சினேகாவும் - பிரசன்னாவும் அமெரிக்காவின் நியூஜெர்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதர்ச தம்பதிகள். அவர்களின் சின்னஞ்சிறு மகள் ரித்திகா குழந்தைக்கே உரித்தான துடிப்புடன் வலம் வருகிறாள். கலகலப்பான அந்தக் குடும்பத்தில், திடீரென நுழைகிறான் ஒரு வில்லன். வீட்டின் சுவரை வெள்ளையடிக்க நியமிக்கப்படும் அந்த ஆள், அவர்கள் வாழ்வில் பூசும் கருப்புச் சாயமும் அதன் நீட்சியாக மொத்தக் குடும்பமும் பயத்தில் உறைவதும்தான் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தின் கதை.
குழந்தைகளைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே. அந்த வகையில் வீட்டினுள் வேலையாளாகப் புகுந்து குடும்பத்தினருடன் அறிமுகமாகும் அந்த பெயிண்டர் எப்படி குழந்தையை தனது இச்சைக்கு பலியாக்கிக் கொள்ள கொடூரமாக முயற்சி செய்கிறான் என்றும் குழந்தை காப்பாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புடனும் படம் நீளும்.
உண்மையில் பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு வீட்டினுள் யாரை அனுமதிக்கலாம் என்பதில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது இந்தத் திரைப்படம்.
இந்தப் படத்தைப் பற்றி தொடக்கத்திலேயே அறிமுகம் செய்யக் காரணம் அண்மையில் நடந்த கோவை சம்பவம். கோவையில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.
இன்று தெருவில் ஓடி விளையாட முடியாத அவல சூழலில்தான் நம் வீட்டுக் குழந்தைகள் உள்ளனர் என்ற நிலையே pedophile எனப்படும் குழந்தைகள் மீது பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்களைப் பற்றி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த உந்தியது.
பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதற்கு ஈடாகவே ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதை நம் சமூகம் கண்டுகொள்வதே இல்லை.
உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 2 முதல் 5% ஆண்கள், குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரப் பழக்கம் கொண்டவர்களாக இருக்கின்றனர் எனத் தெரிகிறது. அதேவேளையில், இத்தகைய கொடூர சிந்தனை கொண்ட பெண்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவே இருக்கிறது என்றும் அந்த சர்வதேச புள்ளிவிவரம் கூறுகின்றது.
முதலில் விழிப்புணர்வு தேவை..
2012-ம் ஆண்டு நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் நம் தேசத்தில் பெண்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த இயலாவிட்டாலும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சோப்பு விளம்பரம் தொடங்கி, ரயில்வே ஆப் வரை பெருகிக் கிடக்கிறது என்பதை உறுதியாகக் கூறலாம்.
ஆனால், இந்த விழிப்புணர்வால் பெண்களின் எச்சரிக்கை உணர்வு அதிகரித்திருக்கலாமே தவிர அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சம்பவங்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை.
கூட்டு பாலியல் பலாத்காரங்களும், சாதிய ரீதியான பாலியல் வன்கொடுமைகளும், காதலிக்க மறுத்தால் உயிருடன் எரித்துக் கொல்வதும், சமூக வலைதளங்கள் வாயிலாகத் தூண்டில் போட்டு பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
இந்த வன்முறைகளுக்கு இடையேதான் தஷ்வந்த் என்ற இளைஞனால் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். காஷ்மீரில் 7 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிறுமி ஒருவர் 17 பேரால் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். அண்மையில் கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
உண்மை நிலவரம் என்னவென்றால் நம் தேசத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மீது இருக்கும் விழிப்புணர்வு போல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக விழிப்புணர்வு இல்லை என்பதே. இந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலேயே குழந்தைகளைச் சுற்றி இருக்கும் ஆபத்து பற்றி பெரியவர்கள் அறிந்து கொள்ளாமல் அஜாக்கிரைதையாக இருந்து விடுகின்றனர். குழந்தைகள் மீதான பலாத்கார வன்முறைகளைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைப் புகார்களாக தெரிவிக்க 4-ல் ஒரு குடும்பம் மட்டுமே முன் வருகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
ஃபீடோஃபைல் என்பவர் யார்?, குழந்தைகளைக் கவர்ந்து இப்படியான கொடூரச் செயல்களில் அவர்கள் ஈடுபடக் காரணம் என்ன? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? அவர்களுக்கான சிகிச்சை என்ன? பெற்றோரின் கடமை என பல்வேறு கேள்விகளுக்கு மனநல மருத்துவர் அசோகன் 'இந்து தமிழ் திசை'க்காக ஆழமாகப் பதிலளித்துள்ளார்.
ஃபீடோஃபைல் என்பவர் யார்?
13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளைப் பாலியல் இச்சைகளுக்கு உட்படுத்தி மகிழும் நபரைத்தான் ஆங்கிலத்தில் ஃபீடோஃபைல் என்கின்றனர். ஃபீடோஃபைலை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தால் குழந்தைகளைப் புணரும் நபர் என்றே பொருள்படுகிறது.
பொதுவாக பாலியல் வக்கிரங்கள் கொண்ட நபர்களை பாலியல் நெறிபிறழ்வு (paraphilic) நபர் என்பார்கள். ஃபீடோஃபீலியாவும் அப்படியொரு பாலியல் நெறிபிறழ்வுதான். இவர்களுக்கு ஒரு குழந்தையைப் பார்க்கும்போது அது தங்கள் காம இச்சைக்கான இரையாகவேத் தெரியும். காமம் கட்டுக்கடங்காமல் பீறிடும். பதற்றம் ஏற்படும். அசாதாரணமாக உணர்வார்கள். அவர்கள் யாரைக் குறி வைக்கிறார்களோ அந்தக் குழந்தையை அடையும்வரை இந்தப் பதற்றம் அவர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். உலகிலேயே அமெரிக்காவில்தான் இத்தகைய ஃபீடோஃபீலியாக்கள் அதிகமானோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வகை மனநோய் பரம்பரையாக கடத்தப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும்கூட அதனை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்த இயலவில்லை. இன்னொரு ஆய்வில், இடதுகை பழக்கம் உடையவர்கள் ஃபீடோஃபீலிக் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஃபீடோஃபைல்களைப் பார்த்தவுடன் அடையாளம் காண இயலாது. இந்த நோய் உள்ளவர்கள் சமூகத்தில் நன் மதிப்பு பெற்றவராகக் கூட இருக்கலாம். டாக்டர், வழக்கறிஞர், போலீஸ், பொறியாளர் என எந்த வேலை செய்பவரும் இருக்கலாம். படித்தவர், படிக்காதவர். கூலி வேலை செய்பவர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நம்மைப் போலவே அவர்களின் தோற்றம் இயல்பாகத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு இடையே ஒரே ஒரு ஒற்றுமை இருக்க வாய்ப்பிருக்கிறது. இவர்கள் சிறு வயதில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருக்கலாம்.
சிறு வயதில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் இரண்டு விதமான பிரச்சினைகளுடன் வளர வாய்ப்பிருக்கிறது. ஒன்று ஆளுமைப் பிரச்சினை ஏற்படும். தாழ்வு மனப்பாண்மை கொண்டவர்களாக உருவாகலாம். இன்னொன்று நான் ஏமாற்றப்பட்டவன் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருப்பதால் தான் பட்ட துன்பத்தை மற்றவர்களுக்கும் கடத்தப் பார்ப்பார்கள். பாலியல் துன்புறுத்தல் என்றால் அதே துன்புறுத்தலை மற்றவர்களுக்குச் செய்வார்கள்.
எப்படி அடையாளம் காண்பது?
இவர்களை அவ்வளவு எளிதாக இனம் காண முடியாது. ஏதோ சிறுமியிடம் சில்மிஷம் என்று சிக்கிக் கொண்டவரைக் கூட இவரா! அப்படிச் செய்திருக்க மாட்டார்? என்றே நம்மை முதலில் நினைக்க வைக்கும் அளவுக்கு நாமறிந்த நல்ல மனிதராக அவர் இருந்திருப்பார். ஆனால், அவருடைய செல்பேசியையோ, அவரது கணினியையோ சோதித்துப் பார்த்தால் சைல்டு போர்னோகிராஃபி படங்களே அதிகமாக இருக்கும். மேலும், இத்தகைய நபர்கள் குழந்தைகளுடன் அதிக நெருக்கம் காட்டுவார்கள். எப்போதும் தன்னைச் சுற்றி குழந்தைகளை வைத்துக்கொள்வார்கள். குழந்தைகளின் நம்பிக்கைக்குரிய நபராக தன்னை மாற்றிக் கொள்வார். அதற்காக குழந்தைகள் சூழ இருக்கும் அனைவருமே இத்தகைய குரூர மனம் கொண்டவர் என்று அர்த்தமில்லை.
ஃபீடோஃபீலியாக்கள் குழந்தைகளிடம் காட்டும் நெருக்கத்தை அன்பை, அக்கறையை வளர்ந்த நபரிடம் காட்ட மாட்டார்கள். வளர்ந்த நபர்களிடம் இன்ட்ரோவர்ட்டாகவும் (ஒட்டாமல் இருப்பவர்) குழந்தைகளிடம் மட்டும் எக்ஸ்ட்ரோவெர்ட் போலவும் (கலகல என்று பேசுபவராக) இருப்பார்கள். இதுதான் இவர்கள் மீது நாம் எச்சரிக்கை உணர்வு கொள்வதற்கான முதல் அறிகுறி.
ஏன் குழந்தைகள் மட்டும்..
ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இவர்களுக்கு குழந்தைகள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் பாலியல் நெறி பிறழ்வு இருப்பதோடு பாலியல் உறவு சார்ந்த தாழ்வு மனப்பான்மையும் இருக்கும். தன் வயதுக்கு நிகரான பெண்ணுடன் உறவு கொள்ளும்போது தனது பாலியல் திறனைப் பற்றி அந்தப் பெண் விமர்சித்துவிட்டால், தன்னால் ஒருவேளை அந்தப் பெண்ணை திருப்தி செய்ய இயலாவிட்டால் என்ற தாழ்வு மனப்பான்மை இவர்களுக்கு இருக்கும். அதனாலேயே இவர்கள் பாலியல் இன்பம் என்ன? அதன் உச்சம் என்னவென்று தெரியாத குழந்தைகளைக் குறிவைக்கின்றனர்.
இவர்கள் முதலில் குழந்தையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். அந்தக் குழந்தை தன் மீது பாலியல் சீண்டல்கள் நடத்தப்படும்போது அதுவும் அன்பின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொள்ளும். சில நேரங்களில் இத்தகைய நபர்கள் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்து அவர்களை தங்கள் வசப்படுத்திக் கொள்கிறார்கள்.
பரிசுகளுக்கு மயங்காத சற்றே வளர்ந்த குழந்தை என்றால் மிரட்டலைக் கையில் எடுப்பார்கள். வீட்டில் சொன்னால் அப்பா, அம்மாவுக்கு பிரச்சினை வரும் என்று எச்சரிப்பார்கள்.
சில நேரங்களில் மூட நம்பிக்கையால்கூட குழந்தைகளை வன்புணரும் குற்றங்கள் நடக்கின்றன. குழந்தையுடன் உறவு கொண்டால் தனது ஆண்மை அதிகரிக்கும் என்று சொல்லியதால் குழந்தையை வன்புணர்வு செய்த குற்றவாளிகளும் இருக்கின்றனர். மாந்தரீகம் செய்பவர்கள் இப்படிச் செய்ததும் உண்டு.
குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளில் சமீபகாலமாக கூட்டு பலாத்காரம் எனும் கொடுமை அரங்கேற்றப்படும் போக்கு அதிகரித்துள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாக உள்ளது.
ஒரு குற்றத்தை கூட்டாக செய்யும்போது பிரச்சினை வந்து சிக்கினால் எல்லோரும்தான் சிக்குவோம் என்ற மனநிலையில் இதனைச் செய்கின்றனர்.
இவர்களுக்கான சிகிச்சை என்ன?
மற்ற உளவியல் பிரச்சினை போலவோ அல்லது மற்ற பாலியல் நெறி பிறழ்வு நோய்கள் போலவோ ஃபீடோஃபைல்களை சிகிச்சைக்கு உட்படுத்த இயலாது. இவர்கள் தாங்களாகவே வெளியே வந்து தங்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறது அத்துடன் குற்ற உணர்வும் இருக்கிறது.
சிகிச்சை தேவை என்று கூறும்வரை அவர்களை நம்மால் அடையாளம் காண இயலாது. அப்படியே அவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைத்தாலும் மருந்து மாத்திரைகளால் பலன் இருக்காது. ஆரம்பத்தில் இவர்களுக்கு டெஸ்டோஸ்டீரான் சுரப்பதைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதனால் பெரிய பலன் கிடைக்கவில்லை.
இவர்களுக்கு Cognitive Behaviour Therapy எனப்படும் எண்ண மாற்று சிகிச்சையே சரியானது. இவர்களுடன் தொடர்ந்து பலமுறை பேச வேண்டும்.
ஒரு சைல்டு போர்னோகிராஃபியைப் பார்க்கும்போது அதிலிருந்து ஆனந்தம் பெறுவதற்குப் பதிலாக அதை வேறு ஏதோ ஒரு அருவருப்புக்கு ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்வோம். ஒவ்வொரு நபருக்கு அருவருப்பின் எல்லை வேறாக இருக்கும். சிலருக்கு காலில் மலத்தை மிதிப்பது மிகுந்த அருவருப்பாக இருக்கும். சிலருக்கு வாந்தி எடுப்பது அருவருப்பாக இருக்கும். அந்த நபருக்கு எது அருவருப்பு தருமோ அதையே அந்த மாதிரியான சிந்தனை வரும்போது நினைத்துக்கொள்ளத் தூண்டுவோம்.
ஆனால், ஃபீடோஃபைல்களின் காமவெறியைக் கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் அந்த நபருக்கு அப்படியொரு எண்ணம் வரலாம். அந்த நபர் அருகாமையில் குழந்தைகள் நெருங்காமல் பார்த்துக் கொள்வது நலம். மேலும், அவருக்கு ஈடான வயதில் எப்போதும் ஒரு பெண் துணை இருப்பது அவரது பாலியல் உந்துதலுக்கு வடிகாலாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலுமே பாலியல் வக்கிரக்காரர்களில் இத்தகைய ஃபீடோஃபைல்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.
பெற்றோருக்கான அறிவுரை..
உங்கள் பிள்ளைகளின் நலனைக் காட்டிலும் நீங்கள் சம்பாதிக்கும் பணமோ, புகழோ பெரிது அல்ல. எப்போதும் குழந்தைகள் எளிதில் அணுகக்கூடிய அளவில் இருங்கள்.
அவர்களுடைய நம்பிக்கைக்குரிய முதல் நபராக இருங்கள். நாம் ஏன் ஆடை அணிகிறோம். நம் ஆடையை எங்கு கழற்றலாம், ஆடையை அடுத்தவர் நீக்க அனுமதிக்கலாமா என்றெல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
பள்ளிகளிலும் பாலியல் சீண்டல்கள் குறித்து குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது அவசியம். குடும்பத்துடன் உணவகம் சென்று சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு குழந்தை வாஷ் பேசினில் கை கழுவச் சென்று வரும் நேரத்தில் அதற்கு பாலியல் தொந்தரவு நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் எப்போதுமே குழந்தை மீது மட்டுமே உங்கள் கவனத்தை வைத்திருங்கள்.
எந்த அவசரமாக இருந்தாலும் குழந்தைகளை மிகுந்த நம்பிக்கைக்குரியவர்கள் அல்லாத நபரின் வீட்டில் விட்டுச் செல்லாதீர்கள். தன் மீது அதீத அக்கறை காட்டும் அந்நியர் பற்றி உடனே பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள். ஒருவேளை பாலியல் அத்துமீறல் நடந்துவிட்டால் எந்த அச்சமும் தயக்கமும் இல்லாமல் பெற்றோரிடம் சொல்லச் சொல்லுங்கள். அத்துமீறும் நபர் அப்பா, சித்தப்பா, தாத்தா, மாமா, வாத்தியார் என யாராக இருந்தாலும் அச்சப்படாமல் சொல்லச் சொல்லுங்கள்.
விரைந்து தீர்ப்பு வழங்குங்கள்..
இந்தப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நேரத்தில் உளவியல் சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும் இத்தகைய குற்றங்களை ஃபாஸ்ட் ட்ராக் நீதிமன்றங்களில் விசாரிப்பது நல்லது. குற்றவாளிகளுக்கு விரைந்து வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமையும்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் குறைந்தபட்ச ஆறுதலாவது கிடைக்கும். இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது. நான் பார்த்த வரையில் பாலியல் பலாத்காரங்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை போலீஸில் புகாராகப் பதிவதில் வட இந்தியா சற்றே முன்னேறியிருக்கிறது. தென்னிந்தியாவில் இன்னும் தயக்கம் இருக்கிறது. இந்தத் தயக்கம் உடைபட வேண்டும்'' என மருத்துவர் அசோகன் கூறினார்.
தயக்கம் என்ன?
சினிமா துணை நடிகையும் எனது தோழியுமான செம்மலர் அன்னம் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்த வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. 9 ஆண்டுகளுக்கு முன் அவர் எடுத்திருந்த குறும்படம் ஆழமான கருத்தைக் கொண்டிருந்தது.
மது என அந்தக் குறும்படத்திற்கு அவர் பெயர் வைத்திருந்தார். அவரிடம் பேசியபோது, ''9 ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் ஒரு குழந்தைக்கு நேர்ந்த கொடூரத்தைத்தான் நான் படமாக்கியிருந்தேன். குடிப்பழக்கம், உடைந்த குடும்பங்கள் குழந்தைகளை எப்படி எளிய இரையாக்கிவிடுகிறது என்பதை சொல்ல விழைந்தேன்.
இப்போது கோவையில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்தது. காலங்கள் நகர்ந்தாலும் குழந்தைகள் இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் அந்த குறும்படத்தைப் பகிர்வதால் யாரேனும் ஒரு சிலருக்காவது விழிப்புணர்வு ஏற்படாதா என்ற நோக்கத்திலேயே பகிர்ந்தேன்.
இப்போது இன்னும் ஆழமாக ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆரம்பத்தில் நானும் குழந்தைகளிடம் காமத்தைக் கிளறும் விஷயம் என்ன இருக்கிறது? என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போதுதான் இது சில ஆண்களின் மனநோய் எனத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
படித்த பெண்களுக்கே குழந்தைகளுக்கு வீட்டில் பாலியல் கல்வியறிவைப் புகட்டத் தயக்கம் இருக்கிறது. அப்படியென்றால் கிராமப் பெண்கள் எப்படி பேசுவார்கள் என்ற கேள்வி இருக்கிறது. எனவே, அந்தத் தயக்கத்தை உடைக்கும் விதமாக ஒரு விழிப்புணர்வு குறும்படம் எடுக்க விரும்புகிறேன். பெண் பிள்ளைகளிடம் தயக்கமின்றிப் பேசுவது எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியது. இரண்டும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் நடைபெற வேண்டும்.
குழந்தைகளுக்கு விஷமிகளை அடையாளம் காண கற்றுக் கொடுக்க வேண்டும். இவற்றை சொல்லித்தரும்போது அவர்களின் தேவைக்கு அதிகமானதை சொல்லிவிடவும் கூடாது. ஒரு கத்தியைப் போல் கவனமாகக் கையாள வேண்டும்'' என்றார் செம்மலர் அன்னம்.
பாலியல் வக்கிரங்கள் மிகுந்து கொண்டிருக்கும் சமூகத்தில்தான் நாம் வாழ வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுவிட்ட சூழலில் பாலியல் கல்வியை வீட்டிலிருந்தே புகட்டுவதுதான் நம் பக்கத்து வீட்டிலோ அல்லது நம் வீட்டினுள்ளேயோ மறைந்திருக்கும் விஷமிகளிடமிருந்து குழந்தைகளைத் தற்காக்கும் ஒரே வழியாக இருக்க இயலும்.
உங்களில் யாரேனும் ஒருவருக்கு இப்படி ஒரு கீழ்மையான இச்சை இருக்குமேயானால் மனிதராய் பிறந்ததன் மாண்பை உணர்ந்து ஏதாவது ஒரு மருத்துவரின் உதவியை உடனே நாடுங்கள். குழந்தைகளுக்கான உலகத்தை அவர்களிடமிருந்து பறிக்காதீர்கள்.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago