பிரபல நடிகர் அவர். சினிமா விழாவுக்கான மேடையில் ஒரு நாள் தொகுப்பாளினியைப் பார்த்து.. "இந்தக் கருமத்தை எல்லாம் கூட்டிட்டு வந்து பேச வெச்சிருக்கீங்க. அழகு மட்டும் போதாது அறிவும் வேண்டும்" எனப் பேசுகிறார். அதைப் பார்த்த சிலர் சிரித்தனர். மேடையில் ஒரு பெண்ணை இப்படியா பேசுவது என அந்த நடிகரின் செயல்பாடு குறித்து விமர்சித்தனர். அப்புறம் அதை சமூகம் மறந்துவிட்டது.
அதே போன்றதொரு திரை நிகழ்ச்சியில் நடிகை தன்ஷிகா தனக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டார் என்பதற்காக டி.ராஜேந்தர் அவரை சரமாரியாக வசை பாடினார். தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கோரியும் அவர் விடுவதாக இல்லை. அதற்கும் நாமெல்லாம் பொங்கி எழுந்து பின் தூங்கச் சென்றுவிட்டோம்.
'கொலையுதிர் காலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைச் சருகுகள் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பட்டியலிடும்போது வார்த்தை வான்முறையை பெரும்பாலும் நாம் கணக்கில் கொள்வதே இல்லை. சமூகத்தின் அந்தப் பாராமுகம் தான் ராதாரவி, டி.ராஜேந்தர் போன்றவர்களை மீண்டும் மீண்டும் இப்படியான வன்முறைப் பேச்சை தைரியமாக முன்வைக்கச் செய்கிறது.
ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு இதுதான்..
"நயன்தாரா நல்ல நடிகை, அவர் இவ்வளவு நாட்கள் திரையுலகில் நிலைப்பதே மிகவும் பெரிய விஷயம். ஏனென்றால் அவரைப் பற்றி வராத செய்திகளே கிடையாது. அதெல்லாம் தாண்டி அவர் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை நான்கு நாட்கள் மட்டுமே நியாபகம் வைத்திருப்பார்கள். பின்னர் விட்டுவிடுவார்கள். நயன்தாராவே ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார், இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார்.
இப்போதெல்லாம் யார் வேண்டுமானாலும் சீதாவாக நடித்துவிட முடிகிறது. முன்பு சாமி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைத்தான் தேடுவார்கள். அவரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், அதற்கு நேர்மாறாக இருப்பவர்களும் (கூப்பிடத் தோன்றுபவர்களும்) நடிக்கலாம்"
சபை நாகரிகம் என்பதெல்லாம் மறந்து இப்படியும்கூட பேச முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு சற்றும் கூச்சமில்லாமல் பேசிவிட்டு கூட்டத்தில் இருந்தவர்களின் கைதட்டையும் பெற்றார் ராதாரவி.
ராதாரவி மற்றும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியவரா? இல்லை கைதட்டிய அத்தனை பேருமா?இவர்களுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தக் கேள்வியை ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
ஹேட்ஸ் ஆஃப் சொல்ல வைக்கும் திரைத்துறை அக்கறை:
ராதாரவி தொகுப்பாளினி நிஷாவை விமர்சித்தபோது எழாத கோபம், ராஜேந்தர் தன்ஷிகாவை திட்டியபோது வராத வேகம், மீ டூவுக்காக சின்மயி கார்னர் செய்யப்பட்டபோது துடிக்காத புஜங்கள், நயன்தாராவை விமர்சித்த போது வந்திருக்கிறது. அவசியமான, நியாயமான கோபாவேசங்கள்தான்.
ராதாரவிக்கு எதிராக நயன்தாராவின் நண்பர் விக்னேஷ் சிவன் தொடங்கி விஷால், சித்தார்த் வரை கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இப்படித்தான், அண்மையில், பொள்ளாச்சி சம்பவத்தைத் தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனக் குரல்களைப் பதிவு செய்தனர்.
நடிகர் சூர்யா, "பாலியல் வன்முறையை விட ஆபத்தானது. பெண்களுக்கு எதிராக நம் சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியல் வன்முறை என்பதை உணருவோம்" என்றார்.
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரா கேக்கலை. ரெண்டு பொண்ணுங்களோட அப்பாவாக் கேக்கறேன் என பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்தார். இந்தப் புரிதல், இவர்கள் காட்டும் சமத்துவம் எல்லாம் ஒருபுறம் ஹேட்ஸ் ஆஃப் என்று சொல்ல வைக்கிறது.
ஆனால்.. எங்கிருந்து வந்தது தெரியுமா?
ஆனால், டி.ராஜேந்தர்களும், ராதாரவிகளும் இப்படி பேசிக் கொண்டிருக்கும் துணிச்சல் எங்கிருந்து வருகிறது என்று ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அதே திரைத்துறையில் இருந்துதான் வருகிறது என்பது புரியும்.
ஆங்கிலத்தில் 'டேக் இட் ஃபார் கிராண்டட்' (take it for granted) என்ற சொற்றொடர் உண்டு. அதாவது, தான் விரும்பும்படி, தனக்குத் தோதான வகையில் இன்னொரு நபர் நடக்க வேண்டும். எப்போதுமே அப்படி நடக்க வேண்டும். எவ்வளவு தரக்குறைவாக நடத்தப்பட்டாலும்கூட அந்த நபர் அப்படியே நடக்க வேண்டும்" என்ற மனோபாவத்தைக் கூறும் சொற்றொடர் அது.
திரைத்துறை எப்போதுமே பெண்களை 'take it for granted' பார்வையில்தான் அணுகிக் கொண்டிருக்கிறது.
இதில் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என்றெல்லாம் பேதம் கிடையாது. மீ டூ உருவானது ஹாலிவுட்டில் உள்ள பாலியல் அத்துமீறல்களைச் சொல்லத்தான் என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
சினிமா பாடல் வரிகளில், சினிமா வசனங்களில் வார்த்தை வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் சினிமா விழா மேடைகளில் நடக்கும் வன்முறைக்கு மட்டும் கொந்தளித்தால் அது நியாயமாகுமா? நோய்நாடி நோய்முதல் நாடி என்ற குறள் சொல்வதுபோல் திரைத்துறையில் இருக்கும் ஆணாதிக்க நோயைச் சரிசெய்தால் அல்லவா திரைப் பிரபலங்களிடம் இந்த நோய் தீரும்.
கருத்தியல்களைக் கற்பிக்கும் சினிமா:
பெண்ணின் மீதான கருத்தியல்கள் சமூகத்தில் இவ்வளவு ஆழமாகக் கட்டமைக்கப்பட சினிமாவும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை ராதாரவிக்கு எதிராக, பொள்ளாச்சி சம்பவத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திரைப் பிரபலங்கள் நியாயமாக ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஹாலிவுட் தரத்தில் சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாலும்கூட ஆணாதிக்கம் புரையோடிய துறை என்ற நீண்ட கால அடையாளத்தை அழிக்க முடியாமல் இருக்கும் சினிமாத் துறை முழுவதுமாக மாற வேண்டும்.
சினிமாவை மட்டும் ஏன்?
சமூகத்தில் ஏதேனும் கொடூர சம்பவம் நிகழும்போது சினிமாவைப் பார்த்துதான் என்றும் ஒரு சைக்கோ திரைப்படம் வெளியாகும்போது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் என்றும் பரஸ்பரம் சமூகமும் சினிமாவும் மாறி மாறி கைகாட்டிக் கொள்கின்றன. நிழல் நிஜமாகிறதா? நிஜம் நிழலாகிறதா? என்று ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் நிழலில் தாக்கம் நிஜத்தின் மீது அதிகமாகவே இருக்கிறது என்று மட்டும் பதில் சொல்ல முடியும்.
இப்படிச் சொல்லும்போதெல்லாம், அது என்ன.. எது நடந்தாலும் சினிமாவையே குறை சொல்கிறீர்கள்? சினிமாவில் எத்தனையோ நல்ல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதனைப் பார்த்தும் யாருமே ஊக்கமடைவதில்லையா? என்ற எதிர் கேள்வி வருகிறது. நிச்சயம் அதுவும் நடந்திருக்கிறது.
ஆனால், பெண்களைப் பின் தொடர்வதையும், அவளுக்கு விருப்பமே இல்லாவிட்டாலும் அவளைக் காதலிக்க வைத்து டூயட் பாடுவதும், ஜில், ஜங், ஜக் என்று பெண்ணை அழகில் பேரில் ரகம் பிரிப்பதும், ஏ கருவாச்சி வாய மூடு என்று சர்வ சாதாரணமாய் நிற பேதம் காட்டுவதும் போன்ற செய்கைகளை ஹீரோயிஸமாகக் காட்டும் சினிமா மோசமான ஸ்டாக்கர்களை உருவாக்கத்தானே செய்யும். அவர்கள் நிச்சயமாக அது தவறு என்றே உணராமலேயே செய்வார்கள். தங்கள் தலைவரைப் போல் நடப்பார்கள், அடிப்பார்கள், குடிப்பார்கள்.
இப்படியாக, சினிமா பெண் மீது பெண்ணின் உடல் மீது ஆயிரக்கணக்கான கருத்தியல்களைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. அதனால்தான் சினிமாவை அடிக்கடி மேற்கோள்காட்ட வேண்டியிருக்கிறது.
இவள் தான் பெண் என்று சினிமாவில் நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும்வரை இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்.
ஆனால், அந்த பழைய கருத்தியல்களை சிலர் மட்டும் மெல்ல மெல்லக் கட்டுடைத்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இதே சினிமாவில்தான் நயன்தாராவை அறம் பேச வைத்த கோபி நயினாரும், ஜெஸ்ஸி தனது காதலை புறக்கணித்தாலும் அவளைக் கண்ணியமாக நடத்தும் கார்த்திக்கை படைத்த கவுதம் மேனனும் இருக்கின்றனர். இது ஆறுதல் சம்பவங்கள் நமக்கு தேவை மாறுதல்.
பெண்களை அடிமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் போகப்பொருளாகவே மட்டும் காட்டும் கதைகளைப் புறக்கணிக்க, பாடல் வரிகளை, வசனங்களை நிராகரிக்க இப்போது கண்டனங்களை பதிவு செய்யும் மாஸ் ஹீரோக்களும் இயக்குநர்களும் முன் வர வேண்டும்.
பாலின சமத்துவத்தினை தனிப்பட்ட வாழ்வில் பழகும் திரை பிரபலங்கள் திரைத்துறை இனியும் பெண்களுக்கு எதிரான கருத்தியல்களை உருவாக்காமல் தடுக்க உதவ வேண்டும். சக பெண் தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது அதனைத் துணிவுடன் தட்டிக் கேட்க வேண்டும். திரைப்படங்களில் ஆணாதிக்கம் இல்லாமல் போகும்போதுதான் திரை பிரபலங்களிடமும் அது இல்லாமல் போகும்.
சபாஷ் நயன்தாரா!
ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு ஊடக கவனத்துக்கு வந்த உடன் உங்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டது ராதாரவியின் மலிவான உத்தியையும் குறிப்பிடட்டது உங்கள் துணிச்சலைக் காட்டுகிறது.
பிரபலங்கள் பார்வையில்..
இந்தச் சம்பவத்தை ஒட்டி பெண் பிரபலங்களிடம் கருத்து கேட்டபோது, நடிகை குஷ்பு ட்விட்டரில் நான் குறிப்பிட்டிருந்ததுதான் எனது நிலைப்பாடு என்றார்.
குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டது இதுவே. "தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்"
நடிகை ரோகிணியிடம் கேட்டபோது, எங்களிடம் கருத்து கேட்டு எழுதுவதைவிட ராதாரவியைப் பற்றி எழுதுங்கள். இந்தப் பிரச்சினை நீர்த்துப்போகவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
இன்னொரு ஆண் இயக்குநரிடம் கேட்டபோது, ராதாரவியை விடுங்கள்.. தேர்தல் வேலை இருந்தால் பாருங்கள் என்றார். இல்லை சார், சினிமாவில் காலம் காலமாக பெண்களை காட்சிப்படுத்தும் விதமும் இதற்குக் காரணம்தானே என்று கேட்டால் போர் அடிக்கிறது என்று கூறிமுடித்தார்.
சின்மயியின் சீற்றம்..
சினிமாவில் வசனம் எழுதி கதை எழுதி கருத்து சொல்லி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் எனப் பேசுபவர்கள் முதலில் திரைத்துறையில் இருக்கும் குப்பையைச் சுத்தம் செய்ய வேண்டாமா? இருக்குமிடத்தில் இருக்கும் குப்பைகளை அகற்றாமல் சமுதாயத்துக்கு இவர்கள் என்னச் செய்யப் போகிறார்கள். அரசியலில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை என்றார் சின்மயி.
ஒற்றுமையுடன், ஓய்ந்துவிடாமல் எதிர்ப்பு தெரிவியுங்கள்..
ராதாரவியின் சர்ச்சைப் பேச்சை ஒட்டி உளவியல் நிபுணர் டாக்டர். அபிலாஷாவிடம் பேசினோம். அந்தப் பேச்சை நானும் கேட்டேன். அது முழுக்க முழுக்க ஆணாதிக்கப் பார்வையைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. ஆணாதிக்கத்துக்கான பொருத்தமான உதாரணம் என்றுகூட சொல்லலாம்.
இது சினிமாத் துறையில் மட்டுமல்ல ஐடி, கார்ப்பரேட் என எல்லா துறையிலும் இருக்கிறது. பெண்கள் வேலைக்கு வருவதும் வேலையில் சாதிப்பதும் அவ்வளவு சாதாரணமானது அல்ல. வீட்டையையும் வேலையையும் சமன் படுத்திக் கொண்டுதான் அவர்கள் வெளியே வரவேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் உடன் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்கள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்காவிட்டாலும் அவர்கள் உற்சாகத்தைச் சிதைக்காமல் இருக்கலாம்.
ஆனால், அதற்கு சிறு வயதிலிருந்தே பாலின சமத்துவத்தை ஊட்ட வேண்டும். அடுத்த தலைமுறையாவது பாலின பேதமற்றதாக உருவாகுவதில் அதிக கவனம் செலுத்துவோம்.
அதேபோல் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் பெண்கள் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கும் அலுவலகத்தில் ஒரு பெண்ணுக்கு இடையூறு என்றால் பெரும்பாலான நேரங்களில் மற்றொரு பெண் மவுனியாகவே இருக்கிறார். காரணம் அவரது சூழ்நிலையாகக் கூட இருக்கலாம்.
இந்த வேலை இல்லாவிட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சமாக இருக்கலாம். இந்த அச்ச உணர்வுதான் இப்படி வன்முறை செய்பவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது.
மீ டூ நீர்த்துப் போகவும் இந்த அச்சமும் ஒற்றுமையின்மையும்தான் காரணம்.
எப்போதாவது ஒரு சம்பவம் நடைபெறும்போது மட்டும் பெண்களுக்கான குரல் ஒலிக்காமல் எப்போதுமே ஒலிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக பெண்கள் ஒன்றிணைந்து பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். மாற்றம் நிகழ முயற்சி நீடித்ததாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அபிலாஷா கூறினார்.
நீர்த்துப் போகக்கூடாது..
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் பிரச்சினை வரும்போது மட்டும் அதனைப் பேசிவிட்டுக் கடந்து செல்லாமல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். சட்டங்கள் வலிமையாக்கப்பட வேண்டும். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
நெட்டிசன்கள் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் பொள்ளாச்சி டிஸ்சார்ஜ் தேர்தல் அட்மிட் என்ற பாணியில் அரசியல் பார்வையாளர்களாக எல்லோருமே மாறிவிட்டனர்.
பொள்ளாச்சி கொதிப்பு எத்தனை நாளுக்குத்தான் தாக்குப்பிடிக்கிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தபோதுதான் ராதாரவி அட்மிட் ஆக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால் அதற்கான முன்னெடுப்புகள் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும். ஆனால், இங்கு பிரச்சினையே அப்படி நீர்த்துப் போவதுதான்.
இன்னும் ஒரு சில நாட்கள் மட்டும் பேசித் தீர்க்காமல், திரைத்துறையில் பொறுப்பில் இருப்பவர்கள் உள்ளிருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இது பொள்ளாச்சி சம்பவத்துக்கு குரல் கொடுத்த கமல், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் போன்றோருக்கும், ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்த விஷால், சித்தார்த் இன்னும் பிற நடிகர்களுக்குமான கோரிக்கை.
தங்களுக்கான உரிமையை கேட்டுப் பெறுவதில் நடிகைகள் முதிர்ச்சியும் துணிச்சலும் காட்ட வேண்டும். சக நடிகைக்கு பிரச்சினையென்றால் ஒதுங்கிப் போகாமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஒரு பிரபல மனநல மருத்துவரின் ஃபேஸ்புக் இடுகையில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.. "பெண்கள் தூற்றப்படுவது அநியாயம் மட்டுமல்ல, கேவலம். ராதாரவி போல் யாராயினும் அது ஒரு கீழ்மையின் வெளிப்பாடுதான்". இந்தக் கட்டுரை ராதாரவிக்கு மட்டுமல்ல.
-bharathi.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago