அகில இந்தியத் தேர்வுகளில் பின்தங்குகிறதா தமிழகம்?

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ரண்டு மிக முக்கிய தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளிவந்தன. யுபிஎஸ்சி-யின் குடிமைப்பணி (ஐஏஎஸ்) தேர்வு மற்றும் ஐஐடியில் சேர்வதற்கான, பிரதான நிலை - கூட்டு நுழைவுத் தேர்வு (Joint Entrance Exam - Mains). தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த இரு தேர்வு முடிவுகளும், ஏமாற்றத்தையே தருகின்றன. சில கசப்பான உண்மைகளைப் பறைசாற்றுகின்றன.

முதலில், கூட்டு நுழைவுத் தேர்வு. ஐஐடியில் மொத்தமாக சுமார் 14,000 இடங்கள் வரை இருக்கலாம். மத்திய கல்வி வாரியம் கடந்த 30-ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, முதல்நிலைத் தேர்வு எழுதிய 10,74,319 பேரில், 2,31,024 பேர் அடுத்த நிலைக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்கள்தான் நுழைவுத் தேர்வில், சோதிக்கப்படுகின்றன.

ஒருகாலத்தில், கணிதப் பாடத்தில் தமிழகம் சிறந்து விளங்கியது. இதற்காக, பள்ளிகளின் கணித ஆசிரியர்களை, மனம்திறந்து தாராளமாகப் பாராட்டலாம். தமிழகத்தில், சிறிய கிராமத்துப் பள்ளிக்குச் சென்றாலும், ஓரிருவராவது கணிதத்தில் சிறந்து விளங்குவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய சிறப்பம்சம் - முதல் தலைமுறையாகப் படிக்க வருகிற சிறுவர்கள் மத்தியிலும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெறுகிறவர்கள் நிறைய இருந்தார்கள். இவர்களை இன்னும் முறையாக வழிநடத்தி, தக்க உதவிகள் வழங்கி இருந்தால், பல துறைகளில் இன்னும் வியக்கத்தக்க முறையில் நாம் சாதித்திருக்க முடியும்.

80, 90-களில் தொடங்கிய சரிவு

‘கணிதத்தில் நாம் முன்னிலையில் இருந்ததெல்லாம் பழங்கதை. 1980-90-களில் ஆரம்பித்த சரிவு தொடர்ந்துகொண்டு இருக்கிறது. அதே சமயம், ஆந்திரா பல படிகள் முன்னேறி, முதலிடத்தில் இருக்கிறது’ என்கிறார் பயிற்சியாளர் சூரியகுமார். நம் பாடத்திட்டத்தை கூர்மையாக்கிக் கொள்ளததும் ஒரு முக்கிய காரணம் என்கிறார் இவர்.

இயற்பியல், வேதியியல் பாடங்களில் பொதுவாக, நகர்ப் பள்ளிகள் (மட்டும்) சிறந்து விளங்குகின்றன. கிராமத்து மாணவர்கள் சற்றே ‘பயணிக்க’ வேண்டி இருக்கிறது. ஆனாலும், ஒட்டுமொத்தமாக கூட்டு நுழைவுத் தேர்வில் தமிழகம், ஆண்டுதோறும் நல்ல இடத்தையே பிடித்து வந்திருக்கிறது. அதில்கூட இந்த ஆண்டு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆந்திரா, ராஜஸ்தான் மாநிலங்கள் நம்மை வெகுவாக விஞ்சி உள்ளன. பிரதானத் தேர்வில் முதல் 6 இடங்களை இந்த இரு மாநிலங்கள் பிடித்துள்ளன. முதல் 20 இடங்களில் தமிழகம் இல்லை. அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி, முதல் 200 இடங்களில் தமிழகம் பெற்றிருப்பது வெறும் 6 மட்டுமே. அதிலும் இரண்டு மாணவர்கள், பிளஸ் 2 படிப்புக்காக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள். ஆக, முதல் 200 இடங்களில் 4 மட்டுமே தமிழக மாணவர்களுக்கு.

அதிகாரப் பூர்வமற்ற தகவலின்படி, முதல் 100 இடங்களில் தமிழகம் பெற்றிருப்பது.. நம்புங்கள் வெறும் 20 மட்டுமே. (முழு பட்டியலும் இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிவேற்றப்படவில்லை.)

பிரதானத் தேர்வுதான் முடிந்திருக்கிறது. தொடர்ந்து, மேம்பட்ட நிலை (அட்வான்ஸ்டு) தேர்வு, நடக்க உள்ளது. அதில்தான் இறுதிப் பட்டியல் முடிவாகும். இப்போதுள்ள நிலவரப்படி, அடுத்த நிலைத் தேர்வில் தமிழகம், தனது தர நிலையில் இருந்து மேலும் சரிவை சந்திக்கக் கூடும்.

‘சில நூறு இடங்கள்தானே... அதுவும் அன்றி, நாடு முழுமைக்குமாகத்தான் பார்க்க வேண்டும்; மாநிலம் வாரியாகப் பிரித்துப் பார்ப்பது தவறு’ என்பது போன்ற பல விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதில், நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சம், தரவரிசையில் பின்தங்கி இருந்த மாநிலங்கள், மேலே வருவதில் தவறில்லை; வரவேற்கலாம். ஆனால், தமிழகம் தொடர்ந்து தனது தர நிலையில் இருந்து சரிந்து வருகிறது.

கடந்த ஆண்டு - மாநிலக் கல்வித் திட்ட மாணவர்கள் 8 லட்சம் பேரில் 20 பேருக்கு மட்டுமே ஐஐடியில் இடம் கிடைத்ததாகத் தெரிகிறது.

என்னதான் பிரச்சினை?

இந்த ஆண்டு பிரதானத் தேர்வில் 12,624-ம் இடம்பிடித்து தேர்ச்சி பெற்றுள்ள சென்னை மாணவர் வருண் வாசுதேவன் சொல்லும் காரணங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன.

முறையான பயிற்சி தேவை

‘‘கணிதப் பாடத்தில் பல வினாக்களுக்கு நீண்ட படிகள் (ஸ்டெப்ஸ்) மூலம் விடை காணவேண்டி இருந்தது. இதற்கு அதிக நேரம் பிடித்தது. முறையாக பயிற்சி எடுத்தவர்களால் மட்டுமே இந்த நேரத்தை ஈடு கட்ட முடியும்.’’

‘‘பொதுத்தேர்வு போல, போட்டித் தேர்வுகளை அணுக முடியாது. கணிதத்தில் அடிப்படை விதிகளில் ஆழ்ந்த அறிவு இருந்தாலும்கூட, விரைந்து துல்லியமாக விடை காணுகிற ஆற்றல், நுழைவுத் தேர்வுக்கு மிக முக்கியம். ஏராளமான வினாக்களுக்கு பயிற்சி பெற்றால் மட்டுமே, தேவையான வேகம் கிடைக்கும். இந்தப் பயிற்சிக்கு முறையான வழிகாட்டுதலும் தேவை. இது எத்தனை பேருக்கு வாய்க்கும்..?’’

பொதுவாக எல்லோரும் சுட்டிக் காட்டுகிற ஓர் அம்சம் இது.. ‘‘ஆந்திராவில் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிகள், 8, 9-ம் வகுப்பு படிக்கும்போதே தொடங்கி விடுகின்றன. 4 ஆண்டுகாலப் பயிற்சி அவர்களைத் தூக்கி நிறுத்துகின்றன. தமிழகத்தில் பலர், ப்ளஸ் 2 தேர்வு முடித்த பிறகு, சில நாட்கள் மட்டுமே ‘விரைவுப் பயிற்சி’ எடுத்துக்கொண்டு, நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். இத்தகைய ஒரு சூழலில், இப்போது நாம் பெற்றுள்ள வெற்றியே மிகப் பெரியதுதான்.’’

கணிதம், அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறுகிற பல மாணவர்கள்கூட, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறமுடியாமல் போவது ஏன்?

பாடத் திட்டத்தில் இருந்து நேரடியான கேள்விகள் மட்டுமே பொதுத் தேர்வில் இடம் பெறுகின்றன. இவற்றுக்கான பதில்கள் ஒரு மாணவருக்குத் தெரிந்திருக்கிறதா என்பதை மட்டுமே பள்ளிகள் உறுதி செய்கின்றன. ஆனால், பாடத்தில் உள்ள பல்வேறு கருத்துருக்களின் (கான்சப்ட்ஸ்) பிரயோகம் (Applicability) நுழைவுத் தேர்வுக்கு அவசியம் ஆகிறது. இது பெரும்பாலான பள்ளிகளில் கற்றுத்தரப்படுவது இல்லை.

பயிற்சி மையங்கள் இப்பணியைச் செய்கின்றன. ஆனால் இவை, கிராமங்களை எட்டுவதில்லை. இதன் காரணமாக, ஐஐடி படிப்புகள், நகரம் சார்ந்த படிப்புகளாகவே நின்றுவிடுகின்றன. அதாவது, சாதிப்பதற்கான அறிவுத் திறன் இருந்தபோதும், அதை முறையாக ஆற்றுப்படுத்துகிற, முழுமையாக வெளிப்படுத்துகிற வாய்ப்புகள் இன்னமும் தமிழகத்தில் சென்று சேர்க்கப்படவில்லை.

ஆந்திராவில் இந்த முயற்சி, பரவலாகி இருக்கிறது. தேசிய அளவில் முதல் இடத்தைப் பிடிக்கிற அளவுக்கு முன்னேறி இருக்கிறது.

தமிழக இளைஞர்களிடம், குறிப்பாக கிராமப்புறங்களில், கூட்டு நுழைவுத் தேர்வு பற்றிய விழிப்புணர்வு, தேர்வுக்கான பயிற்சி கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது?

வணிகமயமாகிவிட்ட பயிற்சி

கல்வியாளர் கே.ஆர்.மாலதி கூறுகிறார்: ‘‘நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி, முற்றிலும் வணிகமயமாகவே இருக்கிறது. தயாரிப்புப் பணியில் நிபுணத்துவம் கொண்டவர்கள், கிராமப்புறப் பகுதிகளில் நாட்டம் செலுத்துவது இல்லை. நகரங்களிலும், பயிற்சிக் கட்டணம் பொருளாதார ரீதியில் பலருக்கு, சாத்தியம் ஆவதில்லை. ஓராண்டுக் கட்டணம் சுமார் ரூ.1 லட்சம் வரை ஆகிறது. குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது பயிற்சி தேவை.

நடுத்தர, ஏழை குடும்பங்களுக்கு இது மிகப் பெரிய சுமை. ஆகவே தாமாகவே ஒதுங்கிவிடுகின்றனர். ஐஐடி படிப்பு, அடித்தட்டு இளைஞர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பதை உறுதி செய்வதற்காகவே சிலர் ‘உழைக்கிறார்கள்’ என்று தோன்றுகிறது.”

சரி. குடிமைப்பணி தேர்வுகளில் நிலைமை..?

இந்த ஆண்டு 990 பணியிடங்கள். தமிழகத்தில் இருந்து சுமார் 50 பேர் வரை தேர்வாகி உள்ளதாகச் சொல்லப் படுகிறது. பல்வேறு பயிற்சி நிறுவனங்களும், 70 பேர், 80 பேர் என்று வெவ்வேறு எண்ணிக்கையைக் காட்டுகிறார்களே, அது எப்படி? வேறொன்றும் இல்லை. பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து பயிற்சி பெறுகிறவர்களும் அதில் அடக்கம். உண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வெற்றியாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 45-க்கும் கீழ்தான் என்று தோன்றுகிறது.

ஆண்டுதோறும், பொதுவாக 60 முதல் 100 வரைகூட தமிழ் இளைஞர்கள் வந்தது உண்டு. அத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் வெற்றி சதவீதம், பெருமைப்படக் கூடியதாக இல்லை.

குடிமைப்பணித் தேர்வு பற்றி பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் தேர்ச்சி விகிதம் குறைந்து இருக்கிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டி பொது அறிவை வளர்த்துக்கொள்வதில் தமிழக இளைஞர்களிடம் காணப்படும் ஆர்வமின்மை முக்கிய காரணி எனலாம்.

அகில இந்திய வானொலியில் இரவு 9-மணி ஆங்கிலச் செய்தி அறிக்கை, போட்டித் தேர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும். நாடு முழுவதுமே, அநேகமாக எல்லா வெற்றியாளர்களையும் இணைக்கிற ஒரு புள்ளி இதுவாகத்தான் இருக்க முடியும். ‘நடப்பு நிகழ்வுகள்’ பகுதிக்கு நேரடியாகப் பயன் விளைவிப்பது இது. இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது?

தொடர்ந்து பல ஆண்டுகளாக ‘தி இந்து’ நாளிதழ், பொது அறிவுக்கான சிறந்த வழிகாட்டியாக விளங்கி வருகிறது. தரமான நாளிதழ் வாசிப்பு என்பது, போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் மிகவும் முக்கியம். எத்தனை பேர் இதைப் பின்பற்றுகிறார்கள்?

இளைஞர்களிடம் சுணக்கம்

பள்ளிப் பாடங்களில் ஆழமான அறிவு, பிற பகுதிகளில் அடிப்படைப் புரிதல், அறிவியல் தொழில்நுட்பத் துறைகள் கண்டுவரும் மாறுதல்கள் பற்றிய தகவல் அறிவு, வரைபடம் பார்த்தல் (மேப் ரீடிங்), அகராதி படித்தல் போன்ற அறிவுசார் நடவடிக்கைகளில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் சுணக்கம் காணப்படுகிறது.

‘அரசியல், சினிமாவுக்கு அப்பால் மிகப் பெரிய ஓர் உலகம் ஏராளமான வாய்ப்புகளுடன் காத்துக் கிடக்கிறது. அதற்கு நம்மைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்’ என்கிற உந்துதல் குறைந்து வருகிறது.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, படிப்பு. ஆழமாக, விரிவாகப் படித்தே தீர வேண்டும். வெறுமனே தன்னம்பிக்கை பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு இருந்தால் வெற்றி பெற முடியாது. சரியாகத் திட்டமிட்டு முறையாகத் தயார் செய்துகொள்வது அவசியம்.

ஒரு சிற்றூரில் வறிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, தமிழிலேயே குடிமைப்பணித் தேர்வு எழுதி ஐஏஎஸ் அதிகாரியாக உயர்ந்துள்ள மணிகண்டன், திட்டமிட்ட கடுமையான உழைப்பின் வெற்றிக்கு சரியான உதாரணம்.

‘‘தேர்வுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் படித்தலே, தயாரிப்புப் பணியில் அதிமுக்கிய அம்சம். என்ன படிக்க வேண்டும் என்பதே தெரியாமல், படித்ததையே மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருப்பதால் என்ன பயன்?’’ என்கிறார் மணிகண்டன்.

எந்த ஒரு செய்தியையும் எந்த அளவுக்கு ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்? தேர்வுக்கு அது எந்த அளவுக்குத் தேவைப்படும்? என்றெல்லாம் அறிந்துகொண்டு வாசித்தல் வேண்டும். அதுதான் மிகுந்த பலன் தரும்.

திசை நோக்கிய, தீர்மானமான பயணம்தான் இன்றைய தேவை. ஐஐடிதானே.. ஐஏஎஸ்தானே.. என்கிற அலட்சியம் ஆகாது. ஒவ்வொரு களத்திலும், ஒவ்வொரு துறையிலும் கணிசமான பங்களிப்பை உறுதிசெய்தலே, ஒரு சமூகத்தின் நிலைத்த வளர்ச்சிக்கு வழிகோலும். நமது பொறுப்பு அதிகமாகி வருகிறது. உணர்கிறோமா..?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

3 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

ரிப்போர்ட்டர் பக்கம்

4 years ago

மேலும்