ஆர்ப்பரிக்கும் தேர்தல் பரபரப்பும் பதறவைக்கும் 6 வயது சிறுமியின் பாலியல் படுகொலையும்!

By நந்தினி வெள்ளைச்சாமி

இன்றுடன் 5 நாட்களாகி விட்டன. இன்னும் ஒருவரைக் கூட காவல்துறை கைது செய்யவில்லை. 10 தனிப்படை குழுக்கள், 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை, 6 பேரிடம் தீவிர விசாரணை, இன்னும் இரண்டு நாட்களில் குற்றவாளியை நெருங்கி விடுவோம் என்று எண்களின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை தரப்பில் இருந்து பதில்கள் வருகின்றன.

கோவை துடியலூர் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு, மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகம், மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் என அனைத்து அரசு எந்திரங்களின் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளாகியுள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக கல்வி, மருத்துவம், தொழில் ஆகியவற்றில் வளர்ந்த நகரமான கோவை, கடந்த பல மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களுக்காக பேசப்படுவது வேதனையான முரண். பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்களுக்குப் பிறகு, இப்போது 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பன்னிமடை ஊராட்சி. அதிலுள்ள சிறிய கிராமம் கஸ்தூரிநாயக்கன் புதூர். இங்கு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நெருக்கமான குடியிருப்புகள். தலித் மக்கள் வசிக்கும் இடங்கள் பெரும்பாலும் எப்படி அடிப்படை வசதிகளின்றி இருக்குமோ அதே போன்றதொரு கிராமம் தான் கஸ்தூரிநாயக்கன் புதூர். அங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் துப்புரவுத் தொழில், கூலி வேலை, கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 6 வயது சிறுமியின் தாய்-தந்தை இருவருமே குருடம்பாளையம் பஞ்சாயத்தில் துப்புரவுப் பணியாளர்களாக பணி செய்து வருகின்றனர். அவர்களின் மூத்த மகளுக்கு 6 வயது, வீட்டிலிருந்து 1 கி.மீ .தூரத்தில் அமைந்துள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். மற்றொரு மகளுக்கு 3 வயது.

கடந்த 25-ம் தேதி, திங்கள்கிழமை, அந்த 6 வயது சிறுமி, வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை 6 மணியளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது காணாமல் போன அக்குழந்தை மறுநாள், (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் வீட்டின் எதிரே உள்ள குறுகிய சந்தில் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

"சிறுமியின் தாய் உடன் நான் வேலை பார்க்கிறேன். என்னை 'பெரியம்மா' என்று தான் அழைப்பாள். குழந்தை இறந்ததிலிருந்து அவள் தாயுடன் நான் தான் உடனிருக்கிறேன். பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை 4 மனிக்கு வீட்டுக்கு வந்த குழந்தை சாப்பிட்டு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென பிள்ளையக் காணோம். விடியற்காலை 6 மணிக்கு குழந்தை பிணமாகக் கிடந்தது. வீட்டின் எதிரில் உள்ள இரு வீடுகளுக்கிடையே உள்ள குறுகிய சந்தில் தான் குழந்தை இருந்தது" என்கிறார், பெயர் தெரிவிக்க விரும்பாத உறவினர் ஒருவர்.

சிறுமியின் குடும்ப நிலைமை குறித்து நம்மிடம் பேசிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ராதிகா, "அந்தக் குழந்தையை தாத்தா, பாட்டி தான் கவனித்துக் கொள்வார்கள். மிக ஏழ்மையான குடும்பம். சிறுமியின் தாய் கடினமான உழைப்பாளி. குருடன்பாளையம் பஞ்சாயத்தில் கூலி வேலை செய்வார். மாலை 6 மணிக்கு மேல், தனியார் நிறுவனம் ஒன்றில் துப்புரவு வேலை. தந்தையும் துப்புரவு தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர்" என்றார்.

மாலை 6 மணிக்கு குழந்தை காணாமல் போன உடனேயே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படுகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஓர் ஆணின் டி-ஷர்ட்டால் முகம் மூடப்பட்டு, சிறுமியின் கைகள் கட்டப்பட்டு சிதைந்த நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டதாக ராதிகா கூறுகிறார்.

"காலை 8 மணியளவில் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். குழந்தையின் இரண்டு கன்னங்களும் கடித்து சிதைக்கப்பட்டிருந்தது. கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது. முகம் டி-ஷர்ட்டால் மூடப்பட்டிருந்தது. கைகளும் கட்டப்பட்டிருந்தன" என்கிறார், ராதிகா.

அதன்பிறகு, சிறுமிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர் பாலியல் வன்புணர்வுக்கு சிறுமி உட்படுத்தப்பட்டார் என, அதன் முடிவுகள் வந்தன. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் எனக்கூறி மாதர் சங்கமும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் 24 மனிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். அதனால் தான் குழந்தையின் உடலை வாங்கினோம். ஆனால், 5 நாட்களாகியும் இன்னும் யாரையும் கைது செய்யாதது காவல்துறை மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது", என்கிறார் ராதிகா.

'இந்து தமிழ் திசை'யிடம் பேசிய சிறுமியின் தந்தையும் காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்றும், மேம்போக்காக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னும் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன், ஏற்கெனவே திருப்பூரில் போராட்டத்தின் போது பெண்ணைத் தாக்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இன்னும் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்யவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

"போக்சோ சட்டம் பதிந்துள்ளோம். 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குற்றவாளிகளைக் கண்டறிந்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என நோட்டீஸ் வெளியிட்டுள்ளோம். 5-6 பேரை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். ஐ.ஜி, டிஐஜி இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். முடிவான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறோம். குழந்தைக்கு நியாயம் கிடைக்க நாங்களும் முயற்சிக்கிறோம்" என்றார்.

ஆனால், போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள எண்ணுக்கு இன்னும் யாரும் தொடர்புகொள்ளவில்லை என காவல் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

இந்த வழக்கில் அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் தான் குற்றவாளிகள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவர்களும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 25 வயதைத் தாண்டாதவர்கள். போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது.

வளர்ந்துவரும் போதை கலாச்சாரமும், இணையத்தில் குவிந்திருக்கும் பாலியல் சார்ந்த தகவல்கள், வீடியோக்கள் குறித்த புரிதலின்மை ஆகியவை இம்மாதிரியான சம்பவங்கள் அதிகரிக்கக்க் காரணம் என்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்.

குழந்தையின் பெற்றோர் கொடுத்துள்ள தகவலின்படி, விஜயகுமார், கவுதம், சந்தோஷ் குமார், துரைராஜ் உள்ளிட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுள், விஜயகுமார், சந்தோஷ் ஆகியோர் அங்குள்ள 'இந்து பாரத் சேனா' என்னும் அமைப்பில் கிளை அளவில் பொறுப்பாளர்களாக உள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

"எந்த அமைப்பாக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும். இவர்கள் அரசியல் பின்புலமோ, பொருளாதாரப் பின்புலமோ அற்றவர்கள்", என்கிறார், நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர்.

கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி சம்பவ இடத்திற்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக உள்ளனர்.

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு நிர்பயா நிதி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பொள்ளாச்சி சம்பவம், இப்போது 6 வயது சிறுமி என கோவையில் ஏன் இத்தகைய பாலியல் குற்றச் சம்பவங்கள் பெருகியுள்ளன என்பது குறித்து பேசிய ராதிகா (மாதர் சங்கம்), "வளர்ந்த நகரமாக இருக்கும் கோவையில் சமீபகாலமாக சாதிய அமைப்புகள் தலை தூக்கியிருக்கின்றன. ஒரு சாதிய அமைப்பின் தலைவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும் என்கிறார். கோவை துணை மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி இல்லை. அதனால், இத்தகைய பாலிய குற்ற வழக்குகள் விசாரித்து தீர்ப்புகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சொல்லும்படியான அளவில் தண்டனைகள் வழங்கப்படவில்லை. காவல்துறையும் தண்டனை வாங்கித் தர முயலவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து சமூக ஆய்வு நடத்த வேண்டும். சமூக நீதித்துறை எதற்கு இருக்கிறது? இயற்கைப் பேரிடர் வந்தால் எப்படி முழு வீச்சுடன் அரசு எந்திரங்கள் செயல்பட வேண்டுமோ, இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெற்றாலும் அரசு அப்படித்தான் செயல்பட வேண்டும்" என்கிறார்.

மதவாத அமைப்புகள், சாதிய அமைப்புகளின் தாக்கம் அதிக அளவில் கோவை மாவட்டத்தில் இருப்பதற்கும் இத்தகைய பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறார், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.

"அந்த 6 வயது சிறுமி, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அருந்ததியர் சமூகத்தினர் எந்தவொரு வேலைவாய்ப்போ, நிலம் சார்ந்த உடைமைகள் இல்லாத மக்களாக இருக்கின்றனர். அவர்களை தீண்டத்தகாதவர்களாக மட்டுமல்ல, மனிதர்களாக பார்க்கப்படும் சூழலே சமூகத்தில் இல்லை. அவர்களுக்கு எதிராக குற்றம் செய்தால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சல் இருக்கிறது. காவல்துறையால் அவர்கள் எளிதில் மிரட்டப்படுகின்றனர்.

பெண்களை நுகர்பொருளாக பார்க்கும் பார்வை அதிகரித்துள்ளது. சிறுவர்களிடமிருந்தே இந்த சிந்தனை அதிகரித்திருக்கிறது. எளிதில் பெண்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூகப் பின்னணி குறித்தும் ஆராய வேண்டும்.

அங்கு இயங்கும் மதவெறியைத் தூண்டும் அமைப்புகள் சமூக விரோத கும்பல்கள். கலவரம் செய்பவர்கள், அதனை தூண்டி விட நினைப்பவர்கள், எளிதில் இத்தகைய மதவெறி அமைப்புகளுக்குள் சென்று விடுகின்றனர். பணம் கிடைக்கும் என்பதால் இளைஞர்கள் அந்த அமைப்புகளுக்கு செல்கின்றனர். இந்த மாதிரியான அமைப்புகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது" என்றார், பாலபாரதி.

இம்மாதிரியான சம்பவங்கள் தேர்தலில் பிரதிபலிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த பாலபாரதி, "இந்த ஒரு சம்பவத்தை மட்டும் மக்கள் பார்க்க மாட்டார்கள். இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் களைய தவறியிருக்கிறது. அவர்களுக்கு எதிராக இந்த தேர்தல் முடிவுகள் அமையும்", என்றார்.

கோவையில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.ஆர்.நடராஜனும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் குழந்தைகள் நல உரிமை ஆணையம் வலுவிழந்துள்ளது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் உரிமை ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் மாநில தலைவர் நிர்மலா பேசுகையில், "இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதனை வெளியே சொல்ல முடியாது. போலீஸ் சிறப்பாகச் செயல்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு ஆணையத்தை வலுப்படுத்தும் சில முடிவுகளை முடிவுகளை எடுப்போம்", என்கிறார்.

தேர்தல் அறிக்கைகளிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் மட்டும் பெண்களுக்கான திட்டங்கள், பாதுகாப்பு குறித்து பேசாமல், அதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும். பெண் பெயரில் ஆட்சி நடத்தும் தமிழக அரசும் இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இதைவிட பயங்கரமானது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கூட்டு மவுனம். அந்த மவுனம் கலையட்டும்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்