ரஜினியானாலும், கமல்ஹாசன் ஆனாலும் ரிட்டயர்மென்ட் காலத்தில் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். அது எடுபடாது என்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
கோவைபுதூர் பிரிவில் சற்று மேற்கே குன்றின் மீது ஏறும் சாலையில் 100 அடி தூரம் பொள்ளாச்சி ஜெயராமன் வீடு. அதிமுகவின் மாநில தேர்தல் பிரிவு மாநில அமைப்புச் செயலாளர். தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகர். வீடு, ப்ளஸ் அலுமனிய ஃபேக்டரி. அதற்கு பெரிய இரும்புக் கதவுகள். அப்பாயின்ட் மென்ட் வாங்கியிருந்ததால் எனக்கு சிறிய கதவைத் திறந்து விடுகிறார் காவலாளி. ஒரு பக்கம் ஃபேக்டரி. ஓயாமல் மெஷின்களின் இரைச்சல். அதிலிருந்து சற்று தள்ளி பெரிய வீடு.
நெற்றியில் அழுத்தமான மெருன் கலர் பொட்டு, அதற்கு கீழே திருநீறும், மேலே நீள வாக்கில் செந்தூரமும் மினுங்க கைகூப்பி வரவேற்கிறார். எனக்கும் முன்னே சிலர் காத்திருக்கிறார்கள். ‘இவங்களை முடிச்சுக்கிறேனே!’ ரொம்ப மென்மையான குரலில் அனுமதி வாங்கிக் கொண்டு அவர்களிடம் பேசுகிறார்.
சுமார் இருபது நிமிடம் கழித்து அனைவரும் சென்ற பின் பேட்டி தொடங்கியது.
மக்களவைத் தேர்தலுக்கு மற்ற கட்சிகள் எதுவும் செய்யாத நிலையில் ஒரு வருடம் முன்பிருந்தே சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த ஆரம்பித்து விட்டீர்களே. தேர்தலைச் சந்திக்க அந்த அளவுக்கு தயக்கமா?
ஜெயலலிதா இருந்த காலத்திலிருந்தே மற்ற கட்சிகளை விட முன்கூட்டியே தேர்தலுக்கு கட்சியின் கீழ் மட்ட அமைப்புகளை, தொண்டர்களை தயார்படுத்துவது என்பது அதிமுகவில் உள்ள நடைமுறைதான். அதைத்தான் இப்போதும் செய்கிறோம். எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். எந்தக் கட்சியையும் பார்த்து பயப்படுகிற நிலையில் எங்கள் கட்சி அன்றும் இல்லை; இன்றும் இல்லை.
அதிமுக வரும் தேர்தலில் பாஜகவுடன்தான் கூட்டு என்பது அழுத்தமான பாடு பொருளாகி உள்ளதே?
நாங்க பாஜக பற்றி எந்த முடிவும் எடுக்கலை. மீடியாக்கள்தான் தேவையில்லாமல் தொடர்ந்து இத்தகைய யூகங்களை கிளப்பிக்கிட்டே இருக்கு. அக்கட்சியுடன் மட்டுமல்ல; மற்ற கட்சிகளுடனும் கூட நாங்கள் ஒட்டும் இல்லை; பேச்சும் இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கூட்டணி முடிவு செய்வோம்.
சட்டப் பேரவை தொகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நீங்கள் நடத்துவதைப் பார்த்தால் சட்டப்பேரவைக்கும் மக்களவைத் தேர்தலோடு தேர்தல் நடக்கும் போல் தெரிகிறதே?
வாய்ப்பே இல்லை. 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடக்கும். அதற்குத்தான் பணிகளும் நடக்கிறது. மற்றவை எல்லாம் மக்களவைத் தேர்தல் முஸ்தீபுகள்தான். இந்த அரசு ரெண்டே கால் வருஷம் நல்லாட்சி தந்திருக்கிறது. அது இன்னமும் ரெண்டே முக்கால் வருஷம் நல்லாட்சியையே தரும். அதற்குப் பின்பே சட்டப்பேரவைத் தேர்தல் வரும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
முன்னாள் நிர்வாகிகள், அடிமட்டத்தொண்டர்கள் எல்லாம் தினகரன் அணியை நோக்கி சென்று கொண்டிருப்பதை தடுக்கவே இந்த செயல்வீரர்கள் கூட்டத்திரட்டல் என்கிறார்களே?
ஏற்கெனவே சொல்லிவிட்டேன் எங்கள் கட்சி நடைமுறைப்படிதான் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. தினகரன் வேறு கட்சியாகி விட்டார். அந்தக் கட்சிக்குத் தலைவரின் விசுவாசி, 'அம்மா'வின் விசுவாசிகளில் ஒரு தொண்டன் கூட போகமாட்டடான். அது எங்கள் அனைவருக்கும் தெரியும்.
கமல் அரசியல் கட்சி ஆரம்பிச்சுட்டார்; ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொல்கிறார்; விஜய், போன்றவர்கள் எல்லாம் அரசியல் இயக்கம் காணப்போவது போல் தோற்றம் கொள்கிறார்கள்? இந்த நட்சத்திரங்களின் வருகை, மாஸ் நட்சத்திரங்களால் உருவாகி தற்போது நட்சத்திரங்களே இல்லாத கட்சியாக மாறியுள்ள அதிமுக வாக்குகளைப் பாதிக்காதா?
அந்தக் காலத்தில் தலைவர் எம்ஜிஆர் ஒரு படம் நடிச்சார்னா அது வெள்ளிவிழா காணும். அதற்கிடைப்பட்ட நேரத்திலேயே இன்னொரு படம் ரிலீஸ் ஆகி அதுவும் வெள்ளி விழா நோக்கிச் செல்லும். அடுத்த படமும் அதற்குள் வெளிவந்து விடும். அன்றைக்கு திரைப்படக் கலைஞர்களுக்கு வரி அதிகம். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கி, அதற்கு முறையாக வரியும் செலுத்தி வருடத்திற்கு 7-8 திரைப்படங்களை வெள்ளி விழாவாகவே தந்தவர் எம்ஜிஆர். ஜெயலலிதா படங்களும் அப்படித்தான். ஆனால் இப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி வருஷத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்கிறார்கள். அதையும் ஸ்டண்ட் செய்துதான் அவர்கள் ஓட வைக்க வேண்டியிருக்கு. இது மக்களுக்கு இவங்க மேல அபிமானம் குறைவு என்பதையே காட்டுகிறது. அதே சமயம் இவங்களுக்கு மக்கள் மீது அபிமானம் கிடையவே கிடையாது. ரஜினியானாலும், கமல்ஹாசன் ஆனாலும் ரிட்டயர்மென்ட் காலத்தில் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். அது எடுபடாது!.
நீங்கள் நடத்தும் செயல்வீரர்கள் கூட்டங்களில் எல்லாம் ஜெயலலிதாவிற்குப் போலவே பெருங்கூட்டம் திரண்டு அமைச்சர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. நூற்றியொரு கும்ப மரியாதை செய்யப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது?
'அம்மா'வுக்கு நிகராக இங்கே யாரும் கிடையாது. அப்படி நினைக்கவும் முடியாது. நினைக்கவும் கூடாது!
துணைசபாநாயகராக இருந்து கொண்டு தற்போதைய அரசியல் கிரிட்டிக்கலான சூழலில் இந்தப் பணியை நம்மால் நிறைவேற்ற முடியவில்லையே என்று நீங்கள் எதற்காவது எப்போதாவது நினைத்ததுண்டா?
எல்லாம் நிறைவாகவே செஞ்சுட்டு இருக்கேன்.
ஜெயலலிதா இருந்தபோது என்ன நிலை இருந்ததோ அப்படியே அதை தொடரணும் என்கிற ஸ்டேட்டஸ் கோ மெயின்டைன் செய்வதால் இந்த ஆட்சி தப்புகிறதாக பேச்சுண்டு. இப்படியான சூழலில் அமைச்சராக முடியாத, முக்கிய பதவி வாங்க முடியாத சூழல் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. இது நமக்கான நஷ்டம் என உணர்கிறீர்களா?
மாபெரும் தலைவர் ஒருவரின் திடீர் மறைவு அந்த கட்சிக் குடும்பத்தை எவ்வளவு பாதிக்கும். அந்தக் குடும்பம் இப்படி நடந்து, இதைச் செய்தால்தான் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இன்றும் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றி வருகிறது. இதிலிருந்து மாறுபட்டு முடிவுகள் எடுத்ததால்தான் எம்ஜிஆர் மறைவின் போது ஆட்சியை இழந்தோம் என்பது வரலாறு.
என்னைப் பொறுத்தவரை 4 முறை சட்டப்பேரவை உறுப்பினர். 2 முறை அமைச்சர். இப்போது துணை சபாநாயகர். இதில் எல்லாம் எப்படி செயலாற்ற முடியுமோ, அதை நான் நிறைவாகவே செய்து வருகிறேன். இதை அமைச்சர் ஆகித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. இப்போதும் கூட என் பொள்ளாச்சி தொகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். ரூ. 51 கோடியில் ரயில்வே பாலம், ரூ.15 கோடியில் அதற்கான நிலம் எடுப்பு, பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலைக்கு ரூ. 55 கோடி, ஆனைமலை தாலுக்கா போன்றவை இந்த ஒரு வாரத்தில் உருவான அரசு ஆணைகள். அது தவிர பல்கலைக்கழகக் கல்லூரி, அரசுக் கல்லூரியாக மாற்றம், 3.5 ஏக்கரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட மருத்துவமனைக்கு ரூ. 8 கோடியில் ஐந்து மாடிக் கட்டிடம், இருவழிச்சாலையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம் எல்லாமே குறைந்த காலத்தில் பொள்ளாச்சியில் நிறைவாகச் செய்திருக்கிறேன். இது போல ஒவ்வொரு தொகுதியிலும் எம்எல்ஏக்களின் பணிகள் நடக்கிறது. இது மக்களுக்கான அரசு. சிறப்பாக செயல்படுகிறது.
ஒவ்வொரு அமைச்சர்களும் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்களே, அது போல நீங்கள் ஏதும் இப்போதைக்கு இல்லாமல் இருப்பது குறித்து..?
'அம்மா' ஆட்சி தொடரணும். அவரின் திட்டங்கள் அப்பழுக்கின்றி நடக்கணும். எங்க முதல்வர்கிட்ட எது கேட்டாலும் சிரிச்ச முகத்தோடு செஞ்சு தர்றார். நன்றி வணக்கம்.
வரவேற்றபோது எப்படி கைகூப்பினாரோ, அப்படியே கைகூப்பி விடை கொடுக்கிறார் ஜெயராமன்.
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago