20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக கிராமப்புறங்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வருகிறார் மதுரை சின்னப்பிள்ளை. மகளிர் சுய உதவிக் குழுக்களில் ஆரம்பித்த அவரது பணி இன்று மது, கந்துவட்டிக்கு எதிரான பிரச்சாரம் என ஓய்வில்லாமல் தொடர்கிறது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெ.சின்னப்பிள்ளை (67), களஞ்சியம் பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பின் தலைவராக பொறுப்பேற்று, கடந்த 30 ஆண்டுகளாக கிராமப்புற ஏழைப் பெண்களின் முன்னேற்றத்துக்காக பணியாற்றி வருகிறார்.
களஞ்சியம் இயக்கத்தின் தன்னார்வலர்கள், பொதுமக்களுக்கு கல்விக் கடன், விவசாயக் கடன் மற்றும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு, மாடு வளர்க்க கடன் பெறுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மதுரை சின்னப்பிள்ளையின் சமூக சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் அளித்த விருதுகள் ஏராளம். எனினும் சக்தி புரஸ்கர் விருது மூலம் தேசிய அளவில் அறிமுகமான சின்னப்பிள்ளைக்கு தற்போது அதே மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து மீண்டும் கவுரவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்த மதுரை சின்னப்பிள்ளையை தொலைபேசியில் பிடிப்பது சற்று சவாலாகவே இருந்தது. ஆனாலும், முயற்சி செய்தேன்.
கைப்பேசியை எடுத்ததும், குழந்தைகளின் அழுகை சத்தங்களுக்கிடையே ''ஹலோ யாருங்க'' என்றவரிடம், ''பத்மஸ்ரீ விருது பெற்றததற்கு வாழ்த்துகள்.. இந்து தமிழ் திசையிலிருந்து பேசுகிறேன்'' என்றேன்... ''உங்களுக்கும் வாழ்த்துகள் மா'' என்று அந்தக் கிராமத்து வெள்ளந்திச் சிரிப்புடன் உரையாடலைத் தொடர்ந்தார்.
1999 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சக்தி புரஸ்கர் விருது விழாவின்போது சின்னப்பிள்ளையின் காலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விழுந்து ஆசி பெற்ற நிகழ்வால் பரவலாக அறியப்பட்டார் சின்னப்பிள்ளை.
இந்நிலையில் சின்னப்பிள்ளை தன்னை முழுவதுமாக அறியாத இன்றைய இளைய தலைமுறைக்காக தனது பயணத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
''18 வயது இருக்கும்போது பெருமாள் என்பவருடன் திருமணமாகி மதுரை மாவட்டத்திலுள்ள அழகர் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள பில்லுசேரி என்ற ஊருக்கு வாழ வந்தேன். 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள். 3 பெண் குழந்தைகளுமே சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். கணவருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இறந்துபோக, வறுமை மிகவும் வாட்டியது.
இதனைத் தொடந்து எங்கள் ஊரில் இருந்த கூலி வேலைகளையும், வயல் வேலைகளையும் செய்து வந்தேன். மேலும் அங்கு வேலை செய்த பெண்கள் குழுக்களுக்கு மேற்பார்வையாளராக இருந்து வந்தேன். அப்போது அங்கு வேலை செய்த பெண்களுக்காக சம்பளம் சார்ந்து வேறுபாடு காட்டும் முதலாளிகளிடம் அவர்கள் சார்பாக குரல் கொடுத்து வந்தேன்.
இங்கிருந்துதான் என் பாதை மாறியது. 1995 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து வயலில் என்னுடன் வேலை செய்த பிற பெண்களிடம் பொருளாதார ரீதியாக அவர்கள் படும் துன்பங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.
நானும் அதைத்தானே சந்தித்தேன். அதனால் அதனை உள்வாங்கிக் கொள்ள எளிதாக இருந்தது. நான் பேசியவரை பெரும்பாலானவர்கள் வட்டிக்குக் கடன் பெற்றுதான் வறுமையைச் சமாளித்து வந்தார்கள். ஒருகட்டத்தில் நாமே நமக்குள் உதவி செய்து நமது பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யலாமே என்று அவர்களுடன் பேசினேன்.
இது தொடர்பாக பிற பெண்களிடம் பேசும்போது, இலவசமாகத் தருவீர்களா என்றுதான் முதலில் கேட்டார்கள். அவர்களிடம் இல்லை ... நாம்தான் பணத்தைச் சேமித்து நாமே தான் கொடுத்து உதவ வேண்டும் என்று கூறினேன். முதலில் அவர்களுக்கு இது புரியவில்லை. அதன்பிறகு அவர்கள் புரிந்து கொண்டார்கள்.
முதலில் 14 பெண்கள் சேர்ந்து ஆத்தூர் பஞ்சாயத்தில் 'புல்லு களஞ்சியம்' என்ற சிறுசேமிப்புக் குழுவை ஆரம்பித்தோம். முதலில் மாதத்துக்கு 20 ரூபாய் என்று சேமிக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து ஆறு மாதம் சேர்த்தோம். அதிலிருந்த பணத்தை நாங்களே எங்களுக்குள் தேவைப்படுகிறவர்களுக்கு கடனாக வழங்கினோம். திரும்ப நாங்களே வட்டி போட்டு அந்தக் கடனைக் கட்டிவிடுவோம். அதன் பிறகு சேமிப்பை 50 ஆக உயர்த்தினோம். இது படிப்படியாக வளர்ந்தது.
வங்கிகள் எங்களை நம்பி கடன் கொடுக்காத சூழ்நிலையில் வசிமலை சார் நன்றாகப் படித்தவர். ( சின்னப்பிள்ளைக்கு சேமிப்பு சார்ந்து ஆரம்பம் முதல் பல ஆலோசனைகளை வழங்கியவர்). அவர் வங்கிகளிடம் எங்களது சேமிப்புக்கு ஏற்றவாறு கடன் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதன்மூலம் களஞ்சியம் சார்பில் நாங்கள் 10,000 ரூபாய் சேமிப்பு வைத்திருந்தால் வங்கிகள் எங்களுக்கு 40,000 ரூபாய் தருவார்கள். இதனைத் தொடர்ந்து நாங்களும் கடன்பெற்று தொழில் தொடங்கி அதனை அடைக்கவும் செய்தோம்.
இது அப்படியே தொடர்ந்தது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள பிற ஊர்களுக்குச் சென்று எங்கள் களஞ்சியம் பெண்கள் சார்பாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தோம். இதன்மூலம் 8 க்கும் மேற்பட்ட களஞ்சியம் சேமிப்புக் குழுக்கள் உருவாகின.
இது அப்படியே விரிவடைந்தது எங்களுக்கென்று அழகர் கோயிலில் அலுவலகக் கட்டிடமும் கட்டினோம். அவ்வாறே களஞ்சியம் மதுரை முழுவதும் பரவியது. எங்கள் குழுவின் மூலம் மருத்துவமனைகளும் கட்டினோம்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் எங்கள் குழுவுக்குப் பெரும் உதவிகள் கிடைத்தன. என்று கூறும் சின்னப்பிள்ளை தொடர்ந்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மது ஒழிப்பு, கந்து வட்டிக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறோம்'' என்றார்.
மதுவிலக்கு, கந்துவட்டி ஒழிப்புக்காகப் போராடுவேன்
மதுப்பழக்கத்தினால்தான் கிராமத்திலிருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் ஒருநாள் கூலியின் பெரும்பாலான தொகையே மது அருந்துவதற்கே செலவழித்து விடுகின்றனர்.
இதனை உணர்ந்து தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் கந்துவட்டிக்கு எதிராக தமிழக அரசு தீவிரமான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்ததுடன், மாணவர்களுக்கான உதவித் தொகைகளையும், விபத்தினால் இறந்தவர்களுக்கும் உதவித்தொகைகளையும் இதற்கு தான் பெற்றுத் தந்ததாகவும் ஆனால் பாஜக தலைமையிலான அரசு இத்தகைய உதவிகளைத் தற்போது நிறுத்திவிட்டது எனவும் சின்னப்பிள்ளை தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் இன்னும் பெரும்பாலான இளைஞர்களும், பெண்களும் படித்திருந்தும் வேலை கிடைக்காததால் கூலி வேலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். வருங்காலத் தலைமுறையினர் படித்துவிட்டு தங்கள் ஊர் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்.
மதுவிலக்கு, கந்துவட்டிக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று விடைபெற்ற சின்னப்பிள்ளைக்கு பிடித்த பெண் தலைவரும், முன்மாதிரியும் அவரேதானாம்.
கிராமங்கள்தான் இந்தியாவின் ஆணிவேர்கள். அந்த ஆணிவேர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வீக்கம் இல்லாத வளர்ச்சியை ஒரு நாடு அடையும் என்பதை மதுரை சின்னப்பிள்ளை போன்ற ஆளுமைகள் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகின்றனர்.
இத்தகைய ஆளுமைகளை வெறும் செய்தியாகக் கடக்காமல் அவர்களது முயற்சிகளுக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்து இன்னும் ஆயிரம் சின்னப்பிள்ளைகளை உருவாக்குவோம் .
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago