பெற்றதும் கற்றதும்: வாருங்கள், மகப்பேறு அறிவோம்

By க.சே.ரமணி பிரபா தேவி

| மனித குலம் தொடர்ந்து தடையில்லாமல் இயங்கக் காரணம் மகப்பேறு. அதில் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், கர்ப்ப காலம், பிரசவ ஆலோசனைகள், குழந்தை வளர்ப்பு குறித்து முழுமையாக அலச முயற்சிக்கும் தொடர் |

ஸ்வாதிக்கு 24 வயது. என் அத்தைப் பெண். அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் அவளுக்கு. பெரும்பாலும் பட்டினியாகவே இருப்பாள். ஜூஸ், பழவகைகள்தான் அவளின் உணவு. திருமணமாகியும் அவளின் எண்ணங்கள் மாறவில்லை. ''கடவுள் புண்ணியத்தால இன்னும் குழந்தை இல்ல'' என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறாள்.

செல்வி என் ஊர்க்காரி. பால்யகாலத் தோழி. வறுமையின் காரணமாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தினாள். அம்மா இல்லை. அப்பா அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார். இளம் வயதிலேயே கல்யாணம், மாமியார் வீட்டில் பிழிந்தெடுக்கும் வேலை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் செல்விக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

கல்லூரியில் உடன் படித்தவள் மதுமிதா. ஒன்றாக அறையைப் பகிர்ந்திருக்கிறோம். கொஞ்சம் இல்லை நன்றாகவே பருமனாக இருப்பாள். உடற்பயிற்சியிலோ, விளையாட்டிலோ ஆர்வம் இல்லாதவள். உணவுப் பிரியை. அப்பா ராணுவம் என்பதால் எல்லா மாநில உணவுகளும் பரிச்சயம். 3 ஆண்டுகளுக்கு முன்னால் திருமணப் பத்திரிகை அனுப்பி இருந்தாள். போன வாரத்தில் பேசினேன். குழந்தைக்காகக் காத்திருப்பதாகச் சொன்னாள்.

அலுவலகத் தோழி விஷ்ணுப்பிரியா. பயங்கர ஷார்ப். மற்றவர்கள் ஒரு மணிநேரம் எடுத்துக்கொள்ளும் வேலையை அரை மணியில் முடித்துவிடுவாள். சிரித்த முகம். மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் முகம் வலியால் சுண்டிப் போகும். திருமணமான பிறகு, முதல் முறை பீரியட்ஸ் தள்ளிப் போனபோது அத்தனை சந்தோஷப்பட்டாள். ஆனால் காரணம் கருவல்ல, கட்டி என்று தெரியவந்தபோது அவளது அழுகையை அடக்க முடியவில்லை.

இவர்கள் எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை மகப்பேறு இல்லாததுதான்.

ஸ்வாதியும் செல்வியும் மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள். ஸ்வாதிக்கு அழகியலில் நாட்டம் அதிகமானதால் உணவில் ஆர்வம் இல்லை. செல்விக்கு ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதில்லை; அதைப்பற்றி யோசிக்கவும் நேரம் இல்லை.

மதுமிதாவுக்கும் விஷ்ணுப்பிரியாவுக்கும் பருத்த உடல் அமைப்பு. மதுவுக்கு உடல்வாகில் பிரச்சினை. விஷ்ணுப்பிரியாவுக்கு இன்றைய பெண்கள் அதிகம் எதிர்கொள்ளும் பிசிஓடி (Polycystic ovaries) காரணம்.

காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் நான்கு பேரும் குழந்தை இல்லை என்ற ஒற்றைப் புள்ளியில் சந்திக்கின்றனர். இதற்கு என்ன தீர்வு?

ஒரே வயதில் இருக்கும் இரண்டு பேருக்கு ஒரே நோய் என்றாலும், இருவருக்குமான மருத்துவம் தனித்தனியாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்து. அப்படியிருக்க, இவர்களுக்கான சிகிச்சை முறையும் வேறுபடும். 

இதற்கு  உணவுப் பழக்க வழக்கம், குடும்பம் மற்றும் வேலை சூழல், மன அழுத்தம், உடற்பயிற்சிகள் இல்லாத உடல் இயக்கம் போன்ற பல கூறுகள் காரணமாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இவற்றை எப்படிச் சரிசெய்யலாம்?

தாய்மை ஒரு வரம்

பெண்களின் வாழ்க்கையை குழந்தை பிறப்பதற்கு முன், குழந்தை பிறந்த பின் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

அந்த அளவுக்கு ஒரு பெண், தனக்குக் குழந்தை பிறந்த பிறகு உடல் அளவிலும் மன ரீதியிலும் மாற்றங்களை எதிர்கொள்கிறாள். பிறந்த வீட்டில் செல்ல இளவரசியாக இருக்கும் சுட்டிப்பெண், திருமணமான உடனே பொறுப்பான மனைவியாகவும் மருமகளாவும் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மெல்ல மெல்ல புகுந்த வீட்டுக்குள் தன்னைப் புகுத்திக் கொள்கிறாள்.

அடுத்த பரிமாணம் கர்ப்பம் உறுதியாகும்போது உருவாகிறது. அதைச் செய்யாதே, இப்படி நட, இதைச் சாப்பிடு, அவற்றைப் பார்க்காதே என்ற அன்புரைகளால் அவளில் சுயம் மெல்ல மாறத் தொடங்குகிறது. தனக்காக அல்லாமல், தன் குழந்தைக்காக, தன்னால் ஜனிக்கும் உயிருக்காக யோசிக்க ஆரம்பிக்கிறாள், சாப்பிட ஆரம்பிக்கிறாள், அதற்காகவே வாழத் தொடங்குகிறாள்.

கர்ப்பம் உறுதியானவுடன் அதைச் செய்யக்கூடாது, இதைப் பார்க்கக் கூடாது என்பார்களே, அதில் உண்மை உள்ளதா? சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்? குழந்தை பிறந்த பிறகு தாய் எதிர்கொள்ளும் உடல், மன ரீதியான சவால்கள் என்னென்ன?, தாய்ப்பால் சுரப்பை எவ்வாறு அதிகரிப்பது, குழந்தைக்கு எப்போது திட உணவு கொடுக்கலாம்? மொத்தத்தில் குழந்தை வளர்ப்பு எப்படி இருக்க வேண்டும்?

மகப்பேறு, குழந்தைகள் மருத்துவர்கள், உளவியல் நிபுணர்களின் அறிவுரைகளையும் ஒரு வயது மகளுக்குத் தாயாக, வாழ்க்கைப் படகில் வேலையையும் வீட்டையும் சமநிலையில் கொண்டு செல்ல நினைக்கும் பெண்ணாக, எனது சொந்த அனுபவத்தையும் சேர்த்து, நான் பெற்றதையும் கற்றதையும் இத்தொடரில் சொல்ல ஆசைப்படுகிறேன்.

- மகப்பேறு அறிவோம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்