ஆண்களுக்காக: 4- கண், கேமரா, காமம்!

By பாரதி ஆனந்த்

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட பிரபல ஜவுளிக் கடை ஒன்று, பரபரப்புச் செய்தியானது. கோவாவில் உள்ள அதன் கிளை அங்காடியில் வாடிக்கையாளர்கள் ஆடைகளைப் போட்டுப் பார்க்கும் ட்ரையல் ரூமை நோக்கி கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்ததாக சர்ச்சை எழுந்தது. மத்திய அமைச்சர் ஒருவர் அதுவும் பெண் அமைச்சர் அளித்த புகாரின் பேரில் இந்த குற்றம் அம்பலமானதால் உடனடியாக வழக்கு, கைது எல்லாம் நடந்தது.

அதன் பின்னர் நாடு முழுவதுமே, இனி பெண்கள் ஆடைகள் வாங்கச் செல்லும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பாடங்கள் எடுக்கப்பட்டன. கண்காணிப்பு கேமரா இருக்கிறதா என்று எப்படி உறுதி செய்வது என்பதற்கான செயல்முறை விளக்கத் துணுக்குகள் குவிந்தன. கண்ணாடிக்குப் பின்னால்கூட கேமராவைப் பதுக்க வாய்ப்பிருக்கிறது என்றெல்லாம் பகீர் ரிப்போர்ட்கள் வெளியாகின. காலப்போக்கில் அது மறந்து போனது.

மங்கிய நினைவலைகளைத் தூசி தட்டும் வகையில் சில வாரங்களுக்கு முன்னர் சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில்  இயங்கி வந்த பெண்கள் தங்கும் விடுதியில் பெண்களின் படுக்கை அறை, குளியல் அறைகளில் ரகசிய கேமராக்கள் வைத்து விடுதி உரிமையாளர் கண்காணித்த செய்தி வெளியானது.

இப்போதும் பெண்களுக்குத்தான் பாடம் எடுக்கப்படுகிறது. அதேபாடம்தான். ஆனால், இந்தமுறை புதிய கோண அறிவுரைகள். கல்வி, வேலை என வெளியூர்களில் விடுதிகளில் பெண்கள் தங்கும் சூழல் அதிகமாகிவிட்டதால் அவர்களுக்கான விதவிதமான வித்தியாசமான அறிவுரைகளும் வரத்தொடங்கிவிட்டன.

உங்கள் போன்களில் கேமரா டிடக்டர் ஆப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். குளியலறையில் கேமரா இருக்கிறதா என்பதை சோதனை செய்வதெப்படி என்ற ஹைடெக் அறிவுரைகள் வருகின்றன. எங்கெல்லாம் கேமராவை மறைத்து வைக்க முடியும் என்ற இடங்களின் பட்டியல் என விழிப்புணர்வு பாடங்களுக்கு குறைவில்லை.

நல்லதுதான். விழிப்புடன் இருப்பது எப்போதுமே நல்லதுதான். சைபர் க்ரைம் அதிகரித்துவரும் சூழலில் தொழில்நுட்பங்களால் எப்படி நம்மை தற்காத்துக் கொள்வது என்பதை தெரிந்திருப்பது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆனால், எப்போதுமே பெண்களை விழிப்புடனேயே இருக்கச் செய்யும் சமூகம் நோய்வாய்ப்பட்ட சமூகமாகத்தானே இருக்க முடியும். தூக்கத்திலும்கூட பெண் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்?! இந்தக் கேள்விதான் ஆண் மனதின் சில நோய்க் கூறுகளைப் பற்றி ஆராய உந்தியது.

அப்படிப்பட்ட தேடலில் சிக்கியதுதான் voyeurism (வாயூரிஸம்). இதுவும் ஒருவகை நோய்க்கூறுதான். இதற்கான நேரடி தமிழ் அர்த்தம் பார்வை மோகம். அதாவது, ஆங்கிலத்தில் The derivation of sexual satisfaction by watching people secretly, especially when those being watched are undressed or engaging in sexual activity எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு பெண் உடை மாற்றும்போதோ அல்லது உறவில் இருக்கும்போதோ அவரை ரகசியமாகக் கண்காணித்து அதன்மூலம் இன்புறுதல்.

இந்த நோய்தான் சென்னை ஆதம்பாக்க விடுதி விவகார வழக்கில் சிக்கிய சம்பத் ராஜ் என்கிற சஞ்சீவி (48) போன்றோரை பீடித்திருக்கிறது.

குற்றமும் தண்டனையும்..

ஆடை மாற்றுதல், குளித்தல், இயற்கை உபாதைகளைக் கழித்தல், பாலுறவில் ஈடுபடுதல் இதை எதையுமே யாரும் பொது இடத்தில் பலரும் பார்க்கும்படி செய்வதில்லை. ஆனால், இந்த செய்கையை அந்த நபருக்கே தெரியாமல் காட்சிப் படுத்தினாலோ அல்லது மறைந்திருந்து பார்த்தாலோ அது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.

இபிகோ 354-சி இதைப் பற்றி பேசுகிறது.

"ஒரு பெண் தனிப்பட்ட முறையில் ஈடுபடும் சில வேலைகளை மறைந்திருந்து பார்ப்பது, அதை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றம். பாதிக்கப்படும் நபரின் பிறப்புறுப்பு, மார்பகங்கள் ஆகியவற்றை அவருக்குத் தெரியாமலேயே பார்ப்பதும், அவர் உள்ளாடைகளுடன் இருப்பதை ரகசியாமகப் பார்ப்பதும் தண்டனைக்குரிய குற்றம். ஒருவேளை ஒரு பெண்ணின் ஒப்புதலோடு அவரை அப்படிப்பட்ட கோலத்தில் படம்பிடித்தாலோ அல்லது வீடியோவாகப் பதிவு செய்தாலும்கூட அதை மற்றவர்களுடன் பகிர்ந்து தவறாகப் பயன்படுத்துவதும் குற்றம்.

இத்தகைய குற்றத்தில் முதன் முறையாக ஈடுபடும் நபர்களுக்கு அபராதம் அல்லது ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க முடியும். அதே நபர் இரண்டாவது முறையாக அக்குற்றத்தில் ஈடுபட்டால் அபராதம் அல்லது 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க முடியும்" என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது. பாதிக்கப்பட்ட நபர் ஆணாக இருந்தாலும்கூட இதே தண்டனைதான் என்கிறது சட்டம்.

ஆண் மனம் ஏன் இப்படி ரசிக்கிறது?

ஆண் மனம் ஏன் இப்படி ரசிக்கிறது? பார்வை வழி மோகம் என்பது எத்தகைய மனநோய்? இதற்கு மருத்துவம் இருக்கிறதா? என்று திருநெல்வேலி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் காட்சனிடம் அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைக்க அவர் அளித்த பதில்கள் ஒரு புதிய பார்வையை அளித்தது.

"பொதுவாகவே பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதில் இயல்பாக ஐம்புலன்களும் ஈடுபடுகின்றன. பார்வை, தொடுதல், உரையாடுதல், முகர்தல், சுவைத்தல் என பல்வேறு வழிகளில் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது இயல்பே. ஆனால், இதில் ஏதாவது ஒன்று சிலருக்கு அதீதமாக மேலோங்கும். அவற்றில், ஒரு பெண்ணை ஆடையில்லாமல் பார்ப்பதில்தான் உச்சபட்சக் கிளர்ச்சியை அடைய முடிகிறது என்ற நபர்கள்தான் பார்வைவழி மோகம் எனும் வளையத்துக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

இப்படி, வாயூரிஸத்தில் ஈடுபடுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம். முதலில் வாய்ப்பு கிடைக்கும்போது பார்ப்பவர்கள்.. இவர்கள் இத்தகைய இன்பத்துக்காக மெனக்கெடுவதில்லை. ஒரு வீட்டைத் தாண்டிப்போகும்போது எதேச்சையாக ஜன்னல் வழியாக ஒரு பெண் உடை மாற்றுவதைப் பார்த்தால் யாரும் கவனிக்கவில்லை என்று தெரிந்தால் நின்று நோட்டமிட்டுச் செல்வார்கள்.

இரண்டாவது படிநிலையில் மனநோயாளிகள் வருவார்கள். இவர்கள் இயல்பான பாலியல் உறவுக்கு வாய்ப்பில்லாதபோதோ அல்லது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலோ இத்தகையை கிளர்ச்சியை நாடுவார்கள். மனநோய்க்கான மருந்துகளை முறையாக உட்கொள்ளும்போது இந்த தாக்கங்கள் சரியாக வாய்ப்புள்ளது.

மூன்றாவது பிரிவில் அடங்குபவர்கள்தான் ஆபத்தானவர்கள். இவர்கள்தான் உண்மையான Sexual Perverts பாலியல் மனப் பிறழ்ச்சி கொண்டவர்கள். இவர்கள் இத்தகைய கிளிர்ச்சிக்காக வாய்ப்புகளை உருவாக்குவார்கள். சென்னை விடுதி சம்பவத்தில் சிக்கிய நபரும் அப்படித்தான் கேமரா தொழில்நுட்பங்களை தேடித் தேடிப் படித்து தானே அவற்றை பொருத்தி பெண்களின் அந்தரங்கங்களை கண்காணித்திருக்கிறார். இவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் அல்ல. தண்டனைக்குரியவர்கள்.

இவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்ளவும் தங்களை அப்டேட் செய்து வைத்திருப்பார்கள். கடுமையான சட்டங்கள் வாயிலாக தண்டிக்கப்பட்டால், ஒருவேளை தண்டனைக்குப் பின் திருந்த வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு குற்ற உணர்வு இருக்காது. பெரும்பாலும் மூன்றாவது நிலையில் இருப்பவர்கள் சிறுவயதில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்களாக இருப்பார்கள். இல்லையேல், உடைந்த குடும்பங்களில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். பெற்றோரின் பூரண அரவணைப்பு இல்லாதவர்களாக இருப்பார்கள்.

ஒரு குழுந்தையை சமூகப் பொறுப்புடன் வளர்ப்பதில் குடும்பத்தின் பங்கு ஈடு இணை செய்ய முடியாதது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பது எளிமையான வாக்கியம் மட்டுமல்ல சத்தியமான வாக்கியம்" என்றார் மருத்துவர் காட்சன்.

பெண்கள் இப்படிப்பட்ட செய்கையில் ஈடுபடுவதில்லையா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர், "அப்படிப்பட்ட சம்பவம் மிக மிக அரிதானது. காரணம் பெண்ணின் பாலியல் மகிழ்ச்சி மற்ற உணர்வுபூர்வமாக அணுகுமுறையையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. தனது கணவர் பாலியல் ரீதியாக உற்ற துணையாக இருந்தாலும்கூட அவர் நல்ல குடும்பத் தலைவராக, நல்ல தகப்பனாக, நல்ல மனிதராக தனது வேலைகளைப் பங்கிட்டுக் கொள்பவராக இருக்கும்போதுதான் பெண் முழு திருப்தியடைகிறார். ஆனால், ஒரு ஆண் இந்த முழுமையைவிட கிளர்ச்சிகளுக்கு அதிக முக்கியவத்துவம் தரும் மனோபாவம் கொண்டவராக இருக்கிறார். அதனால்தான் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் பாலியல் கொடுமைகள் அதிகமாக இருக்கிறது" என்றார்.

அவள் பொருளல்ல என்ற நிலை வர வேண்டும்..

ஒரு மனநல மருத்துவராக பாலியல் வக்கிரங்களில் வேண்டி விரும்பி சிக்கிக் கொண்டிருக்கும் சமூகத்துக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, "அவள் பொருளல்ல என்ற மனநிலை ஒவ்வொரு ஆணுக்கும் வரவேண்டும். அவள் உயிர், நம்மைப் போல் உணர்வுகள் இருக்கின்றன. நம் இன்பத்துக்காக நாம் அவளை தவறாகப் பயன்படுத்துவது நாளை அவளுக்கு பிரச்சினையாகலாம் அவளது எதிர்காலத்தைப் பாதிக்கலாம் என்ற புரிதல் வேண்டும். இந்தப் புரிதலை குடும்பங்கள்தான் உருவாக்க முடியும். சமூகக் கண்காணிப்பு அதற்குப் பக்கதுணையாக நிற்க இயலும். பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் கல்வியைத் தொடங்குவது மிக மிக அவசியம். இணைய ஆபத்து அதிகரித்துவிட்ட காலகட்டத்தில் 10 வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு எதிர்பாலினத்துனருடனான பழக்கவழக்கத்தில் எல்லை (limitations) என்னவென்பதைப் புரிய வைக்க வேண்டும்" என்கிறார்.

அநாமதேய ஆபத்து..

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட சுதந்திரம் என்பது ஒரு பேரரசரின் சாம்ராஜ்யம் போல் வலுவாக கட்டமைக்கப்படுகிறது. ஒவொரு தனிநபரும் தன்னைச் சுற்றி அந்தரங்கக் கோட்டையை உருவாக்கிக் கொள்கின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முந்தைய சூழலையும் தற்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த தாக்கம் என்னவென்பது புரிய வரும். அந்தக் காலத்தில் ஒரு ஆண் பிள்ளை பாலியல் புத்தகங்களைப் படிப்பதுதான் அதிகபட்ச அந்தரங்கமாக இருந்தது. அதுவும் அத்தகைய புத்தகம் விற்கும் கடைக்கு யார் கண்ணிலும் பட்டுவிடாமல் செல்ல வேண்டியிருந்தது. சமூகக் கட்டுப்பாடு இருந்தது.

 

ஆனால், இன்று செல்போன் தொடுதிரையில் ஒரே சொடுக்கில் காட்சிகளாக காமம் விவரிக்கப்படுகிறது. பூட்டிய அறைக்குள் செல்போனில் என்னவேண்டுமானால் பார்க்கலாம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற சுதந்திரம் வந்திருக்கிறது. ரயிலில் பயணம் செய்பவர்கூட 5 நிமிடம் கழிவறைக்குள் சென்று ஒரு ஆபாசக் காட்சியைப் பார்த்துவிட்டு வரமுடிகிறது.

இந்த சுதந்திரத்தின் ஆபத்து அனானிமிட்டி (Anonymity). ஒரு பாலியல் படத்தின் லின்க்கை கோடிக்கணக்கானோர் உலகில் வெவ்வேறு மூளையில் இருந்து சொடுக்கியிருக்கலாம். யார் பார்த்தார்கள் என்று முகம் தெரியப்போவதில்லை. இங்கே சமூகக் கண்காணிப்பு இல்லாமல் போகிறது. சமூக நெருக்கடி இல்லாத இந்த சுதந்திரம் சுய கட்டுப்பாடு இல்லாமல் விரிந்து கொண்டே போகும்போது மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். வாய்ப்பு கிடைக்கும்போது தான் பார்த்த காட்சிகளை செயல்படுத்திப் பார்க்க உந்தும். இது குற்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பாலியல் உணர்வு இயல்பானது. அதை இயல்பாகவே அனுபவித்தல்தான் இயற்கையாக இருக்க இயலும்.

குற்ற உணர்வே தண்டனை..

எல்லா குற்றங்களையும் தண்டனைகளால் மட்டுமே திருத்திவிட முடியாது. புத்தகங்களில் எழுதப்பட்ட சட்டங்கள் எல்லாம் இதை நீ செய்தால் இவ்வாறு தண்டிக்கப்படுவாய் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தவே வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய அச்ச உணர்வுதான் ஒவ்வொரு மனித மனதுக்குள்ளும் ஒளிந்திருக்கும் தி அனிமல் ஐ (The Animal I) என்ற மிருகத்தை தடுத்து தி ஹியூமன் ஐ (The Human I) என்ற மனிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

ஆனால், கொலை செய்தால் தண்டனை நிச்சயம் என்று தெரிந்தும்கூட கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படித்தான் இதுபோன்ற பாலியல் குற்றங்களும் தண்டனைகள் உண்டு என்று தெரிந்தாலும்கூட மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆழ்மனதின் ரகரிய உணர்வால் வெளிப்படும் இத்தகைய பாலியல் வக்கிர குற்றங்களை ஆரம்ப நிலையில் தடுக்க குற்ற உணர்வு நிச்சயமாக உதவும்.

 

 

அதுவும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சற்று கூடுதலாகவே இது பலன் கொடுக்கும். நம்மூரில் கேலி செய்யப்படும் பெண்கள், பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் பெண்கள் முதலில் கேட்கும் கேள்வியாக சினிமா வழியாக நமக்குக் காட்டப்படுவது உனக்கெல்லாம் அக்கா, தங்கச்சி இல்லையா? உன் அம்மாவைப் போன்றதுதானே என் தோற்றமும் வகையறா வசனங்கள்தான்.

நிஜத்தில் இதை பெண்கள் சொல்லாவிட்டாலும்கூட மனதில் ஒரு கணமேனும் இத்தகைய என்ன அலை உருவாகாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்தக் கேள்வியை ஒரு ஆணிடம் கேட்கும்போது அதிலொரு மனோதத்துவ அடிப்படை இருக்கிறது. அதாவது ஆணுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துதல். முதல்நிலை பெர்வர்சனில் சிக்கியவர்களுக்கு இது சட்டத்தைவிட சரியான சிகிச்சையாக இருக்கும்.

சினிமா சொல்லும் சாட்சி..

சமூக அவலங்களைக் காட்சிப்படுத்துவதில் சில சினிமாக்களின் பங்கு அளப்பரியது. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை இங்கே பகுப்பாய்வு செய்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்ற அறிமுக இயக்குநரின் படம்தான் அது. படத்தின் பெயர் லென்ஸ். சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்தான் இப்படத்தைப் பார்க்க நேரிட்டது.

 

திருமணமான ஒரு ஆண் ஆன்லைன் வழியாக பல பெண்களிடம் ஆபாச சேட்டிங்கில் இணைகிறான். பூட்டிய அறைக்குள் கணினி முன் அவன் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறான். இத்தனைக்கும் நல்ல வேலை, அன்பான மனைவி, குழந்தை, பிரியமான நண்பன் என எல்லோரும் அவனுக்கு இருக்கின்றனர். ஆனால், அவன் மனமோ இவை எல்லாவற்றையும் கடந்து பார்வை வழி மோகத்தில் திளைக்கிறது. அதுவே கதியென இரவுகளைக் கடக்கிறான்.

ஒருநாள் சாட்டிங் அவனுக்கு பேரிடியாக இறங்குகிறது. சாட்டிங்கில் இணைய நிக்கி என்ற பெண் ஹை சொல்ல ஹீரோவுக்கு றெக்கை முளைக்கிறது. ஆனால், சாட்டிங் சென்றவுடன் தான் அது ஆண் என்பது தெரிகிறது. அந்த ஆண், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அதை நேரலையில் ஹீரோ பார்க்க வேண்டும் என்றும் அச்சுறுத்துகிறான்.

ஹீரோவோ ஏதோ பைத்தியம் என்று இணைப்பைத் துண்டிக்க அவனது மொபைல் ஃபோனுக்கு ஒரு வீடியோ க்ளிப் வருகிறது. அது ஹீரோவும், ஒரு பெண்ணும் மேற்கொண்ட வீடியோ சேட்டிங். அடுத்தடுத்து பல சேம்பிள்கள் வருகின்றன. ஹீரோ அதிர்ந்து போய் நிக்கி என்ற சேட் ஐடியைத் தொடர்பு கொள்ள கதை ஃபிளாஷ்பேக்காக விரிகிறது.

ஹீரோவால் பாதிக்கப்பட்ட நபர்தான் நிக்கி என்ற பெயரில் சாட்டிங்குக்கு வந்திருக்கிறார். வாய் பேச முடியாத பெண்ணை காதல் மனைவியாகப் பெறும் அந்த நபரின் முதல் இரவுக் காட்சிகளை ரகசிய கேமரா கொண்டு படமாக்கிவிடுகிறார் ப்ளம்பர் ஒருவர். அந்த முதலிரவுக் காட்சி இணையத்தில் வைரலாக, புழுவாகத் துடித்துப் போகிறாள் அந்தப் பெண். அதுவரை அவள் மனமாவது பேசிக் கொண்டிருந்த நிலையில், மனதைக்கூட மவுனமாக்க எத்தனிக்கிறாள். தற்கொலை செய்து கொள்கிறாள். தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள்.. கண்காணிக்கிறார்கள் என்று புலம்பியே அவள் வாழ்க்கை முடிகிறது. அவளது கடைசி நேரத் துடிப்புகள்தான் நோய் வாய்ப்பட்ட சில ஆண் மனங்களுக்கு சவுக்கடி.

தான் பிறருக்குச் செய்ததை தனக்கு யாரோ செய்யும்போதுதான் ஹீரோ ஒவ்வொரு தனி மனிதருக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது, அந்தரங்கம் இருக்கிறது. அதில் அத்துமீறுவது அநாகரிகமானது, நேர்மையற்றது, அடிப்படை மனித ஒழுக்கத்துக்கே விரோதமானது என்பது தெரிய வருகிறது.

நிக்கியிடம் சிக்கித் தவிக்கும் ஹீரோவுக்கு உதவ வரும் உயிர் நண்பனே ஒரு கட்டத்தில் அவனது முகத்தில் காரி உமிழ்ந்து செல்வார். அது ஹீரோ அர்விந்த் முகத்தில் விழுந்த உமிழ்நீர் அல்ல இத்தகைய பார்வை வழி மோகத்தில் திளைக்கும் ஓவ்வோர் ஆணின் முகத்திலும் விழுந்து வீசும் எச்சில்.

அதை துடைத்துக் கொண்டு நான் ஆண்.. நெடில் என்று பிதற்றாதீர்கள். நான் மனிதன், அவள் மனிதி. அவளும் உயிர், அவளுக்கும் உணர்ச்சி இருக்கிறது, சுயமரியாதை இருக்கிறது என்று ஆதாம்பாக்கம் ஆசாமி போன்றோர் உணர வேண்டிய தருணம் இது.

நீங்கள் இதை பெண்ணினத்துக்குக் காட்டும் (Sympathy) கருணையாக நினைக்க வேண்டாம். மாறாக அவளிடத்தில் நின்று அவளைப் புரிந்து (Empathise) கொள்ளும் முயற்சியாகப் பாருங்கள். பெண்கள் கருணையைவிட புரிதலையே கொண்டாடுவார்கள். பரஸ்பரம் புரிதலுடனும் மரியாதையுடனும் சேர்ந்து வாழத்தான் இந்த உலகம்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்