பாஜக தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரூ.5 லட்சம் தனிநபர் வருமான வரி விலக்கு நடைமுறைக்கு வருவது குறித்து பொருளாதார வல்லுநரும் பேராசிரியருமான ஜெ. ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நேற்று தனது கடைசி மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை(vote on account) தாக்கல் செய்தது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கான செலவினங்களுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ஏராளமான சலுகைகளை மக்களுக்கு அறிவித்தது.
அதில் குறிப்பாக மாத ஊதியம் பெறும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பிரிவினர், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரைக் கவரும் வகையில் சலுகைகளும், திட்டங்களும் இடம் பெற்றிருந்தன.
5 ஆண்டுகள் ஆட்சியை முடித்துவிட்டுச் செல்லும் ஒரு அரசு மக்களைக் கவரும் வகையில் இத்தகைய திட்டங்களை இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஒருவேளை மக்களவைத் தேர்தலில் பாஜக அல்லாமல் காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு கூட்டணி கட்சியோ ஆட்சிக்கு வந்தால், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னவாகும், மக்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்குமா ஆகிய பிரதான கேள்விகளும், சந்தேகங்களும் சாமானிய மக்களுக்கு எழுவது இயல்பானதுதான்.
பொருளாதார வல்லுநர், பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சனிடம் கேள்விகளை 'இந்து தமிழ் திசை' இணையதளம் மூலம் முன்வைத்தோம்.
பொருளாதார ஆய்வாளரான ஜெ.ஜெயரஞ்சன், சென்னை எம்.ஐ.டி.எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.
ஜெயரஞ்சன் அளித்த பேட்டி:
இடைக்கால பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவித்துள்ள திட்டங்களை மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக தவிர்த்து பிற கட்சி ஆட்சிக்கு வந்தால், செயல்படுத்துமா?
பாஜக அரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ள இந்தத் திட்டங்கள் எதையும் அடுத்து வரும் அரசு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. அடுத்து ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்ப அடுத்த பட்ஜெட் அமையும்.
பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்த முடியுமா?
இந்த இடைக்கால பட்ஜெட் அடுத்த 3 மாதங்களுக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. இதில் திட்டங்களை முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்துவது சாத்தியமானதா எனத் தெரியவில்லை. ஆனால், அரசு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இடைக்கால பட்ஜெட்டில் மிகப்பெரிய சலுகைகள், திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்துவது சாத்தியமா, அறிவிக்கலாமா?
இடைக்கால பட்ஜெட்டில் இதுபோன்ற மக்களைக் கவரும் திட்டங்களை அறிமுகம் செய்வது வழக்கத்தில் இல்லை. ஆனால், கடந்த கால அரசுகள் இதுபோன்று செய்துவிட்டுச் சென்றன. அதைப் பின்பற்றி தற்போதைய மத்திய அரசும் திட்டங்களை அறிவித்துள்ளது.
பாஜக அரசு அறிவித்துள்ள கவர்ச்சித் திட்டங்களான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றைத் தேர்தலுக்கு பின்வரும் புதிய அரசு வந்து பின்பற்ற வேண்டிய நெருக்கடி இருக்குமா?
அப்படி எந்த நெருக்கடியும் இருக்காது. இதை அப்படியே பின்பற்ற வேண்டிய தேவையும் இல்லை. புதிதாக வரும் அரசு வருமான வரி உச்ச வரம்பை மாற்றி அமைக்கலாம். இப்போதுள்ள அரசு அறிவித்துள்ள அனைத்துத் திட்டங்களையும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கையால் ரூ.1.30 லட்சம் கோடி வரி வருவாய் ஈட்டி இருக்கிறோம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால், பண மதிப்பிழப்பில் 99 சதவீதம் பணம் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறதே?
முதலில் கறுப்புப் பணம் என்றால் என்ன என்று சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கு வரி செலுத்தாமல் மறைக்கப்பட்ட பணம் கறுப்புப் பணம். பண மதிப்பிழப்பு நேரத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அளித்து,வங்கி டெபாசிட் குறித்து விளக்கம் கேட்டது. சரியான விளக்கம் அளித்தவர்கள் பணத்தை திரும்பப் பெற்றார்கள். விளக்கம் அளிக்க முடியாதவர்கள், வரியைச் செலுத்திவிட்டு மீதப்பணத்தை பெற்றார்கள். ஆதலால், கறுப்புப் பணம் எனக் கண்டறியப்பட்டு அதற்கான வரியைச் செலுத்தினால் கணக்கில் வந்துவிடும். இந்த வரி செலுத்தியதைத் தான் கறுப்புப் பணம் மீட்பு என்று அரசு கூறுகிறது.
விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் சாத்தியமானதா, முன் தேதியிட்டு வழங்குவோம் என மத்திய அரசு கூறியுள்ளதே?
இந்தத் திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிக்குதான் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படியென்றால், இந்தத் திட்டத்தில் பயன்பெறப்போகும் உண்மையான பயனாளி யார் என முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களை அறிவிக்கலாம், அதனால், மாநிலத்தில் வந்து செயல்படுத்திவிட முடியாது. திட்டங்களைச் செயல்படுத்துவது மாநில அரசுதான். நிதி உதவி கூட முழுமையாக மத்திய அரசு அளித்தாலும், உண்மையான பயனாளி என்பதை யார் கண்டறிவது மாநில அரசு ஊழியர்கள்தான்.
இன்னும் விளக்கமாகச் சொன்னால், கிராம நிர்வாக அலுவலர்தான் இந்தத் திட்டத்தின் உண்மையான பயனாளி யார் என்பதை அடையாளம் காண முடியும். மத்திய அரசு அதிகாரி இதைச் செய்யமுடியாது. ஆதலால், இந்தத் திட்டம் செயல்படுத்துவதற்குச் சாத்தியம் இருந்தாலும் கள ஆய்வு கடினமான பணி.
தெலங்கானாவில் ரிதுபந்த் என்ற திட்டம் ஏறக்குறைய இதே திட்டம்தான். விவசாயிகளுக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டம். ஆனால், அந்தத் திட்டத்துக்கு கள ஆய்வு நடத்த 10 மாதங்கள் தேவைப்பட்டது. உண்மையான பயனாளிகளையும், விவசாயிகளையும் கண்டுபிடித்துச் செயல்படுத்துவது என்பது இடைக்காலத்தில் சாத்தியமில்லை.
தனி நபர் வருமான வரிவிலக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்கள் மட்டும் ஆட்சி இருக்கும் நிலையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா?.
நடைமுறைக்கு வரும் காலத்தை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த நிதியாண்டே கூட மாற்றி அமைத்து உத்தரவிடலாம். நடைமுறைக்கு வரும் காலத்தை என்னால் உறுதியாகக் கூற முடியாது.
இவ்வாறு ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago