எத்தியோபிய பயிர்; சாதிக்கும் மைசூர் விவசாயிகள்: தமிழகத்தில் சாகுபடி செய்ய வாய்ப்பு

By நெல்லை ஜெனா

இந்தியாவில் சமீபகாலமாக பல வெளிநாட்டு தானியங்கள் பிரபலமடைந்து வருகின்றன. கீன்வா (quinoa) மற்றும் சியா (chia) ஆகிய இந்த தானிய வகை தாவரங்கள், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் (சிஎஃப்டிஆர்ஐ) முயற்சியால் இந்தியாவில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வழக்கமான பயிர்களைச் சாகுபடி செய்வதிலிருந்து மாற்று சாகுபடி பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் இந்தத் தானியச் சாகுபடிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவை தாயகமாக கொண்ட டெஃப் என்ற புதிய தானியம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மத்திய அரசு நிறுவனமான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

இதன் சிறப்பு திட்ட இயக்குநராக பணியாற்றி வரும், ராம் ராஜசேகரன், இந்தியாவில் மாற்றுப் பயிர் சாகுபடியை முன்னெடுத்துச் செல்லுகிறார். இந்த புதிய தானியம் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:

இந்தியாவில் ஒருபுறம் தண்ணீர் பற்றக்குறையால் சாகுபடி குறைந்து வருகிறது. இதனால் குறைவான தண்ணீரில் அதிக மகசூல் தரக்கூடிய தானியங்களை பயிர் செய்ய வேண்டிய தேவை உள்ளது. எனவே மாற்றுப்பயிர் சாகுபடி குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தோம். சிஎஃப்டிஆர்ஐ இயக்குனராக நான் இருந்தபோதே இதன் அடிப்படையில் கீன்வா, சியா என புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

கீன்வா, சியா விதைகள் அதிக ஊட்டச்சத்து கொண்ட தானியங்கள். இரு தானியங்களும் ‘சூப்பர் உணவு’ எனக் கருதப்படுகின்றன. இதில் கீன்வா தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. அங்கிருந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, அமெரிக்காவுக்குப் பரவியது.

சியா தானியம் மெக்ஸிகோ, தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்டது. இதில், நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.

இந்த தானிய விதைகளை இந்திய சூழலுக்கு ஏற்ப மேம்படுத்தி, கர்நாடக மாநில மைசூர் விவசாயிகளுக்கு கொடுத்தோம். அவர்கள் இதனை வெற்றிகரமாக பயிர் செய்து, இன்று முன்மாதிரி விவசாயிகளாக உள்ளனர். அந்த விவசாயிகள் இணைந்து உருவாக்கிய விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் இந்த தானியங்களை சரியான முறையில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றன.

அதிக சக்தி தரும் தானியம்

இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய சூழலுக்கு ஏற்ற மேலும் ஒரு வெளிநாட்டு தானியத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். டெஃப் (Teff) என்ற இந்த தானியம் எத்தியோபியாவை தாயகமாக கொண்டது. இதுவும் ‘சூப்பர் உணவு’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அதிக சக்தி தரக்கூடியதாக இந்த தானியம் விளங்குகிறது. நமது ஊரில் பயிரிப்பட்டும் கேழ்வரகு போன்ற இந்த தானியம் தற்போது உலக அளவில் பிரபலமடைந்து வருகிறது.

பொதவாக, நாம் சாப்பிடும் உணவு இரண்டு மணிநேரத்தில் ஜீரணமாகி அது, ரத்தத்தில் சேர்ந்து சக்தியை அளிக்கிறது. ஆனால் இந்த டெஎஃப் தானியம், சிறிது சிறிதாக ஜீரணமாகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து சக்தியை தருகிறது. இதனால் இந்த தானியத்தை சாப்பிடுவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் நீண்ட நேரம் சக்தி கிடைக்கிறது.

எனவே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆப்ரிக்க வீரர்களுக்கு, இந்த தானியத்தை சாப்பிடுவதன் மூலம் நீண்ட நேரத்திற்கு அதிக சக்தி கிடைக்கிறது. டெஎஃப் தானியத்தின் சிறப்பை உணர்ந்து, பல நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு இதனை உணவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

வறட்சியை தாங்கும் பயிர்

டெஎஃப் இந்திய சூழலுக்கு மிகவும் ஏற்றப் பயிராகும். ஏனெனில் எத்தியோபியாவை ஒட்டிய காலநிலையே, இந்தியாவில் நிலவுவதால் இங்கு எளிதில் பயிர் செய்ய முடியும். இந்த பயிரை சாகுபடி செய்ய குறைவான தண்ணீர் போதும். கேழ்வரகு சாகுபடி செய்வதற்கு ஆகும் தண்ணீர் செலவை விடவும் குறைவான தண்ணீரில் இதனை சாகுபடி செய்யலாம். தமிழகத்தில் ராமநாதபுரம் போன்ற அதிகவெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் கூட பயிரிட முடியும்.

சாகுபடி முறை

டெஃப் தானியம் மிகவும் சிறிதாக இருக்கும். என்பதால் மணலுடன் சேர்ந்து மண்ணில் தூவி விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 100 கிராம் விதைகள் இருந்தால் போதுமானது.

நெல்லை நாற்றாக பாவி, பின்னர் பிடுங்கி நடுவது போலவும் நடவு செய்யலாம். விதைக்கும்போது மழை இருக்கக்கூடாது; தண்ணீர் அதிகமாக இருந்தால் விதை மிதக்கத் தொடங்கி விடும். எனவே விதைக்கும்போது கவனத்துடன் விதைக்க வேண்டும். தண்ணீர் குறைவாக பாய்ச்சினால் போதுமானது. பெரிய அளவிற்கு பூச்சித் தாக்குதல், நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவே இந்த தானியத்தின் சிறப்பாகும். அருகில் வேறு தானியம் சாகுபடி செய்யப்பட்டால் அதில் இருந்து பூச்சிகள் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு பூச்சிகள் தென்பட்டால், வேப்ப எண்ணெய், சோப்பு நீர் கலந்து தெளித்தால் போதும். பூச்சிக் கொல்லி மருந்துகள் எதுவும் தேவைப்படாது.

110 நாட்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும். அதிக நாட்கள் விட்டுவிட்டால் முற்று விதையாகி விடும். எனவே சரியான பருவத்தில் அறுவை செய்வது மிகவும் அவசியம். ஏக்கருக்கு சராசரியாக 300 கிலோ வரை மகசூல் கிடைக்கும். இதன் பிறகு உணவுக்கு பயன்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவு

டெஃப் மிகவும் ஆரோக்கியமான தானியம். அரிசி மற்றும் கோதுமை ஆகிய இரண்டின் அம்சங்களும் இதில் உள்ளன. குளூட்டன் போன்ற பாதிப்பு இல்லாத அதிகமான புரோட்டின் இதில் உள்ளது. அதிக புரோட்டின் இருப்பதே இதன் சிறப்பாகும். இதுமட்டுமின்றி அதிகமான அளவு இந்த தானியத்தை ‘புராசஸ்’ செய்ய வேண்டிய தேவையில்லை. உமி மிகவும் மெலிதானதாக இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய தேவையில்லை. அப்படியே பயன்படுத்த முடியும்.

இந்த பயிரில் இருந்து கிடைக்கும் வைக்கோல், புல் போன்றே இருக்கும். கால்நடைகள் விரும்பி சாப்பிடும். எனவே இதை சிறந்த மாட்டுத்தீவனமாக பயன்படுத்த முடியும்.

டெஃப் தானியத்தை அரைத்து தோசை போன்ற உணவுகளை தயாரித்து சப்பிடலாம். அதுபோலவே பிரட்டும் தயாரிக்கலாம். நீண்ட நேரத்திற்கு சக்தி தரக்கூடிய இந்த தானியம் அனைவருக்கும் ஏற்றது. புரோட்டீன் குறைபாட்டிற்காக தற்போது மக்கள் தனியாக புரோட்டீன் பவுடர்களை வாங்கி சாப்பிலும் நிலையில் உள்ளனர். இயற்கையாக அதிக புரோட்டீன் கொண்ட டெஎஃப் அதற்கு மாற்றாக உள்ளது.

விற்பனை வாய்ப்பு

டெஃப் தானியத்திற்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கிலோ ரூ. 900 என்ற விலையில் விற்பனை செய்ய முடியும். அதிக தேவை இருப்பதால் விற்பனை செய்வதில் சிக்கல் இல்லை. நாங்கள் முன்பு அறிமுகம் செய்த வெளிநாட்டு தானியங்களான கீன்வா மற்றும் சியா தானியங்களை பயிரிடும் மைசூர் விவசாயிகள் உற்பத்தி நிறுவனம் தொடங்கி ஏற்றுமதி செய்வது போல தமிழகத்திலும் விவசாயிகள் செய்யலாம்.

தமிழக விவசாயிகள்

teff3PNG 

தமிழகத்திற்கு ஏற்ற பயிர் என்பதால் இதை தமிழக விவசாயிகள் தராளமாக பயிர் செய்யலாம். தங்கள் ஏற்கெனவே பயிரிட்டுள்ள பயிர்களுடன் சேர்ந்து, சோதனை அடிப்படையில் இதையும் குறைந்த அளவு சாகுபடி செய்து பார்க்கலாம். அறுவை செய்த தானியங்களையே பின்னர் விதைகளாக பயன்படுத்தி மீண்டும் பயிர் செய்யலாம். பல விவசாயிகள் ஒன்றிணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டால், அறுவடையின் முடிவில் அவர்களுக்கு கிடைக்கும் தானியங்களை ஒன்றாக விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும்.

இவ்வாறு அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சிறப்பு திட்ட இயக்குநர் ராம் ராஜசேகரன் தெரிவித்தார்.

விவசாயிகள் டெஃப் விதைகளை இலவசமாக பெற: 099860 35285 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்