ஒ
ருவழியாக, நீட் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. ஏராளமான குளறுபடிகள், சச்சரவுகள், ஒரு தந்தையின் சோக மரணம்.. எல்லாமாகச் சேர்ந்து தமிழகத்தில், நீட் தேர்வை ஒரு போர்க்களமாகவே மாற்றிவிட்டது.
நீட் தேர்வுக்கான எதிர்ப்பில் இருக்கிற நியாயங்களை மறுப்பதற்கு இல்லை. தேர்வு மைய ஒதுக்கீட்டிலும், இத்தனை கடுமையான அணுகுமுறையை மத்திய கல்வி வாரியம் எடுத்திருக்க வேண்டியது இல்லை. வாரியம், உண்மையான அக்கறையுடன் விரைந்து செயல்பட்டிருந்தால், ஆர்வத்துடன் தேர்வு எழுத வந்த பல நூறு மாணவர்களின், அவர்களது பெற்றோரின் பாராட்டுகள் கிடைத்திருக்கும்.
நீட் தேர்வு பற்றிய வாரியத்தின் தகவல் அறிக்கை, பக்கம் 2, முக்கிய குறிப்புகளின்கீழ், 6-வது அம்சம் மற்றும் 4-வது பிரிவு ‘நுழைவுத் தேர்வுக்கான நகர மையங்கள்’ என்ற தலைப்பின் கீழ், 4(a) முதல் 4(h) வரை விரிவாகச் சொல்கிறது: ‘‘தேர்வு மைய ஒதுக்கீடு, கணினி மூலம் செய்யப்படுகிறது. இதில் மனிதக் குறுக்கீடு இல்லை. எந்தச் சூழ்நிலையிலும், வாரியத்தால் தேர்வு மையம் மாற்றப்பட மாட்டது.’’
இத்தனை எதிர்ப்புகளைத் தாண்டி தேர்வு நடத்துபவர்கள், குளறுபடிகள் இல்லாமல் அதைச் செய்ய வேண்டும் என்ற அக்கறையை ஏன் காட்டவில்லை? தன் பக்கத்து வாதத்தை மட்டுமே சொல்லி, தேர்வு வாரியம் தப்பித்துக்கொள்ளக் கூடாது.
இப்பிரச்சினையின் மறுபக்கத்துக்கு வருவோம்.
தமிழகத்துக்கு உள்ளேயே தேர்வு மையம் வேண்டும் என்கிற கோரிக்கை மிகவும் நியாயமானது. இப்போதும்கூட1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்தில்தான் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு வாரியத்தின் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால், சுமார் 5,000 மாணவ, மாணவிகள் வெளி மாநிலத்தில் தேர்வு எழுத நேர்ந்திருக்கிறது.
அதேசமயம், ‘எல்லாமே போயிற்று.. எப்படிப் போவது..? எங்கே தங்குவது..? எவ்வளவு செலவாகும்..?’ என்று சிலர் (மாணவர்கள், பெற்றோர் அல்ல) எழுப்புகிற கேள்விகளில், இதை அரசியலாக்கும் நோக்கம் உள்ள அளவுக்கு, உண்மையான அக்கறை இல்லை என்றே தோன்றுகிறது.
ரயில்வே போர்டு வேலைக்கு போட்டித் தேர்வு நடக்கிற நாட்களில் யாரேனும், தேர்வு மையங்களுக்கு சென்று பார்த்தால் ஓர் உண்மை பளிச்சென்று தெரியும். ஒவ்வொரு மைய வாசலிலும் எத்தனை எத்தனை வட இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள்?
ரயிலில் முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு பெட்டியில் 2 நாட்கள் பயணம் செய்து, தேர்வுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே சென்னைக்கு வந்து, நடைபாதைகளில் உட்கார்ந்து, உண்டு, உறங்கி தேர்வு எழுதுகிறார்கள்.
நம் மாணவர்களும் இப்படி அவதிப்பட வேண்டும் என்பதல்ல இதைச் சொல்லும் நோக்கம். தேர்வு வேறு மாநிலத்தில்தான் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட பிறகு, வேறு வழியில்லாமல், அதற்கேற்ப திட்டமிட்டுத்தான் பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் கிளம்பிச் சென்றனர். ஆனால், அவர்கள் சார்பாகப் பேசுவதாகச் சொல்லும் சிலர், பரீட்சைக்கான இந்தப் பயணத்தை பயங்கரமான சித்ரவதையாகச் சித்தரிப்பது எதில் போய் முடியும்?
லட்சியக் கனவோடு இன்னும் பல சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கையை அல்லவா குலைக்கும்!
உலகின் எந்த மூலைக்கும் சென்று, எந்தப் போட்டியானாலும் வென்று, சதியானாலும் ஜெயித்து, சாதனை படைத்தவர்களாகத்தான் தமிழ் இளைஞர்கள் இருந்து இருக்கிறார்கள்.
இன்றைக்கும் வட இந்தியாவில் பரவலாக சொல்லப்படுவது: ‘மதராஸிகளைப் போல இருக்க வேண்டும். எங்கே போனாலும் சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, வெற்றி பெறுகிறார்கள்.’
இதுதான் நமது வலிமை.
30 ஆண்டுகளுக்கு முன்பே, கல்லூரியில் படிக்கும்போது, மத்திய அரசுப் பணிக்காக இங்கிருந்து டெல்லி சென்று தேர்வு எழுதியவர்கள் உண்டு. (நானும் அப்படி எழுதியவன்). இன்று டெல்லியிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் புகழ்வாய்ந்த பதவிகளில் இருக்கிற, தமிழகத்தைச் சேர்ந்த பல நூறு அதிகாரிகள், அப்படி வ(ளர்)ந்தவர்கள்தான். டெல்லியில் கொடி நாட்டிய இந்தத் தமிழ் அதிகாரிகளால் தமிழகத்துக்கு விளைந்த நன்மைகள் ஏராளம்.
அடுத்த கேள்வி.. வெளி மாநிலங்களுக்குச் சென்றால், தமிழில் வினாத்தாள் கிடைக்குமா..?
‘கேள்வித்தாள்களின் மொழி’ என்ற தலைப்பில், 5-வது அம்சம் சொல்கிறது: ‘மண்டல மொழி தேர்ந்தெடுத்த தேர்வர்களுக்கு வினாத்தாள், மண்டல மொழி மற்றும் ஆங்கிலத்தில், இரு மொழித் தாளாக இருக்கும்.’
அதாவது, தேர்வர்களின் விருப்பத்தைப் பொறுத்துதான், கேள்வித்தாளின் மொழியே தவிர, தேர்வு மையங்களின் அடிப்படையில் அல்ல. இந்தியாவில் எங்கு எழுதினாலும், தேர்வர்கள் விரும்புகிற மொழியில் வினாத்தாள் கிடைக்கும்.
இனி, தேர்வு மையக் கட்டுப்பாடுகள்..
தகவல் அறிக்கை, அத்தியாயம் - 5, தேர்வு மையக் கட்டுப்பாடுகள் குறித்து, ‘பொது’ என்கிற தலைப்பின்கீழ், 5(a) முதல் 5(r) வரை விளக்குகிறது.
5 (a): தேர்வு மையம் 2மணி 30 நிமிடங்களுக்கு முன்பு திறக்கப்படும். காலை 9.30-க்கு பிறகு, தேர்வு அரங்கத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். போக்குவரத்து இடையூறுகள், தேர்வு மைய (புது) இடம், தட்பவெப்ப நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மையம் திறக்கும்போதே (அதாவது, இரண்டரை மணி நேரம் முன்னதாகவே), தேர்வர்கள் வரவேண்டும் என்று ‘எதிர்பார்க்கப்படுகிறது’. இது கட்டாயம் இல்லை.
5 (b): முறையான அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள், அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
5 (f): அனுமதிச் சீட்டு, புகைப்படம் தவிர்த்து, வேறு எந்தப் பொருளும் அரங்கத்துள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாது.
5 (g): தடை செய்யப்பட்ட எந்தப் பொருளையும் உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கப்படாது.
தடை செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன? அத்தியாயம்-11 பட்டியல் இடுகிறது. அதன் விவரம்:
பேப்பர், ஜியாமெட்ரி பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், அழிப்பான் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள். செல்போன் உள்ளிட்ட தகவல் சாதனங்கள். வாலெட், கைப்பை, தொப்பி, பெல்ட் உள்ளிட்டவை. மோதிரம், காதணி, மூக்குத்தி, செயின், நெக்லஸ், பெண்டன்ட், பாட்ஜ் உள்ளிட்டவை. கைக்கடிகாரம், பிரேஸ்லெட், கேமரா உள்ளிட்டவை. உலோகப் பொருள் எதுவும். தின்பண்டம் - தண்ணீர் பாட்டில் உட்பட. தகவல் சாதனத்தை மறைத்து எடுத்துச் செல்ல ஏதுவாகிற எதுவும். இவை அனைத்தும் தடை செய்யப்பட்ட பொருட்கள்.
உடைக் கட்டுப்பாடு
பெரிய அளவு பட்டன் இல்லாத இலகுவான உடை அணியலாம். பூக்கள், பாட்ஜ் ஆகியன கூடாது. ஹீல்ஸ் வைக்காத சாண்டல் செருப்புகள், ஸ்லிப்பர் அணியலாம். ஷூ அணியத் தடை. பாரம்பரிய உடை அணிந்து வருவதானால், குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மையத்துக்கு வரவேண்டும்.
நன்றாகக் கருத்தில் கொள்ள வேண்டியது - ‘பாரம்பரிய உடை’ தடை செய்யப்படவில்லை. அவ்வாறு வருவோர், சற்று முன்னதாகவே வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.
இதேபோன்று, பெற்றோர் / காப்பாளருக்கு அறிவுறுத்தல்கள் என்று தனியாகவும் கட்டுப்பாடுகள் பற்றி அத்தியாயம்-10 விரிவாகச் சொல்கிறது. எல்லாம் எதற்காக? தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட இந்த நாளில், ‘மைக்ரோ’ அளவிலான சாதனங்களைத் தேர்வு மையத்துக்குள் கொண்டுசென்று, அதன் மூலம் வெளியில் இருந்து விடைகளை வாங்கி, குறுக்குவழியில் யாரும் தேர்வாகிவிடக் கூடாது என்று! அதாவது, பாடுபட்டுப் படித்துவிட்டுவரும் திறமையுள்ள மாணவர்கள் மட்டுமே இதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக! உழைப்பிலும், திறமையிலும் சிறந்து நிற்கும் நம் மாணவர்களுக்கு எதிரான கெடுபிடிகள் போலவா இதைச் சித்தரிப்பது?
தமிழகத்துக்கு நீட் கூடாது என்றால், அதைப் போராடித் தடுத்திருக்க வேண்டியவர்கள் அரசியல் தலைவர்கள். அது முடியாது என்றாகிப் போன நிலையில், நம் மாணவர்கள் எதிர்காலத்தின் சிறந்த மருத்துவர்களாக வருவதற்கு ஏற்ப ஆக்கமும், ஊக்கமும் கொடுத்திருக்க வேண்டும்.
உயர்கல்வி பயில வரும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையைக் கூட்டவேண்டிய சமுதாயக் கடமை எல்லாருக்கும் இருக்கிறது.
‘‘என் பொண்ணு, கையில கழுத்துல ஒண்ணும் இல்லாம மூளியா பரிட்சை எழுதப் போறா.. இதுக்காகவா நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சோம்..?’’ என்று கூறுகிறார் ஒரு தாய். இதையும் ஒரு ஊடகம் ஒளிபரப்பியது. மருத்துவராக வர வேண்டியவரை, வெறும் நகைக் கடை பொம்மையாக பார்க்க வேண்டும் என்று நினைப்பது யாருடைய தவறு?
கொள்கை ரீதியாக எதிர்ப்பது வேறு. அதைப் புரிந்துகொள்ள முடிகிறது; ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், நம் இளைஞர்களை, ஆரோக்கியமான பாதையில் போகவிடாமல் தடுப்பது சரிதானா?
அரசியல் கருத்தாகப் பார்க்காமல் சமுதாய நோக்கில் மட்டுமே பார்த்து தீர்வு காண வேண்டியது அவசியம் அல்லவா? நாம் சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது. சிந்திக்கத்தான் வாய்ப்பு தராமல் அரசியல் தடுக்கிறது. அதையும் மீறி சிந்திப்போம்!
முக்கிய செய்திகள்
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
3 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago
ரிப்போர்ட்டர் பக்கம்
4 years ago