிரயோகம், அனுமதியில்லாமல் நிலத்தை அளத்தல் உள்ளிட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சட்டப் போராட்டத்தை யார் முதலில் முன்னெடுத்தது என்பது முக்கியமல்ல, எங்களுக்கு இந்தச் சாலை வரக்கூடாது. எங்களின் நிலத்தை அதிகாரிகள் அளந்த போது, நாங்கள் கேவலமான முறையில் நடத்தப்பட்டோம். போலீஸை வைத்துக்கொண்டு நிலத்தை அளந்தார்கள். நாங்கள் என்ன இந்த நாட்டின் விரோதிகளா? எங்கள் நிலத்தின் அருகிலேயே நிற்க விடாமல் கல் நட்டார்கள்" என கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஏன் இந்த சட்டப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி, பாமக ஆகிய கட்சிகள் அரசியலாக்குகிறது என, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமாரிடம் கேட்டோம்.

"அன்புமணி தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொன்னதால் தான் நாங்களும் வெளியில் சொன்னோம். நாங்கள் அதனை அரசியல் ரீதியாக வெளியில் சொல்லவில்லை. காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டு நிலத்தை அளக்கக் கூடாது என நீதிபதிகள் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தனர். அப்போது தான், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடுத்தார். அதற்கு முன்பே நாங்கள் வழக்கு தொடுத்தோம். ஆனால், இந்த சட்டப் போராட்டத்தின் வெற்றிக்கு அன்புமணி முழு உரிமை கோருகிறார்" என்றார்.

பாமக, இந்த வழக்கை முதலாவதாக தொடுக்கவில்லை என்பதற்காகவே எங்களுக்கு இந்த வெற்றியில் பங்கு இல்லை என மறுக்க முடியாது என, அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தெரிவிக்கிறார்.

"நாடாளுமன்றத்தில் இத்திட்டம் தொடர்பாக கேள்வியை முன்வைத்தவர் அன்புமணி. அவர் கேட்ட கேள்வியில் தான் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என்பதே தெரியவந்தது. அது இந்த வழக்கிற்கு வலுசேர்த்தது. இந்த சட்டப் போராட்டத்தில் எங்களின் பங்கு முக்கியமானது" என்றார்.

பாமக, நாம் தமிழர் கட்சிக்கிடையே இந்த வெற்றிக்கு உரிமை கோருவதில் வாக்குவாதம் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த வெற்றியில் எந்தவொரு அரசியல் கட்சியும் அமைப்பும் உரிமை கொண்டாட முடியாது என்கிறார், 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

"இதுவொரு கூட்டு விளைவு. எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ இந்த வெற்றியில் உரிமை கொண்டாட முடியாது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிய பின்பு தான் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்ற வாதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்தை தவறு என்று நீதிமன்றம் சொல்லவில்லை" என வெற்றிச்செல்வன் கூறினார்.

நிலத்தைக் கையகப்படுத்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பிருந்தே இந்தத் திட்டத்தை எதிர்த்தவர்கள் விவசாயிகள். நிலம் கையகப்படுத்திய போது அவர்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. விவசாயிகளை பார்க்கச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வயது வித்தியாசம் பாராமல் விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தன் நிலத்தில் எல்லைக் கல் நட வந்தபோது, கையை உயர்த்தி கைது செய்யுங்கள் என போராடிய உண்ணாமலையும், இந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி குறித்து சில விவசாயிகளிடம் பேசினோம்.

சிவகாமி, சேலம்:

"எங்களின் ஒன்றரை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சேப மனு கொடுத்த 3 நாட்களில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆட்சேபனை தெரிவிக்க  21 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தனர். ஆனால், அதற்கு முன்பே கையகப்படுத்தி கல் வைத்துவிட்டனர். 500-600 போலீஸ் குவித்து தான் கையகப்படுத்தினர். நாங்கள் வாக்குவாதம் செய்தோம். அந்தச் சாலை எப்படி அமைய உள்ளது என அதிகாரிகளுக்கே புரியவில்லை, குழப்பமாக இருந்தது. கேட்கும் கேள்விகளுக்கும் அதிகாரிகள் கேலியாகப் பதிலளித்தனர்.

வருவாய்த்துறை அலுவலகத்தில் கேள்விகள் கேட்டபோது கூட போலீஸார் அடிதடி நடத்தி அப்புறப்படுத்தினர். அப்போது, நானும் மற்றொரு பெண்ணும் தாக்கப்பட்டோம். மிகுந்த அடக்குமுறை நிலவியது. 4 பேர் நின்றாலே போலீஸ் கேள்வி கேட்பார்கள். போராட்டம் செய்ய முடியாத நிலை இருந்தது. உளவுத்துறை எங்களைக் கண்காணித்தது. கையெழுத்து இயக்கம் நடத்த முற்பட்டபோது கூட கைது செய்தனர். அப்போது தான், போலீஸ் இந்த விவகாரத்தில் அடக்குமுறையைக் கையாளக் கூடாது என உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கும் விவசாயிகளின்  போராட்டம் தான் காரணம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயியாக இருந்தால் மேல்முறையீடு செய்யமாட்டார். இந்த வெற்றி, விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கும் கிடைத்த பெருத்த வெற்றி என கருதுகிறோம். இதனால், 5 மாவட்ட விவசாயிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்" என்றார் சிவகாமி.

கவிதா, சேலம்:

"வழக்கு தொடுக்கப்பட்டதிலிருந்து, மக்கள் போராட்டத்தையும், வலுவான எதிர்ப்பையும், நீதிமன்றம் அவ்வப்போது கவனித்து வந்தது. இந்தச் சாலை வந்திருந்தால் எங்களின் ஏழரை ஏக்கர் நிலம் பறிபோயிருக்கும். நிலத்தை அளக்கும்போது, காவல்துறை இல்லாமல், வருவாய்த்துறை நிலத்தில் இறங்கவே இல்லை. எங்கள் குடும்பத்தினர் அழுததைக் கூட, சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரித்து, "இது போராட்டமா?" என பதிவிட்டனர். அப்படி சித்தரித்தவர்கள் யார் என, இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

விவசாயிகள் நாங்கள் எங்கு சென்றாலும் காவல்துறை பின் தொடரும். அடக்குமுறைகளை மீறி, கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் போராட்டத்தை முன்னெடுத்ததால் தான் இது மற்ற அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது. பயந்து ஓடி நாங்கள் உட்காரவில்லை. அப்படி உட்கார்ந்திருந்தால் இந்நேரம் சாலை அமைத்திருப்பார்கள். எங்களின் வலுவான போராட்டமே இத்தகைய தீர்ப்பு வர காரணம்" என்றார் கவிதா.

ஐயந்துறை, அகில இந்திய விவசாயிகள் மகா சபை, மாவட்டச் செயலாளர்:

"மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்ப்பதற்காக அன்புமணி, தன்னுடைய வெற்றி என சொல்கிறார். ரௌலட் சட்டத்தை விடக் கொடுமையாக அதிமுக அரசு அடக்குமுறையை ஏவியது. அப்படிப்பட்ட அதிமுகவுடன் பாமக இப்போது கூட்டணி வைத்துள்ளது. நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்டோம். மக்களின் போராட்டம் தான் நீதிபதிகளின் கவனத்தை ஈர்த்தது" என்கிறார் ஐயந்துறை.

அடக்குமுறைகளைத் தாண்டி போராடிய உண்ணாமலை உள்ளிட்ட எண்ணற்றை விவசாயிகளின் துணிவுக்குக் கிடைத்த வெற்றியே இந்தத் தீர்ப்பு என்பது தான் இந்த விவசாயிகளின் ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்